மலையாளத்தில் இ்.பி.ஸ்ரீகுமார் எழுதிய ‘மாறா முத்திர’ என்னும் நூலின் தமிழாக்கம் இது. “மனிதக் கழிவுகளுக்கு நறுமணம் அளிக்கும் மாத்திரைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ரோபாட்டின் உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வை முடித்துவிட்டு வெளியே வரும்போதுதான் மனுவைப் பார்த்தான்” என்னும் இந்நாவலின் முதல் சொற்றொடரே, இந்நாவல் முழுவதும் சொல்லப்பட்டிருக்கும் அறிவியல் வளர்ச்சியின் குரூரமான முகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. உலகம் அறிவியல் வளர்ச்சியின் உச்சக்கட்டத்தை அடையும்போது மனிதர்கள், விலங்குகளைவிடக் கீழ்த்தரமான நிலைக்குத் தள்ளப்படுவதையும், மனிதனின் அடிப்படைத் தேவைகள் வியாபாரப் பொருட்களாக ஆக்கப்படுவதையும் ஆசிரியர் 2050ஆம் ஆண்டு காலகட்டத்தில் நின்று பேசுகிறார்.
வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் வேதனைகளை மட்டுமே எதிர்கொள்கின்ற ‘மனு’வை முதன்மைக் கதாப்பாத்திரமாக வைத்தே இக்கதையை நகர்த்திச் செல்கிறார் நூலாசிரியர். ஆசிரியரான தன் தந்தை கற்பித்த நல்லொழுக்கங்களை மட்டுமே மனதிற் கொண்டு, வேலைவாய்ப்பைத் தேடி இச்சமூகத்தில் நுழைகின்ற மனுவை இச்சமூகச் சூழலும், அறிவியலின் வளர்ச்சியும் எவ்வாறு மாற்றிவிடுகின்றன என்பதே இந்நாவலின் மையக் கதையாகும். மனு என்னும் கதாப்பாத்திரத்தை முன்னிறுத்திய ஆசிரியர், உலக மயமாக்கலினால் இச்சமூகம் எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் பிரச்சினைகளைப் புனைவுகளின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார். “புனைவுகளின் பின், முகம்காட்டும் யதார்த்தத்தின் குரூரம் – சரியும் தவறும், நெறியும் நெறியின்மையும் பிரித்தறிய முடியாமல் கலந்துபோன பெரும் சமூக அவலம் - அறிவியலின் அதிவேகப் பாய்ச்சலுடன் கைகோத்து வரும் உலக மயமாக்கலின் ஆதிக்கம் குறித்து நம்மைத் தீவிரமாகச் சிந்திக்க வைக்கிறது” என்கிறார் மொழிபெயர்ப்பு ஆசிரியர்.
உலகமயமாக்கலும், அறிவியலும் மக்களுக்கு நன்மையை விளைவிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாகத் தோன்றினாலும், அவை எந்த அளவிற்கு நன்மையைக் கொடுக்கின்றனவோ அதேயளவில் / அதைவிட அதிகளவில் தீமையைத் தருகின்றன. இந்த அளவிற்கு இவற்றின் வளர்ச்சி அமையுமேயானால் 21 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இச்சமூகம் தன்னுடைய பண்பாட்டுக் கூறுகளை இழந்து இயந்திரத்தோடு இயந்திரமாக வாழவேண்டிய நிலை ஏற்படும் என்பதை அனுமானிக்க முடியும்.
வேலையின்மை என்பது உலகமயமாக்கலினால் விளைகின்ற மிகப்பெரிய கொடுமை. ஏதாவது தொழில் தொடங்கலாமே என்றெண்ணி வங்கிக் கடன் கேட்கக்செல்லும் மனுவிற்கு ‘வழிபாட்டு ஸ்தாபனம் துவங்கலாமே?’ என்று வங்கி அதிகாரி பதில் கூறுகிறார். வாழ்க்கையில் சிரிப்பைத் தொலைத்தவர்களுக்காகச் சிரிப்புப் பயிற்சிப் பட்டறை நடத்தப் படுகிறது. எந்த வகையான சிரிப்பைக் கற்றுக் கொள்ள வேண்டுமோ அதன் ஒரு வருடத்திற்கான முன்பணம் செலுத்திப் பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறுகிறார் ஹாஸ்யன். வேலையற்றவர்கள் புரட்சியில் ஈடுபடும்போது அவர்களை அடக்க அதிகாரப் பீடத்தில் இருப்பவர்கள் ரோபாட் போலீஸ் படையைப் பயன்படுத்துகிறார்கள். ‘மும்பை எம்.எஸ்.எம். மேரேஜ் ஸ்டாக் மார்க்கெட்டில் விலைபோகும் ஆண்களும் பெண்களும், ரோபாட்டுகளால் கொன்று குவிக்கப்படும் மக்களும், தற்கொலைகளுக்கான பயிற்சி வகுப்புகளும், தற்கொலை செய்பவர்களுக்கு உதவித்தொகையும்’ என்று இந்நாவல் முழுக்க நிறைந்து காணப்படுகின்றவை யாவும், யதார்த்தம் ஆக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகளைக் கொண்ட புனைவுகள்.
நிலத்தில் நடப்பதற்கு இடமின்றி மனிதர்கள் ஆகாயத்தில் தங்கள் நடைபாதைகளை அமைத்துக் கொள்வதையும், பறவைகள் உட்கார்ந்து ஓய்வெடுப்பதற்குக் கூட வழியில்லாமல் மனிதர்களுக்கு இடையே நெருக்கப்படுவதையும், பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடாது என்ற அரசின் சட்டத்தினால் காட்டிலுள்ள விலங்குகள் வீட்டு விலங்கு களாக மாறிப்போவதையும், பெண்களும், முதியவர்களும் அவற்றைத் தாலாட்டுப் பாடித் தூங்க வைப்பதையும், வேலைவாய்ப்பற்றவர்களைத் தவறான வழிக்குப் பயன்படுத்தி அவர்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் ‘அபயா’ என்ற அமைப்பையும் இங்கே கொண்டுவந்து அடுத்த தலைமுறையைக் குறித்த சிந்தனையை இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனிடம் எற்படுத்துகின்றார் ஆசிரியர்.
உலகம் எல்லா நிலைகளிலும் வியாபாரப் பண்டமாக்கப்படுகின்றது. நம்முடைய வாழ்விலும், நம்மைச் சுற்றி நடக்கக்கூடிய வாழ்விலும், நாம் காணும் வாழ்விலும், நாம் கேள்விப்படும் வாழ்விலும் இதுவே தலைதூக்கி நிற்கிறது. கடந்துபோன காலங்களைக் கண் முன்னிறுத்தி அளந்து பார்த்தால் அறிவியல் வளர்ச்சியின் இன்றைய நிலையையும், எதிர் காலத்தில் சந்திக்க நேரிடுகின்ற பிரச்சினைகளையும் ஆசிரியர் கற்பனையாகப் படைத்திருப்பினும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் இச்சமூகம் இவ்வாறு மாறுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் என்றே கூறமுடியும்.