கலையென்பது மிகைப்படுத்தல், தத்ரூபமல்ல. [பக்: 133]
காதல் என்பது அற்புதங்களின் உலகம். அங்கே நோவுகள் உண்டு, ஆனால் வியாதிகள் கிடையாது, பொறுப்புகள் உண்டு, ஆனால் சுமைகள் கிடையாது, பலவீனங்கள் உண்டு, ஆனால் இயலாமை கிடையாது, ஊடல்கள் உண்டு, ஆனால் சலிப்போ களைப்போ கிடையாது, நெருக்கம் உண்டு, உறவு கிடையாது, உடலோடு ஸ்பரிசம் உண்டு, ஆனால் உடலோடு புழங்குவது கிடையாது, முக்கியமாக, நினைவுகள் உண்டு, பிரக்ஞை கிடையாது, யதார்த்தத்தின் மீது தான் கட்டப்படுகிறதெனினும் காதல் யதார்த்தத்தை மீறிய, சொல்லப்போனால் அதை அலட்சியம் செய்கிற இலட்சியங்களின் உலகமாய் இருக்கிறது, திருமணம் காதலுக்குச் சொல்லப்பட்ட இந்தக் கிடையாதுகளைக் கொண்டுதான் அதை யதார்த்தமாக்குகிறது, தம்பதிகளின் நேசம் எத்தனை உன்னதமாகவேயிருந்தாலும் அது காதலின் இலக்கணத்திற்குள் வருவதில்லை, ஏனென்றால் இலட்சியமும் யதார்த்தமும் பெளதீக ரீதியாகவே ஒருபோதும் இணைய முடியாதவை, அதே சமயத்தில் இலட்சிய உலகிலிருப்பவர்களுக்கு யதாரத்தத்தோடு தங்களைப் பிணைத்துக்கொள்ளும் வேட்கையும் யதார்த்தத்தில் உழல்பவர்களுக்கு இலட்சிய உலகம் பற்றிய கனவுகளும் பிரிவேக்கங்களும் நினைவெச்சங்களும் எப்போதும் கூடவேயிருக்கின்றன, சரியாகச் சொல்லவேண்டுமானால் திருமணத்திற்குப் பிறகுதான் ஒரு மனம் காதலின் உலகத்திலிருந்து தான் என்றென்றைக்குமாக வெளியேற்றப்பட்டுவிட்டோமென்பதைத் தெரிந்து கொள்கிறது. [பக்: 221]
O
‘பாகீரதியின் மதியம்’ நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நம் கலாச்சாரம், பண்பாடு, சாதிய கட்டுமானங்கள் ஏதும் அறியாத அந்நிய நில வாசகன் வாசிப்பானென்றால் இந்நாவலின் கதை சொல்லும் யுக்தியும், ஒவ்வொரு சம்பவங்களையும் ஒன்றோடொன்று பிணைத்திருப்பதும், காதல் கதைகளும், மிக நுட்பமாகக் கையாண்டிருக்கும் கதாபாத்திரங்களின் வார்ப்பும் ஒரு பேரனுபவத்தைத் தரவல்லது தான். ஆனால் இந்நாவலின் கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு சாதிய அடையாளமிருக்கிறது, கலாச்சார பின்புலமிருக்கிறது, சிலர் சில கொள்கைகளைக் கடைபிடிப்பவர்களாகவும் சில நிலைப்பாடுகளுடன் வலம் வருபவர்களாகவும் இருக்கிறார்கள். இவை தமிழ் வாசகன் மட்டுமே புரிந்துகொள்ளக் கூடியவை. இவை அறியாத அந்நிய வாசகன் புரிந்துகொள்ள இயலும் பக்கங்களைத் தவிர அல்லது அப்பக்கங்களுக்குள் மறைந்திருக்கும் விஷயங்கள்தாம் நாம் விவாதிக்க வேண்டியதென்றும் அவை தான் இந்நாவலின் ஆன்மா என்றும் தோன்றுகிறது.
‘பாகீரதியின் மதியம்’ நாவலில் சிலாகித்து மகிழ்வதற்கு ஏராளமான விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றிலிருந்து நான்கைக் குறிப்பிட விரும்புகிறேன்.
