கார்ப்பரேட் என்.ஜி.ஓக்களும் புலிகள் காப்பகங்களும் - முருகவேள்

கார்ப்பரேட் என்.ஜி.ஓக்களும் புலிகள் காப்பகங்களும் - முருகவேள்

இந்தியக் காடுகளில் புலிகள் குறைந்து வருகின்றன என்று கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக உரத்த குரலில் பேசப்பட்டு வருகிறது. தற்போது புலிகளுக்குத் தனி காப்பகங்கள் அமைப்பதுதான் புலிகளைக் காக்க சிறத்த வழி என்று அதிகாரபூர்வமாக முடிவு செய்யப்பட்டு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் 37 புலிகள் காப்பகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் முன்று தமிழ்நாட்டில் உள்ளன. களக்காடு-முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை ஆகியவை அவை. தவிர தற்போது சத்தியமங்கலத்தில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்தப்புலிகள் காப்பகம் என்பது இரண்டு அடுக்கு கொண்டது. காப்பகத்தின் மையப்பகுதி கோர் ஜோன் (Core zone) எனப்படுகிறது. வெளிப்பகுதி பப்பர் ஜோன் ( Buffer zone) என்றழைக்கப் படுகிறது. புலிகள் காப்பகம் செயல்படும் போது கோர் ஜோனில் மக்கள் வழ்வது தடைசெய்யப்பட்டுவிடும். (பல புலிகள் காப்பகங்களில் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன). வெளிப்பகுதியில் வரையறுக்கப்பட்ட அளவில் மக்கள் நடமாட்டம் அனுமதிக்கப்படும். இங்கு சாலை அமைத்தல், புதிய மின்சார இணைப்புகள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப்பணிகளும் நிறுத்தப்படும். வனத்துறை அனுமதிக்கும் அளவில்தான் விவசாயம் செய்ய வேண்டும். கால்நடைகளை மேய்ப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுவிடும். முதுமலை புலிகள் காப்பகத்தில் மட்டும் இரண்டு லட்சம் மக்கள் பப்பர் ஜோனில் வசிக்கிறார்கள். அவர்கள் வனத்துறையின் புதிய கட்டுப்பாடுகளூக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

மற்ற புலிகள் காப்பகங்களிலும் மக்கள் எதிர்ப்பு வலுவடைந்து வருகிறது. இது இப்படி இருக்க புலிகள் காப்பகங்களை அதரிக்கும் என்.ஜி. ஓ க்கள் பப்பர் ஜோன் உட்பட புலிகள் காப்பகத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மக்களை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்கிறார்கள்.

புலி இயற்கை உயிரினச் சுழற்சியில் ஒரு முக்கியமான கண்ணி, அது அழிந்தால் காடுகள் அழிந்துவிடும், ஓடைகள் வற்றிவிடும் என்றெல்லாம் தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்கள் பேசிவருகின்றனர். அடர்ந்த காடுகளின் உள்ளிருக்கும் வனத்துறைக்குச் சொந்தமான விடுதிகளில் அறிவுஜீவிகளையும், ஊடகத்துறையில் உள்ளவர்களையும் அழைத்து இந்தத் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கருத்தரங்குகளை நடத்திவருகின்றனர்.

இது தவிர இந்தப் புலிகள் விஷயத்தை பரந்த அளவில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வேலைகளும் குறைவின்றி நடந்து வருகின்றன. சேகர் தத்தாத்ரி என்பவர் எடுத்த ‘புலிகளைப் பற்றிய உண்மைகள்’ என்ற ஆவணப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு உள்ளூர் என்.ஜி.ஓக்களால் பள்ளிகல்லூரிகளில் காட்டப்படுகிறது. நீங்கள் ஒரு கார்டு போட்டால் போதும் படம் இலவசமாக உங்கள் வீடு தேடி வரும். இப்போது புலி பற்றி உல்லாஸ் கரந்த் என்ற ஒரு என்.ஜி.ஓ அறிவியலாளர் எழுதிய கானுறை வேங்கை என்ற ஒரு நூல் தமிழில் தியோடர் பாஸ்கரனால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் திரும்பத்திரும்ப கூறுவது ஒன்றே ஒன்றைத்தான். விலங்குகளும் மனிதர்களும் ஒன்றாக வாழ்வது சாத்தியமே இல்லை. எனவே,

  1. புலிகள் சரணாலயங்களில் உள்ள மனிதர்கள் அனைவரும் வெளியேற்றப்பட வேண்டும்.
  2. தவிர காடுகளில் வாழும் பழங்குடி மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.

அவர்களுக்கு எந்த அடிப்பட வசதிகளும் இல்லை. அவர்கள் காடுகளுக்கு உள்ளிருக்கும் வரை அதைச் செய்து கொடுப்பது சாத்தியமும் இல்லை. பழங்குடி மக்கள் காடுகளை விட்டு வெளியேறத் துடித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை நகரங்களுக்கு அழைத்து வந்து நன்கு வழவைப்பது கடமை.
என்று அவர்கள் வலியுறுத்திக் கூறுகின்றனர்.

பழங்குடி மக்களால் புலிகளுக்கு என்ன பிரச்சினைஎன்ற கேள்விக்கு சேகர் தத்தாத்ரியின் படம் பதிலளிக்கிறது. அந்த ஆவணப்படத்தில் ஒருகாட்சியில் பழங்குடி மக்கள் நெல்லிக்காய் மூட்டையை விற்பதற்குக் கொண்டு செல்கிறார்கள். பழங்குடி மக்களால் புலிக்கு இரையாகக் கூடிய விலங்குகளுக்கு நெல்லிக்காய் கிடைப்பதில்லை. எனவே அவை அழிகின்றன. கூடவே புலியும் அழிகிறது. இந்த நுணுக்கமான இணைப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் தத்தாத்ரி. அதோடுபழங்குடி மனிதர் ஒருவர் புலியை வேட்டையாடி சிறையில் இருக்கிறாராம். (லட்சக்கணக்கான பழங்குடி மக்களீல் ஒரே ஒருவர்). பழங்குடி மக்கள் பாவம் அவர்கள் வசதிகள் இல்லாமல் காடுகளில் வாழ்கிறார்கள் என்று கண்ணீர் வடித்த கையோடு அவர்கள் வேட்டைக்காரர்கள் விலங்குகளைக் கொன்று குவிப்பவர்கள் என்ற எண்ணத்தையும் நம்மிடையே விதைக்க முயல்கிறார் தத்தாத்ரி.

தமிழகத்தின் மலைகளில் 50% பகுதிகளை பெரும் நிறுவனங்களூக்கும் அரசுக்கும் சொந்தமான டீ, காபி, ரப்பர், தேக்கு, யூக்கலிப்டஸ் தோட்டங்கள் ஆகிரமித்துக் கொண்டுள்ளன. இவற்றில் எந்த மிருகங்களும் வாழ முடியாது. இது தவிர பல பகுதிகளில் அணைகளும் அரசுக்குச் சொந்தமான சுரங்கங்களும் உள்ளன. இங்கும் புலி உட்பட எந்தமிருகமும் வாழ வழியில்லை. பழங்குடி மக்கள் வழும் பகுதிகளில் தான் வனவிலங்குகள் வாழ்கின்றன.

இப்படி இருக்கும் போது இந்த சுற்றுச் சூழல்வாதிகள் ஏன் திரும்பத்திரும்ப பழங்குடி மக்களையும் ஏழை மலையோர கிராம மக்களையுமே குறிவைக்கின்றனனர்? அரசு திட்டங்களும் காடுகளுக்கு ஊறு விளைவிக்கின்றன என்று மிகமிக மென்மையாகக் கூறிவிட்டு பழங்குடி மக்களையே முக்கிய குற்றவாளிகளாகக் காட்ட இவர்கள் பெருமுயற்சி செய்கின்றனர்.

புலிகள் மீது இந்த இயற்கை ஆர்வலர்களுக்கு ஏன் இந்த திடீர்க்காதல், மனிதனும் புலிகளும் பரந்து விரிந்த காட்டில் இணந்து வாழவே முடியாது என்று இவர்கள் கூறுவதில் உண்மை உண்டா, பழங்குடி மக்கள்தான் தங்கள் செயல்கள் மூலம் காடுகளும் விலங்குகளும் அழிவதற்கு காரணமாக இருக்கிறார்கள் என்று கூறுவதில் உண்மை உண்டா போன்ற கேள்விகளுக்கு விடைகாண மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காடுகள் அழிக்கப்பட்ட வரலாற்றையும், இந்த மனிதனும் விலங்கும் ஒரே இடத்தில் வாழமுடியாது என்ற கோட்பாடு தோன்றிய விதத்தையும் பார்ப்பது அவசியம்.

காடுகளையும் விலங்குகளையும் அழித்தவர்கள் யார்?

