‘நான் ஒரு தேவர் அடியாள்’ என்று பொதுமேடைகளில் தன்னை அறிமுகம் செய்துகொள்வது பெங்களூர் நாகரத்தினம்மாவின் (1878-1952) வழக்கம். கலைகளைப் போற்றிப் பாதுகாக்கும் மதிப்புக்குரிய ஓரிடத்தைத் தேவதாசிகள் வகித்தபோது அவர் இதனைச் செய்யவில்லை; பாலியல் தொழிலாளர்களுக்கு இணையாக அவர்கள் கீழிறக்கப்பட்டு புழுதியில் வீசப்பட்டபோது நாகரத்தினம்மா தன்னுடைய தேவதாசி அடையாளத்தைப் பெருமிதத்துடன் வெளிப்படுத்திக்கொண்டார். நாகரத்தினம்மாவின் ஆளுமை எப்படிப்பட்டது என்பதற்கு இது ஓர் உதாரணம் மட்டுமே. வி.ஸ்ரீராமின் The Devadasi and the Saint நூலை வாசிக்கும்போது கொந்தளிப்பான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து, சாதித்த ஒரு பெண்ணின் உத்வேகமூட்டும் வாழ்க்கைச் சித்திரம் நமக்குக் கிடைக்கிறது.
வேறெந்த பிரிவினரைப் போல தேவதாசிகளையும் ஒற்றை அடையாளத்துக்குள், ஒரே குடையின்கீழ் அடைக்கமுடியாது. கலைகளை வளர்ப்பதற்காகவே கோயிலில் நேர்ந்துவிடப்பட்ட பெண்கள் இருந்திருக்கிறார்கள். கோயிலுக்கு வெளியில் இருந்தபடி இதே பணியைச் செய்துவந்தவர்கள் இருந்தனர். அவர்களில் சிலர் தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு அரசர்களையும் செல்வந்தர்களையும் சார்ந்திருந்தனர். மேலும் சிலர் பண்டிகைக்காலங்களில் இசை, நடனம் ஆகியவற்றில் ஈடுபட்டு மக்களை மகிழ்வித்து வந்தனர். இவர்கள் போக, பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த சிலரும் இருந்தது நிஜம். இந்தவேறுபாடுகளையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் தேவதாசி என்றாலே பாலியல் தொழில் செய்பவர்தான் என்னும் பிழையான புரிதலுடன் தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டது என்கிறார் ஸ்ரீராம்.
இச்சட்டம் தேவதாசிகளை மட்டும் ஒழிக்காது, அவர்கள் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து, வளர்த்தெடுத்துவரும் கலைகளையும் அழித்துவிடும் என்றுஅஞ்சிய நாகரத்தினம்மா, தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கினார். ஆனால் அவரால் வெற்றிபெறமுடியவில்லை. ஆயிரமாண்டுகால தேவதாசி மரபு கண்முன்னால் படிப்படியாக வீழ்ச்சியடைவதை அவர் காண நேர்ந்தது.
இருந்தும், தனிப்பட்டமுறையில் நாகரத்தினம்மா இறுதிவரை செல்வாக்குமிக்கவராகவே இருந்தார். கர்நாடக இசையுலகம் மட்டுமல்ல சமூகமும் அவரைக் கொண்டாடித் தீர்த்தது. ஒரு மகாராணியைப் போல் பரிவாரங்கள் சூழ அவர் பளிச்சென்று வளைய வந்தார். அந்தக் காலத்திலேயே வருமான வரி செலுத்தியிருக்கிறார். நிலம், பணம், தங்கம், வைரம் எதிலும் குறைவில்லை. விருதுகள் அவரை நாடிவந்தன. நிகழ்ச்சிகளில் அவரை ஒப்பந்தம் செய்வது கடினமாகிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் அவரை அசாதாரண சக்தி கொண்டவராகக்கூடப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். நாகரத்தினம்மாளிடம் ஆசி பெறுவதற்காக அவர் வீட்டு வாசலில் பலர் காத்திருக்கத் தொடங்கினார்கள். அநேகமாக, வீணை தனம்மாளுக்குப் பிறகு அதிகப் பிரசித்தி பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் இவர்தான்.
