‘அழியும் பேருயிர் யானைகள்’ எனும் இந்நூலை இயற்கை வரலாறு அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. இந்நூலை ச.முகம்மது அலி, க.யோகானந்த் ஆகியோர் கூட்டாக எழுதியுள்ளனர். மிகப் பெரிய பாலூட்டி உயிரினமான யானைகள் அழிவது குறித்தும் காடுகள் அழிவது குறித்தும் மிகுந்த அக்கறையோடு எழுதப்பட்ட சூழலியல் நூலாகும் இது. காட்டுயிர், இயற்கை ஆகியன குறித்து பல ஆண்டுகளாக நூலாசிரியர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாகும் இந்நூல்.
இதுவரை இந்நூல் இரு பதிப்புகளைக் கண்டுள்ளது. முதல் பதிப்பு 2004ஆம் ஆண்டிலும்,இரண்டாம் பதிப்பு 2009ஆம் ஆண்டிலும் வெளிவந்துள்ளது. இவ்விரு பதிப்புகளுக்கும் இடையிலான அய்ந்து ஆண்டுகளில் தமிழகத்தில் 500 யானைகளும், இந்தியாவில் 5000 யானைகளும் அழிந்து போய்விட்டதாக ஆசிரியர்கள் வருத்தத்தோடு குறிப்பிடுகிறார்கள். தங்களுடைய முப்பது ஆண்டுக்கால உழைப்பின் இறுதியில் தங்களிடம் ‘அதிருப்தியே’ நிலவுவதாக சிஃபே அமைப்பின் இரான்சாண்ட் என்பவரிடம் தங்கள் மனக்குறையை வெளிப்படுத்துகின்றனர். இயற்கையையும் காட்டுயுரியையும் காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு இது.
அவர்கள் கூறுவது உண்மைதான். உலகமயம் தாராளமயம் தனியார்மயம் ஆகியவற்றின் விளைவாக இன்று காடுகளும் முதலாளிகளின் இலாப வேட்டைக்குப் பலியாகி உள்ளன. சுற்றுலாவை ஊக்குவிக்கின்றோம் என்ற பெயரில் காடுகளுக்குள் புகுந்து பிரமாண்டமான சுற்றுலாத் தங்குமிடங்களை அவர்கள் கட்டி வருகின்றனர். அப்பல்லோ மருத்துவமனை நிறுவனர் போத்திரெட்டியின் உறவினர்கள் மைசூர் ஊட்டி போன்ற இடங்களில் விடுமுறைநாள் ஓய்வில்லங்களை அமைத்துள்ளனர். ஆதிவாசிகளின் ஒப்புதலோடு இவற்றைக் கட்டியுள்ளனர் என்பதுதான் முரண்நகை.
ஆதிவாசி மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அம்மக்களை அவர்கள் வாழ்விடங்களிலிருந்து வஞ்சகமாக அப்புறப்படுத்துகின்றனர். அவர்களோடு சேர்ந்து காடுகளும் காணாமற் போய்விடுகின்றன. காடுகளோடு கானுயிர்களும் காணாமற் போய்விடுகின்றன. காட்டுக்கு உண்மையான சொந்தக்காரர்கள் பழங்குடி மக்களே! ஆனால் வனவிலங்குச் சட்டம் அவர்களின் தாயகமான வனத்திற்குள் செல்ல அவர்களுக்குத் தடை விதிக்கிறது. காட்டிற்கும் கானுயிரிகளுக்கும் அவர்களைத் தவிர வேறு யார் பாதுகாப்பாக இருக்க முடியும்?
காட்டுயிர் யானைகளுக்குத்தான் ஆபத்து என்றால் தமிழ்நாட்டிற்குள் கல்லில் உயிராய்க் காட்சி தரும் யானைகளுக்கும் ஆபத்து வந்துள்ளது. தமிழ்நாட்டுத் திருக்கோயில் யானைக் கற்சிலைகள் எல்லாம் காணாமற் போய்க் கொண்டுள்ளன. இன்னொரு புறம் கோயில் யானைகள் தெய்வங்களாகப் போற்றப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்படுவது ஆறுதல் தந்தாலும், மறுபுறம் அவற்றைப் பிச்சையெடுக்க வைப்பது கொடுமையினும் கொடுமை. இன்னொரு கொடுமையையும் இங்கே சொல்ல வேண்டும். மேலூரிலிருந்து மதுரைக்குள் நுழையும் பொழுது ஒத்தக்கடை என்னுமிடத்தில் யானை படுத்திருப்பதைப் போல உள்ள மலைத் தொடரைக் காணலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மகிழ வைக்கும் இந்த மலைத்தொடரையும் வேட்டு வைத்துத் தகர்க்க முயற்சி செய்த சதியை என்னவென்று அழைப்பது? யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி; யானை கல்லாயிருந்தாலும் ஆயிரம் பொன் என்பதே இன்றைய கல்குவாரி முதலாளிகளின் புதுமொழியாக உள்ளது.
பல்வேறு செய்திகளுக்கிடையில் ஆசிரியர்கள் சங்க இலக்கியங்களில் யானைகள் பற்றி வரும் குறிப்புகளையும் தருகிறார்கள். ”மலைக்கானகத்தில் பெரும் பாறைகளின் மேல் படர்ந்து வரும் யானைக்கொடி சில வேளைகளில் தூங்கும் யானைகளின் மேலும் படர்ந்து விடும்” என்று ஆசிரியர்கள் சுட்டும் பரணரின் குறுந்தொகைக் காட்சி நமக்குச் சிலிர்ப்பு ஏற்படுத்துகிறது. சூழலியல் மீது பெரும் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது இந்நூல். நூலாசிரியர்கள் இருவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இருவரும் பொள்ளாச்சியில் இயற்கை வரவாற்று அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.’ கானுயிர்’ என்னும் மாத இதழ் ஒன்றையும் இணைய இதழ் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். காட்டையும் கானுயிரையும் நேசிக்கக் கற்றுக் கொடுக்கும் இந்நூல் அனைவராலும் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று.
(நன்றி: கீற்று)