யூஜின் அயனெஸ்கோ எழுதிய காண்டாமிருகம் என்ற பிரெஞ்சு நாடகம் புகழ்பெற்றது [ Rhinoceros – Eugène Ionesco]. எண்பதுகளில் அந்நாடகத்தின் மலையாளத் தழுவலை நான் திருவனந்தபுரத்தில் மேடையில் முதல் முறையாகப் பார்த்தேன்.பிற்காலத்தில் திரைப்படத்தில் புகழ்பெற்ற கிருஷ்ணன்குட்டிநாயர் அதில் சிறப்பாக நடித்திருந்தார்.
அதில் ஒரு காட்சி வரும். மேடையில் சிலர் பேசிக்கொண்டிருப்பார்கள். குடையை இடுக்கி, வேட்டியை மடித்துக்கட்டி, வெற்றிலைபாக்குக்கடை முன்னால் நின்று சாவகாசமாகக் குதப்பியபடி பீடி பிடித்தபடி கேரள கூட்டணி அரசியலை அலசிக்கொண்டிருப்பார்கள். ஒரு பெரிய காண்டாமிருகம் அவர்கள்நடுவே புகுந்து திம்திம் என அந்தப்பக்கமாக செல்லும் .அவர்கள் பேச்சு சுவாரசியத்தில் அதை கவனிக்கவே மாட்டார்கள்.
அதனுடன் ஒப்பிடக்கூடிய அபத்தங்களை நாம் நம் வரலாற்றெழுத்திலே காணலாம். எதையெதையோ பேசிக்கொண்டிருப்பார்கள். நடுவே பிரம்மாண்டமாக ஒன்று கடந்து சென்றிருக்கும், யார் கண்ணிலுமே படாது. அந்த விஷயத்துக்கு மட்டுமாக ஒரு தனி குருட்டுத்தன்மை இருக்கும். அதற்குச் சிறந்த உதாரணம் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் நிகழ்ந்த தலித் எழுச்சியை தமிழ் வரலாற்றுப்பார்வை அப்படியே கண்மூடித் தாண்டிவந்தது.
சொல்லப்போனால் தமிழகத்தில் நிகழ்ந்த முதல் வெகுஜன அரசியல் இயக்கம் என்றே தலித் எழுச்சியைச் சொல்லிவிடமுடியும். சென்னையைச் சுற்றி வாழ்ந்த தலித் மக்களிடையே ஆயிரத்து எண்ணூறுகளின் கடைசியில் உருவானது இந்த விழிப்புணர்ச்சி. அதன் நாயகர்கள் பண்டித அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்றவர்கள். அந்த எழுச்சி உருவாவதற்கான சமூகக்காரணங்கள், வரலாற்று வாய்ப்புகள் பற்றி எல்லாம் நமக்கு இன்று எதுவுமே தெரியாது. காரணம் கிட்டத்தட்ட நூறு வருடம் இந்த வரலாற்றுநிகழ்வு முழுக்கவே நம் பார்வையில் படாமல் இருந்தது, நமக்கு மறைக்கப்பட்டிருந்தது.
இன்றைக்குக் கூட இந்தமூவரைப்பற்றி விரிவான, முழுமையான ஒரு வாழ்க்கைவரலாறு இல்லை. இந்த அரசியல் அலையைப்பற்றி அறிவதற்கான நல்ல வரலாற்றாய்வு நூல் இல்லை. இப்போதுதான் எழுத்து போன்ற தலித் அமைப்புகளின் முன்முயற்சியால் சிறிய அளவில் அந்நூல்கள் நூறாண்டுக்கால இடைவெளிக்குப்பின்னர் மீண்டும் அச்சேற ஆரம்பித்துள்ளன. இனி மேலும் நூல்கள் வெளிவரக்கூடும். இந்தத் தளத்தில் சலிக்காமல் சோர்வில்லாமல் பணியாற்றிவரும் அயோத்திதாசர் நடுவம் நண்பர்களான அலெக்ஸ், பாரிசெழியன் ஆகியோரை மனமாரப் பாராட்டுகிறேன்.
இவையெல்லாம் ஆதாரநூல்கள். இந்நூல்கள் காட்டும் தகவல்கள் வழியாக ஒரு விவாதம் நிகழ்ந்து அவற்றின் ஒட்டுமொத்த விளைவாக நம் வரலாற்றுணர்வு பெருமளவு திருத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்நூல்கள் பொது அறிவுத்தளத்தில் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை என்ற எண்ணம் நண்பர்களுக்கு இருக்கிறது. இந்தவகையான கருத்தரங்குகள் அந்நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை. அது நிகழுமென எதிர்பார்ப்போம்.
