இலங்கையில் புலிகளின் தோல்விக்கு சீனாவின் உதவியே காரணம் என்றும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் புலிகளின் பால் மென்மையான போக்கையே கடைப்பிடித்தன என்றும், இறுதி யுத்தத்தின் போது புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காக்க அமெரிக்கக் கப்பல் வந்து காத்திருந்தது என்றெல்லாம் கூட கருத்துகள் உள்ளன. இந்த மேற்கத்திய நாடுகள் இலங்கை அரசை போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்க விரும்புகின்றன என்றும் இப்போது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், தமிழரசன் குழந்தைசாமி மொழிபெயர்த்துள்ள 'ஈழ இன அழிப்பில் பிரிட்டன்' என்ற நூல், இலங்கையின் இன அழிப்புப் போருக்கு பிரிட்டன் எப்படியெல்லாம் உதவியது, புலிகள் போருக்கு முன்பே எப்படி மேற்கத்திய அரசுகளால் தனிமைப்படுத்தப்பட்டனர் என்பதையெல்லாம் துல்லியமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் விளக்குகிறது.
2001-ஆம் ஆண்டிலேயே பிரிட்டன் புலிகள் அமைப்பைத் தடை செய்து விட்டது. 2002-இல் போர் நிறுத்தம் அமுலுக்கு வருகிறது. ஆனால் பிரிட்டன் இலங்கைக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை நிறுத்தவில்லை. அதேநேரம் ஏ.சி. சாந்தன் போன்ற புலிகள் ஆதவாளர்களைக் கைது செய்து புலிகள் செயல்படுவதைத் தடுத்தது. அதோடு ஐரோப்பிய யூனியனையும் புலிகளைத் தடை செய்யச் சொல்லி வற்புறுத்தி அதில் வெற்றியும் கண்டது என்பதையெல்லாம் தகுந்த ஆதாரங்களோடு நிரூபிக்கிறார் ஆசிரியர். எல்லா ஆயுதங்களும் வழங்கிய பிறகு 2008-ல் இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி பிரிட்டனும் பிற ஐரோப்பிய யூனியன் நாடுகளும் இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதியைத் தடை செய்தன.
ஆனால் பிரிட்டிஷ் அரசின் மற்ற கரங்கள் இலங்கைக்கு உதவியே வந்தன என்பதையும், அரசின் மறைமுகக் கட்டுப்பாட்டிலுள்ள கூலிப்படைகளும், முன்னாள் இன்னாள் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளும் இலங்கை ராணுவத்திற்கு உதவிகளும், ஆலோசனைகளும் வழங்கியே வந்துள்ளனர் என்பதையும் வெட்ட வெளிச்சமாக்குகிறது இந்நூல்.
பிரிட்டன் இலங்கை அரசுக்கு உதவியதற்கு இலங்கையின் புவியியல் அமைப்பும், உலகின் முக்கியமான கடல் பாதைகளைக் கட்டுப்படுத்தும் இடத்தில் அந்நாடு அமைந்திருப்பதும்தான் காரணம் என்று நூலாசிரியர் கூறுவது மட்டும் ஆய்வுக்குரியது.
புலிகளை வெல்ல இலங்கைக்கு சீனா உதவியது என்ற உண்மை மறுக்க முடியாதது. இது குறித்து ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. அதேபோல புலிகளின் ஆயுத கப்பல்களைக் கண்டுபிடித்து அழிக்கவும், கடல் முற்றுகையைப் பலப்படுத்தவும் இந்தியா செய்த உதவிகள் குறித்தும், வழங்கிய ஆயுதங்கள் குறித்தும் ஆய்வுகள் வந்துள்ளன. இப்போது பிரிட்டன் செய்த உதவிகள் குறித்து இந்நூல் வெளிவருகிறது.
ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்ற சமரசமற்ற இஸ்ரேல் எதிர்ப்பு அமெரிக்க எதிர்ப்பு இயக்கங்களுக்கு உதவிவரும் ஈரான் கூட இலங்கைக்கு உதவிகள் செய்துள்ளது. பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட உலகின் எல்லா முகாம்களுக்கும் இலங்கை முக்கியத்துவமற்ற நாடாக இருந்தால் அந்நாட்டில் பிரிவினை கோரும் ஓர் இயக்கத்தை ஒழிக்க எப்படி உதவியிருக்க முடியும்?
புலிகளுக்கு ஆயுதங்களும் பயிற்சியும் அளித்து வந்த இந்தியா எதிராகத் திரும்பியதற்கு அமைதிப்படையை அவர்கள் எதிர்த்துப் போரிட்டதும், ராஜிவ் காந்தியைக் கொன்றதும் மட்டும்தான் காரணமாக இருந்திருக்க முடியுமா? எல்லாவற்றுக்கும் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் மற்றும் மேலாதிக்கப் போட்டி மட்டுமே காரணமாக இருந்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது.
கிடைக்கும் அனைத்து விவரங்களையும் ஒரு பருந்துப் பார்வையாக பார்ப்பதன் மூலம் இந்தக் கேள்விகளுக்கு விடை காண முடியும். ஆனால் இறுதிப் போர் பற்றிய விவரங்கள் முழுமையாகக் கிடைக்காத நிலையே இத்தகைய ஆய்வுகள் வெளிவராததற்கு ஒரு முக்கியமான காரணமாக இருந்து வருகிறது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இலங்கைப் போரின் ராஜதந்திர நடவடிக்கைகள் பற்றிய மர்மங்கள் விலகி வருகின்றன. இதில் "ஈழ இன அழிப்பில் பிரிட்டன்" என்ற இந்த நூலும் இதுவரை மக்களின் பார்வைக்கு வராமலிருந்த பல தகவல்களை வெளிப்படுத்துகிறது. இனி வர இருக்கும் ஆய்வாளர்களுக்கு இந்நூலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு உதவிகரமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
2001-ல் இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டபோது நிலைமை வேறு விதமாகவிருந்தது. அரசு ஏராளமான உயிர்ச்சேதம் பொருட்சேதத்தோடு ஆண்டுக்கணக்கில் போராடிக் கைப்பற்றியிருந்த இடங்களை புலிகள் சிலநாட்களிலேயே மீட்டு கைப்பற்றிக்கொண்டனர். வெல்லப்பட முடியாததாக இருந்த ஆனையிறவு முகாம், பராந்தன் முகாம், கிளிநொச்சி நகரம், ஜனகபுரா முகாம் போன்றவை புலிகளின் அதிரடித் தாக்குதலில் வீழ்ந்தன. அரசியல் தளத்திலும் ராணுவ நோக்கிலும் புலிகளின் கரமே ஓங்கியிருந்தது. எந்த நேரமும் யாழ்ப்பாணம் கைப்பற்றப்படலாம் என்ற நிலையே இருந்தது. வெளிநாட்டு அரசுகள், அமைப்புகளின் உதவியின்றியே புலிகள் இதைச் சாதித்தனர்.
ஆனால் பின்பு வந்த ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறியது. வழக்கமாக அரசபடைகள் முன்னேறும்போது கெரில்லாப்படை பின்வாங்குவதுதான் இப்போதும் நடக்கிறது என்றுதான் தோன்றியது. பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் வழக்கம்போல அரசப்படைகள் விரட்டியடிக்கப்படும், எல்லாம் நலமாகவே முடியும், புலிகள் வெல்லப்பட முடியாதவர்கள் என்ற எண்ணமே பரவலாக இருந்தது. அதனால் முள்ளிவாய்க்கால் பேரழிவானது நினைத்தே பார்க்க முடியாத அதிர்ச்சியை தமிழ் மக்களுக்கு அளித்தது.
2005-க்கும் 2009-க்கும் இடையில் இந்த நான்கு ஆண்டுகளில் என்ன நடந்தது? இலங்கை அரசால் எப்படி புலிகளை வெற்றி கொள்ள முடிந்தது? என்பது மிக அடிப்படையான ஒரு கேள்வியாகும்.