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் குறைந்தது 7, 8 ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. டால்மன்கள் எனப்படும் பழங்குடி மக்களின் புதை குழிகள் நீலகிரி மலைகள் முழுவது காணப்பட்டதாக நீலகிரி மேனுவல் கூறுகிறது. இந்தப் பகுதிகளில் காணப்படும் குகை ஓவியங்களும் இதையே உறுதிப்படுத்துகின்றன. தவிர தமிழக, கர்னாடக, கேரள மலைப்பகுதிகள் அனைத்திலும் சிதைந்து போன பழங்கால நகரங்களையும், நடுகற்களையும் காணலாம். (இந்த நகரங்களுக்கும் நடுகற்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் இந்த அறிவியலாளர்கள் சொல்வது போல மனிதன் கால் படாத ‘கன்னி நிலம்’ என்று எதுவும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இல்லை என்பதை இவை தெளிவாக நிரூபிக்கின்றன).

இந்தியாவில் தமிழகத்தில் காடுகள் வெள்ளையர் வருவதற்கு முன்பு பழங்குடி மக்களுக்குச் சொந்தமாக இருந்தன. கோவை கலெக்டர் சலீவன் பழங்குடி மக்களான தோடர்களிடமிருந்து நிலங்களை பறிக்கும் போது அவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று கூறினார். அது புறக்கணிக்கப்பட்டது என்பது வேறு விஷயம். இன்று நீலகிரியிலுள்ள ஊட்டி, குன்னூர் போன்ற நகரங்களும் பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்களும், வெலிங்டன் போன்ற ராணூவ முகாம்களும், அரவங்காடு வெடிமருந்து தொழிச்சாலையும் பல அணைகளும் பழங்குடி மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பகுதிகளில் தான் அமைக்கப்பட்டன.

பழங்குடி மக்கள் 200 ஆண்டுகளாக ஆங்கிலேயர்களின் ஆட்சியில் பேரழிவிற்கு உள்ளாகினர். நீலகிரியிலும் சோட்டா நாகபுரியிலும் அஸ்ஸாமிலும் மற்றும் காடுகள் உள்ள அனைத்து பகுதிகளிலும் பழங்குடி மக்கள் நிலங்கள் வரைமுறையின்றி வெள்ளைக் குடியேறிகளால் ஆகிரமிக்கப்பட்டன. அவர்கள் வணங்கிய காடுகள் நாசமாக்கப்பட்டு தேக்கும் யூக்கலிப்பஸூம் காபியும், தேயிலையும் பயிரிடப்பட்டன. இப்படி வனங்களை சர்வ நாசப்படுத்திய வெள்ளையர்களை அறிவுஜீவிகள், புலிகளீன் நண்பர்கள் என்கின்றனர் தன்னார்வத்தொண்டு நிறுவனத்தினர்.

‘(சுதந்திரத்துக்கு முன்பு) பல அரசு அதிகாரிகளும் உள்நாட்டுச் சிற்றரசர்களும் வேட்டைக்கு உரிமம் பெற்றிருந்தனர். அவர்களால் உள்நாட்டுக் கள்ள வேட்டைக்காரர்களை ஓரளவு கட்டுப்பாட்டில் வைக்க முடிந்தது. காலனி ஆட்சி முடிந்ததும் இக் கட்டுப்பாடு தளர்ந்தது. உரிமம் பெற்ற வேட்டைக் காரர்களும் கள்ள வேட்டைக்காரர்களூம் போட்டி போட்டுக் கொண்டு புலிகளையும் மற்ற விலங்குகளையும் தீர்த்துக் கட்டினார்கள்.’

‘அதிலும் பிரித்தானியர்களூக்கு இயற்கை வரலாற்றில் ஈடுபாடு மிகுதி. அவர்கள் விட்டுச் சென்ற பதவிகளீல் அமர்ந்த உள்நாட்டுத் தலைவர்கள் பல்வேறு விதமான சமூகப் பின்புலத்திலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு இயற்கை வரலாற்றில் ஆர்வம் கிடையாது... அவர்கள் பார்வையில் புலிகள் ஒழித்துக் கட்டவேண்டிய ஒரு தொல்லை. (கானுறை வேங்கை பக்கம் 127)

ஏகாதிபத்திய வாதிகள் இயற்கையைக் காப்பவர்களாம். உள்நாட்டு அதிகாரிகளூக்கு அந்த உணர்வு கிடையாதாம்.
காடுகளை அழித்துச் சின்னாபின்னமாக்கியவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள்தான். அவர்கள் வேட்டையாடிக் கொன்ற புலிகளின் என்ணிக்கை பல்லாயிரம் இருக்கும். ஆனால் நேரடி வேட்டையைவிட இப்படி காடுகளை அழித்ததால் இரைகிடக்காமல் வாழவழியில்லாமல்தன் விலங்குகள் பெருமளவு அருகிப்போயின. ஏகாதிபத்தியவாதிகளுக்குப் பலியாகிப்போனது காடுகளும் விலங்குகளும் மட்டுமல்ல அவற்றோடு ஆத்மார்த்தமான் உறவு பூண்டிருந்த பழங்குடி மக்களும் தான்.

வரலாற்று அநீதி

அழிக்கப்பட்டவை போக மீதியிருந்த காடுகள் ஏகாதிபத்தியத்தின் பயன்பாட்டிற்காக ரிசர்வ் காடுகளாக அறிவிக்கப்பட்டன. இந்த ரிசர்வ் காடுகள் வனத்துறையின் முழுக்கட்டுப்பாட்டில் விடப்பட்டன. இந்தியக் காடுகளில் ஏகாதிபத்தியத்தின் நலன்களை காக்கவே அதற்குச் சேவை செய்யவே வனத்துறை 1865ல் உருவாக்கப்பட்டது. பின்பு இவ்வனத்துறை இந்தியாவில் மிகப்பெரிய ஜமீந்தாராக மாறியது. இன்றும் இந்தியாவின் மொத்த நிலப்பகுதியில் 11 சதவீதத்தை தனது இரும்புக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது வனத்துறை. (சுதந்திரத்தின் போது இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 30 சதவீதம் காடுகளாக இருந்தது. வனத்துறையின் கண்காணிப்பின் கீழ் அது 11 சதவீதமாக சுருங்கிவிட்டது)

பழங்குடி மக்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. அதற்குப்பதில் அவர்கள் தேன் சேகரித்தல், போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பறிக்கப்பட்ட பழங்குடி நிலங்களுக்கு கொடுப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்ட அற்ப நஷ்ட ஈடும் கொடுக்கப்படவில்லை.

காப்புக் காடுகளாக அறிவிக்கப்பட்டவற்றில் மக்களின் நில உரிமைகள் அங்கிகரிக்கப்படமாட்டாது. வனத்துறை அனுமதிதால் விவசாயம் செய்யலாம். வனத்துறை வெளியேறச்சொன்னால் வெளியேறவேண்டியது தான். தங்கள் சொந்த மண்ணில் சதந்திரமாக நட்மாடக் கூட முடியாமல், உயிர் வாழ விவசாயம் செய்ய முடியாமல் மறுநாள் என்ன நடக்கும் என்ற பீதியுடன் வாழ வேடிய நிலைக்குப் பழங்குடி மக்கள் தள்ளப்பட்டனர். பறிக்கப்பட்ட உரிமைகளூக்கு மாற்றாக அவர்கள் தேன் சேகரித்தல், போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

1947க்குப் பிறகு காப்புக் காடுகளின் பரப்பளவு பெருமளவு அதிகரிக்கப்பட்டது. எண்ணற்ற கிராமங்கள் விவசாய நிலங்கள் காப்புக் காடுகளின் எல்லைக்குள் கொண்டுவரப்பட்டன. ஆயிரமாயிரம் மக்கள் எந்த நஷ்ட ஈடும் இன்றி காட்டுக்கு வெளியே தூக்கியெறியப்பட்டனர். இன்றும் அடர்ந்த காப்புக் காடுகளுக்குள் சிதிலமான கோவில்கள், கிராமங்கள் போன்ற மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களைக் காணலாம்.

காப்புக்காடுகளிலிருந்து வெளியேற்றப்படாத மக்களை வனத்துறை பணயக் கைதிகளாக நடத்தியது. கட்டாயப்படுத்தி வேலை வாங்கியது...அனைத்து உரிமகளும் இழந்த மக்களுக்கு அவர்கள் அடுத்த நாள் உயிர் வழ வேண்டும் என்பதற்காக.நெல்லிக்காய் போன்ற சிறுவனப் பொருட்கள் சேகரிக்கும் உரிமை மட்டும் வழங்கப்பட்டது. இந்த உரிமையும் பறிக்கப் பட்டால் அவர்கள் காட்டை விட்டு வெளியேற வேண்டியதுதான்.

இதற்காகத்தான் என்.ஜி.ஓக்கள் நெல்லிக்காயால் புலி அழிகிறது என்கிறார்கள். இந்த உரிமையையும் பறிக்கவேண்டும் என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிறார்கள். அப்படி சேகரிக்கப்பட்ட பொருட்களை அற்ப விலைக்கு வாங்கி வனத்துறையும் வியாபாரிகளும் மக்களை ஒட்டச் சுரண்டினர். இதைத்தான் பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதி என்று அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டது.