இதன் பொருள் நாகரத்தினம்மாள் சிக்கல்களையோ எதிர்ப்புகளையோ சந்தித்தில்லை என்பதல்ல. 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவதாசியும் பெண் கவிஞருமான முத்துப்பழனி தெலுங்கில் எழுதிய ‘ராதிகா சாந்த்வனமு’ என்னும் நூல் மோசமான பதிப்பில் மட்டுமே கிடைத்துவந்ததைக் கண்டு வருந்திய நாகரத்தினம்மாள் ஒரு விரிவான அறிமுகத்தை எழுதி, நல்ல தாளில் மறுபதிப்பு செய்து வெளிட்டார். சிருங்கார ரசம் கொட்டும் கண்ணன் ராதை காதல் பாடல்கள் இவை. ராதையின் பார்வையில் விரியும் இப்பாடல்களை இயற்றிய முத்துப்பழனி சிறந்த நடனக்கலைஞராகவும் அறியப்பட்டவர். கலையில் ஆர்வம் கொண்ட பெண்களை ஊக்குவிப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தவர் நாகரத்தினம்மா. அந்த வகையில் ஒரு தேவதாசியின் அழகிய படைப்பு உரிய முக்கியத்துவம் பெறாமல் இருக்கிறதே என்னும் ஆதங்கத்தில்தான் அவர் மறுபதிப்பு முயற்சியை முன்னெடுத்தார்.
1910ம் ஆண்டு வெளிவந்த அந்த மறுபதிப்பு ஒரு பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. அநாகரிகமான, அருவருப்பூட்டும் ஒரு புத்தகத்தை எப்படி நல்ல தாளில் மறுபதிப்பு செய்து வெளியிடலாம் என்று கோபம் கொண்டு பலர் பொங்கியெழுந்தனர். நாகரத்தினம்மாவின் கலைத்துறை போட்டியாளர்களும் இதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். ஒரு பாலியல் தொழிலாளியின் புத்தகத்தை இன்னொருவர் வெளியிட்டிருக்கிறார் என்று சிலர் பரிகசித்தனர். நாளை வண்ணப் படங்களுடன் கூடிய புத்தகத்தையும் அவர் வெளியிடுவாரோ என்று நகைத்தனர். புத்தகத்தைத் தடைசெய்யவேண்டும் என்று கோரி வழக்கும் தொடுக்கப்பட்டது. பெண்ணியம் என்னும் சொல் இங்கே அறிமுகமாவதற்கு முன்பே ஒரு பெண்ணியவாதியாக உருதிரண்டு நின்ற நாகரத்தினம்மா தன்மீது ஏவப்பட்ட அவதூறுகளுக்கு எதிராகவும் புத்தகத் தடைக்கு எதிராகவும் தளர்ச்சியின்றி போரிட்டார். இதிலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. அவர் உயிருடன் இருந்தவரை புத்தகத்தின்மீதான தடை நீங்கவில்லை.
இன்னொரு பெரும் சவாலையும் அவர் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. தியாகராஜரின் கீர்த்தனைகளில் தன்னை முற்றாகப் பறிகொடுத்திருந்தார் நாகரத்தினம்மா. மும்மூர்த்திகளில் ஒருவராக அல்ல, வழிபடத்தக்க ஒரு மகானாகவே அவரைக் கருதி வந்தார். திருவையாறில் தியாகராஜரின் சமாதி கவனிப்பாரற்று சீரழிந்துகிடந்ததைக் கண்டு வருந்திய நாகரத்தினம்மா, அந்த இடத்தை ஒழுங்குபடுத்தி தியாகராஜரின் நினைவாக ஒரு மண்டபத்தை எழுப்ப உறுதிபூண்டார். தன்னுடைய நேரம், சொத்து, சம்பாத்தியம் அனைத்தையும் அவர் இப்பணிக்காகச் செலவிடவேண்டிவந்தது.