பாகீரதியின் கனவிற்கு வெளியே ஜெமினிக்கு நிஜத்தில் வேறொரு பெயர் இருக்கிறது, உறங்காப் புலி. ஜெமினியின் தாயாருடைய ஆசையால் சங்கிலிக்கு வேறொரு பெயர் உண்டானது, ஜெமினி. சவிதாதேவியின் சித்தப்பிரமைக்கு அப்பால் விபின் பாஸ்வானுக்கு வேறொரு பெயர் இருக்கிறது, உறங்காப்புலி. சில்லரைச் சாகஸங்களுக்கு வெளியே குடுமிநாதனின் பெயர் வாசுதேவன். ப்ராம் ஸ்டோக்கரின் உள்ளூர்க் கதை வடிவத்தில் ட்ராகுலாவின் பெயர் அரங்கநாதன் நம்பி. உபேந்திரநாத் தத்தாவின் கனவிற்கு அப்பால் பினித்ரா தேவிக்கான பூர்வப் பெயர் பேராபுடீமா. பேராபுடீமா சுயசாவை நிகழ்த்திக்கொள்வதற்கு முன்னால் தெக்கூவாக அறியப்பட்டவள். உறங்காப்புலியின் காதலின் பரவச உலகிற்கு வெளியே பாகீரதிக்குமேகூட இன்னொரு பெயர் இருக்கிறது, சவிதாதேவி. அரங்கநாதன் நம்பியினுடைய பூர்வ ஜென்மத்துப் பெயரறியாக் காதலியின் இந்த ஜென்மத்துப் பெயர் பாகீரதி. பெயர் பெயர்களை உற்பத்தி செய்துகொண்டேயிருக்கிறது என்கிறார் அரங்கநாதன் நம்பி. “பெயர் ஒரு வித்தைக்காரனின் தொப்பி. அதிலிருந்து வெளிவரும் எதுவும் உண்மையில்லை. அவை ஏதேதோ எண்ணங்களின் நோக்கங்களின் ஆரூடங்களின் திட்டங்களின் சித்திரவதைகளின் உருவகங்கள். அது வெறும் ஒரு சொல். சீஸேமைத் திறக்க வைக்கும் ஒரு கடவுச் சொல்.”
இதுவரை நான் வாசித்த புத்தகங்களில் ஆகச் சிறந்த பின்னட்டைக் குறிப்பு இது! ‘பாகீரதியின் மதியம்’ நாவலை பெயரின் வழியே பொருத்திப் பார்த்து அணுகுவற்கான கடவுச் சொல். இக்குறிப்பின் முதல் வரியை உணர்ந்துகொள்வதற்கு இருநூறு பக்கங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது. உறங்காப்புலியின் பெயர் அறியாமலேயே பிரமீளா அவனோடு உரையாடியும் பிரமீளாவின் பெயரைக் கூறாமலே அவளோடு உறவாடியும் விளையாடுகிறார்கள். பிரமீளாவின் நிஜப்பெயர் என்னவென்று தெரியாது. உறங்காப்புலி தன்னை உறங்காப்புலி என பாகீரதியிடம் அறிமுகப்படுத்திக்கொள்ளாமல் தன் நிஜப்பெயரைக் கூறுவதைத் தவிர்த்து ஜெமினி என்று சொல்லிக்கொள்வதற்கு ஜெமினி மீதான பாகீரதியின் காதல் மட்டும் காரணமல்ல, மாறாக பிரமீளாவிற்கும் பங்குண்டு என்பதை உணர்ந்தே தன்னை ஜெமினி என பாகீரதியிடம் அறிமுகம் செய்துகொள்கிறான். உறங்காப்புலியின் பெயரை வாசுதேவனின் மூலமே பாகீரதி அறிந்துகொள்கிறாள். இறுதியில் ஜெமினியாகிய உறங்காப்புலியைத் தேடியே வாசுதேவனின் பயணமும் இருக்கிறது. தெக்கூவாக அறியப்பட்டவள் பேராபுடீமாகவும் பின்பு பினித்ரா தேவியாகவும் அழைக்கப்படுகிறார்கள். தெக்கூவிற்கும் பேராபுடீமாவிற்கும் பினித்ரா தேவிக்கும் இடையேயான பெயர் மாற்றங்களுக்குப் பின்னான அரசியல் பெயரிலிருக்கிறது. ஆம், ‘பெயர் ஒரு வித்தைக்காரனின் தொப்பி. அதிலிருந்து வெளிவரும் எதுவும் உண்மையில்லை. அவை ஏதேதோ எண்ணங்களின் நோக்கங்களின் ஆரூடங்களின் திட்டங்களின் சித்திரவதைகளின் உருவகங்கள். அது வெறும் ஒரு சொல். சீஸேமைத் திறக்க வைக்கும் ஒரு கடவுச் சொல்.’