இந்தியவரலாற்றில் சில ஆச்சரியமான அம்சங்கள் உண்டு. பழையவரலாறு நம் மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்,சமகாலத்துக்கு கொஞ்சம் நெருக்கமான வரலாறைக் கேட்டால் ஒன்றுமே தெரிந்திருக்காது. கிமு பன்னிரண்டாம் நூற்றாண்டில் தமிழன் கப்பல் ஓட்டிக்கொண்டு சென்று மெக்ஸிகோவிலே மாயா நாகரீகத்தை உருவாக்கினான் என்று பக்கத்தில் நின்று பார்த்தவர்கள் போல கூச்சமே இல்லாமல் சொல்வார்கள். கிபி பத்தொன்பதாம் நூற்றாண்டில் நீ வாழும் நகரத்தை ஆண்டது யார் என்று கேட்டால் தெரியாது.
இது நம் பண்பாடாகவே ஆகிவிட்டிருக்கிறது. ’நாங்கள்லாம் காவேரிப்பூம்பட்டினத்திலே இருந்துவந்தவங்க, எங்க குலத்திலே செம்புடையார்னு ஒரு பெரியவர் அந்தக்காலத்திலே குலோத்துங்க சோழன் போருக்கு போறப்ப இவருதான் அவன் வாளை உருவி அவன் கையிலே குடுப்பார்’ என்று குலவரலாறு சொல்வார்கள். ’சரி, உங்கள் தாத்தாவுக்கு அப்பா என்ன தொழில் செய்தார்?’ என்று கேட்டால் சொல்லத்தெரியாது.
நமக்கு வரலாற்றுணர்வு கிடையாது என்பதை எல்லாருமே சொல்லியிருக்கிறார்கள். அதை நமக்கு நவீனவரலாற்றுணர்வு கிடையாது என்று நான் திருத்திச் சொல்லுவேன். நமக்கு வரலாறு என்பது குலவரலாறு மட்டும்தான். குலப்பெருமையை சொல்வதற்கான வரலாற்றுப்பிரக்ஞை மட்டுமே நம்மிடம் இருக்கிறது. நாம் பண்டைய வரலாற்றுக்குச் செல்வதே அதற்காகத்தான், அங்கே நாம் பெருமையடித்துக்கொள்ள ஒரு தொன்மத்தை நாம் கண்டடைய முடியும்.
இன்றைக்கு நிகழும் வரலாற்றாய்வுகளை நான் கூர்ந்து பார்க்கிறேன். பெரும்பாலான வரலாற்றாய்வுகள் நிரூபணம் சாத்தியமே இல்லாத தளங்களில்தான் நடந்துகொண்டிருக்கின்றன. சீனமொழி தமிழில் இருந்து வந்தது, அரேபிய நாகரீகமே தமிழ் நாகரீகம்தான் -இந்தவகையில். அது சீனன் காதிலும் அரேபியன் காதிலும் விழப்போவதில்லை என்ற நம்பிக்கை.
தெள்ளத்தெளிவான ஆதாரங்களுடன் எழுதப்படவேண்டிய ஆய்வுக்களங்களில் செல்லும் ஆய்வாளர்கள் நம்மிடம் மிகமிகக் குறைவு. ஆகவே நாம் சங்ககாலத்துக்கு முன்னால் பார்க்க முயல்கிறோம், பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு வரலாற்றைப் பேசுவதே இல்லை.
ஓர் உதாரணம் சொல்கிறேன், கட்டபொம்மன் பற்றிய எல்லா மூலஆவணங்களும் நம் ஆவணக்காப்பகங்களில் உள்ளன. அவற்றை சென்று எடுத்து வாசித்துப்பார்த்து ஒரு உண்மையான வரலாறு இன்னும்கூட எழுதப்படவில்லை. கட்டபொம்மன் சினிமாவுக்கு சக்தி கிருஷ்ணசாமி எழுதிய வசனத்தையே வரலாறாகக் கொண்டிருக்கிறோம் நாம்.
ஆகவேதான் ஒருநாள் எனக்கு அலெக்ஸ் இந்நூல்களை அளித்தபோது ஒருவகையான பரவசம் ஏற்பட்டது. இந்நூல்களில் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் அவர்களும் திருமதி என். ஏ. கோர்ட் ரைட் அவர்களும் சேர்ந்து எழுதிய ’தலித் மக்களும் கல்வியும்’ என்ற சிறிய நூல் ஒரு நேரடி ஆவணம். அது கருத்துக்களை முன்வைக்கக்கூடிய நூல் என்பதைப்பார்க்கிலும் கருத்துக்களுக்கு வந்து சேர்வதற்கான மூல ஆவணம் என்ற வகையில் மிக முக்கியமானது.
