நீங்கள் எங்கோ, ஏதோ கவனத்தில் பாதையைக் கடக்கிறீர்கள். அப்போது காற்றில் மிதந்து உங்கள் காதுக்கு வருகிறது, ஒரு பாடல் ‘படிப்பு இதானா? வெள்ளைக்காரன் பிள்ளைபோல வேஷம் விநோதம்…’ என்று கேட்கும் ஒரு கிராமத்துப் பெண்ணின் குரல், சூழலையே மாற்றுகிறது. உங்கள் கிழட்டுதனம் எங்கோ நழுவுகிறது. ஓர் ஆண் குரல் ‘நாகரிகம் தெரிந்ததா நாட்டுப் பெண்ணுக்கு? நாணம் நீங்கிப் பேசும் திறமை உண்டாச்சே, இளம் மொட்டு மலராகி எழில் மணம் வீசுதே… என் கண் கூசுதே…’உங்களைக் கொண்டுபோய் எங்கோ வீசும் அக்குரல்களும், பாட்டும், இசையும் யாரால் மறக்க முடியும்?
‘கா…கா…கா…சாப்பாடு இல்லாம தவிக்குதுங்க - ஜனம் கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க. உயிர் காப்பாத்த கஞ்சி தண்ணி ஊத்துங்க என்றால் தாப்பாளைப் போடுறாங்க பாருங்க…’ என்ற பாடல் மீண்டும் சிதம்பரம் ஜெயராமன் குரலில் கேட்கத் தோன்றுகிறது. இந்தப் பாடலுக்குத்தான் சிவாஜிகணேசன் படத்தில் முதன்முதலாக வாய் அசைத்திருக்கிறார்.
சமகாலத்து அரசியலை கவி எப்படிச் சொல்கிறார் பாருங்கள்:
‘ஊத்துக்கிணறு வெட்டச்சொல்லி | உதவி செஞ்சாங்க - அதில் ஏத்தம் இறைக்குதான்னு யாரும் பார்க்க வல்லீங்க | சோத்துப் பஞ்சம் துணிப் பஞ்சம் | சுத்தமாக நீங்கல்லே | சுதந்திரம் சுகம் தரும் என்றால் யாரு நம்புவாங்க?’
அந்தக் காலத்து அரசுகளை இப்படியெல்லாம் கேள்வி கேட்டார்கள் கவிராயர்கள். 1955-ல் ‘செல்லப்பிள்ளை’ என்று ஒரு படம். மிகவும் வெளிப்படையான அரசியல் விமர்சனம் செய்திருந்தார் கவிஞர். ‘கலைகளைப் படிச்சவன் காத்தாய் பறக்கிறான் | காக்கா புடிக்கிறவன் காரில் பறக்கிறான் | உதவி என்று பல நிதிகள் திரட்டுறான் | ஊராரை ஏச்சுப்புட்டு உண்டு களிக்கிறான் | இதம் பல பேசி எலெக்சன்ல ஜெயிக்கிறான் | பதவிக்கு வந்ததும் பச்சோந்தியாகிறான்’ என்பது போன்ற வரிகள் அந்தக் காலத்தில் மிகவும் பேசப்பட்டவை.இந்த வரிகள் எல்லாம், உடுமலை நாராயண கவி என அறியப்பட்ட கவிராயர் எழுதி, அந்தக் காலத்தில் கேட்கப்பட்டவை.
உடுமலையார் 25.9.1899-ல் இன்றைய திருப்பூர் மாவட்டத்தில் பூளவாடி (பூவிளவாடி) எனும் சிற்றூரில் பிறந்தவர். ஒரு நாடகத்தில் நாரயணசாமி குழந்தை நட்சத்திரமாக நடிப்பதையும் சொல் பிரயோகத் தெளிவையும் கண்டு, அந்தக் காலத்தில் புகழ்பெற்ற தமிழ்ப் புலவர் உடுமலை சரபம் முத்துசாமிக் கவிராயர், நாராயண சாமியைத் தன் சிஷ்யனாக ஏற்றார். சங்கர தாச சுவாமிகள், முத்தையா பாகவதர் போன்ற அந்தக் கால தமிழ்க் கலைப் பெரியோர்களிடம் பழகி இருக்கிறார் உடுமலை. ஏழ்மை குடும்பம். ஒரு நாள் முழுக்க உழைத்து 25 காசுகள் ஊதியமாக பெற்றிருக்கிறார்.
