சென்னை ஜெனரல் பாட்டர்ஸ் சாலையிலிருந்த ‘சண்டே அப்சர்வர்’ பத்திரிகை அலுவலகத்துக்கு அந்தக் காலகட்டத்தில் வராத திராவிட இயக்கத் தலைவர்களே இல்லை எனலாம். அந்தக் காலத்து தலைவர்களின் ஆலோசனைக் கோட்டையாகத் திகழ்ந்தது அந்த அலுவலகம்.
திராவிட இயக்கத்தின் கோரிக்கைகளை ஆங்கிலேயர்களுக்குப் புரிய வைப்பதற்காக அந்தப் பத்திரிகையைத் தொடங்கி, ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தியவர் பி.பா. என்று அழைக்கப்பட்ட பி.பாலசுப்ரமணியம். இதற்காகவே தனி அச்சு இயந்திரத்துடன் கூடிய அச்சகத்தையும், ஒரு மகிழ்வுந்தையும் அவருக்கு அளித்தார் அன்றைய சென்னை மாகாண தலைமை அமைச்சர் பொப்பிலி ராஜா. நீதிக் கட்சி மூலவர்களான நடேசனார், டி.எம்.நாயர், தியாகராச செட்டியார் ஆகிய மூவரையும் தன் தலைவர்களாகவும், வழிகாட்டியாகவும் கொண்டவர் பி.பா.
புதுச்சேரியில் 1900 ஜனவரி 15-ல் சோமசுந்தரம் மாணிக்கம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த அவர், தனது ஊரின் பெயரையே முன்னெழுத்தாக சூட்டிக்கொண்டார். பள்ளி சென்று இறுதிப் படிப்பு வரை படிக்க இயலாமல் போனாலும் சொந்த முயற்சியால் ஆங்கிலத்தில் ஆழ்ந்த புலமை பெற்று விளங்கினார். திராவிடநாடு கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் மும்பை சென்றிருந்த பெரியார், அம்பேத்கர், முகம்மது அலி ஜின்னா ஆகியோரைச் சந்தித்தார். அப்போது பெரியாருடன் மொழிபெயர்ப்பாளராக உடன் சென்றவர் பி.பா. 1944 செப்டம்பர் 23-ல் அண்ணல் அம்பேத்கரை கன்னிமரா ஹோட்டலில் வரவேற்ற பி.பா, தீண்டாமைக்கு எதிரான அவரது போராட்டத்தைப் பாராட்டிப் பேசினார். அவரது வரவேற்பை ஏற்றுக்கொண்டு அம்பேத்கர் ஆற்றிய ஒப்பற்ற உரையை அம்பேத்கர் தொகுதி 37-ல் காணலாம்.
அண்ணாவுக்கு பொப்பிலி அரசரின் அலுவலகக் கணக்குச் சிப்பந்தியாக முதல் வேலை வாங்கிக் கொடுத்தவர் பி.பா. அந்த வேலைக்கு அவரிடம் பரிந்துரை செய்தவர் பச்சையப்பன் கல்லூரி பொருளாதாரத் துறைப் பேராசிரியர் சி.டி.ராஜேஷ்வரன். பின்னாளில் அண்ணாவுக்கு அரசுக் கல்வி நிறுவனமொன்றில் ஆசிரியர் பணிக்கு அழைப்பு வந்தபோது, அந்த வாய்ப்பை மறுக்கச் சொல்லியவரும் அவர்தான். அண்ணாவின் திறமைக்கு அவர் அரசியலில் ஈடுபடுவதே சிறப்பு என்று மடைமாற்றியவர் பி.பா. என்கிறார் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு.
நீதிக்கட்சிக்குப் பெரியார் தலைமையேற்ற போது, அவரிடம் ‘சண்டே அப்சர்வ’ரை அச்சிட்டுக் கொண்டிருந்த அச்சு இயந்திரத்துடன் கூடிய அச்சகத்தையே கொடுத்துவிட்டார் பி.பா.
திராவிட இயக்கத் தலைவர்கள் அனைவருடனும் நெருக்கமான பழக்கத்தைக் கொண்டிருந்தவர் அவர். நீதிக்கட்சியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான நடேசனார் புறக்கணிக்கப்படுவதைக் கண்டு மனம் கொதித்த பி.பா, அவருக்கு சட்டசபை உதவித் தலைவர் என்ற பொறுப்பைப் பெற்றுத் தந்தார். திராவிட இயக்க வரலாறு நூலில் இந்தச் சம்பவத்தைக் கூறி பி.பா.வைப் பாராட்டியிருக்கிறார் கே.ஜி.இராதாமணாளன்.
திராவிட இயக்கத் தலைவர்கள் மட்டுமல்ல, ஆங்கில அதிகாரிகளும்கூட அவர்களுக்கு மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். அன்றைய மதராஸ் மாகாண ஆளுநரான சர்.ஆர்தர் ஹோப், பி.பா இருவரும் சேர்ந்து பல ஊர்களுக்குச் சுற்றுலா சென்றிருக்கிறார்கள். திருமதி மவுண்ட் பேட்டன், பி.பா.வை மிஸ்டர் பாலு என்று அழைக்கும் அளவுக்கு மவுண்ட் பேட்டனுடனும் அவரது குடும்பத்தினருடனும் அவருக்கு நட்புண்டு.