பிரிட்டனின் பங்களிப்பைப் போன்ற மேலும் பல வெளிவராத மர்மங்களும் இனிவரும் ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்துவிடக்கூடும். அப்போது உலகமயமாக்கல் காலகட்டத்தில் மூலதனப்பரவலுக்கு விரும்பியோ விரும்பாமலோ இடையூறாக இருக்கும் அமைப்புகளை ஒழிக்க உலக அரசுகள் ஒன்றிணைவதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் போராட்டங்களை கட்டியமைக்க முடியாதென போராடும் அமைப்புகள் கருதும் நிலை ஏற்படலாம்.
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் இந்தத் தொடக்க ஆண்டுகளில் புலிகள் அமைப்பு மட்டுமே அழிவைச் சந்திக்கவில்லை. இந்தியத் துணைக்கண்டத்திலேயே பல அமைப்புகள் கடுமையான சேதங்களையும் பின்னடைவையும் சந்தித்தன. வலிமை வாய்ந்த அமைப்பாக இருந்த அசாம் அய்க்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா), திடீரென்று நொறுங்கிப்போனது. அது பின்வாங்குதளமாக பங்களாதேஷ் நாட்டையும் பூட்டானையும் பயன்படுத்தி கொண்டிருந்தது. இந்த இரண்டு நாடுகளில் இருந்தும் உல்பா விரட்டியடிக்கப்பட்டது. அதன் தலைவர் அரவிந்த் ராஜ்கோவா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களை பங்களாதேஷ் அரசு கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைத்து விட்டது. ஒரே நேரத்தில் தலைவர்களையும் தளங்களையும் இழந்ததே உல்ஃபா பேரழிவைச் சந்திக்கக் காரணமாக அமைந்தது.
கச்சின் போராளிகள் விஷயத்தில் இந்தியா இதே பாத்திரத்தை ஆற்றியது. மியான்மரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைக்காக போராடி வரும் அமைப்பு கச்சின் விடுதலைப் படை. மியான்மார் அரசை நெருக்குதலுக்குள்ளாக்கி சலுகைகள் பெற இந்தியா இப்போராளிகளையும், ராணுவ அரசுக்கு எதிரகப் போராடிய மாணவர்களையும் ஆதரித்தது. இலங்கைப் போராளிகளைப் போலவே கச்சின் போராளிகளுக்கும் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கி வந்தது. கச்சின் போராளிகள் மியான்மரிலிருந்து கொண்டு வரும் விலையுயர்ந்த ரத்தினக் கற்களை இந்தியாவில் விற்று ஆயுதங்கள் வாங்கவும் அரசு அனுமதித்தது.
ஆனால் தொண்ணூறுகளில் பர்மா அரசுடன் இந்தியா அரசுக்கு நெருக்கம் ஏற்பட்டதும், கச்சின் போராளிகள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் பிற ஆயுதக் குழுக்களுக்கு பயிற்சி அளிப்பதாகவும், ஆயுதக் கடத்தலில் ஈடுபடுவதாகவும் அரசு
குற்றம் சாட்டியது. உச்சகட்டமாக ஆப்பரேஷன் லீச் என்ற நடவடிக்கை மூலம் இந்தியா கச்சின் விடுதலைப்படை தலைவர்கள் பதினைந்து பேரை அந்தமானுக்குத் தந்திரமாக வரவழைத்துப் படுகொலை செய்தது. மேலும் 34 பேர்களைக் கைது செய்து சிறையிலைடைத்து வைத்துள்ளது. 'வஞ்சக உளவாளி' என்ற நூலில் இது குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
மிக நீண்ட அனுபவமும் தொடர்புகளும் உள்ள தேசிய சோஷலிச கவுன்சில் ஆப் நாகாலாந்து (ஐசக் மூவா) பிரிவு போர் நிறுத்தம் என்ற பெயரில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கிந்தியாவில் இயங்கி வந்த வேறு பல போராளி இயக்கங்களும் செயலிழந்து வருகின்றன. பர்மாவிலும் பங்களாதேஷிலும் மற்ற தென்கிழக்காசிய நாடுகளிலும் இருந்த தளங்களை இழந்ததுதான் இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக வீரம்செறிந்த வடகிழக்கிந்திய இளைஞர்களும் யுவதிகளும் உணவகங்களில் மேஜை துடைப்பவர்களாகவும், எச்சில் இலை அகற்றுபவர்களாகவும், அழகு நிலையங்களில் வேலை செய்பவர்களாகவும் இருக்கக் காண்கிறோம். முள்ளிவாய்க்காலைப் போலவே இதுவும் மாபெரும் வீழ்ச்சிதான்.