நூறாண்டுகளுக்கு முன்னால் சென்னையை ஒட்டி ஒரு வெகுஜன மக்களியக்கம் இயல்பாக உருவாவதற்கான சூழல் அமைந்தது. அதை நான் இப்படி உருவகித்துக்கொள்கிறேன். ஆங்கிலேயர் செறிந்த சென்னையில் அவர்களுக்கு மாட்டிறைச்சி சமைக்கவும் பரிமாறவும்கூடிய சமையற்காரர்கள் தேவைப்பட்டார்கள் இந்தியசாதிகளில் அதை தலித்துக்கள் மட்டுமே செய்யமுடியும் என்பதனால் எல்லா வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு இருளில் கிடந்த தலித்துக்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அது அவர்களுக்கு சிறிய பொருளியல்விடுதலையை அளித்தது.
பொருளியல் விடுதலை உடனே கல்வியாக மாறும். தலித்துக்களில் ஒருசாராருக்கு ஏற்கனவே மரபுவழிப்பட்ட கல்விமுறைகள் அவர்கள் சாதிக்குள்ளேயே இருந்தன. கல்வி அவர்களுக்குப் புதியதல்ல. ஆகவே அவர்கள் மிக எளிதாக, ஒரேதலைமுறையில் உயர்கல்வி வரை வந்து சேர்ந்தார்கள். அந்த படித்த தலித் சாதியினர் அன்றைய சமூகச்சூழலில் இருந்த ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். அவர்களுக்குக் கிடைத்த ஆங்கிலக்கல்வி மூலம் பெற்றுக்கொண்ட நவீன ஜனநாயக விழுமியங்கள் அவர்களுக்கு வழிகாட்டின.
இப்படித்தான் இங்கே நான் முதலில் சுட்டிக்காட்டிய முதல் அரசியல் விழிப்பியக்கம் உருவானது. உண்மையில் இங்கே உருவான பிற அரசியலியக்கங்களுக்கு அதுவே முன்னோடியானது.இங்கே நிகழ்ந்த வெகுஜன அரசியலுக்கு அதுவே தூண்டுகோலானது என்று சொல்லலாம். ஆனால் பிறகு எப்போதோ பிற்பாடு உருவான காங்கிரஸ் இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவற்றால்தான் தமிழகத்தில் தலித் விடுதலைக்கான தொடக்கம் உருவாக்கப்பட்டது என்ற சித்திரம் வரையப்பட்டுவிட்டது.
அதிலும் இன்று, 1925க்குப்பின் உருவம் கொள்ள ஆரம்பித்த திராவிட இயக்கங்களை தலித் விழிப்புணர்ச்சிக்கான முக்கியமான காரணிகளாக அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சாதியினர் விரும்பி ஏற்கும் வரலாற்றுப்பாடமாக அது உள்ளது. அதற்குஎதிரான பாடங்களை புதைத்து அழிக்க நூறாண்டுக்காலமாக அவர்கள் முயன்றுள்ளனர். முன்னோடி தலித் சிந்தனையாளர்கள் வரலாற்றில் மறைந்தது இவ்வாறுதான். தி.பொ.கமலநாதன் அவரது தலித் விடுதலையும் திராவிட இயக்கமும் என்ற நூலில் விரிவாக அந்த மோசடியை விளக்கிப்பேசுகிறார்.
மேலே சொன்ன முதல் தமிழ் வெகுஜன இயக்கமான தலித் இயக்கம் நிகழ்வதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்றாக சென்னை அடையாறில் உருவான பிரம்மஞான சங்கமும் அதன் நிறுவனத்தலைவரான கர்னல் ஆல்காட்டும் இருந்திருக்கிறார்கள். அவர்களின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டக்கூடிய ஒரு சிறிய ஆவணநூல் என்று ’தலித் மக்களும் கல்வியும்’ என்ற நூலைச் சொல்லலாம்.
உண்மையில் இந்த நூல் ஓர் அறிக்கையும் இரு துண்டுப் பிரசுரங்களும் இணைந்த தொகுப்பு மட்டுமே. ஆல்காட் எழுதிய The Poor paraiyah என்ற சிறு நூலும் கோர்ட்ரைட் எழுதிய How to teach Paraiyah’ என்ற சிறு நூலும் அடங்கியது இது. ஆல்காட் ஆரம்பித்த பஞ்சமர் இலவசப்பள்ளி என்ற அமைப்பைப்பற்றிய ஒரு அறிக்கை என இதைச் சொல்லலாம்.
இன்றைக்கு ஆல்காட் பள்ளி என்ற பேரில் அடையாறில் இயங்கி வரும் தொன்மையான இந்தப்பள்ளியானது பஞ்சமர் என அழைக்கப்பட்ட தலித் மக்களுக்கு இலவசமாக நல்ல கல்வி அளிக்கும்பொருட்டு ஆல்காட் அவர்களால் 1894ல் ஆரம்பிக்கப்பட்டது என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. நம் சமகால வரலாற்றில் புதைந்து போன ஒரு விஷயமாக இது உள்ளது. இந்தப்பள்ளி தமிழகத்தின் தலித் எழுச்சியில் ஆற்றிய பங்கு மிகமிக முக்கியமானது.
