இந்தியச் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான தலித் மக்களின் வாழ்வியலை எளிமையாக சுட்டிக்காட்டிச் செல்லுகின்றது தயா பவாரின் இச்சுயசரிதை. மராத்தி மொழியின் முதல் தலித் சுயசரிதை என்பது இந்நூலுக்கு கூடுதல் சிறப்பு. இந்நூல் வெளிவந்த காலகட்டத்தோடு ஒப்பிடும்பொழுது சாதியம் இன்று அதன் பரிணாமங்களை அடைந்துள்ளதே ஒழிய, எப்பொழுதும் போன்ற ஊர் சேரி பிரிவினைகளும், சாதியப்பாகுபாடுகளும் அதன் பொருளில் எவ்விதத்திலும் மாறுதலடையாமல் அப்படியே இருக்கின்றன.
மும்பையின் “கோல் பிதா”, “காமாட்டிபுரம்” மற்றும் “காவாக்கானா” போன்ற ஸ்லம் பகுதி மக்களை, அவர்களின் வாழ்க்கை முறையை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது இந்த நூல். தடுப்பு வீடுகள், அதனுள்ளே பெரிய குடும்பங்கள், காதலிக்க முடியாத கணவன் மனைவிகள், பசியாய் வீறிட்டழும் குழந்தைகள், குடியும் பெண்களுமாய் கணவன்கள், குப்பை பொறுக்கி குடும்ப பாரம் சுமக்கும் மனைவிகள், இவர்களுக்கிடையே நீட்டிக்கும் பரஸ்பர அன்பும் புரிதலும் என தலித் மகர் மக்களின் வாழ்வியலை சொல்லும் அதேவேளையில், ஆதிக்கசாதி மக்களின் சாதி வெறியையும், திமிரையும், அவர்களின் வசதிவாய்ப்பையும் எழுத்தாளர் தனது ஆதங்கத்தின் வழியே கதைசொல்லியாக சொல்லிச் செல்லுகின்றார். நகரத்திலும் கிராமத்திலுமாய் மாறி மாறி வசிக்கும் எழுத்தாளர் கிராமத்தின் சாதிய அநியாயங்களையும் விவரித்தெழுதுகிறார்.
”கிராமத்திற்கு முக்கியமான ஆட்கள் வந்தால் அவர்களின் குதிரைக்கு பின்னால் நாங்கள் ஓட வேண்டும்; அவர்களது செல்லப் பிராணிகளுக்கு துணையாக இருக்க வேண்டும்; அவைகளுக்கு உணவும், நீரும், மருந்துகளும் கொடுக்க வேண்டும்; கருமாதி என்றால் கிராமம் கிரமமாகச் சென்று அறிவித்து வர வேண்டும்; இறந்து போன விலங்கின் உடல்களை அப்புறப்படுத்தவும்; விறகு வெட்டவும்; திருவிழா நாட்களில் இரவு பகல் பாராமல் இசைக்கருவிகள் வாசிக்கவும் வேண்டும்; திருமணங்களின் பொழுது கிராமத்தின் எல்லையிலிருந்து புது மாப்பிள்ளையை வரவேற்று வர வேண்டும். இவையனைத்திற்கும் கூலியாக எங்களுக்கு என்ன கிடைக்கும்? ‘பலூட்டா’ எனப்படும் அறுவடையில் ஒரு பங்கு.”
தயா பவார், தலித் மக்கள் செய்வதாக குறிப்பிட்டுள்ள வேலைகளில் சில இன்று வழக்கத்தில் இல்லையென்றாலும், இது போன்ற பெரும்பாலான வேலைகளினை இன்றும் தலித் மக்கள் தான் செய்து வருகின்றனர். சாக்கடைகளிலும் மலத்தொட்டிகளிலும் இறங்கி சுத்தம் செய்வது முதற்கொண்டு, சாவிற்கு பறை மோளம் அடிப்பது வரை. இன்றும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யச் சொல்லுகிறார்கள். பெரும்பாலும் கிராமப்புற பள்ளிகளில் தலித் மாணவர்களையே இப்படியான வேலையை செய்யச் சொல்லுவதினையும், சில இடங்களில் அதற்கான எதிர்வினையும் நாம் காண்கிறோம். வாரம் ஒருமுறை மாட்டுச்சாணத்தை பள்ளியின் சுவர்களில் ஒட்டும் கட்டாயம் ஏற்பட்ட மகர் மாணவராக தயா பவார் இருந்துள்ளார். அதற்கு சிறிதும் சளைக்காமல், இன்று கழிவறைகளை சுத்தம் செய்யும் பொறுப்பு தலித் மாணவர்கள் மீது விழுகின்றது. இதனை தடுத்து நிறுத்த முயற்சிக்கும் விளைவாய், பள்ளிகளில் மாணவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்வதினை அனுமதிக்க கூடாது என வழக்கு பதிவிடப்பட்டது. ஆனால், “மாணவர்கள் கழிப்பிடத்தினை சுத்தம் செய்வதில் தவறொன்றுமில்லை; மகாத்மா காந்தியின் கொள்கையும் அதுதான்” என்று நீதிபதி ராமசுப்ரமணியன் தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. இப்படியான நீதிபதிகள் காந்தியின் கூற்றுப்படி, உயர்நீதிமன்ற வளாக கழிப்பறையையாவது சுத்தம் செய்யலாம் அல்லவா? இவர்களுடைய இந்த கருத்துக்கும், “கழிவறையை சுத்தம் செய்வது ஆன்மீக பயிற்சி” என்ற மோடியின் கருத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை. அத்தகைய காந்திய ஒழுக்கப்பாட்டையோ, ஆன்மீக பயிற்சியையோ ஆதிக்கசாதிகளோ அல்லது பார்ப்பனர்களோ செய்யப்போவதில்லை ஒருநாளும்.
பாபாசாஹேப் அம்பேத்கரின் காலகட்டத்தில், இயக்கசிந்தனைகளுக்குள் இளம் வயதிலேயே ஈர்க்கப்பட்ட எழுத்தாளர் தயா பவார், அப்பொழுதான சில பழைய மரபுகள் அழிக்கப்பட்டத்தினை தெளிவாக விவரிக்கின்றார். இறந்த விலங்குகளின் கறியை உண்பதற்கு எதிராக போராட்டக்குழுக்கள் எவ்வளவு தீவிரமாய் கிராமம் கிராமமாக செயல்பட்டனர் என்பதினையும் விளக்கியுள்ளார். தாதாசாஹேப் கேக்வாட்டின் வளர்ச்சியின் இன்னொரு பரிமாணத்தினை தயா பவாரின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.
Fandry திரைப்படத்தினில் வரும் தலித் சிறுவன், தனது பள்ளியின் அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும், தனது குடும்பத்துடன் பன்றியை பிடிக்க நேரும் பொழுது, கூனிக்குறுகி ஒளிந்து கொண்டு நிற்பான். அவனை சுற்றிலும் பள்ளி மாணவர்கள் பன்றியை பிடிப்பதினை விளையாட்டாக பாவித்து குரல் எழுப்பி ஓலமிடும் பொழுது, அவனுடன் சேர்ந்து நாமும் அவமானத்தை உணர்வோம். அவன் நேசிக்கும் பெண்ணின் முன்பு நாமும் வார்த்தைகளை இழந்து பரிதவிப்போம். கலை, இலக்கியத்தினால் மட்டும் தான் மக்களிடம் உணர்வுகளைக் கடத்தி செல்ல முடியும். அப்படியான உணர்வை தயா பவார் நம்மிடமும் கடத்துகிறார். அவர் எழுத்தின் கூர்மை தான் சாதிய ஆதிக்கத்திற்கு எதிரான அவரது ஆயுதம்.
முதல் தலைமுறையாக கல்வி கற்க வரும் ஒரு ஏழை மகர் மாணவனின் துயர்மிகு வாழ்க்கையை அப்படியே நம் கண்முன்னே செதுக்கியிருக்கிறார் ஆசிரியர். சிறிய வயதில் தந்தையை இழந்து, சகோதரியுடன் தாய் கஷ்டப்பட, தயா பவார் விடுதியிலும் பள்ளியிலும் சாதி ரீதியாகவும் பொருளாதர ரீதியாகவும் சிரமப்பட்டு படித்து முடித்தும், தலித்தாக இருக்கும் காரணத்தினால் சரியான வேலை கிடைக்காமல் திண்டாடுகிறார். பாபாசாஹேப் அம்பேத்கர், தாதாசாஹேப் போன்றோர்களின் காலகட்டத்தில் அரசியல் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட தயா பவார், கவிஞராய் எழுத்தாளராய் பரிணமித்திருக்கிறார். கணவனை இழந்து, சிரமப்பட்டு குழந்தைகளை வளர்த்த ஒற்றை பெற்றோரான தனது தாயுடைய வலியை புத்தகம் முழுவதும் குறிப்பிட்டாலும், தன்னுடைய மனைவியின் மீதான தனது சந்தேகத்தினை உமிழ்ந்து, அவரைப் பிரிந்து, வழக்கமான ஆணாதிக்க சாரம்சங்களுடனே வாழ்ந்திருக்கிறார். தலித் பெண்களின் துயரங்களை இந்நூல் விரிவாகவே அலசியிருக்கின்றது. தலித் மக்கள் தங்களுடைய உரிமையாகக் கருதும் அறுவடையின் பங்கான பலூட்டா உண்மையிலேயே உரிமையா?
(நன்றி: மாற்று)