கனியும் நீ படைத்தனை
கையும் நீ கொடுத்தனை
கனியை நான் பறிக்கவும்
கைய சைக்கச் செய்தனை
கனியில் உள்ள சுவையும்நீ
கனியை உண்ட மகிழ்வும்நீ
கனியையா சுவைத்தனன்?
கனியுனைச் சுவைத்தனன்
துவங்கும் முன்னதாகவே.....
1) சமீபத்தில் நான் வாசித்தவைகளுள் மிகச்சிறந்த புத்தகம் என்று இந்தப் புத்தகத்தைக் குறித்து உரக்கச் சொல்லுவேன்.
2) நல்ல கவிதைகளின் அபிமானிகள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது என்றும் பரிந்துரைப்பேன்.
3) மரபுக் கவிதைகளைப் பரிச்சயம் செய்ய விரும்புவோர் முயற்சி செய்ய வேண்டிய முக்கியப் புத்தகம் இது என்றும் சொல்லுவேன்.
4) இறைவன் இருக்கிறான்; அவன் ஒருவனே என்று நம்புபவர் நீங்கள் என்றால் இந்த புத்தக மதிப்புரை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். நேரடியாக நான் கீழே கொடுத்துள்ள சுட்டியைத் தட்டிப் புத்தகத்தை வாங்கிப் படிக்கத் துவங்கி விடுங்கள்.
பக்கத்திற்கு இரண்டு கானங்கள் என நூற்று எண்பது பக்கங்களுக்குத் திகட்டத் திகட்டத் தித்திக்கும் கவிதைகள்.
தேவனைப் பற்றிய கானங்கள் என நமக்குக் கிடைக்கும் இவை தனக்கு தேவனால் உணர்த்தப்பட்ட கானங்கள் என்கிறார் கவிக்கோ.
ஒருவர் ஒவ்வொரு புத்தகம் வாங்குவதற்கும் பின்னாலேயே கூட ஒரு கதை இருக்கிறது என்று என் முந்தைய விமர்சனப் பதிவில் சொல்லியிருந்தேன். புத்தகம் வாங்கவே கதை உண்டு என்றால், புத்தகம் எழுதிட ஒரு சரித்திரமே இருக்கும் அல்லவா?
இந்தப் புத்தகம் எழுத ஏற்பட்ட உந்துதலை கவிக்கோ இப்படிச் சொல்லுகிறார்.
" சந்தையில் சாமான்கள் வாங்கி கொண்டிருந்த காலத்திலேயே எங்கிருந்தோ ஒரு புல்லாங்குழல் இசை என்னை அழைத்துக் கொண்டே இருந்தது.
சந்தையும் சாமான்களும் தேவைப்படாத காலம் வந்ததும் அந்தப் புல்லாங்குழல் இசை உரத்து ஒலித்தது.
அதன் ஈர்ப்பைத் தவிர்க்க முடியாமல் நான் அந்த இசையின் மூலம் நோக்கிப் பயணம் புறப்பட்டேன்."
இப்படித்தான் துவங்குகிறது இந்தப் புத்தகத்தின் சரித்திரம். இந்தப் புத்தகம் உருவாகினதற்கான தேவை.
ஒரு மாம்பழத்தைச் சுவைத்து முடித்தவனிடம், "என்னய்யா, பழம் எப்படி இருந்துச்சி?", என்று கேட்டால் என்ன சொல்லுவேன்?
"நல்லா இனிப்புங்க"
"மாம்பழம்ன்னாலே இனிப்புதானய்யா. அதென்ன புதுசா. பழம் எப்படி இருந்துச்சி. அத்தைச் சொல்லு"
"நல்லாதாங்க இருந்துச்சி"
"நல்லா-ன்னா எப்படிய்யா, அதைக் கொஞ்சம் விளக்கிச் சொல்லேன்", என்று கேட்டால் எப்படி ஒரு மாம்பழத்தின் சுவையை விவரிப்பேன்?
மல்கோவாவும், நீலம் மாம்பழமும் ஒன்றேவா? பூவனும் பேயனும் வெவ்வேறா?
