இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை, மதக்கலவரம், காஷ்மீர் பிரச்சினை ஆகிய இவற்றைக் குறித்து இந்தியிலும், பஞ்சாபியிலும், உருதுவிலும் ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. சாதத் ஹசன் மண்டோ’வின் “டோபாக்டோ சிங்” மற்றும் இந்தசார் ஹுசைனின், “நீம் கா பேட்” என்ற உருதுச் சிறுகதைகள் உலகப் புகழ் பெற்றவை. ஆனால், குறிப்பாகத் தென்னிந்திய மொழிகளில், அதுவும் தமிழில் இந்தப் பிரச்சினைகள் பற்றி நூல்கள் வந்துள்ளனவா என இனிமேல்தான் கணக்கிடப்பட வேண்டும். ஈழத் தமிழ்ப் படைப்பாளர்கள் எழுதியவை தவிர, தமிழ்நாட்டுப் படைப்பாளர்கள் ஈழம் – ஈழப் போர் பற்றி எழுதிய நாவல்கள் உண்டா என்பது கேள்விக்குறியே. இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சினை பற்றிய தமிழ்ப் படைப்புகள் இல்லையென்றே கூறலாம். ஈழப் பிரச்சினையையொட்டி எஸ்.மகாதேவன் தம்பி மலையாளத்தில் எழுதிய நூலொன்று ‘மேலும் சில ரத்தக் குறிப்புகள்’ என்ற தலைப்பில் குளச்சல் மு.யூசுப்’பால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பிரச்சினையைப் பற்றிய இந்த நாவலையும் ‘ஹிமாலயன்’ என்ற புனைபெயரில் யூசுப் மொழிபெயர்த்துள்ளார்.
பி.பி.மேனோன் என்று அழைக்கப்படும் ஒற்றப்பாலம் பாலோத்து பிரபாகர மேனோன், தன்னுடைய 90ஆவது வயதில் தன் இளமைக் காலத்து இனிய நண்பர் பைத்துல்லா’வைக் காண்பதற்காகக் காஷ்மீரின் ஸோனா பகுதிக்குச் செல்கிறார்; மேனோன் தன்னுடன் தன் பேரன் ஹரியையும் அழைத்து வந்துள்ளார். அதிரடிப் படையில் டிஐஜி தகுதியில் பணியாற்றும் ஹரி, பயணத்தின் பாதுகாப்புக் கருதி, காவல்துறைக் கண்காணிப்பாளர் இர்பான் ஹபீபையும், கல்லூரிப் பேராசிரியரான முஸ்வியையும் உடனழைத்துக் கொண்டார். தன் தாத்தா மேனோனின் விருப்பத்தை நிறைவேற்ற ஹரி ஸோனா பகுதிக்குப் புறப்படுகிறார். மேனோன் இந்திய சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் காஷ்மீர் பகுதியில் நாற்பதாண்டுகளாக வாழ்ந்தவர். ஆங்கில அரசின் கீழ்ப் பணியாற்றினாலும் சுதந்திரப் போராட்ட வீரர்களால் ‘உள் போராளி’ என மதிக்கப்பட்டவர்; பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடிய பைத்துல்லா அவரது சீடர் அபுகாசிம் ஆகியோரின் நண்பராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர்தான் மேனோன். தன் நண்பர் பைத்துல்லாவின் அழைப்பின் பேரில், அவரை இறுதியாக ஒருமுறை காண ஜீப்பில் யாத்திரை மேற்கொள்ளும் மேனோனின் ‘பழைய நினைவுகள் இறந்த காலத்தில் பயணிக்கவும், பைத்துல்லாவைக் காணும் விழைவு நிகழ் காலத்தில் பயணிக்கவும்’ என்ற நிலையில் இந்த நாவல் ஒரு பயணத்தின் ஆவணம் போல அமைந்துள்ளது.
பைத்துல்லா, அபுகாசிம் மற்றும் ஷேக் அப்துல்லா முதலியோர் முன்வைத்த, காலனி ஆதிக்கத்திடமிருந்தான இந்திய விடுதலைக் கோரிக்கை 1947இல் முடிவுக்கு வந்தது; இந்த இந்திய ஆஸாதியின் சாட்சியாக, உள்போராளியாக விளங்கிய உயரதிகாரிதான் மேனோன். ஆனால், இந்தப் பயணத்தில் அவர் கேட்கும் “ஆஸாதி” குரல், பார்க்கும் சுவரொட்டிகள் அவரை அச்சுறுத்துகின்றன. மதம் கடந்த காஷ்மீர் மக்களின் ‘காஷ்மீரியத்’ என்ற பண்பாட்டு உணர்வும், எல்லை கடந்த பயங்கரவாதமும், ‘இந்தியாவிலிருந்து விடுதலை’ என்ற முழக்கமும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு மலர்களின் நாடு, இன்று துப்பாக்கிகளின் சீற்றமாக மாறியுள்ளது. எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கு இடையில், இறுதியில், மேனோன் – பைத்துல்லாவின் நட்புச் சங்கமம் சாத்தியமாகிறது. இதுவே இந்த நாவல்.