வன உரிமைச்சட்டம் 2006

ஆனால் பழங்குடி மக்கள் ஒருநாளும் அநீதிகளையும் அடக்கு முறைகளையும் அமைதியாகச் சகித்துக் கொண்டிருக்கவில்லை. இந்திய் விடுதைப்போரின் மிக உக்கிரமான ரத்தம் தோய்ந்த அத்தியாயங்கள் இந்திய வனங்களில்தான் எழுதப்பட்டன. 1850ல் தோன்றிய சந்தால் எழுச்சியிலிருந்து அண்மையில் நடைபெற்ற முத்தங்கா சம்பவங்கள் வரை பழங்குடி மக்கள் ஓய்வில்லாமல் போராடிக்கொண்டுதான் இருந்தார்கள்.

1990கள் பழங்குடிமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்த ஆண்டுகள். கடுமையான போராட்டங்கள் 200 உயிர்பலிகள் எல்லவற்றுக்கும் பிறகு வன உரிமைச்சட்டம் வந்தது. இதன்படிபழங்குடி மக்கள் விவசாயம் செய்துவரும் நிலங்களுக்கு அவை காப்புக் காடுகளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பட்டா வழங்கப்பட வேண்டும். நிலங்களின் மீது அவர்களது அங்கிகரிக்கப்படவேண்டும். இச் சட்டம் முற்போக்கானதாகவும் இதுவரை மக்களுக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதிகளுக்கு ஓரளவு தீர்வு காணக்கூடியாதாகவும் கருதப்பட்டது. இச்சட்டம் காடுகளை நிர்வகிப்பதில் பழங்குடி மக்களுக்கு உரிமை அளித்தது. வனத்துறை முக்கிய முடிவுகளை கிராம சபைகள் அங்கீகாரம் பெற்றே எடுக்க வேண்டும் என்கின்ற அளவிற்கு மக்களுக்கு உரிமை அளித்தது.

இச்சட்டத்தின் அடிப்படையில் பட்டாக்கோரி தமிழ்நாட்டில் இன்றுவரை பல்லாயிரம் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டும் ஒரு அங்குல நிலத்திற்குக் கூட பட்டா வழங்கப்படவில்லை. வனத்துறையின் முன்னாள் ஊழியர்களும் என்.ஜி.ஒக்களும் வழக்கு மேல் வழக்கு போட்டு இச் சட்டம் செல்படுத்தப்படுவதைத் தடுத்து நிறுத்தப் போராடி வருகின்றனர். காடுகளில் மனிதர்கள் வாழக்கூடது என்ற கோட்பாடு கொண்ட தன்னார்வத்தொண்டு நிறுவனங்களும் இச்சட்டத்தின் மூலம் காடுகளில் தனது பிடி தளருகிறது என்று கருதிய வனத்துறையும் பழங்குடி மக்கள் தங்களது நிலங்களின் மீது உரிமை பெறுவதை விரும்பவில்லை.

மனிதர்களற்ற காடுகள் என்ற கோட்பாடு

சமூகத்தின் பொதுச் சொத்தாகக் கருதப்பட்ட காடுகளை தனியுடமையாக அல்லது அரசுடைமையாக மாற்றியமைக்கும் முயற்சிகள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் தோன்றினாலும் மனிதர்களற்ற காடு என்ற கோட்பாடு முழுவடிவம் பெற்றது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தான்.

1851 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த மேஜர் ஜேம்ஸ் சேவேஜ் என்பவர் தனது படையினருடன் அவானீசே என்ற செவ்விந்தியப் பழங்குடியினத்தின் தலைவனான டெனயா என்பவரையும் அவரது இனத்தையும் அழிப்பதற்காக இப்போது யோசெமைட் பள்ளத்தாக்கு எனப்படும் இடத்திற்குச் சென்றார். இது இந்தியர்களை ஒழித்துக் கட்டுவதற்காக கலிபோர்னியா மாநிலம் தொடுத்த போரின் ஒருபகுதியாகும். பல ஆதிகுடிகள் கொல்லப்பட மற்றவர்கள் சரணடைந்தனர்.

அவர்கள் காட்டின் ஒருபுறம் வாழ அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களது உரிமைகள் அடியோடு ஒழிக்கப்பட்டன. வெள்ளை விஞ்ஞானிகள் யோசெமைட் பள்ளத்தாக்கு மனித சஞ்சாரமற்றது, பழங்குடிகள் அங்கு நிரந்தரமாக வாழவில்லை, அதன் வழியாக மேலும் கீழும் சென்று வந்து கொண்டிருந்தனர் அவ்வளவுதான் என்று எழுதினர்.
இந்தக் காடு கன்னிநிலம், இங்கே மனிதன் காலடி படவே இல்லை என்று ஏராளமான பழங்குடிகள் அங்கே வாழ்ந்த காலத்திலேயே புகைப்பட நிபுணர்களும் மற்ற கைத்தடிகளும் கூசாமல் புழுகினர். ஓட்டல் உரிமையாளர்களும் சாலை அமைப்பவர்களும், உயிரியல் தொடர்பான வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் சுற்றுலாப் பயணிகளூம் வந்து குவிந்தனர். யோசோமைட் அவானீ ஹோட்டல் அதன் அடையாளமாக மாறிப்போனது. அற்பமான பழங்குடி குடிசைகள் இருந்த இடத்தில் இந்த நான்கு மாடி ஓட்டல் பிரம்மாண்டமாக எழுந்தது சுற்றுச் சூழலைக் காக்க.

செவ்விந்தியர்கள் காட்டின் நிசப்தத்தைக் குலைக்கின்றனர். அசிங்கமாகவும் அழுக்காகவும் உள்ள அவர்களைப்பார்க்க அருவருப்பாக உள்ளது என்று வெள்ளையர்கள் கூறினர். காட்டைப் பாதுகாக்க அவர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றது. அடுத்த 80 ஆண்டுகளில் காட்டிலிருந்து பழங்குடிகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்பட்டனர். 1969 ல் அவர்களது இறுதிக் குடியிருப்பும் தீயணைப்புப் பயிற்சி என்ற பெயரில் தீவைத்துக் கொளுத்தப்பட்டு காடு துய்மைப்படுத்தப்பட்டது. (Conservation Refugees பக்கம் 10)

வெள்ளையர்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, வனப்பாதுகாப்பு என்று என்ன கோட்பாடு பேசினாலும் யோசெமைட் பள்ளத்தாக்கில் நடந்தது இன சுத்திகரிப்பைத் தவிர (Ethnic cleansing) வேறு ஒன்றுமில்லை என்று பழங்குடி மக்கள் கூறுகின்றனர்.

இந்த யோசெமைட் தேசியப் பூங்காதான் இன்றுள்ள ஏராளமான வனவிலங்கு சரணாலயங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பழங்குடி மக்கள் உள்நாட்டு அகதிகளாக்கப்படவும் இந்தப் பூங்காதான் கோட்பாட்டு அடிப்படையை அளித்தது. மனிதர்களற்ற காடு என்ற கோட்பாடுமிந்த யோசோமைட் பூங்காவிலிருந்துதான் உருப்பெற்றது.

அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களில் இருந்தும் பல்லாயிரம் மக்கள் இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, வனப்பாதுகாப்பு என்ற கோஷங்களின் அடிப்படையில் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சின்னஞ்சிறிய ஆப்பிரிக்க நாடான சாட்டில் 6 லட்சம் மக்கள் காடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்திய அரசு 1 லட்சம் மக்கள் வனப் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது. இது மிகவும் குறைக்கப்பட்ட தொகை என்பதில் சந்தேகமில்லை.

சுற்றுச் சூழல் பாதுகாப்பில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்

Conservation international(CI), The Nature Consevancy (TNC), the Worldwide Fund for Nature (WWF), the African Wildlife Foundation(AWF), Wildlife Conservation Society(WCS) என்ற 5 மிகபெரிய உலகு தழுவிய தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள் மனிதைகளற்ற காடுகள் என்ற இப்பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்கின்றன. இந்நிறுவனங்கள் மேற்குலக நாடுகளை முக்கியமாக அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டி இயங்கி வருகின்றன. இவை சுற்றுச் சூழலைக்காக்க செலவழிக்கும் தொகை ஒரு சிறியநாட்டின் மொத்த வருமானத்திற்கு ஈடானதாகும். உலகில் எந்த இடத்திலிருந்து மக்கள் வனப்பாதுகாப்பு என்ற பெயரில் வெளியேற்றப்பட்டாலும் இந்த நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றின் பங்கு அதில் கட்டாயம் இருக்கும். பழங்குடி மக்கள் தலைவர்கள் இந்த நிறுவனங்களை பிங்கோ (Big NGOS) வெறுப்புடன் அழைக்கின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த நிறுவனங்களுக்கு நிதியளிப்பவர்கள் பட்டியலில் போர்டு USAID, World bank முதல் செவ்ரான் போன்ற சுற்றுச் சூழலை நேரடியாக்ச் சீரழித்த நிறுவனங்களும் உண்டு.