ஆல்காட்டின் திட்டம் பிரம்மாண்டமானது. ராஜ்சேகர் பாசு எழுதிய ’நந்தனாரின் குழந்தைகள் ’ [ Nandanar’s Children: The Paraiyans’ Tryst with Destiny, Tamil Nadu 1850 – 1956. Raj Sekhar Basu ] என்ற நூலில் ஐந்து வருடத்தில் ஐம்பதாயிரம் தலித் மாணவர்களுக்கு நவீனக் கல்வி அளித்து உயர்நிலைப்பள்ளிக்குக் கொண்டுசெல்லும் திட்டம் ஆல்காட்டுக்கு இருந்தது என்று நாம் காண்கிறோம். 1895ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த பஞ்சமர் இலவசப்பள்ளி 55 மாணவர்களுடன் ஆரம்பித்தது. இரண்டு வருடங்களில் 125 மாணவர்களாக வளர்ந்தது. பல எதிர்மறைச்சூழல்களில் செயல்பட்டது என்பதை நாம் காண்கிறோம். குறிப்பாக பஞ்சங்கள். அவை குழந்தைகள் வேலைசெய்தாகவேண்டிய கட்டாயத்தை உருவாக்கின. மேலும் மக்கள்தொகை செறிந்த நகரம் சுகாதாரப்பிரச்சினைகளால் நோய்க்களமாகியது. தொற்றுநோய்களில் குழந்தைகள் இறந்துகொண்டிருந்தன. ஆகவே ஒருகட்டத்தில் பிரம்மஞானசபை ஆசிரியர்கள் குடிசைகள்தோறும் சென்று மாணவர்களைத் திரட்டிப் பள்ளிக்குக் கொண்டுவரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிரம்மஞானசபையின் தலித் சேவைகளை விரிவாகப்பேசும் ராஜ்சேகர் பாசுவின் இந்த நூலைத் தமிழாக்கம்செய்வது அவசியம்.
இந்தப் பணிகளுக்குப் பின்புலமாக அமைந்தவர் இப்பள்ளிகளின் பொறுப்பில் இருந்த கல்வியாளரான திருமதி என்.ஏ.கோர்ட்ரைட். இலங்கையில் கல்விச்சேவைசெய்த இந்த அம்மையாரை ஆல்காட் தமிழகத்துக்குக் கொண்டுவந்தார். கிண்டர்கார்ட்டன் வகைக் கல்வியை அவர் அந்த பள்ளிகளில் அறிமுகம்செய்தார். இந்த அம்சத்தை நாம் கொஞ்சம் கவனமாக ஆராயவேண்டும். அக்கால பிரிட்டிஷ் பள்ளிகள் தொன்மையான மதபாடசாலைகளான ஜிம்னேஷியங்களின் அமைப்பு கொண்டவை. ஆரம்பக்கல்வியில் நம் திண்ணைப்பள்ளிக்கூட முறை பின்பற்றப்பட்டது. இந்த முறையில் கடுமையான கண்காணிப்புடன் பள்ளியை நடத்தும் மூத்த ஆசிரியரே பொறுப்பாளர்.
பஞ்சம மாணவர்களுக்கு உடனடியாகக் கல்வியை அளிக்கும் ஒரு அமைப்பை முன்னெடுத்த பிரம்மஞானசங்கம் அப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு எங்கே செல்லும்? பஞ்சமர் பள்ளிகளில் பணியாற்ற பஞ்சமர்களையே ஆசிரியர்களாக கண்டுபிடிக்கவேண்டும் இல்லையா? அத்தனை ஆசிரியர்களுக்கு முதல்தலைமுறை நவீனக்கல்வி பெறும் பஞ்சமர்களுக்குள் எங்கே போய் தேடுவார்கள்? ஆகவே என்.ஏ.கோர்ட்ரைட்டின் கிண்டர்கார்ட்டன் கல்விக்கூட முறை பேருதவியாக அமைந்தது. இந்த முறையில் சிலமாதங்கள் மட்டும் அடிப்படைப் பயிற்சி மட்டும் பெற்ற ஒருவர் குழந்தைகளுக்கு விளையாட்டுமூலம் கல்விகற்பிக்கமுடியும். மூத்தமாணவர்கள் குழந்தை மாணவர்களுக்குக் கல்வியளிக்க முடியும்.
