வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி மேற்கொண்டிருக்கும் ஆய்வுப் பணிகள் பலவும் தமிழ்ப் பேராசிரியர்கள் செய்திருக்க, செய்ய வேண்டியவை. சலபதி தேர்ந்துகொண்டது சமூக, பண்பாட்டு வரலாறு என்பதால், தமிழியல் புலமும் பயன்பெற்றுக்கொண்டிருக்கிறது. இதன் நீட்சியாக, கடந்த 25 ஆண்டுகளில் பாரதி குறித்து சலபதி எழுதிய 14 கட்டுரை கள் ‘எழுக, நீ புலவன்!’ என்ற தலைப்பில் நூல் வடிவம் கண்டிருக்கின்றன.
இத்தொகுப்பில் அடங்கியுள்ள கட்டுரைகள், பாரதி யோடு அவர் வாழ்ந்த 20-ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தைப் பற்றிய ஆய்வுகளாகவும் அறிமுகங்களாகவும் அமைந்துள்ளன. இதழியல் துறையில் பாரதியின் முன்னோடி முயற்சிகள், நண்பர்களுடனான அவரது பதிப்பு முயற்சிகள், பாரதிதாசனுடனான சந்திப்பு, சுய சரிதைகள், வறுமையில் செம்மை வாழ்க்கை, அப்போதைய ஜமீன்தார்களின் நிலை, விடுதலைப் போராட்ட எழுச்சி, முதல் உலகப் போரின் தாக்கம் என்று உள்ளூரில் தொடங்கி உலகளாவிய நிலவரம் வரைக்கும் படம்பிடித்துக் காட்டும் இந்தக் கட்டுரைகள் இலக்கியம், வரலாறு என்ற இரண்டு புள்ளிகளுக்கும் இடையே ஊடாடுகின்றன.
1907-ல் சென்னைக்கு வந்த ஆங்கிலேயப் போர்ச் செய்தியாளரான ஹென்றிவுட் நெவின்சன் தனது ‘தி நியூ ஸ்பிரிட் இன் இந்தியா’ புத்தகத்தில் பாரதியையும் பெயர் சொல்லாமல் குறிப்பிட்டிருக்கிறார். அந்தப் புத்தகத்தைப் பற்றி வெவ்வேறு சமயங்களில் எழுதிய பாரதியும் தம்மைப் பற்றிய குறிப்புகளை முதன்மைப்படுத்தாமல் எழுதியிருக்கிறார் என்பது முதன்மையானது. பாரதியைப் பற்றிய குறிப்பு மட்டுமே ஓர் ஆய்வுக் கட்டுரைக்குப் போதுமான சங்கதிதான். ஆனால், அந்தப் புத்தகத்தைப் பற்றி பாரதி எழுதியவற்றையும் இணைத்து, அதில் தன்னைக் குறித்து பாரதி எழுத முடியாதிருந்த சூழலை யும் சுட்டிக்காட்டியிருக்கிறார் சலபதி.
‘முதல் உலகப் போரும் பாரதியும்’ என்ற கட்டுரை, முதல் உலகப் போர் பிரிட்டிஷ் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கங்கள், பத்திரிகைகளில் அரசியல் விஷயங்களை நேரடியாக எழுத முடியாதிருந்த நிலை, விடுதலைப் போராட்டக் களத்தில் ஏற்பட்ட எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும், பத்திரிகைகளில் அரசியல் விஷயங்களை எழுத முடியாதிருந்த நிலை என்று அப்போதிருந்த சூழலை பாரதியின் வார்த்தைகளிலேயே படம்பிடித்துக் காட்டுகிறது. மேற்கோள்களை அடுக்கும் வழக்கமான ஆய்வு முறைமையிலிருந்து விடுபட்டு பாரதி வார்த்தைகளின் நயத்தையும் வரித்துக்கொண்டிருப்பது ஆய்வின் சிறப்பு. மேற்கண்ட இரண்டு கட்டுரைகளும் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளிவந்தவை.