1960-ல்WWF க்கு நிதியளித்து வளர்த்துவிட்டவர்கள் பட்டியலில் இருந்த இருவர் மிகவும்முக்கியமானவர்கள். ஒருவர் ராபர்ட் மெக்னமார. வியட்னாம் போரில் இந்த ராபர்ட் மெக்னமாராவின் பங்கு உலகம் அறிந்தது. அப்போரின் போது அமெரிக்கா இந்தோசீனக் காடுகளில் நாப்பாம் போன்ற குண்டுகளை மழையெனப் பொழிந்தது. காடுகளில் போராளிகள் ஒழிந்து கொள்கிறார்கள் விமானத்தில் இருந்து அவர்கள் இயங்குவதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை என்று கூறி அடர்ந்த மழைக்காடுகளில் மரங்களை இலைகளை உதிக்கச் செய்யும் ரசாயனங்களை வீசியது.

இன்னொருவரான டேனியல் லுட்விக்கின் நிறுவனங்கள் அமேசான் காடுகளில் பேரழிவு ஏற்படுத்தியவை. வனங்களைப் பராமர்க்கச் சரியான நபர்கள்தான்.
இந்த நிறுவனங்கள் பல உள்ளூர் NGO க்களூடன் இணந்து செயல்படுகின்றன. உலக இயற்கை நிதியம் (Worldwide Fund for Nature- WWF) போன்ற நிறுவனங்களுக்கு உள்ளுரிலேயே ஊழியர்கள் உண்டு. இந்த நிறுவனங்கள் காடு வளர்ப்பு, புலிப்பாதுகாப்பு போன்றவற்றிற்காக நமது வனத்துறைக்கு நிதி ஒதுக்குகின்றன. அதேநேரம் இந்த நிறுவனங்களின் நிதியுதவியுடன் ஆராய்ச்சியாளர்கள் புலியும் மனிதனும் ஏன் இணைந்து வாழ முடியாது என்று ஆய்வு முடிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். கானுறை வேங்கை என்ற நூலை எழுதிய உல்லாஸ் கரந்த் நியூயார்க்கில் உள்ள காட்டுயிர்பாதுகாப்புக் (Wildlife Conservation Society, WCS) விலங்கியலாளராக உள்ளர். புலிப்பாதுகாப்பு தொடர்பாக உரைகள் நிகழ்த்திவரும் கே. விஜயகுமார் என்பவர் WWF ஐச் சேர்ந்தவர்.

இவர்களது ஆய்வுகள் முன் முடிவுகளோடு செய்யப்படுவதால் அறிவியலுக்கும் எதார்த்தத்திற்கும் புறம்பாக உள்ளதோடு ஏராளமான ஓட்டைகளும் உள்ளன. அரசியல் இலக்கியத் துறைகளில் ஒருவர் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடு தொடர்பு வைத்திருக்கிறார் என்பது வெளியானால் அவரது நேர்மை சந்தேகிக்கப்படும். இந்தச் சூழல்வாதிகளோ தங்களது என்.ஜி.ஓ சார்பை மறைப்பதே இல்லை. அதோடு இவர்கள் தாங்கள் சார்ந்துள்ள என்.ஜி.ஓக்களுக்கு சன்றிதழ் வேறு அளிக்கிறார்கள்.

உகாண்டாவில் உள்ள பிவாண்டி தேசியப்பூங்காவில் பட்வா (இவர்கள் பிக்மிகள் என்று வெள்ளையர்களால் அழைக்கப்படுகின்றனர்) என்ற பழங்குடி இன மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். கூடவே மனிதக்குரங்குகளும் வாழ்ந்து வந்தன. இந்த மக்கள் காடுகளோடு ஒன்றிப்போன தங்கள் வாழ்க்கை முறையின் காரணமாக காடுகளின் ஒருபகுதி என்றே கருதப்பட்டனர். 1994 ல் பிவாண்டி தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது. குலோபல் என்விரோன்மெண்ட் பெசிலிடி (ஜி.ஈ.எப்-GEF) பணம் வெள்ளமாகப் பாய காடு தொடர்பான ஒரு புதிய அதிகர வர்கம் உருவானது. விரைவிலேயே பட்வா பழங்குடிகள் கொரில்லாக் குரங்குகளை வேட்டையாடி உண்கிறார்கள் என்ற வதந்தி பரவியது. இந்த கொரில்லாக் குரங்கு அருகி வரும் உயிரினம் மட்டுமல்ல ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மிகப்பெரிய அளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதுமாகும். பட்வா மக்கள் என்ன சொல்லி என்ன பயன்? ஒருபாவமும் அறியாத அப்பாவிகளான 3000 பட்வாக்கள் ஊடுருவல்காரர்கள் என்று காடுகளிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். நஷ்ட ஈடாகக் கொடுப்பதற்கு ஒதுக்கப்பட்ட தொகை பங்குச் சந்தையில் தொலைந்துவிட்டதாம். தற்போது அவர்களது பாடல்கள், சடங்குகள் மருத்துவம் கதைகள் நடனங்கள் அனைத்தும் அழியும் நிலையில் உள்ளன. பார்க்க நமது புலிக்கதை போலவே உள்ளது அல்லவா?

அமெரிக்காவில் குடியேறிய வெள்ளையர்கள் காட்டெருமைகளைக் கொன்று குவித்தது உலகமறிந்த செய்தி. ஆனால் 19 ஆம் நூற்றாண்டு சூழல்வாதிகள் செவ்விந்தியர்கள் தேசியப்பூங்காக்களில் காட்டெருமைகளைக் கொன்று குவிக்கின்றனர் என்று கூசாமல் புளுகினர். அமெரிக்காவுக்கு காட்டெருமை, ஆப்பிரிக்காவுக்கு கொரில்லாக் குரங்கு, இந்தியாவுக்கு புலி.

காடு வளர்ப்பு போன்ற பல திட்டங்களை வெளிநாட்டு என்.ஜி.ஓக்களின் நிதியுதவியோடு வனத்துறை செயல்படுத்தி வருகிறது. வனத்துறைக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே நடத்தப்படும் கூட்டங்களீல் டபிள்யூ. பிள்யூ. எப் போன்ற வெளிநாட்டு என்.ஜி.ஓக்களின் உள்ளூர் பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். பழங்குடி கிராமங்களின் கால்நடைகளின் எண்ணிக்கை குறித்து தொடர்ந்து புகார்கள் அனுப்பி வருகின்றனர். பழங்குடி கிராமங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்கள் ஒரு அஞ்சத்தக்க மனிதராகக் கருதப்படுகின்றனர். இவர்களின் செயல்களால் கிராம மக்கள் தங்களை வெறுக்கின்றனர் என்று வனத்துறையின் கீழ்மட்ட ஊழியர்களே சங்கடப்படும் அளவில் நிலைமை உள்ளது.

வன அதிகார வர்க்கம் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களோடு நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளதோடு பழங்குடி மக்கள் காடுகளில் இருப்பது தங்கள் அதிகாரத்திற்கு கேடு என்று கருதுகின்றது அதுவும் வன உரிமைச் சட்டம் வந்த பிறகு. எனவே ஏற்கனவே நெருக்கமான உறவு கொண்டுள்ள இந்த இரண்டு பிரிவினரும் காடுகளில் இர்ந்து பழங்குடிகளை வெளியேற்ற இணந்து செயல் படுகின்றனர்.

ஏன் புலி?

1972 ல் புலிகள் அழிவதைத் தடுக்க புராஜெக்ட் டைகர் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது 1827 புலிகள் இருந்தன. இந்தியாவும் நேப்பாளமும் புலிகளைக்காக்க முனைந்து செயலாற்றின. உல்லாஸ் கரந்த் சொல்கிறார் “ இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இயற்கை வரலாற்றில் ஆர்வமுடையவராக இருந்ததாலும் நேப்பாளத்தில் மன்னர் மகேந்திரர் வேட்டையில் ஆர்வமுடையவராக இருந்ததாலும் காட்டுயிர் பாதுகாப்புக்கு இந்த நாடுகளில் ஆதரவு இருந்தது. இந்தியாவில் நூறு வருடங்களாக இயங்கிவந்த வனத்துறையிடம் சட்ட திட்டங்களை அமல்படுத்தும் திறனும் இருந்தது. நேப்பாள அரசு தன்னிடமிருந்த திறன்மிக்க கூர்க்காப்படையைப் பயன்படுத்தியது.... நேப்பாளத்தில் ஸ்மித் சோனியன் நிறுவத்தின் மூலமாக காட்டுயிப்பாதுகாப்பு செயல்படுத்தப்பட்டது” (கானுறை வேங்கை பக் 131)
அப்புறமென்ன பிரச்சினை?

இப்போது புலிகளின் எண்ணிக்கை 1411 ஆகக் குறைந்துவிட்டது. முப்பது ஆண்டுகளில் பலநூறு கோடி ரூபாய் செலவிற்குப் பிறகு புலிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இது இப்போது திடீரென்று என்.ஜி.ஓக்களின் கவனத்துக்கு வந்துவிட்டது. எனவே புலிகளைக்காக்க தனி காப்பகங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் விஷயம் இவ்வளவு எளிமையானதல்ல.