என்.ஏ.கோர்ட்ரைட் பஞ்சம மாணவர்களுக்குக் கல்வியளிக்க செய்த சேவைகள் இன்று மறக்கப்பட்டுவிட்டன. மிகமிகக் குறைவாகவே அவரைப்பற்றிய தகவல்கள் பதிவாகியிருக்கின்றன. தலித் வரலாறு துளித்துளியாக எழுதப்படும் இந்தக் காலகட்டத்தில் என்றாவது அம்மையாரின் ஒரு நல்ல வரலாறும் எழுதப்படும் என நான் நம்புகிறேன். ஆகவேதான் தலித் மாணவர்களை எப்படிப் பயிற்றுவிக்கவேண்டும் என்ற இந்த கையேட்டை அவர் எழுதியிருக்கிறார். கிண்டர்கார்ட்டன் ஆசிரியர்களுக்கான ஒரு பயிற்சிக்கையேடு இது . அன்றைய தலித் மாணவர்களைக் கற்பிப்பதில் இருந்த பிரச்சினைகளை விவரிக்கும் நூல்.
ஆல்காட்டின் பஞ்சமர் இலவசப்பள்ளிகள் சென்னையின் கல்வி வரைபடத்தை மாற்றியமைத்த சித்திரத்தை நாம் இந்தச் சிறுநூலில் காண்கிறோம். ஒவ்வொரு வருடமும் பள்ளிகளும் மாணவர்களும் ஏறிக்கொண்டெ செல்கிறார்கள். நடுவே வீழ்ச்சிகள் காணப்படுகின்றன. அந்தக் காலகட்டத்துச் சூழலைக் கருத்தில்கொண்டு பார்க்கவேண்டியது இது. மாணவர் வருகை குறைந்தமையால் ஆல்காட் பள்ளிகள் மிக முக்கியமான ஒரு விஷயத்தை அறிமுகம் செய்தன- மதிய உணவுத்திட்டம். ஆம், இந்தியப்பள்ளிகளிலேயே முதல் இலவச மதிய உணவுத்திட்டம் ஆல்காட் பஞ்சமர் இலவசப் பள்ளிகளில் 1902 ல் அறிமுகம்செய்யப்பட்டதுதான் என்ற வரலாற்று உண்மையை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
அக்கால அரசாங்க ஆவணங்களில் இருந்து ஆல்காட் பள்ளிகளில் கற்ற மாணவர்கள் பிற கல்விக்கூடங்களில் கற்ற மாணவர்களை விட எளிதாக அதிக மதிப்பெண் பெற்று சிறந்த இடத்தில் இருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன என்கிறார் ராஜ்சேகர் பாசு. ஒருகட்டத்தில் பள்ளிகளுக்கு நிதிச்சுமை அதிகரித்தது. அந்நிலையில் பிரம்மஞான சபையின் அமெரிக்க தொடர்பாளரான அலெக்ஸாண்டர் ஃபுல்லர்ட்டன் நிதிசேகரிக்க பெருமுயற்சி எடுத்துக்கொண்டார். தமிழக தலித்துக்களின் நிலைமைகளைப்பற்றி விரிவான கட்டுரைகளும் குறிப்புகளும் எழுதி அவர்கள்மேல் பரவலாக உலகக் கவனத்தைக் கொண்டுவந்தவர் அவர். சென்னையில் தலித்துக்கள் நடுவே களப்பணி ஆற்றியவர். தமிழக தலித் வரலாற்றில் அவர் பெயரும் என்றேனும் இடம்பெறுமென நினைக்கிறேன்.
தன்னுடைய நாட்குறிப்புகளில் ஆல்காட் சென்னையை அடுத்த உரூர் என்ற கிராமத்தில் கோர்ட்ரைட் அம்மையாரின் பள்ளிக்கு அமெரிக்க வருகையாளர்களுடன் சென்றதைப்பற்றி எழுதுகிறார். 114 மாணவர்கள் படித்த அந்த பள்ளியின் மாணவர்களின் தரம் அன்றைய சென்னை ராஜதானி பள்ளிகளின் பொதுவான தரத்தைவிடப் பலமடங்கு அதிகம் என்று அவர் சொல்கிறார்.
இந்த முக்கியமான சேவைக்குத் தொடக்கமிட்ட ஆல்காட்டைப்பற்றி இன்று அனேகமாக எந்த விவாதங்களிலும் எவரும் குறிப்பிடுவதில்லை. தலித் மக்களிலேயே பெரும்பாலும் எவருக்கும் ஆல்காட் பற்றி எதுவும் தெரிந்திருக்காது என நம்பலாம். நானேகூட ஒரு இறையியலாளராக அவரை அறிந்திருந்தாலும் அவர் தலித்துக்களுக்கு ஆற்றிய சேவையை அலெக்ஸ் வெளியிட்ட இந்தச் சிறிய நூல் வழியாகவே முதலில் அறிந்துகொண்டேன். அதில் எனக்கு வெட்கமில்லை, ஏனென்றால் எனக்கு இவ்வரலாறுகள் இதுவரை சொல்லப்படவேயில்லை.
