மாற்றத்தை விரும்புகிறவர்கள் கீற்று நந்தனின் இந்த சிறு நூலை வாசிப்பார்கள்
கார்ப்பரேட்டுகள் ஊடகமயமாகியும், ஊடகங்கள் கார்ப்பரேட்மயமாகியும் வரும் காலம் இது. எதிர்ப்புணர்வு என்ற ஒன்றை தன் மரபினத்திலிருந்து அழித்துவிட்ட, எந்தவொரு நெருக்கடியையும் எதிர்த்து நிற்க துணிவற்ற, சமரசத்தையே கொள்கையாக கொண்டவைகளாக ஊடகங்கள் மாறி வருவது நம்மிடையே பெரும் சவால்களை ஏற்படுத்தி வரும் காலம். ஓரளவு நேர்மையுடன் இருக்கும் ஊடகங்களும் இந்த மோசமான சூழலில் ஒன்று கரைந்து போகிறது அல்லது காணாமல் போய்விடுகிறது. ஆளும் வர்க்கத்துக்கான செய்திகளை, கருத்துக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக ஊடகங்களை நிலைநிறுத்த முயற்சி செய்யப்படுகிறது. அந்த வகையில் அரசை, அதை பின்னிருந்து இயக்கும் கார்ப்பரேட்டுகளை, அதன் மக்கள் விரோத போக்கை நிலைநாட்ட இராணுவமும், கட்டிக்காப்பாற்ற நாடாளுமன்றமும், நியாயப்படுத்த நீதிமன்றமும் இருப்பதுபோல, உண்மையை மழுங்கடிப்பதற்கென்றே ஊடகங்கள் இருக்கிறது என எண்ணுவதற்கு நூறு சதவீத வாய்ப்பு இருப்பதற்கான காலம் இது.
ஒருவேளை இப்போது இன்னொரு அவசர நிலை காலம் வந்தால் தணிக்கை துறைக்கு வேலைகளே இருக்காது என்பது மட்டும் உறுதியாக சொல்லலாம். அந்தளவிற்கு கார்ப்பரேட்டுகளை, கட்சிகளை, சாதிகளை, மதங்களை சாராத அல்லது இவைகளை அண்டிப்பிழைக்காத ஊடகங்களே இல்லை என்று சொல்லிவிடலாம்.
இதைத்தான் நூலின் ஆரம்பத்தில் தோழர் கீற்று நந்தன் “தமிழ்நாட்டு அளவில் சன் குழுமத்திற்கும், தினமலருக்கும் இடையே வேண்டுமானால் போட்டி, பகை இருக்கலாம். ஆனால் ரிலையன்ஸூக்கும் சன் குழுமத்திற்குமோ, ரிலையன்ஸூக்கும் தினமலருக்குமோ எப்போதும் போட்டி, பகை வராது. ரிலையன்ஸ் போன்ற பெருநிறுவனங்களை இந்தப் பத்திரிக்கைகள் ஒரு நாளும் பகைத்துக்கொள்ளாது” என கார்ப்பரேட் ஊடகங்களைப் பற்றி தெளிவாக விளக்குகிறார். இதோடு நாம் தி.மு.க × அ.தி.மு.க, காங்கிரஸ் × பி.ஜே.பியை பொருத்தி பார்த்துக்கொள்ளலாம். இன்றைய தேதியில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய ஊடக நிறுவனம் ரிலையன்ஸ்தான். இணையம், தொலைக்காட்சி, வானொலி, திரைப்பட தயாரிப்பு என அதன் தளம் நாம் எண்ணிப்பார்க்க முடியாத தொலைவிற்கு எங்கோ போய்விட்டது. நம்மிடம் எப்படிப்பட்ட செய்திகள் வந்து சேரவேண்டும் என இதுபோன்ற நிறுவனங்கள்தான் தீர்மானிக்கின்றன. மும்பையில் இந்த நிறுவனத்தை சார்ந்த முதலாளி ஒருவனின் மகன் போதையில் கார் ஓட்டி, நடந்து சென்ற ஒருவரின் மீது மோதி கொன்ற விவகாரம் மறைக்கப்பட்டு பின் வெளிவந்ததை நாம் அறிவோம். இப்படி இன்றுவரை நம்மிடம் மறைக்கப்பட்ட செய்திகள் கணக்கில் அடங்காது.