காட்டின் நடுவே ஆண் ஒருவனும் இரண்டு பெண்களும் நின்று கொண்டிருப்பதைப் போன்ற சித்திரம்.
ஒரு பிரகாசமான மஞ்சள் நிற ஒளி வட்டமும் அதைச் சுற்றிலும் சில நீள்சதுர வடிவக் கட்டிடங்களும் அருகே ஒரு விலங்கின் நிழலுருவமும் வரையப்பட்டிருக்கும் சித்திரம்.
தூய வெண்ணிறப் பின்புலத்தில் தன் உடலைத் தரையை உந்தி மேலெழும் ஒரு நடன பாவத்தைப் போல அபிநயித்தும் விறைப்பாகவும் நிறுத்தியிருக்கும், சிவப்பு, கறுப்பு ஆகிய இரு வண்ணங்களால் மட்டுமே தீட்டப்பட்ட, ஓர் உயரமான இளம் பெண்ணின் உருவம்.
‘கள்ளம்’ நாவலில் சித்திரக் கலை குறித்த விரிவான விசாரணையை தஞ்சை பிரகாஷ் மேற்கொண்டிருப்பார். சி.மோகனின் ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ நாவல் ஒரு ஓவியனின் வாழ்வைப் பேசியதெனினும் சில நுட்பமான ஓவியம் குறித்த உரையாடல் இருந்த போதிலும் ஒரு போதாமை இருந்தது. ‘என் பெயர் சிவப்பு’ நாவலில் நுண்ணோவியங்கள் குறித்த மிகத் தீவிரமான உடையாடலை ஓரான் பாமுக் கையாண்டிருப்பார். ஜெமினி வரைந்த இம்மூன்று ஓவியங்கள் பாகீரதியின் பால்ய வயதில் வந்து சேர்கிறது. அவளோடு சேர்ந்து அவ்வோவியமும் வளர்கிறது. அவளது பருவங்களுக்கேற்பவும் யாரோடு உரையாடுகிறாள் என்பதைப் பொருத்தும் அவ்வோவியம் வெவ்வேறு பொருள் தருவதாக விவரிக்கப்பட்டிருக்கிறது. உறங்காப்புலியிடம் விவரிக்கும் போது அவளே அறிந்திராத ஒன்றை உணரந்துகொள்கிறாள். இம்மூன்று ஓவியங்களையும் ஜெமினி எவ்வாறு உருவாக்கியிருப்பார், அதன் பின்புலம் என்ன, இவ்வோவியங்கள் எதைக் குறிக்கின்றன என இந்நாவலில் ஓவியம் குறித்து பா.வெங்கடேசன் மேற்கொண்டிருக்கும் உரையாடல் ஒரு ஓவியனின் பார்வையிலும் நுகர்வோரின் பார்வையிலும் ஆழமாகவே அணுகப்பட்டிருக்கிறது.
உறவுகளுக்கிடையேயான சிக்கல்களை, தொடர்ந்து இலக்கியம் பேசிக் கொண்டிருந்த போதிலும் அதற்கு மூல காரணமாகயிருக்கும் சமூகத்தின் அமைப்பையும், கலாச்சாரம், பண்பாடு இத்யாதி காரணங்களையும் பிணைத்து புனையும் இலக்கியம் அரிதாகவே வாசிக்கக் கிடைக்கின்றது. தவிரவும் சமூக சிக்கல்களை, அரசியலை, சாதிய கட்டுமானங்களைப் பேசும் புதினங்கள் பாடப்புத்தகங்களைப் போல வறட்சியாகவும் அல்லது ஏதாவது ஒரு சார்பு நிலையைக் கையாண்டும் அல்லது சரி தவறு என்கிற முன்முடிவிற்கு இட்டுச் செல்வதாகவும் இருக்கின்றன. அந்த வகையில் பல்வேறு தளங்களில் மிக நீண்ட உரையாடலையும் விவாதங்களையும் நிகழ்த்தும் ‘பாகீரதியின் மதியம்’ முக்கியமான பிரதியாகின்றது.