1832 ல் பிறந்து 1907 ல் மறைந்த கர்னல் ஆல்காட் பிறப்பால் அமெரிக்காவைச் சேர்ந்தவர். நியூஜெர்ஸி ஆரஞ்ச் பகுதியில் ஒருவணிகருக்கு மகனாகப் பிறந்தார்.ஆரம்பத்தில் கிறித்தவ சேவை அமைப்புகளில் ஆர்வம் கொண்டிருந்தார். தந்தை வறுமையுற்றமையால் படிப்பை முடிக்காமல் ஆல்காட் நியூயார்க் டிரிபியூன் பத்திரிகையின் விவசாயச் செய்தியாளராக பணியாற்றினார். அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து அமெரிக்க உள்நாட்டுப்போரில் தென்மாநிலங்களுக்கு எதிராகப் போராடினார். அந்தச் சந்தர்ப்பத்தில்தான் அவருக்கு நிறவெறி, இனவெறிக்கு எதிரான எண்ணங்கள் உறுதிப்பட்டன. ஆபிரகாம்லிங்கனுக்கு நெருக்கமானவராக இருந்த ஆல்காட் அவர் கொல்லப்பட்டபோது விசாரித்தகுழுவிலும் பணியாற்றினார். கர்னல் பட்டத்துடன் ஓய்வுபெற்றபின் அவர் கொஞ்சநாள் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
1874ல் அவர் எட்டி சகோதரர்கள் என்ற பிரபலமான ஆவி உபாசகர்களை ஆராய்வதற்காகச் சென்றார். அது அவருக்கு மறைஞானம் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதனூடாக அவர் கீழை ஞானத்தைக் கற்க ஆரம்பித்தார். இத்தருணத்தில் அவர் கீழை மறைஞானத்தைப்பற்றி ஆராய்ச்சிசெய்துகொண்டிருந்த ஹெலெனா பிளவாட்ஸ்கியைச் சந்தித்தார். அச்சந்திப்பு வாழ்நாள் நீண்ட ஓர் நட்பாக அமைந்தது. அவர்கள் இணைந்து 1975ல் பிரம்மஞான சங்கத்தை அமைத்தார்கள்.
ஆல்காட் 1879ல் மும்பை வழியாகச் சென்னைக்கு வந்தார். அவர் இந்தியாவை புத்தர் பிறந்த மண்ணாகவும் தன் சொந்த நாடாகவும் உணர்ந்தார். சென்னையில் அடையாறில் பிரம்மஞானசங்கத்தின் தலைமைச்செயலகம் அமைந்தது.
ஆல்காட் அமெரிக்காவில் இருக்கும்போதே தன்னை புத்தமதத்துக்கு மாற்றிக்கொண்டார். ஆனால் 1880ல் கொழும்புவில் சடங்குகள் மூலம் முழுமையாகவே பௌத்தரானார். ஆல்காட்டின் சிந்தனைத்தளத்து முக்கியமான பங்களிப்பு என்பது அவர் கட்டியமைத்த புதிய ஏற்பாடு புத்தமதம்தான்.
இந்தியா , திபேத் ,தாய்லாந்து , இலங்கை, பர்மா என பலநாடுகளில் இருந்த பலவகையான பௌத்த மரபுகள் தங்களுக்குள் தொடர்பே இல்லாமல் இருந்தன. அந்த பௌத்தஞானமரபுகளை சீராகத் தொகுத்து அவற்றின் சாராம்சமான தத்துவத்தை மீட்டவர்களில் ஆல்காட் முக்கியமானவர். 1881ல் வெளிவந்த அவரது பௌத்த ஞானம் [The Buddhist Catechism] என்ற நூல் இவ்வகையில் ஒரு முன்னோடி ஆக்கம். பின்ன்னாளில் அம்பேத்கார் பௌத்தம் பற்றி ஆய்வுசெய்து எழுதியபோது அவரது சிந்தனையை ஆல்காட் பெருமளவு பாதித்திருப்பதைக் காணமுடிந்தது.
ஆல்காட் 1907ல் இறப்பது வரை சென்னை அடையாறு பிரம்மஞானசபையின் தலைமைப்பொறுப்பில் இருந்தார். அவருக்குப்பின்னர் அவரது இடத்துக்கு அன்னிபெசண்ட் வந்தார். ஆல்காட் சென்னையில் இருந்த காலகட்டத்தில் சென்னையின் அறிஞர்களுடன் நேரடித் தொடர்புடையவராக இருந்தார். அவருடன் தொடர்புகொண்டசிந்தனையாளர்களே சென்னையில் ஒரு பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தை அமைத்தார்கள். அவர்களில் அயோத்திதாச பண்டிதர், சிங்காரவேலர், லட்சுமிநரசு ஆகியோர்முக்கியமானவர்கள்.
