புத்தக அறிமுகம்
சித்திரக்கதைகள் என்றாலே, நம்முடைய சூழலில் அவை சிறுவர்களுக்கானது எனும் எண்ணமே மேலோங்கி இருக்கும். ஆனால் மேற்குலக நாடுகளில் சித்திரக்கதை வடிவில் வெளியாகும் புத்தகங்கள், சிறுவர்களுக்கு மட்டும் உரியவையாக நோக்கப்படுவதில்லை. சித்திரக்கதை வடிவின் நுட்பங்களை, உத்திமுறைகளை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்குச் சாத்தியப் படுத்தி, அவற்றை எல்லா வாசகர்களுக்கும் கொண்டு செல்லும் நிலையில் மேற்குலகச் சித்திரக்கதைப் புத்தகங்கள் வெளிவருகின்றன. கதையை உருவாக்கும் எழுத்தாளர், கதையை ஓவியங்களாக்கித் தொகுக்கும் ஓவியர், எழுத்தையும் ஓவியத்தையும் ஒழுங்குற வடிவமைக்கும் வடிவமைப்பாளர் என மூன்று கலைஞர்களுக்கும் இணையான பங்களிப்பைக் கோரும் சித்திரக் கதைக் கலையானது மேற்குலகில் அனைத்துத் தரப்பு வாசகர்களையும் ஒருங்கிணைக்கும் ஓர்மையோடு வளர்ந்துவருகிறது.
சிறுவர்களுக்கான கதை சொல்லல் அவர்தம் மொழி ஆளுமை, கூர் நோக்கு, அறிவுத்திறன், வீரம், உற்சாகம், விவேகம் ஆகியவற்றை வளர்க்கும் நோக்கில் வெளிவந்த சித்திரக்கதைகள்; சாகசம், துப்பறிதல், நகைச்சுவை என நகர்ந்து தலைவர்களின் வரலாறுகள், நாடுகளின் அரசுகளின் மக்களின் வரலாறுகள் என விரிவடைந்து, பொது வாசகர் களைச் சென்றடையும் வண்ணம் இன்று வளர்ந்து வருகின்றன. மேற்குலகில் கிளைபரப்பி வரும் இத்தகையச் சித்திரக்கதைகள், மொழிபெயர்ப்பாக அங்கிருந்து இங்கே பெயர்த்தல் என்ற நிலையில் வெளிவரத் தொடங்கி யுள்ளன. அவ்வகையில், சென்னை “பயணி” வெளியீட்டில் “சேகுவாரா”, “அமெரிக்கப் பேரரசின் மக்கள் வரலாறு” என்னும் இரண்டு சித்திரக்கதைகள் வெளிவந்துள்ளமை குறிக்கத்தக்கது. அவற்றுள் ‘அமெரிக்கப் பேரரசின் மக்கள் வரலாறு’ என்னும் சித்திரக்கதை நூலின் நுட்பங்கள் குறித்து இக்கட்டுரை விளக்க முனைகிறது.
அமெரிக்கப் பேரரசின் மக்கள் வரலாறு: சித்திரக்கதை
“1980ஆம் ஆண்டில் இதனுடைய முதல் பதிப்பிலிருந்து அமெரிக்காவின் மக்கள் வரலாறு ஆறு புதிய பதிப்புகளைக் கண்டிருக்கிறது. 17 லட்சம் பிரதிகளுக்கும் அதிகமாக விற்கப் பட்டு, வகுப்பறையில் படிக்கத் தகுதியானதாகவும் பிரபல நாடகமாகவும் மாறியிருக்கிறது . . .” என்று சொல்லும் நூலின் பின்னட்டைக் குறிப்பிலிருந்து “அமெரிக்கப் பேரரசின் மக்கள் வரலாறு” (A People's History of American Empire) என்னும் நூல் பெற்றுள்ள வாசகர் வரவேற்பு எத்தகையது என்பதை அறிய முடிகிறது.
நூலுருவாக்கம்
இச்சித்திரக்கதை நூலின் ஆசிரியர் ஜின் போஸ்டன் பல்கலைக்கழகத்தின் கௌரவப் பேராசிரியர் ஹோவார்ட் ஜின் (Howard Zinn) என்பவர் ஆவார். இவர் ஜின் லனான் ஃபவுண்டேஷன் இலக்கிய விருதும், தமது இலக்கிய, அரசியல் செயல்பாட்டிற்காக வி.டெப்ஸ் விருதும் பெற்றவர். மைக் கோனபேக்கி (Mike Konopacki) இந்நூலுக்கான ஓவியங்களை வரைந்திருக்கிறார். பால் புலே (paul Buhle) என்பவர் இந்நூலின் எடிட்டர் ஆவார்.
