முதல் தலித் இதழ் சூரியோதயம் தொடங்கப்பட்டது 1869ம் ஆண்டு. உதய சூரியன் இதழ் வெளிவந்தது 1943ம் ஆண்டில். இந்த இரண்டோடும் சேர்த்து பஞ்சமன், சுகிர்தவசனி, இந்துமத சீர்திருத்தி, ஆன்றோர் மித்திரன், மஹாவிகடதூதன், பறையன், திராவிடப் பாண்டியன், இல்லற ஒழுக்கம், திராவிடப் பாண்டியன், பூலோகவியாஸன், ஒருபைசாத் தமிழன், திராவிட கோகிலம், மதுவிலக்கு தூதன், ஆல்காட் கிண்டர்கார்டன் ரிவியூ, விநோதபாஷிதன், வழிகாட்டுவோன் என்று மொத்தம் 42 தலித் இதழ்கள் குறித்த அறிமுகத்தை அளிக்கிறது ஜெ. பாலசுப்பிரமணியம் எழுதிய சூரியோதயம் முதல் உதய சூரியன் வரை என்னும் நூல்.
தீண்டாமை எதிர்ப்பு, தலித்துகளுக்கான கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகள், அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை தொடங்கி அறிவுசார் விவாதங்கள், சமூக அரசியல் தர்க்கங்கள், தத்துவ விசாரணைகள் என்று பல செழுமையான உரையாடல்கள் இந்த இதழ்களில் முன்னெடுக்கப்பட்டிருப்பதை ஜெ. பாலசுப்பிரமணியன் தகுந்த மேற்கோள்களோடு பதிவு செய்திருக்கிறார்.
சென்னை மாகாணசபை உறுப்பினராகவும் பறையர் மகாஜன சங்க நிறுவனராகவும் இருந்த இரட்டைமலை சீனிவாசன் அம்பேத்கருடன் வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்டு அரசியல் முக்கியத்துவம் பெற்றார் என்றால் அயோத்திதாசர் பண்பாட்டு அரசியலை முன்வைத்து தலித் வரலாற்றியலைச் செழுமைப்படுத்தினார். அயோத்திதாசருக்கும் இரட்டைமலை சீனிவாசனுக்கும் இடையில் மோதல்கள் நீடித்தபோதிலும் அவர்கள் நடத்திவந்த தமிழன், பறையன் இதழ்கள் இரண்டும் ஒரே அரசியல் பார்வையைத்தான் கொண்டிருந்தன என்பதை அறியமுடிகிறது.
0
15 மார்ச் 1922 அன்று எம்.சி. ராஜாவின் முயற்சியால் பல்வேறு தீண்டப்படாத சாதிகளுக்கு (பறையன், பள்ளன், வள்ளுவன், மாலா, மாதிகா, சக்கிலியன், தோட்டியன், செருமான், ஹொலையா மற்றும் பரிந்துரைக்கப்பட்ட பிற சாதிகள்) ஆதிதிராவிடர் என்ற பொதுப்பெயர் வழங்கப்பட்டது. இந்த அடையாளம் சென்னை மாகாண அளவில் ஓர் அரசியல் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது. அம்பேத்கரின் வரவுக்குப் பிறகு தலித் என்னும் அடையாளம் வலுபெற ஆரம்பித்தது. இந்திய அளவில் ஒரு பரந்துபட்ட ஒருங்கிணைப்பை உருவாக்க இந்தப் புதிய அடையாளம் உதவியது.
1930ல் நாக்பூரில் அகில இந்திய ஒடுக்கப்பட்ட வகுப்பார் காங்கிரஸ் அமைப்பை ஏற்படுத்தி காங்கிரஸைக் கடுமையாக விமரிசிக்க ஆரம்பித்தார் அம்பேத்கர். அதன் விளைவாக தலித்துகளுக்காக ஏதேனும் செய்தாகவேண்டிய அழுத்தத்துக்கு உள்ளானார் காந்தி. அகில இந்திய அளவில் ஹரிஜன சேவா சங்கத்தை ஆரம்பித்தார். ஹரிஜன் என்னும் பெயரில் பத்திரிகை ஒன்றையும் தொடங்கினார். சென்னை மாகாணத்தில் எம்.சி.ராஜா ஹரிஜன சேவா சங்கத்தின் செயற்குழு உறுப்பினரானார்.
