இஸ்லாமியச் சமூகத்தைப் பிற மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்நூல் அமைந்திருந்தாலும், அடிப்படையில் தோல்வி அடைந்த ஒரு காதலின் கதை இது. பள்ளிப் பருவம் முதல் முதிர்ச்சி அடையும் வரையுள்ள நாயகன் நாயகியின் பன்முக அனுபவங்களை அழகாக விவரித்துள்ளார் ஆசிரியர். மனவலியை ஏற்படுத்தும் உணர்வுபூர்வமான ஒரு படைப்பு இது. “வாழ்க்கையின் பரிதாபகரமான எதிர்வினைகள்தான் இதில் பிரதான அம்சம்” (ப.8) என்று இந்நூல் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் மலையாள எழுத்தாளர் எம்.பி.போள்.
மஜீத் என்ற கதாநாயகனான பஷீருக்கும், சுகறா என்ற தன்னுடைய இளம்பருவத்துத் தோழிக்கும் இடையேயான வெறுப்பு – தோழமை – காதல் – பிரிவு ஆகிய வாழ்க்கையின் பன்முகப் பரிமாணங்களை, மனத்தின் ஓரத்தில் எங்கோ உறங்கிக் கிடக்கும், என்றைக்கும் மறக்க முடியாத் தன்னுடைய முதல் காதலை, உணர்வுபூர்வமாக எழுத்துகளால் வடித்துக் காட்டியுள்ளார் பஷீர்.
செல்வச் செழிப்பில் வாழ்ந்த மஜீதின் குடும்பம் கால ஓட்டத்தில் வறுமைக்கு ஆட்படுகிறது. அக்குடும்பம் பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளையும், சமூகப் பிரச்சினைகளையும் எதிர்கொள்கிறது. இந்நிலையில் தந்தை மீது ஏற்பட்ட கோபத்தினால் தன்னுடைய வீட்டையும், தான் அதிகம் நேசித்த சுகறாவையும் விட்டு யாரிடமும் சொல்லாமல் ஒருநாள் இரவு அங்கிருந்து புறப்படும் மஜீத், காடு, மலை, குன்று, கடல், பாலைவனம் என்று எந்தக் குறிக்கோளும் இல்லாமல் நீண்ட பத்தாண்டுகள் பயணிக்கிறான்.
நீண்ட காலங்களுக்குப் பிறகு ஊருக்குத் திரும்பி வந்த மஜீத், தான் மனதளவில் நினைத்துக்கூட பார்த்திராத நிலைக்குத் தன்னுடைய குடும்பம் வறுமையில் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டு மனம் வருந்துகிறான். இத்தனை ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களில் இன்னொன்று, தான் அதிகம் நேசித்த சுகறாவின் விருப்பமில்லாத திருமணமும், அங்கு அவள் அனுபவித்த/அனுபவிக்கும் கொடுமைகளைப் பற்றி அவள் கூறியதும் ஆகும்; இவை, அவனை மனதளவில் தளர்த்தின. இவற்றிற்கு எல்லாம் ஒரே தீர்வு, தான் ஒரு நல்ல வேலைக்குச் சென்று வீட்டைக் காப்பாற்றுவதுடன், தன்னுடைய சகோதரிகளைத் திருமணம் செய்வித்த பின் சுகறாவையும் மணந்து கொள்வது என்ற முடிவோடு மீண்டும் வேலை தேடி வீட்டை விட்டுப் புறப்படுகிறான்.
பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடிப் பல ஆயிரம் மைல்களைக் கடந்து சென்று வேலை செய்யும் கதாநாயகன் (மஜீத்) விபத்திற்குள்ளாகித் தன்னுடைய ஒரு காலை இழக்கிறான். காலை இழந்ததும் தான் வேலை செய்து கொண்டிருந்த அந்நிறுவனமே அப்பணிக்குத் தகுதியற்றவன் என்று கூறி அவனை வெளியேற்றுகிறது. சோர்ந்து போகாத மஜீத், வேலை தேடிச் சென்று இறுதியில் ஓர் உணவகத்தில் எச்சில் பாத்திரங்களைக் கழுவுவதையும்; மஜீத் திரும்பி வருவான் என்று காத்திருந்த சுகறா இறுதியில் நோய்வாய்ப்பட்டு மருத்துவச் செலவுக்குப் பணமின்றி இறந்து போவதையும்; ‘குடியிருந்த வீட்டைக் கடன்காரர்கள் எடுத்துக் கொண்டார்கள், திருமண வயதைத் தாண்டி நிற்கும் உன்னுடைய இரு தங்கைகள், உடல்நிலை சரியில்லாத தந்தை, இவர்களைக் கொண்டு நான் எங்கே போவது?’ என்று கடிதம் எழுதும் தாய்க்குத் ‘தான் ஒரு காலை இழந்துள்ளேன்’ என்று கூடக் கூற முடியாமல் தவிக்கும் மஜீதின் மனநிலையையும் வாசிக்கும் போது வாசகனின் மனமும் சேர்ந்து உடைகிறது.
குடும்பத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் ஆண்களுக்கு மட்டுமே உரியதாகக் கருதுவது, வரதட்சணைக் கொடுமை, பணவசதி படைத்தவர்கள் மட்டுமே கல்வி கற்பதற்குத் தகுதி படைத்தவர்கள் என்று எண்ணுதல் ஆகிய அடக்குமுறைகள் அக்காலச் சமூகத்தில் இருந்ததை இந்நாவலின் வழிக் காணலாம். “ஒரு பெண் எப்படியிருந்தாலும் ஆணுக்குப் பயப்பட வேண்டியவள்தானே” என்ற எண்ணம் ஆண் குழந்தைகளின் மனத்தில் குழந்தைப் பருவத்திலேயே சமூகத்தால் வளர்த்தெடுக்கப்படுகிறது. பெண்ணின் உணர்வுகளுக்கோ, உரிமைகளுக்கோ மதிப்பளிக்காத முஸ்லிம் சமூகத்தை வெளிப்படுத்துகிறது இந்நாவல்.
ஏதாவது ஒரு சிறு பிரச்சினை ஏற்பட்டாலும் கூட உடனே தங்களை மாய்த்துக் கொள்ள நினைக்கும் இன்றைய நாயகன், நாயகியிடமிருந்து முற்றிலும் வேறுபட்டக் கண்ணோட்டத்தில், இறுதி வரை வாழ்க்கைக்காகப் போராடும் மனநிலையில் படைக்கப்பட்டிருக்கும் இக்கதாநாயகன், நாயகியின் வாழ்க்கை, யதார்த்தமான முறையில் அமைந்திருப்பதுதான் இதன் சிறப்பு அம்சமாகும். இவர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப வாழ்க்கையின் போக்கை அமைத்துக் கொள்ள இயலாதவர்கள். ஆனால் இறுதி வரை போராடுபவர்கள். இம்முக்கியமான மையக் கருத்தை நோக்கித்தான் இக்காதல் கதை நகர்கிறது.
“எழுத்தின் கூறுகளாக மட்டுமல்லாமல் வாழ்க்கையின் அம்சங்களாகத் திரண்டிருப்பதுதான் நாவலை இலக்கிய முக்கியத்துவம் கொண்டதாகவும் தொடர்ந்து வாசிக்கக் கூடியதாகவும் ஆக்குகிறது” (பின் அட்டை) என்ற சுகுமாரனின் கருத்தும் “சந்து மேனோனின் ‘சாரதா’வுக்குப் பிறகு இவ்வளவு மன வலியை ஏற்படுத்தும் உணர்வுபூர்வமான ஒரு படைப்பு நமது மொழியில் இதுவரை எழுதப்படவில்லை” என்ற மலையாள எழுத்தாளர் எம்.பி.போளின் கூற்றும் இந்த நாவலைப் பற்றிய சரியான மதிப்பீடுகளாகும்.