இந்த மூன்று கலைஞர்களும் மிக நுட்பமான நிலையில் ஒன்றிச் செயல்பட்டு அமெரிக்கப் பேரரசின் மக்கள் வரலாறு என்னும் இந்நூலை ஆக்கித் தந்துள்ளனர். பல்வேறு நுல்களின் தரவுகள், சான்றுகளைத் திரட்டி உருவாக்கப்பட்டுள்ள இந்நூல், மக்களின் பக்கமும் போருக்கு எதிராகவும் அமைதிக் கும் உலக உயிர்களின் பாதுகாப்புக்கும் ஆதரவாக நின்று அமெரிக்க வெள்ளைப் பேரினவாதத்திற்கு ஆதரவானவர்கள் இல்லை என்றும் பேசுகிறது.
மொழிபெயர்ப்பு
அரசியல் சாணக்கியத் தன்மையும் பேரரசுகளின் உள்நோக்கங்கள், செயல்பாடுகள் பற்றிய நுட்பங்களும் நிரம்பிய ஆங்கில மொழிச் சித்திரக்கதையை இன்னொரு மொழிக்குப் பெயர்த் தல் என்பது மிகவும் கவனம் தேவைப்படும் ஓர் அரிய பணியாகும். மொழிபெயர்ப்பின் செம்மை என்பதைத் தாண்டி இயங்கும் தன்மை கொண்ட சித்திரப் படங்களின் ஒழுங்கை உணர்ந்து, உரையாடல்கள், கதை கூறல் ஆகியவற்றின் நுட்பங் களோடு பயணித்து மொழிபெயர்க்கத் தனித் திறமையும் கவன ஒருங்கு குவிப்பும் தேவைப்படுகின்றன. அவ்வகையில், இச்சித்திரக்கதை வரலாற்று நூலை மிக நேர்த்தியாகத் தமிழுக்கு மொழிபெயர்த்தளித்துள்ளார் இரா. செந்தில். அவருடைய மொழிபெயர்ப்புக்காகவும் அதற்கு அவர் எடுத்துக்கொண்ட அர்ப்பணிப்புக்காகவும் அவரைத் தனியே பாராட்டலாம்.
ஏனெனில் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் கால அமெரிக்கப் பேரரசின் வரலாற்றை மக்கள் நோக்கில் அலசியுள்ள இந்நூலை வாசிப்பதற்கே பயிற்சியும் நுண்ணறிவுத் திறனும் தேவைப் படுகின்றன. இந்நூல் குறித்த பின்னட்டை அறிமுகத்தில், ‘‘வகுப்பறைகளுக்கு உரிய நூல்’ எனப்படும் குறிப்பு, பள்ளி மாணவர்களை விடுத்து, கல்லூரி, ஆராய்ச்சி மாணவர்களையே சுட்டு வதாகக் கூறலாம். ஏனெனில், ஒரு நாட்டின் ஏகாதி பத்தியத்தையும், அந்நிய நாடுகளின் மீதான தலையீடுகளையும், இன அழிப்பின் வன்முறை களையும், உள்நாட்டு உணர்வாளர்களின் மீது அது செலுத்திய அடக்கு முறைகளையும் புரிந்து கொள்ளச் சிறுவர்களால் எவ்வளவுக்கு இயலும் என்பது கேள்விக்குறியே. எனவே, சித்திரக்கதை வடிவில் உள்ள இந்த அமெரிக்க வலாற்றுத் தொகுப்புநூல், சிறுவர்களுக்கானது அல்ல என்பது அதன் மொழி பெயர்ப் பைப் படிக்கையில் புலப்படுகிறது.
அமெரிக்கப் பேரினதவாத வரலாற்றை இப்படிச் சித்திரகக் கதை வடிவில் தருவதன் நோக்கமாக வியாபார விரிவு என்பதைத் தாண்டிச் சிலவற்றைச் சிந்திக்க இயலும். போரின் அவலங்கள், சிறைக்கூடச் சித்திரவதைகள், ஆயிரக் கணக்கான மனிதக் கொலைகள், கறுப்பினத்தவரையும், அமெரிக்க ராணுவம் செய்த கொடிய தண்டனை முறைகள் ஆகியவற்றை விளக்கவும், மக்களின் அச்சந்தோய்ந்த ஓலங்களையும், புரட்சி கரத் தலைவர்களின் அராஜகப் படுகொலைகளையும், மக்கள் எதிர்ப்புகளையும் சித்தரிக்க, கதையாக நகர்ந்து இயங்கும் சித்திரங்கள். தனித்த உணர்வுத் தளத்திற்கு வாசகரை நகர்த்தி உதவுகின்றன. அவ்வகையில் இச்சித்திரக்கதைத் தொகுப்பு, தன்னளவில் தனித்த குணாம்சங்களோடு, கதையை வாசகர் களிடம் கொண்டுசெல்கின்றன. அதன் மூலம் காட்சிச் சித்திரங்கள் வழிப்பெறப்படும் நுண்ணுணர்வின் அதிர்வுகளை வாசகர்களிடம் ஏற்படுத்திய படியே நகர்கின்றன எனலாம்.
