பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சி பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிரானதாகவும் பூர்விகக் கிறிஸ்தவர்களுக்குச் சாதகமானதாகவும் இருந்தது என்றே பலரும் நம்புகின்றனர். கிறிஸ்தவ மதபோதகர்கள் இங்கே முழுமூச்சுடன் இயங்குவதற்கும் பெரும் திரள்களில் இந்துக்களை மதமாற்றம் செய்வதற்கும் காலனி அரசு ஊக்கமளித்தது என்றும் அவர்கள் நம்ப விரும்புகின்றனர். ஆனால் சந்திர மல்லம்பள்ளியின் ஆய்வு (Christians and Public Life in Colonial South India) இந்த நம்பிக்கையைப் பொய்யாக்கியுள்ளதோடு இந்திய காலனிய வரலாற்றின் ஒரு முக்கியமான அத்தியாயத்தைப் புதிய கோணத்தில் மறுஅறிமுகம் செய்கிறது.
நவீன இந்தியா உருவாகிக்கொண்டிருந்த காலகட்டத்தில் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்த இந்திய கிறிஸ்தவர்களின் சமூக அடையாளம் என்னவாக இருந்தது? கத்தோலிக்கர்களும் புராடஸ்டண்டுகளும் ஆங்கிலோ இந்தியர்களும் இந்துக்களால் எப்படிப் பார்க்கப்பட்டனர்? இந்து மதத்தைவிட்டு வெளியேறி கிறிஸ்தவத்தைத் தழுவிக்கொண்டவர்களின் நிலை என்ன? உண்மையில் இந்த வெளியேற்றம் முழுமையானதாக இருந்ததா? அதற்குச் சமூக, சட்ட அங்கீகாரம் கிடைத்ததா? காலனிய அரசு, குறிப்பாக நீதிமன்றங்கள் மதம் மாறியவர்களை எப்படி அணுகியது?
ஆபிரகாம் எதிர் ஆபிரகாம் (1863) என்னும் வழக்கை எடுத்துக்கொள்வோம். குழந்தைப் பருவத்திலேயே மாத்யூ ஆபிரகாம் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவராக மதம் மாற்றப்பட்டிருந்தார். பிற்பாடு அவர் புராட்டஸ்டண்ட் மதத்துக்கு மாறினார். ஒரு பெரிய தொழிதிபராகவும் வளர்ந்தார். புராட்டஸ்டண்ட் ஆங்கிலோ இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இரண்டு குழந்தைகள் பிறந்தன.
உயில் எதுவும் எழுதிவைக்காமல் ஒரு நாள் மாத்யூ இறந்துபோனார். சொத்து வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. இரு தரப்பினர் மாத்யூவின் சொத்துக்குச் (குறிப்பாக, அவர் நடத்திவந்த மது ஆலைக்கு) சொந்தம் கொண்டாடினர். முதல் நபர் அவர் மனைவி. இரண்டாவது நபர் மாத்யூவின் சகோதரரும் அதே ஆலையில் பணிபுரிந்து வந்தவருமான பிரான்சிஸ் ஆபிரகாம்.
பிரான்சிஸ் இந்து சட்டத்தை உயர்த்திப் பிடித்து, என் சகோதரரின் சொத்து எனக்குதான் சட்டப்படி சேரும் என்று வாதிட்டார். இந்து மதச் சட்டத்தின்படி இறந்தவரின் மனைவிக்கு உதவித் தொகை வேண்டுமானாலும் தரலாமே தவிர சொத்தில் பங்கு கிடையாது என்பது அவர் வாதம். நீண்டு வளர்ந்து சென்ற வாதங்களுக்கும் குறுக்கு விசாரணைகளுக்கும் பிறகு வெளிவந்த தீர்ப்பு பிரான்சிஸுக்கு எதிரானதாக இருந்தது.
இந்த வழக்கில் கவனிக்கவேண்டிய ஏராளமான அம்சங்கள் இருக்கின்றன. மதம் மாறிய பிறகும் ஏன் இந்து மதத்தின் உதவியுடன் வாரிசுரிமையை நிலைநாட்ட கிறிஸ்தவர்கள் முயன்றார்கள்? ஏனென்றால் நீதிமன்றங்களும் சரி, காலனிய அரசும் சரி இந்து மதத்துக்கே அதிக முக்கியத்துவம் அளித்தன. மேற்கண்ட வழக்கின் தீர்ப்பு கிட்டத்தட்ட ஒரு விதிவிலக்கு மட்டுமே. பெரும்பாலும் இத்தகைய வழக்குகளில் இந்துக்களுக்குச் சாதகமான தீர்ப்புகளே அப்போது அதிகம் வெளிவந்தன.