வன உரிமைச் சட்டம் செயல் படுத்தப்படுவதைத் தடுக்கக் கண்டுபிடிக்கப்பட்ட வழிதான் புலிகள் காப்பகம். புலி நட்டின் எல்ல இடங்களிலும் இருக்கிறது. எனவே இந்த ஒரே காரணத்தை சொல்லி பழங்குடிகளை வெளியேற்றிவிடலாம். வன உரிமைச் சட்டத்தின் கீழ் பழங்குடி மக்கள் தங்கள் நிலங்களின் மீது உரிமை பெறுவதற்கு முன் அவர்கள் வாழும் பகுதிகளை புலிகள் காப்பகங்களுக்குள் கொண்டு வந்து மொத்தமாக வெளியேற்றிவிடவெண்டும் என்பதே இப் புலிப்பாதுகாவலர்களின் உண்மை நோக்கம் என்று பழங்குடி மக்களின் நலன்களில் ஆர்வம் கொண்டவர்கள் சந்தேகிக்கின்றனர்.

இந்த என்.ஜி.ஓ அறிவியலாளர்கள் திரும்பத்திரும்ப கூறுவது ஒரே ஒரு விஷயத்தைத் தான். விவசாயம் கால்நடை வளர்ப்பு வனப்பொருட்கள் சேகரித்தல் ஆகியவை புலிகளின் வாழிடங்களைச் சீரழிக்கின்றன. பழங்குடி மக்கள் காடுகளை அழிக்கிறார்கள். கானுறை வேங்கை என்ற புத்தகத்தில் புலி எப்படி எல்லாம் பதிக்கப்படுகிறது என்று ஒரு படம் கொடுக்கப்பட்டுள்ளது. பக்கம் 125. அதில் பழங்குடிகள் விறகு பொறுக்குகிறார்கள் முயல் பிடிகிறார்கள் தேன் எடுக்கிறார்கள் விவசீயிகள் மாடு மேய்க்கிறார்கள் புலி திக்கற்று நிற்கிறது. சேகர் தத்தாத்ரியின் படத்திலும் இதேபோன்ற ஒரு காட்சி உண்டு. பழங்குடிகள் நெல்லிக்காய் விற்கிறார்கள், அதை ஏதோ ஒரு விலங்கு தின்கிறது. அதை புலி தின்கிறது. எனவே நெல்லிக்காய் இல்லாமல் புலி பாதிக்கப்படுகிறது.

இந்த வியாக்கியானங்கள் எல்லாம் ஏதோ நுணுக்கமாகப் பார்ப்பது போலவும் இயற்கையின் மெல்லிய ஒருங்கிணைப்பை நமக்கு உணர்த்துவது போலவும் பாசங்கு செய்கின்றன. ஆனால் கண்முன் தெரியும் மாபெரும் பேரழிவை இந்த அறிவு ஜீவிகள் அப்பட்டமாக மூடிமறைக்கிறார்கள். இந்தப்படத்தில் ஏன் பெருந்தோட்டங்களும், அணைகளூம், சுரங்கங்களூம், எகோடூரிஸம் ரிசார்ட்டுகளூம் இடப் பெறுவதில்லை?

புலியின் காபால அளவு, சினைக்காலம், இரையின் அளவு குறித்தெல்லாம் புள்ளிவிவரங்கள் அளித்து இவர்கள் நம் மூளையைக் குழப்ப முயன்றாலும் இந்தக் கேள்விகள் எழுந்து கொண்டேதான் இருக்கின்றன. இந்த அறிவுஜீவிகள் காட்டின் இயற்கைச் சுழற்சியில் பழங்குடி மக்களுக்கு இடமே இல்லை என்று பிடிவாதமாகச் சாதிக்கிறார்கள். எப்படி இல்லை ஏன் இல்லை என்பது குறித்து இதுவரை எந்த ஆய்வும் வெளிவந்ததாகத் தெரியவில்லை.

புலிகள் காப்பகம் என்பது மிகவும் லபகரமான ஒரு வணிகமாகும். பல்லாயிரம் கோடிரூபாய் புலிகளைக்காக்க கொட்டிக் கொடுக்கப்படுகிறது. இது தவிர மக்களோடு தனது அதிகாரத்தைப் பகிரிந்து கொள்ள வேண்டிய தேவையிலிருந்து தப்பித்துக் கொள்ள வனத்துறைக்கும் வன அதிகார வர்க்கத்திற்கும் வாய்ப்பளிக்கிறது. வன உரிமைச்சட்டம் காடுகளில் மக்கள் கெளரவமாக வாழ வழி செய்கிறது. புலிகள் காப்பகம் அவர்களை விரட்டியடிக்க வழி செய்கிறது. வனத்துறை இரண்டாவதை விரும்புகிறது.

சரிக்ஸா மற்றும் பானா வனவிலங்கு சரணாலயத்தில் புலிகள் முற்றிலும் அழிந்துவிட்டன. ஆனால் அதைப் புலிகள் காப்பகமாக தக்க வைத்துக் கொள்ள வேறிடத்திலிருந்து அங்கு புலிகள் கொண்டுவந்துவிடப்பட்டன. எனவே புலிகள் காப்பகங்கள் என்பவை புலிகளை காக்க அல்ல அதனால் கிடைக்கும் வேறு நலன்களுக்காகவே துக்கிப் பிடிக்கப்படுகின்றன.

புலியைக் காப்பாற்ற வனத்தின் ஒருபகுதியை ஒதுக்கி வைத்துத் தான் ஆகவேண்டும் என்றால் வனநில உரிமை சட்டதிலேயே ஒரு குறிப்பிட்ட பகுதியை critical wildlife habitat என்று அறிவிக்க பிரிவு 4(2)(f) வழிவகை செய்கிறது. ஆனால் அதற்குப் பிறகு அந்தப்பகுதியை வேறு எந்த பணிக்கும் பயன் படுத்துவதை இச் சட்டம் கண்டிப்பாகத் தடை செய்கிறது. உண்மையிலேயே புலிகளைக் காப்பதுதான் நோக்கம் என்றால் இப்பிரிவின் கீழ் புலிகள் காப்பகங்களை அறிவித்திருப்பார்கள். ஆனால் அரசு wild life (protection) Actல் ஒரு திருத்தம் கொண்டு வந்து புலிகள் காப்பகங்களை அமைக்க வழி செய்தது. அது டைகர் திருத்தம் எனப்படுகிறது. இத்திருத்தத்தில் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பகுதியை வேறு பணிகளுக்குப் பயன் படுத்த தடை இல்லை. எனவே அரசின் நோக்கம் தெளிவாகிறது என்கிறார் சி. ஆர். பிஜாய். புலிகளின் நல்வாழ்வையே தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இதைக் ஏன் கண்டுகொள்ளவில்லை என்ற மர்மத்தை புலிகளின் காதலர்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

வன உரிமைச்சட்டம் செயல் படுவதைத் தடை செய்ய வேண்டும். காடுகளில் மக்கள் இருக்கும் வரை இச் சட்டப்படி மக்களது நில உரிமை அங்கீகரிக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து கொண்டுதான் இருக்கும். அதை முறியடிக்க காடுகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதுதான் ஒரே வழி.
அதோடு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பகுதியை பின்பு சுரங்கம் போன்ற வேறு நோக்கங்களுக்கு பயன் படுத்துவதற்கு சட்ட ரீதியிலான தடை ஒன்றும் வந்துவிடக்கூடாது!

120 கோடிப்பேர் வாழும் இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 5 சதவீத பகுதியை புலிகள் காப்பகமாக ஆக்க வேண்டுமாம். அங்கிருந்து மக்களை வெளியேற்றிவிட வேண்டும். இப்போது உள்ள மொத்தப் புலிகளின் எண்ணிக்கி 1500.

வன உரிமைச் சட்டப்படி மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்திய பின்பே இக்காப்பகங்கள் அமைக்கப்படிருக்க வெண்டும். ஆனால் அத்தைகய சட்டபூர்வ நடவடிக்கைகள் எதுவும் நடத்தப்படாமலேயே இக் காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வன உரிமைச் சட்டம் என்ற ஒன்றே இல்லதது போல இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பாசாங்கு செய்கின்றன.

மக்களற்ற காடுகளில் என்.ஜி.ஓக்களும் வனத்துறையும் என்ன செய்யப் போகிறார்கள்?