பாகீரதியும் வாசுதேவனும் பிராமணர்கள். வாசுதேவனின் தந்தை ஹாலாஸ்யம் தீவிரமான பெரியாரிஸ்ட். வாசுதேவனோ குடுமி வளர்த்து வலம் வரும், தன்னை பிராமணனாக அடையாளப்படுத்துக்கொள்பவன். அரங்கநாதன் நம்பி செட்டியார் – காந்தியவாதி. அவர் தவறவிட்ட முன்ஜென்மக் காதலி, நாடார். உறங்காப்புலி, தேவர் சமூகத்தைச் சேர்ந்தவன் – பெரியார், திமுக தொண்டன். ஜெமினி, தலித். வேண்டியோ வேண்டாமலோ இத்தகைய அடையாளங்களைச் சுமந்துகொண்டு திரியும் கதாப்பாத்திரங்களுக்கிடையேயான காத்திரமான உரையாடல் வெகு இயல்பாக நிகழ்கிறது. முதல் அத்தியாயமே பெரியார் சிந்தனை மறுப்பாளனான வாசுதேவனுக்கும் பெரியார் திமுக தொண்டனான உறங்காப்புலிக்கும் இடையேயான விவாதத்தோடு தொடங்கி வாசுதேவனின் குடுமி அறுப்பில் முடிவடைகிறது. பெரியார் மணியம்மை திருமணத்தை முன்வைத்தே அவ்விவாதம் நடைபெறுகிறது. நாவலின் போக்கில் வாசுதேவனும் உறங்காப்புலியும் முரண்பட்ட கருத்தோடு உடன்படும்படியான சூழலுக்குள் இட்டுச்செல்லப்படுகிறார்கள்.
‘பாகீரதியின் மதியம்’ நாவலில் நிகழும் உரையாடல்கள் குறித்து ஆசையின் கட்டுரையிலிருந்து…
“இந்த நாவலில் திராவிட X பிராமணியம், விவசாயி X முதலாளி, சமவெளி (அனைத்து சாதிகளும் முதலாளித்துவமும் உள்ளடங்கியது) X பழங்குடி, பெண் X ஆண், சுற்றுச்சூழல், பழங்குடிதெய்வம் X பெருந்தெய்வமாக்கல் போன்றவற்றைப் பற்றிய ஆழமான உரையாடல்கள், விவாதங்கள் நடைபெறுகின்றன. இவையாவும் மந்திரம் போன்றதொரு கதைசொல்லலுக்குள் இழைந்து, இயைந்து பரவியிருப்பதுதான் மற்ற அரசியல் நாவல்களிலிருந்து இந்த நாவலைப் பிரித்துக்காட்டுகிறது. மாயாஜாலப் புனைவுக் கம்பளத்தில் அச்சிடப்பட்ட உருவங்களாக இந்த அரசியல் உரையாடல்கள் நாவலில் இடம்பெறுகின்றன. 20, 21-ம் நூற்றாண்டுகளில் உலக அளவிலும் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் தீவிரமாக நடைபெற்ற இந்த உரையாடல்களை நாவலும் அருமையாகப் பிரதிநிதித்துவம் செய்கிறது.”
இத்தகைய உரையாடல்கள், அரசியல், சாதிய கட்டுமானங்கள் குறித்த விவாதம், சமூக அவலத்தைச் சாடுதல் என இவையெல்லாம் துருத்தாமல் நாவலின் அடிநாதத்தோடு இசைந்து செல்வதே பா.வெங்கடேசனின் அசாத்திய புனைவாற்றலை எண்ணி பிரமிக்க வைக்கிறது.
காதல் ததும்பும் அதிஅற்புதமான உரையாடல்கள் இந்நாவலில் நிகழ்கின்றன. இது கதை கதை என கதைசொல்லிகளும் கதாபாத்திரங்களே வாசகர்களோடு அடிக்கடி குரல் கொடுத்தபடி இருந்தபோதிலும் உணர்ச்சி ததும்பும் சில உரையாடல்கள் மனதை உலுக்குகின்றன.