மேலும் மற்றொரு ஆபத்து ஊடகங்களைப்போலவே ஊடகவியலாளர்களும் உருவாக்கப்படுகிறார்கள் என்பதுதான். இதுபோன்ற ஊடகங்களா நம் கருத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும்? என கேள்வி எழுப்புகிறார் ஆசிரியர். இங்குதான் இந்த நூல் முக்கியத்துவம் உள்ளதாகப்படுகிறது.
நமக்கான ஊடகங்கள் எது? அதில் நாம் செய்ய வேண்டியது என்ன? பிரச்சாரத்திற்கான நமது வழிமுறைகளை எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது பற்றி நூல் ஆழமாக கூறுகிறது.
ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். ஆயிரம் துண்டறிக்கைகள் அடிக்கிறோம். தெருமுனை பிரச்சாரம் செய்கிறோம், சிறுவெளியீடுகளை கொண்டு வருகிறோம். உயிரைக்கொடுத்து வேலப்பார்த்துவிட்டு அந்த செய்தி ஏதாவது நாளிதழிலோ அல்லது தொலைக்காட்சியிலோ வந்திருக்கிறதா? என இலவு காக்கிறோம். இதைத்தான் போதாது என்கிறார். இப்படியான பிரச்சாரங்களினால் மட்டும் இனி சமூகமாற்றத்தை கொண்டு வரமுடியாது என்கிறார். மோடியை சமூக வலைதளங்கள் கதாநாயகனாக (பின்னர் பிரதமராகவும்) உருவாக்கியதை நம் கண்முன் விவரித்து கொண்டே, அதே சமூக வலைதளங்கள் எவ்வாறு எகிப்து புரட்சியை உருவாக்கியது? என்பதையும் அழகாக விவரிக்கிறார். அரவிந்த் கெஜ்ரிவாலை மூன்று மாத இடைவெளியில் அறிவுஜீவியிலிருந்து அடிமுட்டாள் அளவிற்கு ஊடகங்கள் வர்ணித்ததையும், கனிமவளக்கொள்ளையை, இந்துத்துவ தீவிரவாதத்தினை, மோடியின் குஜராத் படுகொலைகளை தெகல்காவில் அம்பலப்படுத்தியதற்காக தருண் தேஜ்பாலுக்கு நேர்ந்த கதியினையும் இங்கே கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.
அதேபோல நம்மிடம் எந்த சிறுபத்திரிக்கையும், இணையதளங்களும் இல்லாதபோது பெரிய இலக்கியவாதிகளாக கட்டமைக்கப்பட்டவர்கள்தான் சுந்தரராமசாமி, ஜெயமோகன், சாருநிவேதிதா வகையறாக்கள். ஆனால் இப்போதும் எப்படி அவர்களால் தாக்குபிடிக்க முடிகிறது. நம்மைவிட அவர்கள் எப்படி சமூக வலைதளங்களை சரியாக பயன்படுத்துகிறார்கள் என்பதும் நூலில் அருமையாக விவாதிக்கப்படுகிறது. ஒரு சினிமாவில் இப்படி ஒரு வசனம் வரும்”ஒரு எறும்பு செத்த நியூஸூங்கிறது அடுத்து ஒரு தவளை சாகிறவரைக்கும்தான்… தவளை செத்த நியூஸு பாம்பு சாகும் வரை… பாம்பு செத்த நியூஸ் பருந்து சாகிறவரை… அவ்வளவுதான்..” நாமும் ஈழம், முல்லை பெரியாறு, பெப்சி, தாதுமணல், கிரானைட் என செய்திகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம். அவன் செய்திகளை உருவாக்கிக்கொண்டே போகிறான். செய்திகளின் பின்னால் இருக்கும் அரசியல் என்ன என நமக்கு ஒரு வகுப்பே எடுக்கிறது இச்சிறுநூல்.