முதுமலை புலிகள் காப்பகத்தில் என்ன நடக்கிறது என்பது இக் கேள்விக்கு விடை சொல்லும். முதுமலை வனவிலங்கு சரணாலயம் சுமார் 350 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இப்பகுதி புலிகள் சரணாலயமாக மாற்றப்பட்டதும் இந்தப் பகுதி காப்பகத்தின் மையப்பகுதியாக மாற்றப்பட்டது. இதைச் சுற்றிலுமுள்ள 9 பஞ்சாயத்துகள் பப்பர் ஜோன் எனப்படும் புலிகள் காப்பகத்தின் சுற்றுப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

முதுமலை புலிகள் காப்பகத்தின் மையப்பகுதியில் அதாவது கோர் ஜோனில் 350 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள். கடந்த 60 ஆண்டுகளில் முதுமலை சரணாலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பழங்குடிகள் ஒரு தனி இனக்குழுவாகவே மாறி சுற்றியுள்ள பகுதிகளில் கொடும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். பப்பர் ஜோன் எனப்படும் சுற்றுப் பகுதியில் இரண்டுலட்சம் பேர் வசிக்கிறார்கள். இந்தப்பகுதி பப்பர் ஜோன் ஆக அறிவிக்கப்பட்டதும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு கெடுபிடிகள் மக்கள் மீது திணிக்கப்பட்டன. இன்னின்ன பயிர்களை விளைவிக்கலாம் விளைவிக்கக் கூடாது என்று வனத்துறை உத்திரவிட்டது. புதிய சாலைகள் அமைப்பது தடை செய்யப்பட்டது. புதிய கட்டடங்கள் கட்டுவது தடை செய்யப்பட்டது. புதிய மின் இணைப்புகள் தரப்படவில்லை. இன்னும் எத்தைனையோ கட்டுப்பாடுகள்... மக்கள் வாழ்க்கை தலைகுப்புற கவிழ்த்துப்போடப்பட்டது. அவர்களே கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிவிடவேண்டும் என்பதுதான் வனத்துறையின் திட்டம் என்று மக்கள் கருதினர்.

கொதித்துப் போன மக்கள் ஒரு லட்சம் பேர் கூடலூர் நகரில் திரண்டு ஊர்வலம் நடத்தினர். தற்காலிகமாக வனத்துறை பின் வங்கியுள்ளது. எவ்வளவு நாட்களுக்கு என்பது கேள்விக்குறி. ஆனால் கோர் ஜொன் எனப்படும் மையப்பகுதியில் என்ன நடக்கிறது தெரியுமா?

சீசன் நேரத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 6000 சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். குறைந்தது 50000 சதுரடியில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பல புதிய வாகனங்களை வனத்துறை வாங்கியுள்ளது. இன்னும் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவும் அவர்கள் தங்குவதற்காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்கி/றார் நீலகிரி விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கத்தலைவர் செல்வராஜ். முதுமலை, அதையொட்டியுள்ள கேரளத்தின் முத்தங்கா, கர்நாடகத்தின் பந்திப்பூர் ஆகிய மூன்று சரணாலயங்களிலும் சேர்த்து 80 புலிகள் இருப்பதாக மதிப்பிட்டு இருக்கிறார்கள். இதற்காக தமிழ்நாட்டில் மட்டும் இரண்டு லட்சம் பேரின் வாழ்க்கை கேள்விக் குறியாக்கப் படும் நிலைமை உள்ளது.

மொத்தத்தில் புலிகள் காப்பகங்கள் ஆயுதமேந்திய சில வனக்காவலர்களையும், சுற்றுலாப்பயணிகளையும் தவிர வேறு யரும் தலை காட்ட் முடியாத பிரதேசங்களாக மாற்றப்படும். சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத விடுதிகள் அமைத்து சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத சுற்றுலா நடத்துவார்கள். இந்த எகோடூரிஸம் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஒரு மிகப்பெரிய லாபகரமான தொழில். இந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் காடுகள் என்றால் அங்கு மனிதர்கள் இருக்கக் கூடாது என்று மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். இந்த சுற்றுலா மூலம் நாகரிகமான பயணிகள் காட்டுக்கு வந்து விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்து செல்வார்கள். இதற்கு முன்நிபந்தனையாக ஏற்கனவே காடுகளில் விலங்குகளோடு விலங்குகளாக வழ்ந்து வருபவர்கள் விரட்டியடிக்கப்படவேண்டும் என்கிறார் பிஜாய். (The great Indian tiger show EPW 22.1.2011).

இது பழய மொந்தையில் புதிய கள்ளு என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்கிறார் அவர். சதந்திரத்திற்கு முன்பு சமஸ்தான மன்னர்களும் ஆங்கில ஆட்சியாளர்களும் வேட்டையாட தனி பிரதேசங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டன. அங்கு மற்றவர்கள் செல்வது தடை செய்யப்பட்டிருந்தது. சுதந்திரத்திற்குப் பின்பு வேட்டை தடை செய்யப்பட்டது. இந்தப்பகுதிகள் தான் பின்பு வனவிலங்கு சரணாலயங்களாக மாற்றப்பட்டன. இப்போது அவர்களே எகோடூரிஸ்டுகளாக திரும்ப வருகிறார்கள்.

இப்போதேகூட வனவிலங்கு சரணாலயங்களில் விலங்குகளைப் பார்க்கிறோமோ இல்லையோ வெள்ளைக்காரர்களைக் கட்டாயம் பார்க்கலாம்.
எக்கோ டூரிஸம் மூலம் கிடைக்கும் தொகையில் ஒருபகுதி உள்ளூர் மக்களுக்கு அளிக்கப்படுமாம். எவ்வளவு கிடைக்கும் என்று இந்த எக்கோடூரிஸத்தில் முன்னணியில் இருக்கும் நேப்பாளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

சுற்றுலாப்பயணிகள் செலவழிக்கும் தொகையில் 69 சதவீதம் நேப்பாளத்திற்கே வருவதில்லை. சுற்றுல்லா ஏற்பாடு செய்யும் ஐரோப்பிய அமைப்புகளுக்கே போய்விடுகிறது. 31 சதவீதம் கட்மண்டுவில் இருக்கும் கம்பெனிகளுக்குப் போகிறது. 1.2 சதவீதமே உள்ளூர் வந்து சேர்கிறது.( Conservation Refugees பக் 255). ஆனால் இதற்கு உள்ளூர் மக்கள் கொடுக்கும் விலை?

பழங்குடி மக்கள் காடுகளை விட்டு வெளியேற விரும்புகிறார்கள்!

காடுகளில் பழங்குடி மக்களுக்கு கல்வி மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. மக்கள் காடுகளைவிட்டு வெளியேற விரும்புகின்றனர். அவர்களை நம்மைப்போல் வாழவைப்பது நமது கடமையில்லையா என்கின்றனர் தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்கள். பழங்குடி மக்கள் இப்படி விரும்புகிறார்கள் என்பதற்கு ஆதாரமாக தாங்கள் வழக்கமாகத்தருவது போல ஒரு கண்துடைப்பு புள்ளிவிவரம் கூடத்தருவதில்லை.

பழங்குடிகள் அல்லாத மந்தடஞ்செட்டிகள் என்ற மக்கள் காட்டை விட்டு வெளியேற தங்களை அனுமதிக்கும் படிகோருவதை பழங்குடிகள் கோருவதாக இவர்கள் பொய்ப்பிரச்சாரம் செய்கின்றனர். மந்தடஞ்செட்டிகள் கேட்பதற்கும் காரணம் உண்டு. அவர்கள் வாழும் பகுதி புலிகள் கப்பகமாக அறிவிக்கப்பட்டால் போக்குவரத்து போன்ற அனைத்து வசதிகளும் நிறுத்தப்பட்டுவிடும். அவர்கள் வியாபாரம் செய்பவர்கள் வசதியானவர்கள். நகரங்களோடு நெருங்கிய தொடர்புடையவர்கள். எனவே தங்கள் அன்றாட வாழ்க்கையை தொடர முடியது என்பதால் இந்தக் கோரிக்கை.

1880லிருந்து இன்றுவரை பல்லாயிரம் பழங்குடிகள் காடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நஷ்ட ஈடு கொடுப்பதாக உறுதியளிக்கப் பட்டுத்தான் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் செங்கல் சூளைகளிலும், கோவை திருப்பூர் மில்களிலும், வயநாட்டின் விபச்சார விடுதிகளிளும் கொத்தடிமைகளாக வதைபடுகின்றனர்.

இந்த என்.ஜி.ஓக்களின் போலிரோ வாகனங்கள் கோவை தடாகம் செங்கல் சூளைகளைத் தாண்டித்தான் மலைகளுக்குச் செல்ல வேண்டும்.அங்கு இரத்தம் சுண்ட மண் சுமக்கும் ஆதிவாசிகள் நம்மைப் போல் வாழ இவர்கள் என்ன செய்தார்கள்? அதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்? எதை நம்பி வெளியே வருவது? வெற்றிகரமாக பழங்குடி மக்களுக்கு மறு வழ்வு அளித்ததற்கு நாகர் ஹோலே புலிகள் காப்பகத்தை சொல்லி வைத்தாற்போல் எல்லோரும் உதாரணம் காட்டுகின்றனர். இதில் வழக்கம் போல உல்லாஸ் கரந்த்தும் சேகர் தத்தாத்ரியும் ஒருவரை ஒருவர் முன் மொழிந்து வழிமொழிகிறார்கள். காட்டைவிட்டு வெளியேறிய அந்த மக்கள் இப்போது மகிழ்ச்சியாக வழ்கிறார்களாம். அதற்கு ஆதாரமாக சேகர் தத்தாத்ரி மக்கள் பம்ப் அடித்து தண்ணீர் எடுப்பதை காட்டுகிறார்.