உறங்காப்புலியை விபின் பாஸ்வானாக சவிதாதேவியும், சவிதா தேவியை பாகீரதியாக (பிரமீளா என விழித்துக்கொண்டு) உறங்காப்புலியும் உருவகித்துக்கொண்டு நடைபெறும் உரையாடல் [பக்: 218].
பாகீரதி தன் மதியத் தூக்கத்தில் காணும் கனவில், தன் மனதிற்கினிய ஓவியர் ஜெமினியுடன் உரையாடுவதாக நினைத்து நிஜ மனிதரான உறங்காப்புலியுடன் பேசுகிறாள். பாகீரதியின் மேல் காதல்கொள்ளும் உறங்காப்புலி தன் காதலுக்காக ஜெமினியைச் சந்திக்க ஓசூர் செல்கிறான். பாகீரதியிடம் ஒரு முறை கூட உறங்காப்புலி பேசியது கிடையாது. பாகீரதி கனவில் நிகழ்த்திய ஒரே உரையாடல் தான். அதுவும் இப்படி ஒருவரிடம் பேசினோம் என்பதே பாகீரதிக்கு தெரியாது. தன் காதலிக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கும் உறங்காப்புலியைக் காணும் சவிதாதேவி, தான் மணமான பின்னும் தன்னைக் காதலித்துக்கொண்டிருந்த விபினின் நினைவுகளில் மூழ்குகிறாள். மணமான ஒருத்தியைத் தான் உறங்காப்புலி காதலிக்கிறான் என்பது சவிதாதேவிக்கு தெரியாது. தன் எதிரில் நிற்கும் உறங்காப்புலியை விபின் என்று சவிதாதேவி நினைத்துக்கொண்டும் பாகீரதியிடம் பேசுவதாக சவிதாதேவியிடம் உறங்காப்புலி பேசுவதாகவும் அமைந்திருக்கிறது இந்த உரையாடல்.
சவிதாதேவியின் மீதான விபினின் காதலைக் காண்கையில் மார்க்கேஸின் ‘லவ் இன் தி டைம் ஆஃப் காலரா’ நினைவிற்கு வந்தது. அதில் நாயகி தன் கணவனை இழந்த பின்பு நாயகனும் நாயகியும் சந்தித்து உறவாடுகிறார்கள். இங்கோ விபினும் சவிதாவும் இரு வேறு மூலையில் அமர்ந்துகொண்டு நினைவில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். விபினின் நினைவு மட்டும் சவிதாவிற்கு எஞ்சியிருக்கிறது.
இப்படிப்பட்ட கதாப்பாத்திரங்களை உருவாக்கி அவர்களுக்குள் இப்படி ஒரு விசித்திரமான உரையாடலை நிகழ்த்திப் பார்த்திருக்கும் பா.வெங்கடேசனின் கற்பனை அசாத்தியமானது.
பாகீரதி தனது ஜெமினியாகிய உறங்காப்புலியுடனான உறவு குறித்து தனது மனதோடு நிகழ்த்தும் உரையாடல் [பக்: 260].
உறங்காப்புலியுடனான தனது காதலை வாசுதேவனிடம் தெரிவித்தல் [பக்: 446].
வாசகனின் இதயத் துடிப்பின் வேகத்தை சோதித்துப் பார்க்கும் உரையாடல் இது! தனது காதலனைக் குறித்து கணவனிடம் தெரிவிக்க வேண்டும். சிலப்பதிகாரத்தை துணைக்கழைத்துக் கொண்டு உரையாடலைத் தொடங்குகிறாள் பாகீரதி. சிலப்பதிகாரத்தை முன் வைத்து ‘கடலுக்கு அப்பால்’ நாவலில் பா.சிங்காரம் நிகழ்த்தியிருக்கும் உரையாடலும் ஓர் அற்புதம். கண்ணகியைப் போல சிவகாமி. அவளை வணங்கலாமே ஒழிய பெண்டாள முடியாது. மாதவி தான் நமக்கானவள் என்பது அவ்வுரையாடலின் சாராம்சம். இங்கே ‘பாகீரதியின் மதியம்’ நாவலில், சிலப்பதிகாரம் மீதான விமர்சனமாக எழுகிறது.
