பெற்ற பிள்ளையை வளர்க்க ஒரு தாய் படும் துன்பத்தையும், மகளை மணம் செய்து கொடுக்க ஒரு தந்தை படும் துன்பத்தையும் உலகின் மாபெரும் துன்பங்களாகவும், தியாகங்களாகவும் பதிவு செய்கின்றன இலக்கியங்கள். ஆனால் ஏற்றத் தாழ்வுகளற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க பல வகையான துன்பங்களையும் கடந்த மனிதர்களை நீங்கள் பார்த்ததுண்டா?
அப்படிப் பார்க்காதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது ‘காம்ரேட்’ எனும் நூல். பகத்சிங்சின் நண்பரான யஷ்பால் அவர்கள் எழுதியிருக்கும் இவ்வரலாற்றுப் புதினத்தில் தன்னலத்தைத் துர எறிந்துவிட்டு சமுதாய நலனுக்காக தம்மை முழுவதுமாக ஒப்படைத்த நமது முன்னோர்களைப் பார்க்க முடிகிறது.
இந்தப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை வேறு எந்தப் பெண்ணுக்கும் நேரக்கூடாது என்று நல்லதங்காள் கதையைக் கேட்டு மூக்கைச் சிந்துபவர்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கொடுங்கோன்மைக்கு எதிராக கீதா (கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்) சந்தித்தக் கொடுமைகள், எதிர்கொண்ட அவமானங்களை இப்புதினத்தில் பார்க்கும் யாரும் இன்றளவும் நீடிக்கின்ற இந்தப் பிற்போக்குச் சமுதாயத்தின் மீது கோபம் கொள்ளாமல் இருக்கமுடியாது.
நடைபாதையில் நின்று, போவோர் வருவோரிடம் கட்சிப் பத்திரிகை விற்றுக் கொண்டிருக்கிறாள் கீதா. காங்கிரஸ்காரனான ரவுடி பவாரியாவின் கண்கள் அவளுடைய மேனியை மேய்கின்றன. அவனுடன் நிற்கும் சுகில், பவரியாவைக் கிள்ளியபடியே கேட்கிறான். ”முதலாளி உருப்படி எப்படி?” இத்தகைய அருவெறுப்பான பார்வைகளைக் கீதா எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
கல்லூரி ஆராய்ச்சி மாணவியான கீதா கம்யூனிஸ்ட் கட்சி ஊழியராகப் பரிணமிக்கும் போது இந்தப் புதியதொடர்பு (கம்யூனிஸ்ட் கட்சி) அவளுக்குப் பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டியது. அதனால் ஏற்படுகின்ற மகிழ்ச்சி நல்ல உடைகளையும், நகைகளையும் அணிவதைவிட மேலானது என்பதை அவள் உணர்ந்தாள்.’ (பக்.13). இப்படிப் பிற்போக்குத் தனங்களை உதறியவுடன் இலக்கில்லாமல் எதையும் எதிர்ப்பது என்று ”வாய்ப்புரட்சிக்கு” வம்பளக்க ஒதுங்கவில்லை. புதிய சமுதாயத்தைத் தோற்றுவிக்க உள்ள தடைகளைத் தகர்ப்பதற்கு எதையெல்லாம் பற்றியொழுகலாமோ அதுவே அவளுக்கும் ஒழுக்கமானது.
ஒழுக்கம் நாகரிகம் பற்றிய பொது வரையறையை கம்யூனிஸ்டுகள் ஏற்பதில்லை. அது வர்க்கத்திற்கு ஏற்றாற் போல வரையறுக்கப்படுகிறது என்பதை வாழ்க்கையிலிருந்து எடுத்துக் காட்டுகிறது ஒரு பகுதி:
“… எண்ணற்ற தெருக்கூட்டும் தொழிலாளி சகோதரிகளும், பூர்வகுடிப் பெண்களும் முழங்கால்கூட மறையாத ஆடைகளுடன் மார்பு தெரிய குப்பை கூட்டுகின்றனர். யாருக்கும் அதைப் பற்றிக் கவலையில்லை. வெட்கித்தலை குனியவில்லை. ஒரு பூர்ஷ்வா, ஏன் படித்த வர்க்கத்து சின்ன எஜமானிகளின் சேலை அரை சாண் உயர்ந்துவிட்டால் பம்பாய் நகரம் பற்றி எரிகிறது…” (பக்.21).
இப்படி கீதாவை முன்வைத்து கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடு, போராட்டங்களைச் சொல்வதுடன் – பவாரியா என்ற காங்கிரஸ் அனுதாபியும், ஏரியா தாதாவுமான ஒரு ரெளடியை கம்யூனிஸ்ட் கட்சி – குறிப்பாக கீதா எவ்வாறு அரசியல் படுத்துகிறார் என்பதும், பவாரியாவின் சொந்த அனுபங்களின் மூலமாகவே காங்கிரஸின் ஏகாதிபத்திய சேவையை அம்பலப்படுத்துவதும் சிறப்பாகப் புதினத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
முத்தாய்ப்பாக கப்பற்படை எழுச்சியை கம்யூனிஸ்டுகள் ஆதரித்துப் போராடும் போது, ’இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று புகழப்படும் சர்தார் பட்டேலின் வேண்டுகோள் இது: ”மக்கள் இந்த நெருக்கடியான நிலைமையில் வேலை நிறுத்தம் போன்ற எதிலும் கலந்துகொள்ளாமல் அடக்கமாக இருக்க வேண்டும். மக்கள் எந்தவிதமான உதவியோ ஆதரவோ காட்டக்கூடாது” என்று எச்சரித்தார். (பக்.80).
வரலாற்று வழியில் காங்கிரஸ் இவ்வளவு அம்பலப்பட்ட பிறகும் அன்றைக்கிருந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை காங்கிரசை அம்பலப்படுத்தி முறியடிப்பதற்குப் பதில் அதன் செயல்பாடுகளை ஏகாதிபத்திய சதி என்று கருதி தவறிழைத்ததையும் பலகாட்சிகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
இன்றைய கம்யூனிஸ்டு கட்சியின் (மார்க்சிஸ்டு) பத்திரிகையான தீக்கதிரின் பொறுப்பாசிரியர் சு.பொ. அகத்திய லிங்கம் இந்நூலுக்கு எழுதியிருக்கும் முன்னுரையை வாசகர்கள் பின்னுரையாகப் படிப்பது நல்லது.
அன்று காங்கிரசின் அவதூறுகளுக்கு இரையான கம்யூனிஸ்டுகளின் அனுபவத்தைக் காட்டி, ”இப்போது இந்துமதவெறி பாசிச சக்திகளை உறுதியோடு எதிர்த்து நிற்பதால் இத்தகைய அவதூறு பிரச்சாரத்துக்கு கம்யூனிஸ்டுகள் ஆளாக்கப்படுகிறார்கள் அல்லவா?” என்று தங்களுடன் முடிச்சுப் போடுகிறார்.
கப்பற்படை எழுச்சிக்குத் தோள் கொடுத்த தோழர்கள், இன்று காங்கிரசு எழுச்சிக்குத் தோள் கொடுக்கும் மார்க்சிஸ்டுகளுக்கு முன்னோடிகளா?
இந்த முன்னுரையின் தலைப்பு ”காம்ரேட் கீதாவுடன் ஒருமுறை கை குலுக்குங்கள்.” ஆனால் சுர்ஜித்தும் பாசுவும் அன்னை சோனியாவுடன் அல்லவா கைகுலுக்கச் சொல்கிறார்கள்!
(நன்றி: வினவு)