இந்தப்படம் தொடர்பாக திருவண்ணாமலையில் நடந்த விமர்சனக்கூட்டத்தில் “ஓடைகளுக்கும் அருவிகளுக்கும் நடுவே வாழ்ந்த மக்களை அடி பம்ப்பில் தண்ணீர் எடுக்க வைத்ததைத் தவிர வேறு எதையும் சாதனையாகக் காட்ட அவரால் முடியவில்லை” என்று ஆர். ஆர். சீனிவாசன் பேசினார்.

நாகர் ஹோலெ சரணாலயம் 1983 ல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. சுமார் 35,000 பழங்குடிமக்கள் ஜெனு குரும்பர்கள், சோளிகர்கள்,பெட்ட குரும்பர்கள், யெரவர்கள் இக் காட்டிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்து வந்தனர். இந்த அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படுவதற்கு முன்பே அரசு 1970 களிலேயே மக்களை வெளியேற்றத்தொடங்கியது. சுமார் 6000 பேர் வெளியேற்றப்பட்டனர். கடுங்கோபமும் அதிருப்பிதும் கொண்ட பழங்குடி மக்கள் அமைப்பாகத் திரண்டு போராடத்தொடங்கினர். 20 ஆண்டுகலுக்கு மேல் நடந்த ஓய்வற்ற போராட்டங்களுக்குப் பிறகே அரசு வன்முறையய் கொஞ்சம் குறைத்துக் கொண்டு மக்களை வெளியேற்ற முயன்று வருகிறது. இதைத்தான் உல்லாஸ் கரந்தும், சேகர் தத்தத்ரியும் ஏதோ மிகச் சிறந்த முறையில் பழங்குடி மக்களுக்கு மறுவழ்வு அளிக்கப்பட்டு வருவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.

அதே நேரம் நாகர்ஹோலேவில் நடந்த இன்னொரு சம்பவம் குறித்து இவர்கள் இருவரும் ஒரு சொல்லும் பேசுவதில்லை. அரசு மக்களை வெளியேற்றிக் கொண்டிருந்த அதே நேரத்தில் உலக வங்கி நிதியுதவியோடு எகோ டூரிஸம் விடுதி ஒன்றை தாஜ் குழுமம் நாகர்ஹோலேவில் கட்டத்தொடங்கியது. பழங்குடி மக்கள் இதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர். ஒரு பந்த்தும் நடத்தப்பட்டது. பின்பு நீதிமன்றம் இந்த விடுதி கட்டுவதற்குத் தடைவிதித்தது. இன்றும் அறைகுறையாக நின்று போன தாஜ் ஹோட்டலின் கட்டடங்களை நாகர்ஹோலேவில் காணமுடியும்.

இதற்குப் பிறகு சரணாலயத்தில் மீதி இருந்தவர்கள் மீது பெரும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. விவசாயம் முற்றிலும் தடை செய்யப்பட்டது. சிறுவனப் பொருட்கள் சேகரிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டது கோவில்களுக்கும் சுடுகாடுகளுக்கும் மக்கள் செல்வது தடை செய்யப்பட்டது. இத்தனைக்கும் பின்புதான் மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த சாதனையைப்பற்றி இவர்கள் இருவரும் வாய் திறப்பதே இல்லை.

காடுகளில் பழங்குடி மக்கள் அனுபவிக்கும் ‘துயரம்’ பற்றிகூறும் போது NGOக்கள் ஒன்றை மறக்காமல் குறிப்பிடுகின்றனர். காட்டில் எப்படி கல்வி அளிக்க முடியும்? மருத்துவ வசதி அளிக்கமுடியும்?

பழங்குடி மக்களிடம் கல்வியை ஒப்படைத்த மிஸோரம் மாநிலம் கல்வியில் கேரளாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. இப்படி ஆடு நனைகிறது என்பவர்கள் பழங்குடி ஆசிரியர்களை பழங்குடி மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்று வயளவிலாவது பேசியிருப்பார்களா? காடுகளீல் இருக்கும் மின்சார இலாக வனத்துறை விடுதிகளில் Cஉற்றுலா விடுதிகளில் இல்லாத வசதிகளா? இவற்றை ஏன் மக்களுக்குக் கொடுக்க முடியாது என்று கேட்கிறார் கவிஞர் லட்சுமணன்.

NGO அறிவியல்

இந்த NGO க்கள் மிகவும் விஞ்ஞானபூர்வமாக ஆய்வுகள் மேற்கொள்வதாகவும், அறிவுபூர்வமாகப் பேசுவதாகவும் கட்டிக் கொள்கிறார்கள். ஜெர்மன் ரயில்வே போல 1411 புலிகள் உள்ளன, 89 புலிகள் உள்ளன என்று துல்லியமாகச் சொல்கிறார்கள். ஆனால் வேடிக்கை என்னவென்றால் எத்தனை புலிகளுக்கு அவற்றின் நடமாட்டத்தை காணா உதவும் கருவி பொருத்தியிருக்கிறார்கள் என்று சொல்வதே இல்லை. ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒருமுறை முன்பு புலிகளை கணக்கிட்ட முறை தவறு என்று கூறுகிறார்கள்.

முன்பு புலிகளின் கால் தடம் போன்றவற்றை வைத்து எண்ணிக்கையைக் கணக்கிட்டார்கள். இப்போது காட்டில் ரகசியக் கேமராக்கள் பொருத்தியிருக்கிறார்கள். இதில் புலி விழுந்ததாக சொல்லி வைத்தாற்போல எல்லாச் சரணாலயங்களிலும் படங்களை வெளியிகிறார்கள். இந்தக் கேமரக்கள் வனத்துறையால் பொருத்தப்பட்டவை. ஒருபோதும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பக்கச் சார்பற்ற ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை. கபாலம், கடைவாய்ப்பல் அளவுகள் குறித்து துல்லியமாகச் சொல்வதால் எல்லாமே துல்லியமாகத்தான் இருக்கும் என்று நாம் நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

இவர்களின் அதிமேதாவித்தனத்திற்கு ஒரு அற்புதமான உதாரணம் ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் பறவைகள் சரணாலயம். அங்குள்ள நீர்நிலைகளில் புற்கள் மண்டியிருக்கும். அவற்றில் பழங்குடி மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்ப்பது வழக்கம். யாரோ ஒரு அதி மேதாவிக்கு இது உறுத்தியது. மக்கள் கால்நடை மேய்ப்பதால் பறவைகள் பதிக்கப்படுகின்றன என்றார் அவர். மக்கள் கால்நடை மேய்ப்பது தடை செய்யப்பட்டது. பறவைகள் வருவது உடனடியாக நின்று போய்விட்டது. கால்நடைகள் மேய்க்கப்படாததால் புற்கள் மண்டி பறவைகளுக்கு கீழே நீர்நிலைகள் இருப்பது தெரியவில்லை எனவே அவை வரவில்லை என்பது பின்பு கண்டுபிடிக்கப்பட்டது. பல்லாயிரம் ஏழை எளிய மக்களின் வாழ்வை பாதிக்கக் கூடிய முடிவுகள் எப்படி அலட்சியமாக எந்த ஆய்வும் இன்றி எடுக்கப்படுகின்றன என்பதற்கு பரத்பூர் தான் சரியான உதாரணம்.

இன்னொரு உதாரணமும் சொல்லலாம். ரத்தம்போர் தேசியப்பூங்கா ராஹாஸ்தானில் உள்ளது.இங்கு யுவராஜ் என்ற ஆண் புலி இருந்தது. இதை 2007ல் இதை வேட்டையாடிக் கொன்றுவிட்டதாக மோல்யா மோக்யா என்பவர் அவர் சகோதரர்கள் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இப்போது யுவராஜ் உயிருடம் உள்ளது என்று டைகர் வாட்ச் அமைப்பின் தர்மேந்திர கண்டல் என்பவர் கூறுகிறார். விரல்விட்டு எண்ணக்கூடிய புலிகள் கோடிக்கணக்கான ரூபாய் பராமரிப்புச் செலவு கணக்கிட மிகச் சிறந்த தொழில்நுட்பம்(?) சர்வ வல்லமை வாய்ந்த வனத்துறை ..... வேடிக்கைதான். பாவம் வேட்டைகாரர்களும் அயோக்கியர்களும் புலிவேட்டைக்காரர்களுமான பழங்குடிகள். (டைம்ஸ் ஆப் இந்தியா- 11.6.2011)

NGO க்களின் ஆய்வுகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு லாபமளிக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு செய்யப்படுகின்றன. காடுகளிலிலிருந்து மக்களை வெளியேற்ற வேண்டும் என்ற மேற்கத்திய அரசியலையே அவை முன் வைக்கின்றன. இவற்றில் விஞ்ஞானமுமில்லை துல்லியமும் இல்லை. கார்ப்பரேட் நலன்கள்தான் உள்ளன. எனவே இவர்கள் சொல்வதை அப்படியே நம்புவது கார்ப்பரேட் நலன்களுக்கு உதவுவதோடு மிச்சமீதியிருக்கும் காடுகளை அழிப்பதற்கும் பல லட்சம் பழங்குடி மக்களை உள்நாட்டு அகதிகளாக்குவதற்குமே உதவும்.