1937ல் எம்.சி. ராஜா சென்னை சட்டசபைக்குப் போட்டியிட்டபோது காங்கிரஸ் அவருக்கு எதிராக ஒருவரையும் நிறுத்தாமல் ராஜாவை வெற்றிபெறச் செய்தது. காங்கிரஸின் தாழ்த்தப்பட்டோர் பிரநிதிகளாக வி.ஐ. முனுசாமி பிள்ளை, சுவாமி சகஜானந்தா, ஆர். வீரையன் ஆகியோர் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினர்களானார்கள். நீதிக்கட்சியிலும் காங்கிரஸிலும் தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதிகளாகத் தலித் தலைவர்கள் நேரடியாகவும் ஆதரவு நிலைப்பாட்டோடும் செயல்பட ஆரம்பித்தார்கள். இதனால் தலித்துகளின் தனித்த அரசியல் செயல்பாடுகள் முடிவுக்கு வந்தன.
இரட்டைமலை சீனிவாசனின் பறையர் மஹாஜன சபை தேர்தல் அரசியலில் கவனம் பெறவில்லை.1940களுக்குப் பிறகு தலித் இதழியல் சரிவடையத் தொடங்கிவிட்டது.
நாற்பதுக்கும் மேற்பட்ட தலித் இதழ்கள் வெளிவந்துள்ளபோதும் பெரும்பாலானவை இன்னமும் கண்டறியப்படவில்லை. சுவாமி சகஜானந்தர் நடத்திய ஜோதி இதழ் குறித்து அதிகம் தெரியவில்லை. ‘நந்தனார் கல்விக் கழகத்தை உருவாக்கியது, ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்தியது, மாகாண சபை உறுப்பினராக (காங்கிரஸ்) செயல்பட்டது போன்றவை இவரின் பணிகளாக அறியப்படுகின்றன.’ (காண்க : ரவிக்குமார் தொகுத்திருக்கும், சுவாமி சகஜானந்தா மேலவையிலும் பேரவையிலும் ஆற்றிய உரைகள்). அதேபோல் வீரையன் நடத்திய ஆதிதிராவிடப் பாதுகாவலன் என்னும் இதழும் கிடைக்கவில்லை. ‘சென்னை மாகாண சபையின் உறுப்பினராக இருந்ததால் சபைக்குறிப்புகள்மூலம் அவரின் அரசியல் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ளமுடிகிறது.’
ஒரு பக்கம் தலித் அரசியல் தீவிரமடைந்தபோது மற்றொருபக்கம் நீதிக்கட்சியின் பிராமணரல்லாதோர் அரசியலும் தீவிரமடைந்துவந்தது. இந்த இரண்டுக்கும் இடையிலான உறவையும் முரண்பாடுகளையும் ஜெ. பாலசுப்பிரமணியத்தின் தொகுப்பிலிருந்து தெரிந்துகொள்ளமுடிகிறது. ‘அயோத்திதாசரின் எழுத்துகள் வெளிவந்த பின்னர் தலித் தரப்பிலிருந்து திராவிட அரசியல் விமர்சனமும், பெரியார் மீதான விமர்சனமும் எழுந்தன. தலித் சமூகத்தில் இதுபோன்ற ஒரு அறிவார்ந்த மரபு பிராணமரல்லாதோர் அரசியல் தோன்றுவதற்கு முன்பே இருந்துள்ளது என்ற புரிதல் அயோத்திதாசர் மூலம் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டிருக்கிறது.’
தலித் இதழியில் வரலாற்றில் மட்டுமல்ல தமிழ் இதழியல் வரலாற்றிலும் முக்கியமான வரவு, சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை. மேலதிக ஆய்வுக்கான பல புதிய வாசல்களை இந்நூல் திறந்துவைக்கிறது. இரண்டாவது நூல், பூலோகவியாஸன் இதழில் வெளிவந்த சில சுவையான, முக்கியமான கட்டுரைகளின் தொகுப்பு.
சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை : தலித் இதழ்கள் 1869-1943
ஜெ. பாலசுப்பிரமணியம்
184 பக்கம், விலை ரூ.195
காலச்சுவடு
பூலோகவியாஸன் : தலித் இதழ்த் தொகுப்பு
ஜெ. பாலசுப்பிரமணியம்
பக்கம் 128 விலை ரூ.125,
காலச்சுவடு