மெல்ல மெல்ல கட்டுமானம் உருவாக ஆரம்பித்தது. தியாகராஜரின் திருவுருவச் சிலையும் நிறுவப்பட்டது. நாகரத்தினம்மாவின் அடுத்த கனவு, ஆண்டுதோறும் இதே இடத்தில் தியாகரஜருக்கு பிராமாண்டமான ஒரு ஆராதனை விழா நடத்தவேண்டும் என்பதுதான். அப்போது இரு எதிரெதிர் குழுக்கள் திருவையாறில் போட்டிப்போட்டுக்கொண்டு ஆளுக்கொன்றாக இசை நிகழ்ச்சிகளை நடத்திவந்தனர். நாகரத்தினம்மா இந்த இரு குழுக்களையும் ஒருங்கிணைத்து ஒரே ஆராதனையை புதிய நினைவிடத்தில் நடத்த விரும்பினார். இந்தக் கனவும் கிட்டத்தட்ட நிறைவேறிவிட்டது. ஆனால் ஆராதனை விழாவில் ஆண் இசைக்கலைஞர்களுக்கு நிகராகப் பெண்களைப் பங்கேற்க வைப்பதற்கு நாகரத்தினம்மா இன்னொரு போராட்டத்தைத் தொடங்கவேண்டிவந்தது. அதையும் சாத்தியப்படுத்திய பிறகு, எல்லாவற்றிலிருந்தும் விலகிக்கொண்ட நாகரத்தினம்மா தியாகராஜரின் சமாதிக்கு அருகில் ஓர் இல்லத்தில் தன் எஞ்சிய வாழ்வைக் கழித்துமுடித்தார். தேவதாசி முறை ஒழிக்கப்பட்டுவிட்டாலும் இறுதிவரை தியாகராஜரின் கோயிலில் ஒரு தாசியாகவே வாழ்ந்து மறைந்தார் நாகரத்தினம்மா.
ஸ்ரீராமின் புத்தகம் நாகரத்தினம்மாவின் வாழ்வையும் அவருடைய காலகட்டத்தையும் விரிவாக அறிமுகப்படுத்துகிறது. இந்தப் புத்தகத்திலிருந்து வெளிப்படும் நாகரத்தினம்மா துணிச்சல்மிக்கவராகவும் தனித்துவமானவராகவும் அசாதாரணமான ஆற்றல்களைக் கொண்டிருப்பவராகவும் இருக்கிறார். விதிமுறைகளை மீறுவதற்கு மட்டுமல்ல புதிய விதிமுறைகளை உருவாக்குவதற்கும் அவர் தயங்கியதாகத் தெரியவில்லை. கர்நாடக இசையுலகம் குறித்த அடிப்படைப் பரிச்சயம்கூட இல்லை என்றாலும் நாகரத்தினம்மாவை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. என் உலகம் கனவுகளாலும் போராட்டங்களாலும் நிரம்பியுள்ளது என்கிறார் நாகரத்தினம்மா. என் வாழ்வை என் விருப்பப்படி அமைத்துக்கொள்வேன். என் முரண்பாடுகளோடு நான் உரையாடிக்கொள்வேன். ஒழுங்கு என்பது எனக்காக நானே வகுத்துக்கொள்ளும் ஓர் இலக்கணம். என் எல்லைக் கோடுகளைத் தேவைப்படும்போது நகர்த்திக்கொள்வதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. ஒருவரும் துணை நிற்காவிட்டாலும் என் போராட்டத்தைத் தனியே முன்னெடுப்பேன். வெற்றி, தோல்வியல்ல போராட்டமே என் இலக்கு. போராடுவது என் குணம். ஏனென்றால் நான் ஒரு தேவதாசி.
இன்று கர்நாடக இசையுலகில் தேவதாசிகளுக்கு இடமில்லை என்கிறார் டி.எம். கிருஷ்ணா. வீணை தனம்மாள், நாகரத்தினம்மா, டி. பாலசரஸ்வதி, பிருந்தா, முக்தா என்று தொடங்கி எம்.எஸ். சுப்புலட்சுமிவரை நீண்டுசெல்லும் தேவதாசி பாரம்பரியம் கர்நாடக இசையுலகுக்கு அளித்துள்ள கொடை என்பது மகத்தானது. தேவதாசிகள் இல்லாத கர்நாடக இசையைக் கற்பனைகூடச் செய்து பார்க்கமுடியாது. இருந்தும் இன்று ஏன் தேவதாசிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்? கர்நாடக இசை ஏன் பிராமணர்களின் இசையாக மாறிக்கிடக்கிறது? தேவதாசி பரம்பரையைச் சேர்ந்த தகுதிவாய்ந்த கலைஞர்கள் பலர் இருந்தும் ஏன் பெருமைக்குரிய மியூசிக் அகாடெமியில் டிசம்பர் மாதக் கச்சேரிகளில் அவர்கள் இடம்பெறுவதில்லை? டி.எம். கிருஷ்ணா எழுப்பும் இந்தக் கேள்விகளுக்கு விடைகளுக்குப் பதிலாக அவதூறுகளையே அள்ளி வீசுகிறார்கள் கர்நாடக இசைக் கலைஞர்களும் கலா ரசிகர்களும்.