இப்படித்தான் இந்தப் புத்தகம் முழுக்க விதம் விதமான மா, பலா, வாழை என சுவைக்கச் சுவைக்க வகைவகையாய் ஒவ்வொரு பக்கத்திலும் இருந்து தேஞ்சுவையூறும் பாக்கள்; தேவகானங்கள்.
சம்பவாமி யுகே யுகே என்று பகவத் கீதையில் சொல்லும் கிருஷ்ண பரமாத்மா யுகத்திற்கு ஒருக்கா புல்டோசர் எதனையேனும் கொண்டு வந்து லோகத்தைச் சமன் செய்து விட்டுப் போனால் என்ன, வருடாவருடம் சென்னையில் டிசம்பர் மாதத்தில் மட்டும் இப்படி என்னத்திற்காய்ப் படுத்தியெடுக்கிறான். என்று யோசிப்பவனுக்கு...
அல்லவை தினம்தினம்
அதிக மாகிப் பூமியில்
நல்லவை குறைந்து ஞாலம்
நலிவுறும் பொழுதெலாம்
வல்லவன் பிறப்பெடுத்து
வருவதில்லை நேரிலே
வெல்லுகின்ற இயற்கையின்
விதிஅதைச் செய்யுமே
...என்கிறார் கவிக்கோ.
அன்பு செய்தல், கடவுள் மீதான காதல், அவனை எல்லாவற்றிலும் காணும் முயற்சி, அருளைத் தா தா என்னும் இறைஞ்சுதல், தான் பெற்றவைகளுக்கு நன்றி நவிலல், ஏற்றத் தாழ்வுகள் குறித்த கேள்விகள், கொடைத்தன்மையின் சிறப்பு என்று பலப்பல தலைப்புகளில் அழகான தமிழில், மரபுக்கவிதை வடிவில் முந்நூற்று சொச்ச கவிதைகள்.
காணும் கண்கள் தந்த உன்னைக்
காணு கின்ற ஆசையால்
காணும் காட்சி யாவி லும்.. என்
கண்களால் துளாவினேன்
காணும் காட்சி நானடா
காணும் கண்ணும் நானடா
காணும் பார்வை வந்திடின்
காண்பை எங்கும் நீயென்றான்
கடவுள் மறுப்புப் பேசுவோருக்கு அருகினில் உலாவி வந்தவர்தாம் கவிக்கோ. அவர்களையும் அங்கங்கே ஒரு பிடி பிடிக்கிறார்.
அறிவெனும் விளக்கொளிக்கு
ஆண்டவன் அகப்படான்
அறிவை நீ அணைத்திடின்
அவனைக் காண லாகுமே
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே என்கிறார் குலசேகர ஆழ்வார். திருவேங்கட மலையில் மலராகவோ, மரமாகவோ, உன் கோயிற்கதவாகவோ இல்லை உன் அடியார்கள் மேலேறி நடக்கும் படிக்கல்லாகவோ ஆகியுன்னை அனுதினம் கண்டு உய்வேன் என்கிறார் பெருமாள் திருமொழியில் குலசேகரர்.
செதுக்கி வைத்த கல்லாவதனினும், ஒதுக்கி வைத்த கல்லாய்க் கிடைக்க நினைக்கும் குலசேகரரின் இந்தப் பாடல் எனக்கு எப்போதும் ஓர் வியப்பே.
இந்தக் கருத்தின் இன்னொரு முகத்தை....
துதிக்கும் தெய்வம் எங்குமே
தோன்றுவான் எனில்க ழித்து
ஒதுக்கி வைத்த கல்லிலும்
இருப்பன் அன்றோ ஈசனே
...என்கிறார் கவிக்கோ.
மரபுக் கவிதைகள்தாம் எனினும் நிரம்பவும் சிக்கலான வார்த்தைகள் கொண்டெல்லாம் கவிதைகளைப் புனையவில்லை கவிக்கோ என்பதனால் நல்ல தமிழ் வாசிக்கத் தெரிந்த எவரும் வாங்கி வாசிக்கும் வண்ணம் உள்ள புத்தகம்.
(நன்றி: ஆம்னி பஸ்)