இதற்குக் காரணம் இந்து மதம், இஸ்லாம் இரண்டிலும் திருமணம், வாரிசுரிமை உள்ளிட்ட அம்சங்கள் குறித்தத் தெளிவான விதிகள் இருந்தன என்று காலனிய அரசு நம்பியது. ஐரோப்பிய கிறிஸ்தவர்களுக்கும் அத்தகைய விதிகள் இருந்தன என்றாலும் அவற்றையெல்லாம் பூர்விகக் கிறிஸ்தவர்களுக்குப் பொருத்தமுடியுமா என்பதில் குழப்பங்கள் இருந்தன. இதைவிடப் பெரும் குழப்பம் மதம் மாறிய கிறிஸ்தவர்களை எப்படி வகைப்படுத்துவது, அவர்களை எந்தச் சட்டத்திட்டங்களுக்குள் அடக்குவது என்பதுதான். மதக் கலப்புத் திருமணம் கூடாது என்று சட்டம் கொண்டுவரலாமா என்றுகூட ஆலோசிக்கப்பட்டது.
தவிரவும், சிக்கலின்றி ஆட்சிமுறை தொடரவேண்டுமானால் பெரும்பான்மை இந்துக்களைப் பகைத்துக்கொள்ளக்கூடாது என்று காலனிய அரசு கருதியதால் மதமாற்றத்தை அது ஊக்குவிக்கவில்லை. அதிலும் 1857 அனுபவத்துக்குப் பிறகு, மத உணர்வுகளைக் கூடுதல் எச்சரிக்கையுடன் அணுகி வந்தது. கிறிஸ்தவ மதபோதகர்களைவிட்டு சாத்தியமான அளவுக்கு அரசு விலகியே நின்றது. ஆனால் மதபோதகர்களோ அரசின் துணை தங்களுக்கு இருப்பதாக நினைத்து கிறிஸ்தவத்தை மக்களிடம் கொண்டுசென்றனர். பிரிட்டிஷ் அரசை ஒரு லிபரல் அரசாகவும் உயர்த்திப் பிடித்த அவர்கள், கிறிஸ்தவத்துக்கு மதம் மாறுவதன்மூலம் ஐரோப்பியர்களுக்கு இணையானவர்களாக மாறலாம் என்று பிரசாரம் செய்துவந்தனர். ஆனால் உண்மை என்னவோ நேர் மாறாகவே இருந்தது.
இஸ்லாமியர்களோ கிறிஸ்தவர்களோ இல்லாதவர்கள் இந்துக்கள் என்று எளிதாகச் சொல்லிவிடமுடிந்தது. இஸ்லாமியர்களுக்குத் தனித்த மத அடையாளமும் கலாசாரமும் சட்டமும் இருந்தன. ஒரு கிறிஸ்தவர் யார் என்பதை வரையறுப்பதுதான் சிக்கலானதாக இருந்தது. ஓர் இந்துவுக்கும் மதம் மாறிய கிறிஸ்தவருக்கும் (இவர்களை இந்து கிறிஸ்தவர்கள் என்றும்கூட அழைத்தனர்) பிறக்கும் குழந்தையின் மதம் என்ன? இந்த இருவருக்குமான திருமணத்தில் எத்தகைய சடங்குகள் பின்பற்றப்படவேண்டும்? இந்தக் குடும்பத்தின் சொத்து எப்படிப் பிரித்தளிக்கப்படவேண்டும்? பெரும்பான்மை இந்துக்களுக்கு மத்தியில் புறக்கணிக்கப்பட்டவர்களாக வலம் வரும் கிறிஸ்தவர்களை எப்படி இந்தியர்களாக உயர்த்துவது? கிறிஸ்தவர்களை வேற்றுகிரக வாசிகளாகக் கருதும் இந்து சமூகத்தின் கூட்டு மனநிலையை எப்படித் திருத்துவது?
மதம் மாறியவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்குத் தனியே ஒரு சட்டவிதியை காலனிய அரசு உருவாக்கியபோதும் அரிதாகவே அதைக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தித் தங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெற்றனர் என்று நீதிமன்ற ஆவணங்களின் துணையுடன் நிறுவுகிறார் சந்திர மல்லம்பள்ளி. மதம், அரசு, சட்டம். இந்த மூன்றுக்கும் இடையிலான சமூக உறவும் முரண்பாடும்தான் புத்தகத்தின் மையம். ஆனால் இத்தனை எளிமையாகக் குறுக்கிவிடமுடியாதபடிக்கு ஏராளமான கிளை விவாதங்களை உருவாக்கியபடி காலனிய ஆட்சிக்காலத்தை ஒரு புதிய கோணத்தில் நுணுக்கமாக ஆராய்கிறார் சந்திர மல்லம்பள்ளி.