“குழப்பம் பேயை பிடித்துக்கொள்ளும்போது, பேய் கடவுளை கட்டிப்பிடித்துக் கொள்கிறது” என்பார்கள். சமூக வெளியில் மற்றும் வலைதளங்களில் விவாதித்து, தன்னெழுச்சியான எதிர்வினைகள், போராட்டங்கள் ஏற்பட்டப்பின்னர், நிர்பந்தத்தின் காரணமாக, தான் அம்பலப்படாமல் இருப்பதற்காக நடுநிலை செய்திகள் (அப்படி ஒன்று இருக்கிறதா என்ன?) வெளியிடுவது என்பது ஊடகங்களுக்கு நெருக்கடிகளினால் ஏற்படுவதாகும். அப்படிபட்ட நெருக்கடியை நாம் எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பது குறித்தும் நூல் பேசுகிறது.
ஆனால் ஊடகங்களுக்கு எப்போது குழப்பம் பிடித்துக்கொள்ளும் என்றும், அது எப்போது மக்கள் பக்கம் நிற்கும் என்றும் நம்மால் சரிவர கணிக்க முடியாது. கார்ப்பரேட் உலகை பிடித்துக்கொள்ளும் குழப்பங்களின் நேர், எதிர் மற்றும் பக்க விளைவுகளினால் திடீர் திடீரென்று சாய்வதாலும், உடைவதாலும் உருவாகுவது அது.
ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாக கூறமுடியும். ஊடகங்கள் உண்மை பேசுவதற்கென்று சில சீசன்கள் உண்டு. இந்த சீசன்களானது ஆண்டுக்கு எத்தனை முறை வரும் அல்லது எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் என அரசியல், பொருளாதார மாற்றங்களை தொடர்ந்து கவனித்து வருபவர்களை கேட்டால் ஒருவாறாக பிடி கிடைக்கலாம். உதாரணமாக நான்கரை ஆண்டுகள் நக்கிப்பிழைத்த நாக்குகள், தங்கள் மீது படிந்திருக்கும் அழுக்குகள் மீது சாயத்தைப் பூசிக்கொண்டு மெதுவாக, “அம்மா” ஆட்சியை சீண்டிப்பார்க்கும் விளையாட்டை ஆரம்பித்திருப்பதை சொல்லலாம். திரைப்படங்களில் எல்லாம் முடிந்தபின் வரும் போலீஸ் போல என்று கூட இதை வைத்துக்கொள்ளலாம். இன்னும் மோடியை புகழ்ந்துக்கொண்டிருக்கும் நாக்குகளுக்கு சாயமோ, அதிலும் அழுக்குகள் மறையாவிட்டால் சர்ஜரியோ செய்ய வேண்டிய தேவை குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு இருக்காது என நம்புவோமாக..! அந்த வகையில் தற்போது தமிழக அளவில் மிதமான சீசன் ஒன்று நிலவுவதாகவே நாம் எடுத்துக்கொள்ளலாம்.
இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன? “கார்பரேட் அடிமை ஊடகங்களும், நமக்கான அடிமை ஊடகங்களும்” என்ற இந்த சிறு நூலைப் படிக்கலாம். கருத்துக்களையும், கருத்துக்களை உருவாக்குகிற முன்னணியாளர்களையும் உருவாக்கலாம். அதற்கு முகநூல், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தலாம். அரசியல் இல்லாமல் ஆசைகளையே அடித்தளமாகக்கொண்டிருக்கும் இயக்கங்களை கொஞ்சம் மாற்றலாம், அல்லது அவைகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு புதியது ஒன்றை உருவாக்கலாம். அனைத்திற்காகவும் மீண்டும் சொல்கிறேன் கீற்று நந்தனின் “கார்பரேட் அடிமை ஊடகங்களும், நமக்கான மாற்று ஊடகங்களும்” படிக்கலாம்.