நகர்ப்புற மக்களுக்கு உள்ள இயற்கை மீதான ஆர்வத்தை திட்டமிட்டு கார்ப்பரேட் நலன்களுக்குப் பயன்படுத்துவதே இவர்களது நோக்கம். இதற்கு நூற்றாண்டு காலமாக மக்கள் மீது அதிகாரம் செலுத்திப் பழகிப்போய் அதை கவிட விரும்பாத வன அதிகரவர்க்கமும், நாட்டின் எல்லச் செல்வ வளங்களையும் மூலதனத்தின் லாப வெறிக்குத் திறந்துவிட வேண்டு என்று துடிக்கும் அரசுகளும் துணைபோகின்றன.

இதுவரை பழங்குடி மக்கள் சந்திது வந்திருக்கும் வேதனைகளைவிட மாபெரும் அவலத்திற்கு அவர்களை உள்ளாக்கப் போகின்றன இந்த புலிகள் காப்பகங்கள். இவற்றிற்கு எதிராகப் போராடி வரும் மக்களை ஆதரிப்பதும் இரவு பகலாக ஓய்வின்றி நடந்துவர்ம் போய்ப் பிரச்சாரத்திற்கு மாற்றாக உண்மைகளை முன்னிறுத்துவதும் நமது கடமையாகும்.

---------------------------------------------------

டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி (9 நவம்பர் 2011)

புலிகள் காப்பகங்கள்

பழங்குடி மக்கள் வெளியே- சுற்றுலாப் பயணிகள் உள்ளே! - நிதின் சேத்தி

புலிகளுக்கான சுற்றுலா நடத்துபவர்கள் (The travel operaters for tigers-TOFT) என்ற அமைப்பானது வனவிலங்குகள் தொடர்பான சுற்றுலா ஏற்பாடு செய்யும் ஒரு சர்வதேச அமைப்பாகும். இந்த அமைப்பு புலிகள் சரணாலயங்களில் புலிகள் இனப்பெருக்கம் செய்யும் மையப் பகுதிகளில் (Core Zone) சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளது. இது வனப்பாதுகாப்பிற்கும், பழங்குடிகளுக்கும் பயன் தரும் என்று அந்த அமைப்பு கூறுகிறது. ஆனால் இந்த அமைப்பு தேசிய வனவிலங்கு சரணாலயங்களிலிருந்து பழங்குடிகளை வெளியேற்றவேண்டும் என்று கூறிவருகிறது. இந்த அமைப்பு வன உரிமைச்சட்டம் இந்த பகுதிகளில் நடைமுறைப் படுத்தப்படுவதை எதிர்க்கிறது.

வனவிலங்கு பாதுகாப்புச்சட்டம் 1972 ன் கீழ் மத்தியபிரதேசத்தின் புலிகள் காப்பகங்களில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கக் கூடாது என்று கோரி உச்ச நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதற்கு எதிர்வினையாக இந்த அமைப்பும் சில கானுயிர் ஆர்வலர்களும் விஞ்ஞானிகளும் 7.11.2011 அன்று ஒரு பத்திரிக்கையாளர் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த கூட்டத்தில் இவ்வாறு சுற்றுலா பயணிகளை பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர்.

கூட்டத்தில் அவர்கள் சோன்சாய் பைகா என்ற பழங்குடியினத்தை சேர்ந்தவரை அறிமுகப்படுத்தினர். அவர் கன்ஹா தேசிய பூங்காவிலிருந்து 1973 ம் ஆண்டு வெளியேற்றாப்பட்டவர். அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. பைகா வனத்துறையில் ஒரு தினக்கூலியாக பணிபுரிந்தார். இப்போது தேசிய பூங்காக்களுக்கு அருகே உள்ள உணவகங்களில் பழங்குடி நடனங்களை நடத்தும் கூட்டுறவு சங்கத்தில் உள்ளார். பழங்குடி மக்களின் பாரம்பரிய பண்பாட்டை காப்பதற்காக இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

“எனக்கு இழ்ப்பீடு கொடுக்கப்பட்டிருந்தால் இன்று என்னிடம் சொந்த நிலம் இருந்திருக்கும்” என்று பைகா கூறினார்.

ஆனால் TOFT ன் இந்தியத் தலைவரான விஷால் சிங்கும், இந்தியக் கானுயிர் பாதுகாப்பு கழகத்தின்( wildlife protection society of India) தலைவரானா பெலிண்டா ரைட்டும், புலிகள் காப்பகங்களிலும், வனவிலங்கு சரணாலயங்களிலும் பழங்குடி மக்களுக்கு உரிமைகள் வழங்கும் வன உரிமை சட்டத்தை செயல்படுத்துவதை தாங்கள் எதிர்ப்பதாக கூறினர். இந்த சட்டம் இழப்பீடு இல்லாமல் வெளியேற்றப்பட்ட பைகா போன்றவர்களுக்கு அவர்களது பாரம்பரிய நிலங்களை திருப்பித் தர வழி செய்கிறது.

தேசிய புலி பாதுகாப்பு அமைப்பு(National Tiger Conservation Authority) முதலில் இந்த சுற்றுலாப்பயணிகளை தடை செய்யக் கோரும் மனுவை ஜபல்பூர் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அது தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

பிரதமரின் புலிப்பாதுகாப்புப் படை(Tiger task force) புலிகள் காப்பகத்திலிருந்து வரும் வருமானத்தில் முப்பது சதவீதத்தை பழங்குடி மக்களுக்கு தரவேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. இதை தங்கள் எதிர்கிறோம் என்று கூறிய விஷால் சிங் அதிகபட்சம் ஐந்து சதவீதம் தருவது குறித்து பரிசீலிக்க தாங்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அவர் சுற்றுலாவிற்கு மையப்பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கலாமே தவிர தடை விதிக்கக்கூடாது என்று ஆலோசனை கூறினர்.

கானுயிர் பாதுகாப்பு கழகத்தின் பெலிண்டா ரைட், இந்த மையப்பகுதிகள் உண்மையில் புலிகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் அல்ல என்று சுட்டிக்காட்டி, அதனால் மையப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதை தடை செய்யக் கூடாது என்றார்.

அப்படியானால் ஏன் அவற்றை மனிதர்கள் தலை காட்டக்கூடாத பகுதிகள் என்று அறிவித்து மக்களை வெளியேற்ற வேண்டும் என்று கேட்டதற்கு இவர்கள் இருவரும் பதில் சொல்லாமல் நழுவிக் கொண்டனர்.

----------------------------------

பாண்டாவோடு ஒரு உடன்படிக்கை (The Pact with Panda)

பண்டாவோடு ஒரு உடன்படிக்கை என்பது வில்ஃரெட் ஹுஸ்மன் எடுத்த ஒரு ஜெர்மானிய மொழி ஆவணப்படமாகும். பண்டா கரடியின் படம் WWF ன் அடையாளச் சின்னமாகும். நேரடியாக இந்தோனேஷியாவில் மாபெரும் காடுகளை அழித்துவரும் பன்னாட்டு பாம் ஆயில் நிறுவனங்கள், புற்று நோய் ஏற்படுத்தும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோயாபீன்ஸ் பயிரிடும் மன்சாண்டோ நிறுவனம் ஆகியவற்றோடு இந்த பன்னாட்டு சுற்றுச் சூழல் நிறுவனமான WWF க்கு தொடர்பு இருப்பதும் இந்த நிறுவனங்களிடமிருந்து WWF அன்பளிப்புகள் பெறுவதும் இந்த ஆவணப்படத்தில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

பிரம்மாண்டமான காடுகள் அழிக்கப் படுவதற்கு WWF துணை நிற்பது,

புற்று நோயை உருவாக்கக் கூடிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோயபீன்ஸுக்கு நற்சான்றிதழ் அளிப்பதில் WWF ஆற்றிய பங்கு ஆகியவை இப்படத்தில் இடம் பெற்றுள்ளன.

வழக்கம் போல WWF, மன்சாண்டோ கப்பெனிகளின் செல்வாக்கால் ஜெர்மனி தவிர்த்து பிற பகுதிகளில் இப்படம் குறித்து விவாதங்கள் எதுவும் நடப்பதில்லை.

மிகவும் நேர்மையாகவும், ஆதாரபூர்வமாகவும் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை இணையத்தில் பார்க்க விரும்புபவர்கள் The Pact with Panda என்று அடித்தல் போதும். சுற்றுச் சூழலுக்கும் இந்த பன்னாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மற்ற பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கும் இந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும்தான் தொடர்பு உள்ளது என்பதுதான் இந்தப் படம் கூறும் செய்தி.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp