ஆல்பெர் காம்யு, 1960ம் ஆண்டு ஒரு கார் விபத்தில் உயிரிழந்தபோது அவர் கைப் பையில் வைத்திருந்த முடிக்கப்பெறாத நாவல்தான் ‘முதல் மனிதன்’. தற்போது தமிழில் வெளிவந்திருக்கும் இந்தப் படைப்பு குறித்த அறிமுகம் இது.
முப்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் காம்யுவின் 'முதல் மனிதன்' என்ற நாவலை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் வெ. ஸ்ரீராம் பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். புகழ்பெற்ற பிரெஞ்சு நூல்கள் பலவற்றின் மொழிபெயர்ப்புகளைத் தமிழில் தொடர்ந்து வெளியிட்டுவரும் க்ரியா பதிப்பகம் இதனையும் வழக்கமான நேர்த்தியோடு வெளியிட்டுள்ளது.
காம்யுவின் 'முதல் மனிதன்' ஆதிமனிதனல்ல. முதல் மனிதனுக்குத் தந்தை இல்லை. அவனுக்கென்று மரபு எதுவும் இல்லை. அறிவாகத் தன்னைக் காட்டிக்கொண்ட ஏதோ ஒன்றின் துணையோடு நல்லது, கெட்டது, நியாய அநியா யங்களைத் தனக்குத்தானே வகுத்துக் கொண்டான். தனக்கென்று தானே ஒரு மரபை உருவாக்கிக் கொண்டான். எங்கிருந்தோ அங்கே தூக்கி எறியப்பட்டதாக உணர்ந்த அந்த 'பிரம்மாண்ட' நாட்டில் அவன்தான் முதல் மனிதன்.
புலம்பெயர்ந்தவர்களோடு அவன் இருந்தான். 'கடந்தகால வரலாறோ, ஒழுக்க நெறிமுறைகளோ வழிகாட்டிகளோ மத ஈடுபாடோ இல்லாமல், இருத்தலிலேயே மகிழ்ச்சியடைந்து இருளுக்கும் சாவுக்கும் பயந்தபடியே ...' இருந்த மனிதர்கள் அவர்கள். இவர்கள் வாழ்க்கையை, சுதந்திரமான தேர்வுக்கு வாய்ப்பில்லாத வாழ்க் கையை, வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டவர்கள்.
இலையுதிர்கால இரவு மழையில் ழாக் கோர்மெரியின் பிறப்போடு நாவல் ஆரம்பிக்கிறது. இடையில் 40 ஆண்டுகளை விடுத்து மீண்டும் வசந்தகாலத்தின் மதிய வேளையில் ஆரம்பிக்கிறது. கால இடைவெளியை மீண்டும்மீண்டும் தாண்டிச் சென்று ழாக் கோர்மெரிக்குள் பீறிடும் வளமான குழந்தைப் பருவத்து நினைவுகளை பிடித்துவந்து காட்டுகிறது நாவலின் கட்டமைப்பு.
ஏழ்மையும் இல்லாமையும் தரும் அவலத்தின் அத்தனை பரிமாணங்களையும் மிகையில் லாமல் காணலாம். அநாமதேயம், அடையாளமின்மை, மரபின்மை, வெறுமையின் மௌனத்தோடு சமர் புரியும் தீராத வாழ்க்கைப் பசி, அறிவின் கட்டுக்கடங்காத ஆர்வம், இந்த மோதலின் தீவிரம், அதில் பிறக்கும் தவிப்பு இவற்றையும் மிகையின் விரசம் இல்லாமல் காணலாம். உணர்ச்சியின் வேகம் உண்மையான கலைப் படைப்பு விதிக்கும் வரம்புக்குள் நிற்பதும், அதை அப்படியே நிற்கவைக்கும் ஜாலமும்தானே இலக்கியம்!
