பிரகாஷ் பொதுவாக அறியப்பட்டிருப்பது சிறுகதையாளர், பதிப்பாளர், ஒரு கட்டுரையாளர், ஒரு பத்திரிக்கை ஆசிரியர் என்பதாகத்தான். அவ்வளவாக அறியப்படாதவை அவரது நாவல்கள். தமிழ் நாவல் இலக்கியத்தில் அவரது ‘கரமுண்டார் வீடு, ‘மீனின் சிறகுகள்’ ஆகியவை முக்கியப் பங்களிப்புகள்.மற்றவர்கள் பேசத் தயங்கும் பாலியலின் பல்வெறு முகங்களை வெளிக்காட்டியிருப்பதும் இவற்றின் சிறப்பம்சம்.
சுமார் 250 ஆண்டுகளாகத் தொடர்ந்து கரமுண்டார் வீடு என்னும் குடும்பப் பெருமை பெற்றுள்ள கள்ளர் சமுதாயத்தின் ஒரு கூட்டுக் குடும்பம், அக்குடும்பத்தின் பண்ணையாட்களாகப் பணிபுரியும் பள்ளர்களுக்கும் அக்குடும்பத்தினருக்கும் இருந்து வரும் நெருக்கம் உறவு இவற்றில் முரண்களும் மோதல்களும் வெடிக்கையில் ஏற்படும் அவமானங்கள் இழப்புகள், ஒழுக்கவியலை மீறிய விலகல்கள் - பாய்ச்சல்கள் என விரிவார்ந்த தளத்தில் காவேரிக் கரையிலுள்ள அஞ்சினி என்னும் கிராமத்து வாழ்வு ‘கரமுண்டார் வீடு’ என்னும் நாவலில் பேசப்படுகிறது.
தஞ்சைப் பிரதேசத்தின் பிராமண சமுதாயம் சார்ந்த வாழ்வும் இசையும் தான் அது வரையிலும் வாசகனுக்குப் பரிச்சயமாயிருந்தது. இன்னொரு சமுதாயமான கள்ளர் சமுதாயத்தையும் அவர்களைச் சார்ந்திருந்த பள்ளர் சமுதாயத்தையும் பிரகாஷ் தான் முதலாவதாகப் பதிவு செய்திருக்கிறார். அதுவும் மேலோட்டமான அளவில் இல்லாமல் அவர்தம் தீவிரமிக்க போக்குகளையும் வாழ்தலில் காட்டும் வேட்கையினையும் வரம்புகள் தாண்டிப் போகும் மீறல்களையும் சேர்த்துச் சொல்லியிருப்பதுதான் புதுமை.
ஒன்றிரண்டு இடங்களில் பாத்திரங்களின் எண்ணவோட்டங்களாகவும் மற்றபடி கதை சொல்லியின் எடுத்துரைப்பாகவும் உள்ள இந்நாவல் பேச்சு வழக்கு மொழியின் வெளிப்பாடகவே அமைந்துள்ளது. யதார்த்த தளத்தில் விவரிக்கையில் அதன் வீச்சையும் வேகத்தையும் எழுத்து மொழி கட்டுப்படுத்திவிடும் அல்லது நீர்த்துப் போகச் செய்துவிடும் என்னும் எண்ணத்தில்தான் பிரகாஷ் இந்த அணுகுமுறையை மேற்கொண்டிருக்க வேண்டும். இந்த அணுகுமுறையில் ஈடுபட்டவர்கள் பொதுவாக மொழியளவிலேயே கவனம் கொண்டு அதுவும் வாசகனை அந்நியப்படுத்துவதாக ஆக்கியவர்களே உண்டு. பிரகாஷ்தான் அப்படி சரிந்து விடாமல் விஷயங்களை அவற்றின் ஆழ அகலங்களுடன் முன் வைப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளார்.
நாவலில் காத்தியாம்பாளுக்கும் அவளது சித்தி உமா மகேஷ்வரிக்கும் இடையிலான பெண் சார்ந்த தன்பால் காமம் பேசப்படுகிறது. சித்தியுடன் நில்லாமல் செல்லியென்னும் பள்ளர் சாதிப் பெண்ணுடனும் இது நீட்சி கொள்கிறது. திலகராஜர் தன் பண்ணையாட்கள் பள்ளர் சமூகத்துப் பெண்களுடன் கொள்ளும் பாலியல் உறவுகள் பேசப்படுகின்றன. இந்த விவரங்களுக்குள் செல்லும் ஆசிரியர் அவை விரசமாகிவிடாமலும் பார்த்துக்கொள்கிறார்.