சென்றநூற்றாண்டின் தொடக்கத்தில் தலித் எழுச்சிக்கு இருவகையில் ஆல்காட் காரணமாக இருந்தார். ஒன்று அயோத்திதாசர் போன்றவர்களுடன் அவருக்கிருந்த நேரடி உறவுமூலம் நவீன அரசியலெண்ணங்களை அவர்களுக்கு அளித்தார். தலித் மாணவர்களுக்கு நவீனக்கல்வியை அளித்ததன் மூலம் ஒரு புதிய தலைமுறை உருவாகக் காரணமாக அமைந்தார்.
ஆல்காட்டின் இந்த தத்துவத்தளத்துப் பங்களிப்பு பெரும்பாலும் ஆய்வாளர்கள் அறிந்தது. அவர் இங்கே அயோத்திதாசர் போன்றவர்களுக்கு அளித்த ஆதரவு காரணமாக ஒரு தலித் மறுமலர்ச்சி உருவாகக் காரணமாக அமைந்தார். அதிகமும் அறியப்படாமல் போனது அவரது கல்விப்பணி. இந்தச்சிறுநூல் அதைச் சுட்டிக்காட்டுகிறது.
ஆல்காட் மறைந்து போன பின் இந்நூல் வழியாகத் தமிழ் அறிவுலகப்பரப்பில் மீண்டும் தோன்றியிருக்கிறார். அதற்காக அலெக்ஸுக்கும் பாரிக்கும் நன்றிகள். ஒரு இலட்சியவாதி மறக்கப்படுவதென்பது இலட்சியம் என்ற கருத்தாக்கமே தோற்கடிக்கப்படுவதுபோல. ஒருபோதும் அது நிகழக்கூடாது. மகத்தான கனவுகள் ஒருபோதும் நிறைவேறாமல் போவதில்லை.
அமெரிக்கா உலகுக்கு அளித்தவை இருவகை சிந்தனைப்போக்குகள். ஒன்று, எமர்சன், தோரோ போன்றவர்களால் உருவாக்கப்பட்ட ஆழ்நிலைவாதம். [Transcendentalism] இன்னொன்று, சார்ல்ஸ் பியர்ஸ் [Charles Sanders Peirce ] வில்லியம் ஜேம்ஸ் [William James] போன்றவர்களால் முன்வைக்கப்பட்ட செயல்முறைவாதம். [Pragmatism] இரு வேறுபட்ட சிந்தனைப்போக்குகள் இவை. இரு எல்லைகள் என்றே சொல்லலாம்.
ஆழ்நிலைவாதம் மனிதனின் உள்ளுணர்வுக்கு மைய இடத்தைக் கொடுக்கும் சிந்தனை எனலாம். புறவயமான தர்க்கம் மூலமோ நடைமுறைச்செயல்பாடுகள்மூலமோ வாழ்க்கையையும் பிரபஞ்சத்தையும் புரிந்துகொள்ள முடியாது. மனிதன் தன்னுள் ஆழ்ந்து தன் உள்ளுணர்வைத் தீட்டிக்கொள்வதன் மூலமே அதை அறிய முடியும். அந்த அறிதல் பெரும்பாலும் அவனுக்கு மட்டுமே உரியதாக இருக்கும். அதைப் புறவயமாக நிரூபிக்கமுடியாது, தர்க்கபூர்வமாக விளக்கிவிடவும் முடியாது.
ஆழ்நிலைவாதம் எல்லா மதங்களிலும் உள்ள சாராம்சமான உண்மைகளைத் தொகுத்துக்கொள்ள முயன்றது. முழுமுதல் உண்மையை நோக்கிய அகவயமான பயணத்தை முன்வைக்கும் கீழைமதங்களுக்கு அது அதிக முக்கியத்துவம் அளித்தது. ஆகவே அது இந்துமதம், பௌத்தமதம் ஆகிய இருமதங்களையும் அதிகமாகக் கூர்ந்து கவனித்தது. அக்காலகட்டத்தில் ஜெர்மனியமொழியிலும் ஆங்கிலத்திலும் மொழியாக்கம்செய்து வெளியிடப்பட்ட இந்து, பௌத்த மூலநூல்கள் அவர்களுக்குப் பெரும் ஈர்ப்பை அளித்தன. அவர்களின் சிந்தனைகளை வடிவமைத்தன.
ஆழ்நிலைவாதிகளைப்பொறுத்தவரை கடவுள் ஓர் ஆளுமையோ, பிரபஞ்சத்தின் நிர்வாகியோ அல்ல. கடவுளை மனிதன் முழுமையாக அறியமுடியாது. ஆனால் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் கடவுளின் இருப்பை அவன் காணமுடியும். ஆகவே இயற்கையே இறைவன். இயற்கையை அறிந்து அதில் கலந்திருப்பதே இறையனுபவம்.