ழாக் கோர்மெரியின் குடும்பம் அல்சாஸ் பிரதேசத்திலிருந்து ஜெர்மானியர்களால் துரத்தப்பட்டு அல்ஜீரியாவில் குடியேறியது. அவனது தாயின் குடும்பம் ஸ்பெயினின் மகோன் தீவிலிருந்து அங்கே வந்தது. ழாக்கின் தந்தை தாய்நாட்டுக்காகப் போரில் உயிர்விட்டவர். அவருக்கு அப்போது வயது 21. அவரது கல்லறையைத் தேடிச் சென்ற ழாக் 40 வயதைத் தாண்டியிருந்தான். தந்தையைவிட மகனுக்கு வயது அதிகம்! இது அவனை உலுக்கி விட்டது. காலநதியின் ஓட்டத்தில் வருடங்கள் தத்தம் இடத்திலிருந்து நழுவி இயற்கையின் ஒழுங்குமுறை குலைந்துபோய்விட்டதல்லவா? நரைதட்டும் மனிதர்களின் தந்தைகளாக இருந்த குழந்தைகள் தூவப்பட்ட இடமாக அந்தக் கல்லறைத் தோட்டம் இருந்தது.
போரும் புலப்பெயர்வும் ஏழ்மைக்கும் இல்லாமையின் கொடுமைக்கும் பிறப்பிடம். அவன் தாய் பேச்சுத்திறன்-செவித்திறன் அற்றவர். மகிழ்ச்சியோ சுரத்தோ எப்போதுமே இருந்தது இல்லை. பாட்டி ஒன்பது குழந்தைகளைப் பெற்று வளர்த்தவள். இல்லாமையின் கொடுமையில் இரண்டு ஃப்ராங்குகளே அவளுக்குக் கணிசமான தொகை. அவனைவிடப் பெரியவர்களுக்குப் பொருந்தும் உடைகளைத்தான் பாட்டி அவனுக்கு வாங்கியிருப்பாள். தேவையின் கொடுமையில் உறவினர்கள் ஒருவரை ஒருவர் புண்படுத்திக்கொள்வார்கள்.
வேலையில் சேர்வதற்கு ஒரு பொய். பள்ளிப்படிப்பைத் தொடர்வதற்கு வேலையிலிருந்து விலக ஒரு பொய். தோழர்கள் யாரும் வீட்டுக்கு வருவதில்லை என்ற போலி அவமான உணர்வு இப்படியாக ஏழ்மையின் சாபக்கேட்டை ழாக் அனுபவிக்கிறான். முதல் சம்பளம் பெற்று வரும்போது வெகுளித்தனமும் குழந்தைத்தனமும் செத்துப்போய் அவனுக்குள் இருந்த சிறுவனும் இறந்துவிடுகிறான். 'பெயரற்ற, வரலாறு அற்ற பிறவிகளை உருவாக்கிய ஏழ்மை என்ற புதிர்தான் அங்கு இருந்தது'. அங்கு எல்லாரும் ஆன்மா இல்லாத வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
பள்ளித் தோழன் திதியேவுக்குத் தாய்நாடு, வழிவழியாக வந்த குடும்பம், எதிர்காலக் கனவுகள், நன்மை-தீமையின் புரிதல், எல்லாமே இருந்தன. ழாக்குக்குக் கடந்த காலம் இல்லாத, எதிர்காலக் கற்பனை இல்லாத, நிகழ்காலத்திலேயே கழியும் வாழ்க்கை. பெயரற்ற நிலையிலிருந்தும், வரலாறு இல்லாத கூட்டத்திலிருந்தும் அவன் தப்பிக்க விரும்பினான். ஆனால், அவனுக்குள் இனம்புரியாத ஒன்று இருளையும் அநாமதேயத்தையும் தீவிரமாக விழைந்தது. எதிரெதிரான விழைவுகள் அவனுக்கே அவனை ஒரு புதிராக்குகிறது.