இவ்வகையில் பேரரசு உருவாக்கத்தின் வன்முறைக் கண்ணிகளை அறிய இயலும் வாசகர்களோ இந்நூலில் எளிதாக உள்நுழைய முடியும். எனவேதான் இந்நூலின் முன்னட்டையும் பின்னட்டை யும் சித்திரக்கதை நூலுக்குப் போலன்றி, வரலாற்று நூல் ஒன்றுக்கு அமைந்ததைப் போல உள்ளன.
கதைப் போக்கு
பன்னிரண்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்நூல், இந்நூலின் கதையாசிரியர், ‘ஹோவார்ட் ஜின்’னின் விவரிப்பில் தொடங்கி வளர்ந்து நிறைகிறது. அமெரிக்கப் பேரரசின் மக்கள் வரலாற்றை அவரே சொல்லிச் செல்கிறார். அமெரிக்க இரட்டைக் கோபுர இடிப்பின் வலி களிலிருந்து தொடங்கும் இக்கதை, 1800களின் பிற்பகுதியில் நிகழ்ந்த செவ்விந்தியர்கள் மீதான உள்நாட்டுப் போரிலிருந்து தொடங்கி 1990 களில், அமெரிக்காவின் ஈரான், ஈராக் தலையீடுகள் வரையிலான வரலாற்றைப் பேசுகிறது. அத்துடன் அமெரிக்க ராணுவ வீரராக, இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றுப் பின் போரை வெறுத்து விலகிய, இந்நூலாசிரியர் ஹோவார்ட் ஜின்னின் வாழ்க்கை நிகழ்வுகளும் இந்நூலின் இடையில் சொல்லப்பட்டி ருக்கின்றன.
அமெரிக்க வல்லாதிக்கத்தின் ஆதரவுக் குரல்களாலும் அதற்கு எதிராகப் பல்வேறு தரப்புகளிலிருந்து எழும் எதிர்ப்புக் குரல்களாலும், இவற்றின் முரண்களாலும் நிரப்பப்பட்டுள்ள இவ்வரலாற்று நூலில், ஹோவார்ட் ஜின்னின் கூற்றுகளின் இடையே பல்வேறு மனிதர்கள், வரலாற்று நூல்கள், ஆவணங்கள், பத்திரிகைச் செய்திகளின் கூற்றுகளும் ஆங்காங்கே கதையை நகர்த்துகின்றன. குறிப்பாக, அமெரிக்க வல்லாதிக்கத் திற்கு ஆதரவாகப் பத்திரிகைகள் வரலாற்றைத் திரித்துச் செய்திகளாக்கிய பான்மைகள் இந்நூலில் மிகச் சிறப்பாக எடுத்து விளக்கப்பட்டுள்ளன.
வூண்டட்னீ படுகொலை பற்றி, பிளாக் எல்க் பேசுதல், கியூபாவில் 25ஆவது காலாட்படையில் அங்கம் வகித்த சர்ஜண்ட் பிராங்க் டபிள்யூ.புலெனின் பதிவுகள், அமெரிக்கக் கறுப்பினத் தலைவர்களின் பதிவுகள், அமெரிக்க உள்நாட்டுக் கலைஞர்களின் பாடல்வரிகள், யூஜின் டெப்ஸ் போன்றோரின் சித்திரிப்புகளாலும் நிரம்பிய இந்நூல் ஒரு வரலாற்று ஆவணத் தொகுப்பாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்றாற்போல இந்நூலில், வரலாற்றுக் காலகட்டங் களின் முக்கிய நிகழ்வுகள் புகைப்படங்களாக ஆங்காங்கே தரப்பட்டுள்ளன. ஒரு காட்சிக்குள்ளேயே புகைப்படத்தையும் சித்திரக்கதையையும் இணைத்தல், தலைவர்களின் புகைப் படத்தை முதலில் காட்சி, அத் தலைவர்கள் தொடர்பான கதையில் சித்திரங்களைப் பயன்படுத்துதல் முதலான சித்திரக்கதைச் சாத்தியப்பாடுகள் அனைத்தையும் இந்நூல் பயன்படுத்திப் பார்த்துள்ளது. ஒரு தேர்ந்த வரலாற்று ஆவணச்சித்திரக்கதை நூலுக்குரிய இலக்கணங்களோடு இந்நூல் உருவாகியுள்ளது என்பது மிக உண்மை. வல்லாதிக்க மனோபாவம் கொண்டவர்களின் முகபாவனைகள், அமைதி விரும்பும் மனிதர்களின் கவலை தோய்ந்த முகங்கள், நிழலுருவில் காட்டப்படும் திரை மறைவுச் சந்திப்புகள், குண்டு வீசப்படுவதற்கு முன்பும் குண்டு வீசிய பின்புமான வினாடிக் கணக்கில் ஏற்படும் மாற்றங்கள் என இந்நூலில் சித்திரக்கதைக் கலையின் சாத்தியப்பாடுகள் முழுமை யாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன.
(நன்றி: கீற்று)