வாசுதேவன் இந்த உரையாடலில் பேசுவதும், சிந்திப்பதும், பாகீரதி என்ன பேச வேண்டுமென எதிர்பார்ப்பதும், உரையாடலின் பின்பாக பாகீரதியை வன்புணர்வு கொள்வதும் என மிக மேம்போக்கான ஆண் மனதின் வெளிப்பாடாகவே இருக்கிறது. பாகீரதியின் உலகத்தை, காதலை அவனால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அல்லது புரிந்துகொள்ள விரும்பவில்லை.
கனவில் தொடங்கியதனால் தான் என்னவோ அவ்வுறவு நிஜத்தின் விதிக்களுக்குள் அகப்படவில்லை, என்ன செய்ய வாசு என்கிறாள். கணவன் இருக்க இன்னொருவனைத் தேடித் சென்று அன்பு செய்யும் பெண்ணைத்தான் வேசி என்று அகராதிகள் குறிக்கின்றன வாசு, களங்கமற்றுத் தன்மேல் பொழியும் அன்பை திருமணத் தகுதியை முன்னிறுத்தி நிராகரித்து அவமானப்படுத்தும் கடின மனதைக் கைக்கொள்ள முடியாமல் அலைக்கழியும் ஒரு பெண்ணைக் குறிக்க அவை ஒரு பெயரை இனிமேல் தான் கண்டுபிடிக்க வேண்டுமென்கிறாள் பாகீரதி!
கல்கத்தாவிலிருந்து தொலைபேசி வாயிலாக நடைபெறும் உறங்காப்புலிக்கும் பாகீரதிக்கும் இடையேயான உரையாடல் [பக்: 575].
பாகீரதி, ஒலிவாங்கியில் சத்தமாகப் பதிக்கும் முத்தம், அவளது பிரிவேக்கத்தின் உச்சபட்ச வெளிப்பாடு.
பாகீரதி – வாசுதேவன், பாகீரதி – உறங்காப்புலி, பாகீரதி – ஜெமினி, பாகீரதி – அரங்கநாதன் நம்பி, சிவகாசி நாடார் பெண் – அரங்கநாதன் நம்பி, சவிதாதேவி – ஜெமினி, சவிதாதேவி – விபின் பாஸ்வான், பிரமீளா – உறங்காப்புலி, மலர்விழி – X, சுருளிநாதன் – X.
இந்நாவலில் இடம்பெற்றிருக்கும் காதல் கதைகள் எல்லாமே விசித்திரமானது. சமூகம் அங்கீகரிக்க மறுக்கும் காதல்கள் இங்கே நிகழ்வதாலும் விசித்திரம் என்று குறிப்பிடத் தோன்றுகிறது. நேர்த்தியுடன் கோர்க்கப்பட்ட பூக்களாக விசித்திரமான பல காதல் கதைகள் கட்டுண்டிருக்கின்றன. மறைந்திருக்கும் தடித்த நாராக இவர்களுக்கிடையே நடக்கும் உரையாடல்களும் விவாதங்களும் இருக்கின்றன (இந்த உவமை ‘பாகீரதியின் மதியம்’ நாவலின் கட்டுமானத்தை பறைசாற்றுவதற்கு போதுமானதல்ல தான். மிகச் சுமாரனான உவமைக்கு மன்னிக்க!). அதனாலேயே ‘பாகீரதியின் மதியம்’, காதல் பிரதியாகவும் அரசியல் பிரதியாகவும் துப்பறியும் பிரதியாகவும் இன்னபிறவாகவும் வாசிக்கப்படுகிறது. நமக்கான பிரதியை உருவாக்கிக்கொள்வது வாசகனுக்கான சவால்.
O
பின்னால் நடக்கவிருக்கும் சம்பவத்தை முன்பே அடைப்புக்குறிக்குள் சொல்லிச் செல்வதான ஒரு யுக்தி இந்நாவலில் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு கதாப்பாத்திரம் அறிமுகம் ஆகும் முன்பே அதன் பெயர் குறிப்பிடப்படுகிறது. இந்த யுக்தி நாவலின் கச்சிதத்திற்கு ஓர் உதாரணம். இதன் சுகத்தை இரண்டாவது வாசிப்பிலேயே பூரணமாக உணர முடியும்.