ஏறக்குறைய தலைநகரைக் கைப்பற்றிவிடும் என்று கருதப்பட்ட நேபாள மாவோயிஸ்ட் இயக்கம் இப்போது இருக்கும் நிலை வருந்தத் தக்கதாகும். அந்த இயக்கம் ராணுவ ரீதியில் தோற்கடிக்கப்படாமல் வெளிநாட்டு அழுத்தங்களாலேயே பாராளுமன்ற அரசியலில் கரைக்கப்பட்டது. இன்று போராளி இயக்கங்களுக்கு துரோகமிழைக்கும் இந்த நாடுகள்தான் முன்பு தனது விரிவாதிக்க நலன்களுக்காக பக்கத்து நாடுகளின் போராளி இயக்கங்களுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கின.
இன்று உலக மூலதனங்கள் ஒன்றிணைக்கப்பட்ட நிலையில் ஒரு நாட்டைக் கொள்ளையடிக்க அந்த நாட்டை ராணுவ ரீதியில் அடக்கி ஒடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் போய்விட்டது. யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம், கொள்ளயடித்துச் செல்லலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையையோ மியான்மாரையோ வழிக்குக் கொண்டுவர ராணுவரீதியில் தலையீடு செய்ய வேண்டிய அவசியம் இன்று இல்லை.
இதன் காரணமாகவே ஆக்கிரமிப்புப் போர்களும், அரசு எதிர்ப்பு இயக்கங்களுக்கு பிற அரசுகள் உதவுவதும் நின்று போய்விட்டது. சுருக்கமாகச் சொன்னால் முன்பு எந்தக் காரணங்களுக்காக இந்தியாவுக்கு புலிகளும், கச்சின் விடுதலைப் போராளிகளும் தேவைப்பட்டனரோ அந்தக் காரணங்கள் இப்போது இல்லை. இப்போது இலங்கையைக் கொள்ளையடிக்க அங்கே மயான அமைதிதான் தேவை. இது இந்தியாவுக்கும் பொருந்தும், பிரிட்டன், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் என்பதைத்தான் இந்த நூல் காட்டுகிறது. போருக்குப் பின்பும் இலங்கையில் மேற்கத்திய நாடுகள் செய்துவரும் முதலீடுகளின் பட்டியலும் நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.
அன்னிய மூலதனத்தை ஆதரிக்கும் அரசுகளுக்கு எதிரான எல்லா இயக்கங்களையும் அவை ஏகாதிபத்திய எதிர்ப்புத்தன்மை கொண்டவையாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அழித்து ஒழிப்பதில் ஒத்த கருத்துள்ளவையாக உள்ளன இந்த நாடுகள்.
