கேரள சாகித்ய அகாதமி விருதினைப் பெற்ற ‘கொச்சரயத்தி’ என்னும் நாவலானது கேரளத்தின் ஆதிவாசி சமூகத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவலாகும். இந்நூலைப் பற்றி மொழிபெயர்ப்பு ஆசிரியர் “கேரளத்தின் ஆதிவாசி சமூகமான மலையரையர்களைக் குறித்து ஆதிவாதி ஒருவர் எழுதிய நாவல் இது… பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரே இதை எழுதியிருக்கிறார் என்பது இந்த நாவலுக்கு அனுபவத்தின் ஈரத்தையும் உண்மையின் தெளிவையும் அளிக்கிறது” (பின் அட்டை) என்று குறிப்பிட்டுள்ளார். ‘ஆதிவாசி இலக்கியத்தில் தலித்திய பார்வை’ என்ற தலைப்பில் பி.கே.போக்கர், ‘தேசாபிமானி’ வார இதழில் எழுதிய கட்டுரையானது இந்நூலின் முன்னுரையாக அமைந்துள்ளது.
ஆதிவாசிகள் சமூகத்தைப் பற்றிக் குறிப்பிடும் பி.கே.போக்கர், “கேரளத்தைப் பொறுத்தமட்டிலும் மலையாளிகளின் தனித்துவ உணர்வுகளிலிருந்து அன்னியப்பட்ட ஒரு மக்கள் பிரிவினர் இன்றும் இருந்து வருகிறார்கள். அவர்கள்தான் ஆதிவாசிகள் சமூகம். அவர்களது வாழ்க்கையும் மொழியும் இன்றும் வேறுபட்டு நிற்பது மட்டுமல்ல, அதற்கேயான தனித்துவ அழகையும் அது கொண்டிருக்கிறது… ஆதிவாசிகளின் வாழ்க்கையும் அனுபவங்களும் மேன்மைகளும் வித்தியாசமானது மட்டுமல்ல, இயற்கையின் பேரிடர்களையும் அது எதிர்கொள்கிறது” என்கிறார்.
இந்நாவலில், ஆதிவாசி மலையரையச் சமூகத்தைச் சார்ந்த கொச்சுராமன், குஞ்ஞிப்பெண்ணு என்ற இருவரையும் மையமாக வைத்து, அச்சமூக மக்களின் பண்பாடு, நாகரிகம், அவர்களது வாழ்க்கை முறைகள், அவர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள், சுரண்டல்கள், நவீனத்துவத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தல் என அனைத்தையும் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.
“நூறு வருடங்களுக்கு முன் கேரளீய சமூகம் நுழைந்த நவீன வாழ்க்கைச் சூழலுக்கு ஆதிவாசிகள் சமூகம் நுழையத் துவங்கும்போது ஏற்படுகிற உத்வேகமான நிகழ்வுகள்தான் நாவலில் வெளிப்படையாகவும் உள்ளடங்கியும் தென்படுகின்றன” என்கிறார் பி.கே.போக்கர்.
இயற்கையுடன் ஒன்றி வாழ்கின்ற ஆதிவாசிகள் சமூகம் அவ்வியற்கையுடனே போராடுவதும், இயற்கையை வென்று வாழும் மக்களுக்கு மனிதர்களே எதிரிகளாக வருவதும், தங்களுடைய சமூகத்தைத் தவிர்த்த எந்த மக்களுடனும் அவர்கள் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள விரும்பாததும், அதற்குக் காரணமாகத் தங்களைப் பிறர் ஏமாற்றி விடுவார்களோ என்ற பயமும், சாதி சமய நம்பிக்கைகளிலிருந்து விலக மறுப்பதும், நவீனத்துவத்தைக் கண்டு தயங்குவதும் என்று இந்நாவல் முழுதும் மலையரையர்களைக் குறித்த பதிவுகள் நிறைந்து கிடக்கின்றன.
“பொம்பளைங்க சொரண காட்டி என்ன ஆகப் போவுது? அப்பனும் கூடப்பிறந்தவனும் புடிச்சுக்கொடுத்தா இறங்கிப் போகத்தானே வேணும்? பெண்களுக்கென்று தனிப்பட்ட விருப்பங்களிருப்பது தவறான விஷயம். அப்பனையும் கூடப் பிறந்தவனையும் எதிர்த்தால் மிதித்துக் கொல்லவும் தயங்க மாட்டார்கள். யாரும் ஏனென்று கேட்கவும் முடியாது” (ப.19) என்ற நிலை காலங்காலமாக நிலவி வந்த ஆதிவாசி சமூகத்தில் நிலவி வந்தது. மலையரையர்கள் கல்வியறிவு பெற்றால் மட்டுமே பிற மக்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று நினைத்துக் கல்வி கற்பதும், அவ்வாறே கல்வி கற்ற பின் வேலை தேடிப் பிற பெரிய நகரங்களுக்குச் செல்வதும், அங்கே தான் காதலித்த நபரைத் திருமணம் செய்வதும் என்று மலையரையச் சமூகத்தின் பழைய கட்டுப்பாடுகளை உடைத்து நவீனத்திற்குள் புகுகிறாள் குஞ்ஞிப்பெண்ணின் மகள் பார்வதி. அதுபோன்றே உடல் நலமின்மைக்கு இயற்கையாகக் கிடைத்த பச்சிலைகளையும், இயற்கை மருந்துகளையும் பயன்படுத்திய மக்கள் மருத்துவ மனைகளை நாடிச் செல்லத் துவங்குவதும் நவீனத்துவத்தின் வெளிப்பாடே எனலாம்.
ஒதுக்கப்பட்ட மக்களாகப் பார்க்கப்படுகின்ற ஆதிவாசி சமூகத்தைச் சார்ந்த மக்கள் இயற்கை, நோய் இவற்றை வென்று வாழ்ந்தாலும் உயர்சாதி மனிதர்கள், அதிகாரிகள், சட்டங்கள், வியாபாரிகள், வரி வசூலிப்பவர்கள் ஆகியோரால் அனுபவிக்கும் துன்பங்களே ஏராளம். இம்மக்களைத் தங்களுடைய தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் எவரும் மனிதர்கள் என்ற அங்கீகாரத்தைக் கூட இவர்களுக்குத் தர மறுக்கின்றனர். “மனிதர்கள் அனைவரும் சமம் என்று நாகரிகமடைந்த எந்த மனிதனாவது ஒப்புக் கொள்வானா? மனிதர்களுக்குச் சமத்துவச் சிந்தனை உருவாவது வறுமையில் மட்டும்தான்” என்றே கருதத் தோன்றுகிறது.
ஆதிவாசி சமூகமானது தங்களது பழைய நம்பிக்கைகளையும், வாழ்க்கை முறைகளையும் குலைத்து நவீனத்துவத்திற்கு ஆட்பட முயற்சிக்கின்றபோதும், ஆட்படும்போதும் எந்தெந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றது? அதற்கான தீர்வுகள் எவை? என்பதை அச்சமூகத்திலிருந்து வந்த அதாவது அச்சூழ்நிலைகளை எதிர்கொண்ட எழுத்தாளர் என்ற நிலையில் அவரால் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்த முடிந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இந்நாவலை ஒரு முற்போக்கு இலக்கியம் என்று கூறுவது முற்றிலும் தகும்.