காந்தி தொடங்கிய ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் முடிவில் ஏற்பட்ட நெருக்கடியின் தொடர்ச்சியாக நாடெங்கும் வன்முறை நிகழ்வுகள் நடந்தேறின. தண்டவாளங்கள், தந்திக் கம்பங்கள் பெயர்க்கப்பட்டு அஞ்சலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அப்போது காந்தியைக் கண்டித்து ‘சண்டே அப்சர்வர்’ இதழில் ஒரு கட்டுரை வெளியானது. கட்டுரையின் தலைப்பு ‘திருவாளர் காந்தியே அனைத்துத் தீமைகளுக்கும் ஊற்றுக்கண்’. பி.பா.தான் அந்தக் கட்டுரையை எழுதினார்.
ராஜாஜி பி.பாவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு மூன்றாண்டுகள் தொடர்ந்து நடந்தது. பி.பா. வழக்கறிஞர் வைத்துக்கொள்ளாமல் தானே வாதாடி, வழக்கில் வெற்றியும் பெற்றார். வழக்கு நடந்துகொண்டிருந்தபோது, பி.பா. ராஜாஜியைக் கூண்டிலேற்றி விசாரித்தார். அப்போது இந்த வழக்கோடு தொடர்புடைய காந்தியை சாட்சியாக கூண்டுக்கு அழைத்துவர முடியுமா என்று கேட்டார் பி.பா. அதே பி.பா. பின்பு ஒருதடவை ‘சண்டே அப்சர்வர்’ இதழுக்காக காந்தியைப் பேட்டி எடுக்கச் சென்றார். “என்னை சாட்சிக் கூண்டுக்கு அழைத்துவர முடியுமா என்று கேட்டது நீங்கள்தானா?” என்று பி.பா.வின் தோளைத் தட்டி வரவேற்றார் காந்தி. பி.பாவின் மீது வழக்கு தொடர்ந்த ராஜாஜி, பின்பு அவரை சீனத் தூதுவராக நியமிக்கவும் உத்தரவிட்டார். ஆனால், அந்த வாய்ப்பைப் பண்போடு மறுத்துவிட்டார் பி.பா.
கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிய ‘பராசக்தி’ திரைப்படம் தணிக்கைக்குச் சென்றபோது சென்னை மாகாணத் திரைப்பட தணிக்கைத் துறையில் கே.எஸ்.சீனிவாச அய்யங்கார் தலைவராகவும் பி.பா. உதவித் தலைவராகவும் இருந்தனர். படத்தில் இடம்பெற்ற சில கடுமையான வசனங்களால் தணிக்கைச் சான்றிதழில் கையெழுத்திடாமல் தணிக்கைத் துறைத் தலைவர் காலதாமதப்படுத்தினார்.ஆனால் பி.பா. இதர உறுப்பினர்களின் கையொப்பம் பெற்று படத்தை வெளியிட அனுமதித்தார்.
பி.பா.வுக்கு ஆலோசனை கூறித் துணையிருந்தவர் அப்படத்தில் ஒரு பாடலை எழுதிய அண்ணல்தங்கோ. ஆனால், திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதும், வசனங்கள் ஏற்படுத்திய சர்ச்சையில், மேலிடம் பி.பா.வைத் தணிக்கைத் துறையிலிருந்து நீக்கிவிட்டது பலரும் அறியாத விஷயம்.
1944-ல் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் பெயரை சேலம் மாநாட்டில் திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்தபோது தமிழர் கழகமே பொருத்தமானது என்ற குரலும் எழுந்தது. தமிழர் கழகம் என்று பெயரிட வேண்டும் என்று வலியுறுத்தியவர்களில் பி.பா.வும் ஒருவர்.
திராவிட இயக்கத்தின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளிலெல்லாம் பங்கெடுத்துக்கொண்ட பி.பா, 1957 தேர்தலில் தென்சென்னை தொகுதியில் டி.டி.கிருஷ்ணாமாச்சாரியை எதிர்த்துப் போட்டியிட்டார். பெரியார் அத்தேர்தலில் காங்கிரஸை ஆதரித்தே பிரச்சாரம் செய்தார். பி.பா இத்தேர்தலில் டி.டி.கே.விடம் தோல்வியுற்றார்.
1958 மே-22ல் மாரடைப்பால் பி.பா. காலமானபோது ‘இலட்சிய வீரரை இழந்தோம்’ என்று ‘திராவிட நாடு’ இதழில் தலையங்கம் எழுதினார் அண்ணா. ‘இழந்தோமே பி.பா.வை’ என்று இரங்கற்பா வடித்தார் பாரதிதாசன். பி.பா.வின் பெயர் திராவிட இயக்கத்தின் வரலாற்றில் தவிர்க்க முடியாதது!
(நன்றி: தி இந்து)