எனவே பின்வாங்குதளங்கள், அரசியல் செயல்பாட்டிற்கான வாய்ப்புகள், ஆயுதங்கள், அங்கீகாரம் எல்லாவற்றையும் இயக்கங்கள் இழக்கும் போக்கு வலுப்பெற்று வருவதைக் காண்கிறோம். பழைய இயக்கங்களில் வெளிநாடுகளில் பின்வாங்குதளங்கள், ஆயுத வலைப்பின்னல் ஆகியவற்றைக் கொண்டிராத இந்திய மாவோயிஸ்ட் இயக்கமும், உலகமயமாக்கல் இருந்தாலும் இன்னும் பகைமைமாறாத பாக்கிஸ்தானை பின்வாங்குதளமாகக் கொண்ட காஷ்மீர் போராளி இயக்கங்களும் மட்டுமே தாக்குப்பிடித்து நிற்கின்றன. அதிலும் இந்திய மாவோயிஸ்ட் இயக்கம் அந்நிய முதலீடு குவிந்து கிடக்கும் நகர்ப்புறத் தளங்களில் சந்தித்த தனது பின்னடைவைச் சரிசெய்யப் போராடி வரும் நிலையே இன்னும் நீடித்து வருகிறது.
அதே நேரம் புவியியல் ரீதியிலான அடையாளங்களைவிட பொதுவான அடையாளங்களை அடிப்படையாகக் கொண்ட அல்கைதா, இஸ்லாமிய அரசு போன்ற இயக்கங்கள் அசுர வளர்ச்சி கண்டுள்ளன. ஒரு நாட்டுக்குள் முடக்கி அழிக்க முடியாத அளவு விரிந்த ஆதரவுத் தளங்கள் கொண்டவையாக உள்ளன இந்த அமைப்புகள். உலகமயமாக்கல் வளர்த்தெடுத்தவைதான் இந்த அமைப்புகள்.
திரும்பவும் ஈழத்துக்கு வரலாம். மனித உரிமைக் காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் இலங்கை அரசோடு ஒத்துழைத்துத்தான் வந்துள்ளன. 2008-ல் இவை இலங்கைக்கு ஆயுத ஏற்றுமதியை தடை செய்தன. ஆனால் இவை அளித்த ஆயுதங்கள் இறுதிவரை அரசுக்கு பெரிய அளவில் பயன்பட்டன. தடைகள் மூலம் புலிகளை பலவீனப்படுத்தியதும், தனிமைப் படுத்தியதும் அரசுக்கு உதவியது. நேரடியாக இல்லாமல் மறைமுகமாக தனியார் படைகள் மூலம் பிரிட்டன் இலங்கை அரசுக்கு உதவியதை இந்த ஆய்வு வெளிச்சமாக்குகிறது. யுத்தத்திற்குப் பின்பு இந்த அனைத்து நாடுகளுமே இலங்கையில் உரிய லாபம் பெற்று வருகின்றன. உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும், ஐஎம்எஃப் போன்ற அமைப்புகளும் முதலீடு செய்து வருகின்றன. இந்தியத் தொழில்நிறுவனங்களும் கூட்டம் கூட்டமாக இலங்கைக்குப் படையெடுத்து வருகின்றன.
வெற்றி கொண்டவர்கள் அதற்கான பலனை முழுமையாக அனுபவிக்கத் துடிக்கிறார்கள். தோற்கடிக்கப்பட்டவர்களின் முன்னுள்ள பணி அதற்கான காரணங்களை எல்லாத் தளங்களிலும் தேடிக் கண்டறிவதாகும். அதற்கு இந்த 'ஈழ இன அழிப்பில் பிரிட்டன்' என்ற இந்நூல் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இறுதியாக ஒன்றைச் சொல்லாமல் முன்னுரை முற்றுப்பெறாது என்று நினைக்கிறேன். இந்நூலின் மூலம் தமிழுக்கு இன்னொரு சிறந்த மொழிபெயர்ப்பாளர் கிடைத்துள்ளார். தமிழரசன் குழந்தைசாமி தூய தமிழ் மீதான பற்றையும் கைவிடவில்லை. அதே நேரம் எழுத்து நடையைக் கடினமாக்கிவிடவுமில்லை. இயல்பாக நம்மை நூலுக்குள் இழுத்துச் செல்கிறது தமிழரசனின் நேர்த்தியான மொழியாக்கம். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
- இரா.முருகவேள்
(இந்த முன்னுரை 2015 சனவரி "தமிழ்த்தேச விடுதலை அறம்" இதழில் வந்துள்ளது.)
(நன்றி: கீற்று)