1906-ல் பாரதியின் கல்கத்தா பயணத்தில் தாகூரைச் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. 1919-ல் தாகூரின் தமிழகப் பயணத்தின்போதும் பாரதி அவரைப் பார்க்க வாய்ப்பில்லை. இடைப்பட்ட ஆண்டுகளில் படைப்பூக்கத்துடன் இயங்கிய பாரதி, தாகூரின்மீது பெருமதிப்பு கொண்டிருந்தார் என்பதையும் அவரது கதை, கவிதை, கட்டுரைகளை மொழிபெயர்த்தார் என்பதையும் நாள், இடம், ஏடுகளைச் சுட்டி விவரித்திருக்கிறார் சலபதி. பாரதியால் பெரிதும் மொழிபெயர்க்கப்பட்டவர் தாகூர் ஒருவரே என்பதும் அவரது எழுத்துகளை மொழிபெயர்க்கையில் கதைகளில் விளக்கக் குறிப்புகளையும் கட்டுரைகளில் ஆட்சேபக் கருத்துகளையும் பாரதி எழுதினார் என்பதை யும் எடுத்துக்காட்டுகிறார் சலபதி. இடையே ஒலிக்கும் கிருஷ்ணகானம் ஆய்வாளரின் முத்திரை. பாரதியின் மொழிபெயர்ப்பு இடறல்களையும்கூட அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ‘செமினார்’ மாத இதழின் தாகூர் சிறப்பிதழில் முதன்முதலாக வெளிவந்த இக்கட்டுரை யின் இன்னொரு வடிவம் ‘தி இந்து’ தீபாவளி மலரில் வெளிவந்தது.
பத்திரிகையாளரான பாரதி, 1904 டிசம்பர் தொடங்கி ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் எழுதிய கடிதங்களையும் சலபதி தொகுத்துப் பதிப்பித்திருக்கிறார். அத்தொகுப்புக்கு அவர் எழுதிய பதிப்புரையும் இத்தொகுப்பில் உள்ளடக்கம். பாரதி ‘தி இந்து’வுக்கு எழுதிய கடிதங்களிலிருந்து அவரது அரசியல் கருத்துகளில் அவ்வப்போது ஏற்பட்ட மாற்றங்களைத் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. மொத்தத்தில், பாரதி காலத்தினூடாக ஒரு வரலாற்று நடைப்பயணத்துக்கு இக்கட்டுரைத் தொகுப்பு அழைத்துச் செல்கிறது.
ஆவணக் காப்பகங்களில் தேடிச் சலித்தெடுத்த அரிய சான்றுகளை ஆய்வுலகுக்குள் பகிர்ந்துகொள்வதோடு தன் வேலை முடிந்ததென்று சலபதி நிறுத்திக்கொள்ளவில்லை என்பதும் புரிகிறது. அவரது கட்டுரைகள் பன்னாட்டு ஆய்விதழ்களில் வெளிவருகின்றன, கருத்தரங்குகளில் வாசிக்கப்படுகின்றன. இவை ஒரு வகை. தமிழ்நாட்டைத் தாண்டி தேசிய அளவிலான ஆங்கில நாளேடுகளில் வெளிவருகின்றன.
இவை இரண்டாவது வகை. இலக்கிய ஏடுகளில் வெளிவந்து எழுத்தாளர்களையும் வாசகர்களையும் வழிநடத்துகின்றன. இவை மூன்றாவது வகை. நாளேடுகளிலும் சிறப்பு மலர்களிலும் வெளிவந்து பெருவாரியான மக்களிடம் தகவல்களை சாரம் கெடாமல் சுவைபட எடுத்துச்சொல்கின்றன. இவை நான்காவது வகை. அவர் தேடலில் கிடைத்த வரலாற்றுச் சான்றுகள் எல்லாத் தரப்பினரையும் சென்றடைகின்றன. ஒவ்வொரு வடிவத்துக்கும் ஏற்றாற்போல அவற்றை உருமாற்றிக்கொடுப்பதிலும் அவர் வல்லவராக இருக்கிறார் என்பது அவரது திறமை. தேடிக் கண்டடைந்த உழைப்பு, அதைக் கொண்டுபோய்ச் சேர்க்கும்வரைக்கும் ஓய்வதில்லை என்பது எழுதும் பொருள்குறித்த அவரது ஈடுபாடு.
(நன்றி: தி இந்து)