மனிதன் பல்வேறு அறியாமைகளால் மூடப்பட்டிருப்பதனால்தான் அவனைச்சூழ்ந்திருக்கும் இயற்கையில் நிறைந்திருக்கும் இறைவனின் ரகசியத்தை அவனால் உணர முடிவதில்லை. சமூக வழக்கங்களின் விளைவான அறியாமை, தன்னுடைய காமகுரோதங்களால் உருவாகும் அறியாமை. அந்த அறியாமையை வெல்வதே அவன் இயற்கையில் இருந்து இறைச்செய்தியை பெறுவதற்கான வழி. ஆகவே எந்த ஆன்மீகச்செயல்பாடும் அறிவுபரப்பும் செயல்பாடாகவே இருக்கமுடியும்.
செயல்முறைவாத தத்துவம் என்பது அதன்செயல்முறையில் இருந்து வேறுபட்டு இருக்கமுடியாது என வாதிடும் ஒரு தத்துவத்தரப்பு. செயல்முறையில் இருந்தே தத்துவக்கொள்கைகள் உருவாகவேண்டும். தத்துவங்களெல்லாமே செயல்முறைக்குக் கொண்டுவந்து சரிபார்க்கப்படவேண்டும் என அது வாதிட்டது. ஆகவே நவீன அறிவியலை அது மிகவும் ஏற்றுக்கொண்டு பாராட்டியது.
அமெரிக்கச் சிந்தனை இவ்விரு தத்துவப் போக்குகளும் விவாதித்து உருவானது என்று சொல்லலாம். அமெரிக்காவின் இலட்சியவாதத்தை உருவாக்குவதில் ஆழ்நிலைவாதம் பெரும் பங்களிப்பாற்றியிருக்கிறது. நதானியல் ஹாதர்ன், ஹெர்மன் மெல்வில், வால்ட் விட்மான், எமிலி டிக்கன்ஸன், ராபர்ட் ஃப்ரோஸ்ட் போன்ற பெரும்பாலான அமெரிக்க இலட்சியவாதிகளில் ஆழ்நிலைவாதத்தின் பெரும் செல்வாக்குண்டு. ஆழ்நிலைவாதத்தின் உச்சகாலகட்டம் என 1850 முதல் 1900 வரையிலான ஐம்பதாண்டுகளைச் சொல்லலாம். அதுதான் அமெரிக்கா சுதந்திரம் சமத்துவம் மனிதநேயம் என்னும் உயர் இலட்சியங்களின் தேசமாக அறியப்பட்ட பொற்காலம்
நூறுவருட வரலாற்றைப்பார்த்தால் அமெரிக்கா மெல்லமெல்ல அதன் ஆழ்நிலைவாதத்தை மறந்துவிட்டிருப்பதைக் காணலாம். செயல்முறைவாதம் அங்கே நவீன அறிவியலின் செல்லப்பிள்ளையாக மாறி வளர்ந்தது. அயன்ராண்ட் போன்றவர்களின் நடைமுறைவாதம் அங்கே மேலும் செல்வாக்கு பெற்றது. லாபம் அதன் மந்திரவார்த்தையாக ஆகியது.
அமெரிக்காவின் இலட்சியவாத யுகத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்த ஒரு தூதர் என நாம் ஆல்காட்டைச் சொல்லலாம். ஆல்காட்டை உருவாக்கிய சிந்தனை மரபு என்பது ஆழ்நிலைவாதமே. மனிதன் தன் அகத்தில் பிரபஞ்ச ரகசியங்களைக் கண்டடையமுடியும் என்ற அவர்களின் அறைகூவலே அவரைக் கீழைநாட்டுச்சிந்தனைகளை நோக்கிக் கொண்டுவந்து பௌத்தத்தில் நிலைக்கச் செய்தது. ஆல்காட்டின் எழுத்துக்களில் நாம் எமர்சனின் வரிகளை அவ்வப்போது காணமுடியும்.
ஆழ்நிலைவாதத்தின் மையக்கருத்து அறிவே விடுதலைக்கான வழி என்பது. ஆல்காட் அதையே பௌத்தத்தின் மையச்செய்தியாகக் கண்டார். அந்த நம்பிக்கையே அவரை சென்னையில் தலித் மாணவர்களுக்குக் கல்வியளிக்கும் பெரும் திட்டத்தை உருவாக்கும்படி தூண்டியது. அந்தசெயலின் பின்னாலுள்ள அடிப்படை தரிசனத்தை இன்று கிட்டத்தட்ட நூற்றியிருபதாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நினைவுகூர இந்த சின்ன நூல் இப்போது காரணமாக அமைவதாக – ஆம், அறிவும் விடுதலையும் ஒன்றே.
[3-09-2011 அன்று சேலத்தில் தலித் ஆய்வுமையம் சார்பில் நடத்தப்படும் நான்கு தலித் நூல்களின் ஆய்வு அரங்கில் ஆற்றிய உரை]
(நன்றி: ஜெயமோகன்)