ஆங்கிலேய அதிகாரி ஒருவன் புகைப்படம் எடுத்து தன் படத்தை வீட்ழல் மாட்டியிருந்தான் என்பதை அறிய நேரும் மங்களம் என்னும் கரமுண்டார் வீட்டுப் பெண் தற்கொலை செய்து கொள்ள நேர்கிறது அந்த அதிகாரி கொல்லப்படுகிறான். சிறியதொரு வரம்புமீறல் இந்த அளவுக்கு உயிர்பலிகள் கோரும் சூழலில் தான் மேற்கண்ட சமுதாய மீறல்களும் ஒழுக்க மீறல்களும் பேசப்படுகின்றன. அவை முணு முணுப்பின்றி ஏற்றுக்கொள்ளவும் படுகின்றன.
கரமுண்டார் வீடு உண்மையில் குறிப்பிடுவது என்ன? “வீடு என்றால் வீடு தானா? உயிர், பாரம்பரியம், உணர்ச்சி நீண்டகால நம்பிக்கை குவிந்து கிடக்கும் ஆசைகள் காலம் காலமாக தேங்கி கிடக்கும் பெண்களின் ஏக்கங்கள், சாகாமல் இன்னும் வாழ்வோடு போராடிக் கொண்டிருக்கும் அமங்கலிகளின் ஏக்கங்கள் தள்ளாத கிழவிகளான நெஞ்சுரம் கொண்ட வயோதிக உயிரை ஆவலாதிகள் பிடித்துக் கொண்டிருக்கிற கிழவர்களின் அபிலாஷைகள் இளம் பெண்களின் குமுறல்கள் விஜயம் ரங்கம் போன்ற பெண்களின் அரும்புவிட்ட பேராசைகள் என்று இப்படி எத்தனையோ கலந்துகொண்டு ஒரே இலட்சியமாய் அந்த தண்ணீருக்குள் இருந்து எழுந்து நிற்பது தான் கரமுண்டார் வீடு” (பக் . 291)
“மீனின் சிறகுகள்” நாவலில் பிராமண சமுதாயம் சார்ந்த வாழ்க்கை விவரிப்பில் பாலியல் வேட்கை மிக்க தங்கமணி என்னும் இளைஞனின் பெண் வேட்டை பேசப்படுகிறது. நேசம் கொள்ளும் பெண்களிடம் எல்லாம் எப்படியாவது பாலியல் பழகுவதில் சுகம் காண்கிறான். இதில் அவர்கள் நிறைவடைகின்றனரா நிர்க்கதியாகின்றனரா என்பது பற்றி அவனுக்குக் கவலை இல்லை. பெண்சார்ந்த தன்பால் காமத்தை மீனின் சிறகுகள் பேசும்.
வேதத்திலிருந்து நாடோடிகள் கதை வரை தன் பார்வையை ஓடவிட்டவர் பிரகாஷ். மெளனியிலிருந்து தகழிவரை அறிந்தவர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என வழங்கியவர். பத்திரிக்கை, அச்சகம், மெஸ் நடத்தியவர். சேனியலின் பஞ்சமரைப் பதிப்பித்தவர். ஓயாது ஒழியாது இலக்கியம் பேசியவர். இலக்கியக் கூட்டங்கள் நடத்தியவர். மேல் தட்டு வாழ்விலிருந்து கீழ்த்தட்டு வாழ்வுவரை பரிச்சயமானவர். இதனால் அவரால் வாழ்வின் உன்னதத்தைக் கண்டு அதிசயிக்கவும் கொடூரத்தைக் கண்டு திகைத்து நிற்கவும் முடிகிறது. வாழ்வின் போக்குகளும் பாய்ச்சல்களும் தான் அவரின் பரிசீலனைக் குள்ளாகின்றன, ஒழுக்கவியலின் வரம்புகளில்லை. முரண்பாடுகளும் மாறுபாடுகளும் மாற்றங்களும் எண்ணிப் பார்க்கத்தான் முடிவுகட்டி மறுதலிப்பதற்கு அல்ல. சரி - தவறென்று தீர்ப்புரைப்பதல்ல. இவ்வளவு விஷயங்கள் வாழ்க்கையில் பொதிந்துள்ளனவா என்று வியப்புறுவதுதான் எழுத்தாளாரின் கடமை என்பது பிரகாஷின் நிலையாகிறது.
எழுத்தென்னும் பிரமாண்டத்தின் முன்னே ஒளிரும் பனித்துளிகளில் ஒன்று பிரகாஷ். தூய்மையும் குளிர்வையும் கொண்டுள்ள அது கதிரொளி பட்டதும் வர்ணஜாலம் காட்டி குதூகலிக்கும். அதன் குதூகலம் வாழ்வெனும் அதிசயத்தைத் தரிசித்ததால் மனிதன் எனும் புதிரைக் கண்டுகொண்டதால் தனக்கு இந்தக் கொடை கிடைத்த சந்தோஷத்தால்.
வேதத்திலிருந்து நாடோடிகள் கதை வரை தன் பார்வையை ஓடவிட்டவர் பிரகாஷ். மெளனியிலிருந்து தகழிவரை அறிந்தவர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என வழங்கியவர்.
(நன்றி: தி இந்து)