இடைவழியில், பயங்கரவாதிகளின் தாக்குதல் இருக்கலாம் என்ற அச்சச் சூழல் ஏற்படுத்தப்பட்டாலும், மேனோனின் பழைய நண்பர் அபுகாசிமின் மூன்று புதல்வர்களும் முன்னின்று வழிகாட்ட, அதிரடிப்படை டிஐஜி ஹரியின் துணிச்சல் மிக்க செயலால் ஸோனா சென்று சேர்கிறார்கள். இராணுவ உடையில் வந்திறங்கிய பயங்கரவாதிகள் பைத்துல்லாவையும் அவரது குடும்பத்தையும் கடத்திச் சென்று முஸாபரபாத்தில் சிறை வைக்கின்றனர். ஹரியின் குழு துணிகரமாகத் தாக்குதல் நடத்தி, பைத்துல்லாவை மீட்டு வருகிறார்கள்.
இந்த நாவல் அனைவரும் அறிந்த பல செய்திகளை அரசியல் கருத்துகளாக முன்வைக்கிறது: 1) எல்லை கடந்த பயங்கரவாதத்தால் தூண்டப்பட்டு அல்லது ஈர்க்கப்பட்டுதான் காஷ்மீர் இளைஞர்கள் பாகிஸ்தான் சென்று பயிற்சி பெற்று, பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக மீண்டும் காஷ்மீருக்குள் நுழைகிறார்கள். இவர்கள் நோக்கம் காஷ்மீரை மீண்டும் பாகிஸ்தானோடு சேர்ப்பது, 2) பாகிஸ்தானோடு சேர விரும்பாத ஆனால் அதே சமயம் இந்தியாவோடும் இருக்க இயலாத காஷ்மீர் மக்கள், இந்தியாவிலிருந்து ‘ஆஸாதி’ கேட்டுப் போராடுகிறார்கள், 3) பிரிட்டனிலிருந்து விடுதலை கேட்டுப் போராடிய தேச பக்தர்கள் – அவர்தம் வழித்தோன்றல்கள் ‘காஷ்மீரியத்’ என்ற பண்பாட்டு அடிப்படையில் மக்களை இணைத்துப் போராடுகிறார்கள். இவர்கள் வல்லமை குறைந்தவர்களாக இருந்தாலும் இந்தியாவோடு இருக்க விரும்பும் பெரும்பான்மையோரின் பிரதிநிதிகளாவர். – இப்படிப்பட்ட கருத்துகளில் எவையெவை உண்மை – எந்த அளவிற்கு உண்மை என்பதை ஆராய இந்த நூல் ஆராய்ச்சி ஏடு அல்ல; நாவல். இந்த நூலடைவின் நோக்கமும் அதுவல்ல.
நாவலில், கதை சொல்லும் போக்கில், எல்லை கடந்த பயங்கரவாதத்தின் – பாகிஸ்தானின் – கொடுமைகள் மட்டுமே தூக்கலாகச் சொல்லப்பட்டுள்ளன. இந்திய இராணுவத்தின் பங்கு, காஷ்மீர் பிரச்சினையில் இவர்களின் செயல்பாடுகள் பற்றிய விமர்சனம் மட்டுமல்ல – குறிப்புகள்கூட நாவலில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. தனி மனிதர் சிலரின் பராக்கிரமச் செயல்கள் (ஹரி, அபுகாசிம்’மின் மூன்று புதல்வர்கள்...) மட்டுமே நாவலாக விரிகிறது. இடையிடையே மேனோனின் பழைய வாழ்க்கையின் இனிய நினைவுகள் பளிச்சிட்டுக் காட்டப்பெற்றுள்ளன.
காஷ்மீர் அரசமைப்பில், காங்கிரஸ் செய்த குளறுபடிகள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை நீக்கி, பொம்மை அரசுகளை ஏற்படுத்தும் காங்கிரசின் அராஜக விதைகள் இன்று பயங்கரவாத விழுதுகளாய் விரிந்து பரந்துள்ளன என்ற குறிப்பு எங்குமே இல்லை. புதிய ‘ஆஸாதி’ மந்திரம் உண்மையா பொய்யா என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சிதான் மகாதேவன் தம்பியின் இந்த நாவல் என்கிறது முன்னுரைப் பகுதி. இந்த முயற்சியில் இவர் தோல்வி அடைந்துள்ளார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
திடீர்த் திருப்பங்கள், பழைய நினைவுகளின் மென்மை, பயங்கரவாத நிகழ்வு, பழைய நினைவின் நெகிழ்வு, இறுதியில் அதிரடித் தாக்குதலில் பைத்துல்லா விடுவிக்கப்பெறல் – என இந்தத் தன்மையில் நகரும் இந்த நாவலைத் தொலைக்காட்சித் தொடர்களை மனதில் வைத்து, மகாதேவன் தம்பி எழுதியிருப்பாரோ என்றுதான் இறுதியில் எண்ணத் தோன்றுகிறது.