அரசியல் காற்று, எந்த மரத்தைச் சும்மா விட்டது? உடுமலையார் தேசிய, சுதந்திர அரசியலில் கவனம் கொண்டார். அரிசி பஞ்சம் தேசத்தை உலுக்கும்போது தன் குடும்பத்துக் குழந்தைகளுக்கும் கம்பு, கேழ்வரகு உணவை தந்தார். சுதந்திரப் போராட்டத்தின் ஊடாக உருவான சுதந்திரம், சீர்திருத்தம் என்ற மிக முக்கியமான போக்குகளில் இயல்பாகவே உடுமலையார் சீர்திருத்தம் என்ற பிரிவிலேயே தன்னை இணைத்துக் கொண்டார்.
சுதந்திரம் - போராட்டம், பதவி என்று சென்று முடிந்தது. சீர்திருத்தம் - சாதி ஒழிப்பு, மத உயர்வின்மை, மக்கள் சமம் என்கிற மானுடக் கோட்பாட்டில் திகழ்ந்தது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் நம் கவிஞரை இயக்கியதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
1930-களில் பேசத் தொடங்கிய சினிமா, முன்பு இருந்த புராண, இதிகாசக் கதைகளைக் கொண்டு எழுதப்பட்ட மேடை நாடகங்களின் நீட்சியாகவே இருந்தது. அந்தக் காலகட்டத்தில் சினிமாவுக்குள் நுழைந்தவர் உடுமலையார். 1934-ல் கல்கத்தா ஃபிலிம் கம்பெனி ‘ஸ்ரீ கிருஷ்ண லீலா’ படம் தயாரித்தபோது, அதில் தன் சினிமாப் பணியைத் தொடங்கினார் உடுமலை.
சுமார் முப்பத்துக்கும் மேலான பாடல்கள் மற்றும் வசனத்தை இப்படத்தில் இவர் எழுதினார். உடுமலையாரின் திறமைகளில் முக்கிய அம்சம், நாட்டுபுறப் பாடல்களின் மணத்தையும் சொற்களையும் சினிமாவில் கொண்டு வந்தது. ‘கிருஷ்ண லீலா’-வில் அந்த அம்சத்தை முன் நிறுத்தினார். அதோடு நகைச்சுவை நடிகர்களுக்கும் பாடல் எழுதும் கவிராயராகத் தம்மை வடிவமைத்து கொண்டார் உடுமலை.
1935-ல் உருவான ‘தூக்கு தூக்கி’-யில் சிறியதும் பெரியது மாக மொத்தம் 58 பாடல்கள். இசையை ஒழுங்குபடுத்தும் பொறுப்பையும் உடுமலை ஏற்றார்.
இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ் ணன் 1976-ல் பிரம்மாண்ட படைப்பாக, ‘தசாவதாரம்’ படம் எடுத்தார். அப்போது, தன் ஆசான் உடுமலையே பாடல்கள் எழுத வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால், முதுமையும் மனச்சோர்வு மாக இருந்த உடுமலையார் இந்தவாய்ப் பைத் தன் மாணவர் மருதகாசிக்கு அளித்தார். 1934-ல் தொடங்கிய பாட்டுப் பயணம் 1976-ல் முடிவுற்றது. 42 ஆண்டுகளில் 650 பாடல்கள் எழுதி முடிவு கொண்டார் உடுமலையார்.
உடுமலையாரின் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுடன் கொண்ட தொடர்பு, இருவருக்கும் புதிய முகத்தை அளித்தது. கொலை வழக்கில் சேர்க்கப்பட்ட கிருஷ் ணன் விடுதலையாகி ‘பைத்தியக்காரன்’ எனும் படத்தை 1947-ல் வெளியிட்டார். அதில், தான் சிறைப்பட்ட அனுபவத்தை உடுமலையார் துணைகொண்டு இப்படி வெளியிட்டார்:
‘ஜெயிலுக்குப் போய் வந்த சிரேஷ்டர்
மக்களைச் சீர்திருத்துவாங்கோ - இந்த
ஜெகத்தை ஆளுவாங்கோ - சிலர்
திண்டாடித் திரிவாங்கோ - இன்னும்
தெளிவாய்ச்சொன்னாங்கோ...