பெங்களூர் நாகரத்தினம்மா பங்கேற்ற ஓர் இசை நிகழ்ச்சியிலிருந்து கிடைத்த வருமானத்தையும் கொண்டுதான் மியூசிக் அகாடெமி உருவாக்கப்பட்டது என்றாலும் இறுதிவரை நாகரத்தினம்மாவுக்கு அகாடெமியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அந்த நிலை இன்றும் தொடர்கிறது என்கிறார் டி.எம். கிருஷ்ணா. எம்.எஸ். சுப்புலட்சுமி குறித்த அவர் அலசல்களும் மிகுந்த எதிர்ப்புகளைச் சந்தித்துவந்துள்ளன. நாகரத்தினம்மா ஏற்பாடு செய்த ஓர் ஆராதனை விழாவில் இளம்வயது எம்.எஸ்ஸின் கச்சேரியும் நடைபெற்றதை ஸ்ரீராமின் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. ஒரு தேவதாசியாகத் தன்னை உணர்ந்தவரை சுதந்தரப் பறவையாகவும் துணிச்சல்மிக்கவராகவும் நாகரத்தினம்மாவைப் போலவே திகழ்ந்த எம்.எஸ்., சதாசிவத்தின் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் நுழைந்தபிறகு ‘மைலாப்பூரின் விதிமுறைகளுக்கு’ உட்பட்டு வாழநேர்ந்ததையும் இந்த மாற்றம் அவருடைய இசை வளர்ச்சியைத் தடை செய்ததையும் டி.எம். கிருஷ்ணா விவாதிக்கிறார்.
இன்றைய பிராமணமயப்படுத்தப்பட்ட கர்நாடக இசையுலகம் தேவதாசிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட இசைக்கொடையை மறந்துவிட்டு அவர்களை ஒதுக்கிவைத்துள்ளது; இதை மாற்றவேண்டும் என்கிறார் டி.எம். கிருஷ்ணா. தேவதாசி மரபைச் சேர்ந்தவர்களின் இசையைத் தொடர்ந்து உதாசீனம் செய்துவந்தால் கர்நாடக இசையுலகம் செழிக்காது என்றும் அவர் வாதிடுகிறார். ‘பிராமணர்களால் பிராமணர்களுக்காக’ என்றில்லாமல் அனைவருக்காகவும் கர்நாடக இசையின் கதவுகள் திறந்துவிடப்படவேண்டும் என்பதும் டி.எம். கிருஷ்ணாவின் கோரிக்கையாக இருக்கிறது. அப்படியே ஆணாதிக்கத்தையும் மட்டுப்படுத்த அவர் விரும்புகிறார். இந்த நியாயமான சீர்திருத்தங்களைப் பரிசீலிக்கக்கூட கர்நாடக இசையுலகம் தயாராக இல்லை என்னும்போது நாகரத்தினம்மாவின் ஆளுமை மேலும் உயர்ந்து நிற்கிறது.
நாகரத்தினம்மா நடத்திய அல்லது நடத்த விரும்பியிருக்கும் போராட்டங்களைத்தான் டி.எம். கிருஷ்ணா மேற்கொண்டுவருகிறார். இந்தப் போராட்டங்களின் முதல் பயனாளி, கர்நாடக இசையுலகம்தான். ஆனால் கிருஷ்ணாவை எதிர்ப்பவர்களும் அவர்களாகவேதான் இருக்கிறார்கள். இந்த முரண்பாட்டைப் புரிந்துகொள்ளவேண்டுமானால் நாகரத்தினம்மாவைப் புரிந்துகொள்ளவேண்டும்.
பெங்களூர் நாகரத்தினம்மா இன்று ஏன் தேவைப்படுகிறார் என்பதைத் தெளிவாகவும் ஆழமாகவும் தன் நூலில் உணர்த்தியிருக்கிறார் ஸ்ரீராம். புத்தகத்தைக் கடந்து ஒரேயொரு நெருடல். ஏன் டி.எம். கிருஷ்ணாவுக்கு ஆதரவாக ஸ்ரீராம் இதுவரை குரல் எழுப்பவில்லை? அல்லது நான் கவனிக்கத் தவறிவிட்டேனா?