இந்நாவலின் மிக முக்கியமான பகுதியான பேராபுடீமா குறித்து ஒரு தெளிவான சித்திரம் கிட்டவில்லை. யூகங்கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன. பேராபுடீமாவின் பூர்வ கதையில் அவளோ உறக்கமில்லாமல் அலைகிறாள். தோழி அநுபாவின் அறிவுரையின் பேரில் ஊருக்குள் புகுந்திருக்கும் புலியின் உடலில் புகுந்து மிக ஆழ்ந்த உறக்கம் கொள்கிறாள். பாகீரதியின் மதியத் தூக்கமே இத்தனை அலைக்கழிப்பிற்கும் காரணமாக அமைகிறது. பாகீரதி, தனது மதியத் தூக்கக் கனவினால் காதலில் விழுபவனுக்குப் பெயரோ ‘உறங்காப்புலி’. உறங்காப்புலி சன்னதம் வந்து ஆடுவதற்கு அநுபாவைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறான். பேராபுடீமாவின் காவல் தெய்வம் அநுபா. பாகீரதி எனும் பெயர் பாகீரதியாக அல்லாமல் நதியின் பெயராக இரண்டு இடங்களில் உச்சரிக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி அசை போடுவது ஒரு குதூகலமான அனுபவம். எனினும் இதன் சிக்கலான முடிச்சை அவிழ்ப்பது சிரமமானது தான்.
தவிரவும் நண்பர்கள், எழுத்தாளர்கள் உடனான இந்நாவல் குறித்த தொடர் உரையாடல்களில் எளிதில் விடை காண முடியாத பல்வேறு கேள்விகளை எதிர்கொள்ள முடிந்தது. இந்நாவலின் இரண்டு கதைசொல்லிகளில் அந்த முகம் அறியா கதைசொல்லி யார்? கதாப்பாத்திரங்களில் ஒருவராக இருப்பதற்கான சாத்தியங்களும் உண்டு தானே? அரங்கநாதன் நம்பியே முழுக்கதையும் இன்னொரு கதைசொல்லியிடம் சொல்வதாகக் கொண்டால் உறங்காப்புலி தன் ஆண்மையை இழப்பதாக சித்திரித்ததற்கு அரங்கநாதன் நம்பி தானே காரணமாக இருக்க முடியும்? இந்நாவலில் தனியாக பின்னிணைப்பு தந்ததற்கு காரணம் என்ன? பேராபுடீமாவிற்கும் பாகீரதிக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? பிரதான பாத்திரங்கள் எல்லோரும் மதுரையில் தொடங்கி கல்கத்தாவை நோக்கிச் செல்வதேன்? மீள்வாசிப்பில் தனது புத்துணர்வை இழக்காமல் இருப்பதற்கு இத்தகைய யூகங்களும் எளிதில் விடை காண முடியா கேள்விகளும் பூடகமான அம்சங்களும் கதைசொல்லும் யுக்தியும் காரணமாக அமைகின்றன.
ஓரான் பாமுக்கின் ‘தி ம்யூஸியம் ஆஃப் இன்னஸென்ஸ்’ நாவல் வெளியான பின்பாக நிஜமாகவே ஒரு ம்யூஸியம் உருவாக்கப்பட்டது அந்நாவலுக்கு கிடைத்த மிகச் சிறந்த ட்ரிப்யூட். அதே போல புகழ் பெற்ற பல்வேறு படைப்புகளை திரும்ப வேறு விதமாக எழுதிப் பார்த்தலும் நிகழ்ந்திருக்கின்றன. ‘பாகீரதியின் மதியம்’ நாவலில் பாகீரதி, வாசுதேவன், உறங்காப்புலி, ஹேமா ஆகியோர் என்ன ஆனார்கள் என்பது ஒரு மர்மமான முடிவு. அவர்கள் எங்கே சென்றிருப்பார்கள், என்ன நடந்திருக்குமென பல்வேறு விதமாக படைப்பாளிகள், வாசகர்கள் எழுதிப்பார்ப்பது இந்நாவலுக்குச் செய்யும் மிகச் சிறந்த ட்ரிப்யூட்டாக இருக்கும்.
(‘இடைவெளி’ இரண்டாவது இதழில் – ஜூலை, 2017 – வெளியான கட்டுரை)
(நன்றி: சாபக்காடு)