ஒரு சிலர் கொண்ட கொடிய பொறாமை
உருவமாச்சுதுங்க – அதாலே
உண்மையை மறந்தாங்க - பொய்யை
உறுதிப் படுத்தினாங்க…’
எஸ்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் சமூக விமர்சனம் சார்ந்த பாடல்களுக்கு பக்கத்துணையாக விளங்கியவர் உடுமலையார்.
1950-1960 காலகட்டம், மக்கள் வாழ்க்கை சுபிட்சம் பெற்றது என்பதைக் கிருஷ்ணன் வழியாக இப்படி பாடிப் பரப்பினார் உடுமலை:
‘ஆயிரம் பேர் உழைப்பை ஒருத்தன் அநியாயமாகவே
அபகரித்து சேர்த்து வைத்தது அம்பது - அந்த
அறியாமை நீங்கி மக்கள் அவரவர் உழைப்பைக்
கொண்டு ஆண்டு அனுபவிப்பது அறுபது…’ - என்பது போன்ற மாறிவரும் புது யுகத்துக்கும் சினிமாவில் கட்டியம் கூறியவர் உடுமலையார்.
உடுமலையாரின் வரலாற்றை மிகத் துல்லியமாக சுமார் 40 ஆண்டு ஆராய்ச்சி உழைப்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசிரியர் செ.திருநாவுக்கரசு, 760 பக்கங்களில் அடர்த்தியாக எழுதித் தந்திருக்கிறார்.தோழமை பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த வரலாற்று நூல், பலவகையில் சிறப்புக்குரியதாக இருக்கிறது. அதில் ஒன்று, தன் சமகால வரலாற்றை ஆவணப்படுத்தியதாகும்.
ஆய்வாளர்களுக்கு ஒரு கேள்வி எனக்குள் தோன்றுகிறது. நூலில் உடுமலையார் 1914-ம் ஆண்டு பாரதியைப் புதுவையில் சந்தித்தார் என்ற குறிப்பு வருகிறது. அந்த ஆண்டில் உடுமலையாரின் வயது 15. இந்த வயதில், புதுச்சேரியில் தம்மை தானே நாடு கடத்திக் கொண்டு வாழ்ந்த பாரதியை உடுமலை சந்தித்திருக்கக் கூடுமோ என்பது யோசிக்க வைக்கிறது.
உடுமலையாரின் மேல் பெண் பார்வை சார்ந்த விமர்சனம் எனக்கு உண்டு. ஒரு அண்ணன், தன் தங்கையை அறிவுறுத்தும் விதமாகப் ‘புருஷன் வீட்டில் எப்படி வாழவேண்டும்?’ என்று பாடிய பாட்டு, ஒரு சராசரி மாமியாரின் தொனியுடன் இருப்பதாகப் பெண்ணியச் சார்பாளர் ஒருவர் கூறியதை முற்றும் மறுக்க முடியாது. இதுகூடப் பரவாயில்லை. ‘இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பளே… இங்கிலிஷ் படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே’ என்ற பல்லவியைக் கொண்ட பாடல், முற்ற முழுக்க பிற்போக்குத் தன்மை கொண்ட பாடலாகவே எனக்குத் தோன்றுகிறது..
உடுமலை நாராயணகவி 1981-ம் ஆண்டு தன் 82-ம் வயதில் மரணம் அடைந்தார். கலைஞர் கருணாநிதி அரசு சார்ந்தும், சாராமலும் பல கவுரவங்களைக் கவிஞருக்குச் செய்தார். ஆசிரியர் வீரமணி, கவிஞரின் கொள்கைப் பிடிப்பை, அன்பைத் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
உடுமலையார் உயிலைப் போல ஒன்றை எழுதி வைத்தி ருக்கிறார்:
‘செத்த பிணத்தை வைத்துக்கொண்டு இனிமேல் சாகும் பிணங்கள் கூத்தடித்துக் கொண்டிருப்பது அறியாமை.என்னைப் பொறுத்தமட்டில் இந்த அறியாமை வேண்டாம். வேறு எந்த வகையான சடங்குகளும் தேவை இல்லை.
ஒன்று செய்ய வேண்டுமானால், அதை மட்டும் செய்யுங்கள். உணவிலே எளிமை, உடையிலே எளிமை, கல்வியில் மேன்மை -இது போதுமானது!’ உடுமலையாரின் முகம் இதுதான்.
(நன்றி: தி இந்து)