புதிர் எப்படி விடுபடுகிறது? நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற வெறித்தனமான வேட்கை. அது பெண்ணின் ஸ்பரிசத்தில் வரும் மூர்ச்சையைப் போல தன்னை உணரச் செய்யும். 'முழுமையாகச் சாவை எதிர்கொள்ளும் கலப்படமற்ற வேட்கை'. அன்றாட வாழ்க்கையில் காரண-காரிய நியாயங்களைக் கொடுத்த, கண்ணுக்குப் புலனாகாத ஒரு சக்தி 'கிளர்ச்சி செய்யாமல் சாவதற்குமான நியாயத்தையும் அளிக்கும்'. இப்படி அவனுக்கு ஒரு 'குருட்டு நம்பிக்கை' இருக்கிறது.
'முதல் மனிதன்' தனக்காகத் தானே மேற்கொண்ட இலக்கில்லாத தேடலும் அதனைத் தொடர்ந்து வரும் தீவிர மனப் போராட்டமும்தான் நாவலின் ஊடுசரம். தேடலின் இலக்கின்மையும், அதனை அவனே மேற்கொள்ள வேண்டிய சூழலும்தான் அவனை முதல் மனிதனாக்குகிறது.
காம்யுவின் நாவலை சுயசரிதை நாவல், சுயசரிதை விவரணை என்று சொல்வதுண்டு. காம்யுவின் சொந்த வாழ்க்கை இந்த நாவலில் எவ்வளவு கலந்திருக்கிறது என்று காண்பதேகூட விமர்சன நோக்கமாக இருந்திருக்கிறது. சுயசரிதமும், ஏதாவது ஒரு தத்துவமும் சம்பவங்களைக் கோக்கும் இழையாக இருப்பது நாவலின் மதிப்பை உயர்த்து வதாகக் கருதுவது இலக்கியத்தின் தன்மையை அறியாத பத்தாம்பசலித்தனம். ழாக் (அவன் காம்யுவாகவே இருந்தாலும்கூட), அவனது தாய், பாட்டி, மாமா, அவனது ஆசிரியர் ஆகியோரைக் கதாபாத்திரங்களாகவே ஏற்கவும், பார்க்கவும் வேண்டும். நாவலை ஒரு புனைவு இலக்கியமாகவே பார்க்க வேண்டும்.
நாவலில் சம்பவங்களுக்குப் பஞ்சமிருப்பதாகக் கருத இடமில்லை. சம்பவங்கள் எல்லாம் பாத்திரங்களின் புற நிகழ்வு நடவடிக்கைகளாகவே இருக்க வேண்டும் என்பது இல்லை. அவற்றைவிட சுவாரசியமான, கணக்கிலடங்காத சம்பவங்கள் ழாக்கின் மனவெளியிலேயே நிகழ்கின்றன.
காம்யுவின் மகள் காதரின் காம்யு நூலின் பிரஞ்சு மூலத்துக்கும், ஆங்கில மொழிபெயர்ப்புக்கும் எழுதிய முன்னுரைகளின் மொழிபெயர்ப்பு, பிரஞ்சு மூலப்பிரதி உருவான விதம், அதில் உள்ள தெளிவில்லாத, கையெழுத்து புரியாத சொற்கள், காம்யு கொடுத்திருந்த மாற்றுப் பிரதி, இடைச்செருகல், அவரது குறிப்புகள், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் என அறிவுலகத் தேடலுக்கு எல்லா வகையிலும் ஈடுகொடுக்கும் பதிப்பு இது. வெ. ஸ்ரீராமின் மொழிபெயர்ப்பு, மொழிகளின் தன்மையால், பண்பாடு, கால வேறுபாட்டால் வரும் இடைவெளியைத் திறமையாகத் தாண்டி வந்துள்ளது. பொருள் எவ்வாறு முழுமையாகத் தமிழுக்கு வந்துள்ளதோ அவ்வாறே வாக்கியத்தின் வடிவமைப்பும் தமிழின் தன்மைக்கு இசைந்த வகையில் சிதையாமல் வந்துள்ளது.
நாவலில் விவரிப்பு உணர்ச்சியின் தீவிரத்தை எட்டும்போது அதற்கு ஈடுகொடுத்து மொழிபெயர்ப்பின் மொழியும் தீவிரமாகிறது.
(நன்றி: தி இந்து)