ஆயுதப் போராட்டம் விடுதலை அரசியலின் உச்சகட்ட புரட்சிகர வடிவம் எனக் கருதப்படுகிறது. மானுட மீட்சிக்காகத் தன்னை இழத்தல் எனும் உன்னதம் இங்கு நடைமுறையாகிறது. ஈழ விடுதலைப் போராட்டம் என்பது உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் அனுபவங்களுடனும் நினைவுகளுடனும் கலந்துவிட்டிருக்கிறது. தமிழ் அரசியல், கலாச்சாரம், இலக்கியம், தத்துவம், இதுவரைத்திய தமிழ் இடதுசாரி மரபு அனைத்தையும் ஈழ விடுதலைப் போராட்டம் தலைகீழாகப் புரட்டிப்போட்டிருக்கிறது. ஈழப் போராட்டம் நந்திக்கடலில் வஞ்சகமாக அழிக்கப்பட்டிருந்தாலும், அதனது வரலாற்றுப் பிழைகளையும் தாண்டி, மானுட சுயதரிசனங்களையும் அரசியல் சுயவிமர்சனங்களையும் அது எழுப்பியபடியே இருக்கிறது. உலக தேசிய விடுதலைப் போராட்ட மரபின் பின்னணியில் ஈழ விடுதலைப் போராட்டத்தை மீளாய்வு செய்யும் இக்கட்டுரைகள், இன்றைய சர்வதேசிய அரசியல் சூழலில் எதிர்ப்பு அரசியலின் எதிர்கால வடிவம் எத்தகையதாக இருக்க முடியும் எனும் தேடலையும் மேற்கொள்கிறது.
தமிழகம் புகலிடம் எனும் முப்பெரும் பிரதேசங்கள் சார்ந்த எதிர்ப்பு அரசியலின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல, பொதுவான எதிர்ப்பு அரசியலின் எதிர்காலத்துக்குமான விமர்சன அரசியலை அவாவியே இக்கட்டுரைத் தொகுப்பு உங்களின் முன் வருகிறது.
கடந்த முப்பதாண்டு கால ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் உடன்பயணியாக நான் இருந்திருக்கிறேன். அரை நூற்றாண்டு கால தேசிய விடுதலைப் போராட்ட அனுபவங்கள், மார்க்சியர்களின் சோசலிச அரசியல் அனுபவங்கள், வேறுபட்ட உலக அரசியல் போக்குகள் ஆகிய சூழலுக்குள் நின்று ஈழவிடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியையும் அனுபவங்களையும் புரிந்துகொள்கின்ற, ஆவண மதிப்பும், கருத்தியல் மதிப்பும், எதிர்கால அரசியல் விவாத மதிப்பும் கொண்ட ஒரு நூலைக் கொணர்வதுதான் எனது நோக்கமாக இருந்தது. அந்த இலக்கை நான் எய்தியிருக்கிறேன் என்றுதான் நம்புகிறேன்.
ஸ்டாலினையும், மாவோவையும், அபிமல் குஸ்மானையும், சேகுவேராவையும், அல்பான்சோ கெனோவையும், அப்துல்லா ஒச்சாலனையும், யாசர் அரபாத்தையும், ஹோசிமினையும் எந்த விமர்சனமும் இன்றிக் கொண்டாடிக்கொண்டு அல்லது அவர்களது செயல்பாட்டை 'வரலாற்றில் வைத்துப்' பாதுகாத்துக்கொண்டு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மட்டும் 'வரலாற்றில் வைத்துப் புரிந்து கொள்ளாமல்' நிராகரிப்பது ஒருபோதும் மார்க்சியப் பகுப்பாய்வு ஆகாது என்பதையே இந்த நூலில் நான் வலியுறுத்துகிறேன். தொகுப்பின் கணிசமான கட்டுரைகள் குளோபல் தமிழ் நியூஸ், கீற்று, உயிரோசை, தேசம்நெட், பொங்குதமிழ் இணையதளங்களிலும் உயிர்மை மாத இதழிலும் வெளியானவை. நான் எழுத நேர்ந்த எல்லா இடங்களிலும் தங்குதடையற்ற எழுத்துச் சுதந்திரத்தை எனக்கு வழங்கிய ஊடக நண்பர்கள் நடராஜா குருபரன், மனுஷ்யபுத்திரன், கீற்று ரமேஷ், ஜெயபாலன், சிவப்பிரகாசம் சிவரஞ்ஜித் ஆகியோருக்கு இந்தத் தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகக் கடினமான பணியான 'சுட்டிகள்' பகுதியைக் கவனமெடுத்துச் செய்தவன் எனது அன்பு நண்பனான கலாநிதி எஸ்.வி. உதயகுமார். நிஜத்தில் அவனுக்கு நான் சொல்லும் நன்றிக்குரிய எல்லா வார்த்தை களும் அர்த்தமிழந்தவை; அவனுக்கான எனது கனிவான ஆரத்தழுவுதலும் முத்தமும்தான் அதனை ஈடுசெய்யும். எம்.எப். ஹுஸைன் குறித்த தனது புத்தக வேலைகளின் இடையிலும், நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த நூலின் அட்டைப்படத்திற்கென அல்பான்சோ கெனோ மற்றும் பிரபாகரன் ஆகியோரின் சித்திரங்களை வரைந்து கொடுத்த எனது நண்பர் ஓவியர் புகழேந்திக்கு எனது மனம் கனிந்த நன்றி. தொகுப்பைத் திருத்தமாகவும் அழகாகவும் கொணரும் அடையாளம் பதிப்புக்குழுவினருக்கும், கட்டுரைகள் வெளியான வேளைகளில் உடனுக்குடன் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட எனது அன்பு நண்பர்கள் அசோக் யோகன், மு.புஷ்பராஜன் ஆகியோருக்கும் எனது மனமுவந்த நன்றி உரித்தாகிறது.
- யமுனா ராஜேந்திரன் (முன்னுரையில்)