இந்தியாவுக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. அது ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் சிந்தனைச் சுயஇன்பத் தருணங்களில் தெறிப்பதைப் போல் ஒளிபொருந்திய ஒன்றல்ல. சாதாரண மக்களின் வரலாறு அது; ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டவர்களின் கண்ணீரும் ரத்தமும் இந்தப் ”புண்ணிய பூமியில்” ஆறாய்ப் பாய்ந்த வரலாறு. இமயத்தின் சிகரங்களைக் காட்டிலும் உயர்ந்து நின்று கொண்டிருக்கும் அந்த வரலாற்றின் மாந்தர்கள் நம்மிடம் கேட்பதற்கு ஏராளமான கேள்விகளை வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள். இன்றும் துடித்துக் கொண்டிருக்கும் அம்மாந்தர்களின் இதயங்கள் எழுப்பும் துடியோசை நமத்துப் போன நமது மனசாட்சியை எழுப்பும் வலிமையைக் கொண்டிருக்கிறது.
அந்தப் பழைய வரலாற்றையும், அதன் மாந்தர்களையும் மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரு கட்டாயத்தினுள் நம்மையெல்லாம் குப்பைகளைப் போல் வாரித் தட்டியுள்ளனர் இன்றைக்கு அரசியல் அதிகாரத்தைக் கவ்விப் பிடித்துள்ள இந்துத்துவ ஆண்டைகள். இதோ, அந்த வரிசையில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரு முக்கியமான ஆளுமையைக் குறித்து எதிர் வெளியீட்டகம் ஒரு சிறு நூலை வெளிக் கொண்டு வந்துள்ளது.
ஆங்கிலத்தில் டி.எச்.பி செந்தாரசேரி அவர்களால் எழுதப்பட்ட ”அய்யங்காளி : தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்” என்கிற இச்சிறுநூலை மலையாளத்தில் கெ.ஆர். மாயா அவர்களும் தமிழில் மு.ந. புகழேந்தி அவர்களும் மொழி பெயர்த்துள்ளனர்.
அன்றைய கேரளத்தில் நிலவிய சாதிய கொடுங்கோன்மைகளைக் கண்டு ஆத்திரமுற்ற விவேகானந்தரே “மலபார் ஒரு பைத்தியக்கார வாழ்விடம்” என 1897-ம் ஆண்டு சென்னையில் நடந்த தனது சொற்பொழிவின் போது குறிப்பிட்டார். அப்படிப்பட்ட கேரளாவில் அதற்கும் சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வெங்கனூரில் அய்யன் எனும் தகப்பனுக்கும் மாலா எனும் தாயாருக்கும் பிறந்தவர் தான் அய்யங்காளி.
அன்றைய கேரளத்தில் சாதி ரீதியில் நொறுக்கப்பட்ட மக்கள் ”உயர்” சாதிக்காரர்களை விட்டு எத்தனை அடிகள் தூரம் நிற்க வேண்டும் என்பதற்கு தனி கணக்குகளே இருந்துள்ளன. நிலம் வைத்துக் கொள்ள தடை, மேலாடை உடுத்திக் கொள்ள தடை, மீசை வைத்துக் கொள்ள தடை, பொதுக்கிணற்றையும், பொது வழிகளையும் பயன்படுத்த தடை, கோவிலுக்குள் நுழையத் தடை, கல்வி கற்கத் தடை, புத்தாடைகள் உடுத்திக் கொள்ள தடை… என அந்த மக்கள் எதிர்கொண்ட தடைகளின் பட்டியல் மிக நீண்டது. தாங்கள் அணிந்துள்ள புத்தாடைகள் புதிதாய்த் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அம்மக்கள் அவற்றின் மீது அடுப்புக் கரியைத் தோய்த்துக் கொள்வது வழக்கம்.
அய்யங்காளி வில்லுவண்டி யாத்திரை சிலை
தான் பிறந்த சமூகச் சூழலை எதிர்த்து அய்யங்காளி நடத்திய போராட்டங்களில் கற்பனைக்கு அப்பாற்பட்ட வீரத்தையும் உறுதியையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்தப் போராட்டங்களையும் அவை நடந்த காலகட்டத்தையும் ஒரு பருந்துப் பார்வையில் அறிமுகம் செய்கிறார் நூலாசிரியர். மக்களின் உரிமைகளை மறுத்த பார்ப்பனியக் கொடுங்கோன்மையை வீழ்த்திய அய்யங்காளியின் போராட்டங்களில் இருந்து நமது சமகாலத்திய எதிரிகளை எப்படிக் கையாள்வது என்பதற்கு ஏராளமான பாடங்கள் உள்ளன.
கல்வி கற்பதற்கான உரிமையை நிலைநாட்ட, கல்விக் கூடங்களுக்குள் தலித் மக்களை அழைத்துச் செல்ல அய்யங்காளியும் அவரது தோழர்களும் நடத்திய போராட்டங்களும், அதற்கு எதிர்வினையாக பல பள்ளிக்கூடங்களைத் தீயிட்டுக் கொளுத்திய இடைநிலைச் சூத்திரர்களின் சாதி வெறியும் வார்த்தைகளாய் நம் கண் முன்னே விரியும் போது மனக் கண்ணின் முன் அரியலூர் அனிதாவின் முகம் தோன்றி மறைகிறது. நம்பூதிரிப் பார்ப்பனர்களால் வெறியூட்டப்பட்ட இடைநிலைச் சூத்திர சாதிவெறியர்களை அவர்களின் பொருளாதார ஆதிக்கத்தின் மீது அமிலத்தைக் கொட்டி அடக்குகிறார் அய்யங்காளி.
”எமது உரிமைகளை நசுக்கும் உமது வயல்களின் சேற்றில் கால் நனைக்க மாட்டோம்” என்கிற அய்யங்காளியின் போர் முழக்கத்தின் பின் தலித் மக்கள் அணி திரள்கின்றனர். காலங்காலமாய் தலித் மக்களிடம் இருந்து உழைப்பை இலவசமாய்த் திருடிக் கொழுத்துக் கிடந்த ஆதிக்க சாதியினரை அய்யங்காளியின் போராட்ட அறைகூவல் மிரளச் செய்தது. வெள்ளை அரசாங்கத்தின் காகிதச் சட்டங்கள் சாதிக்க முடியாததை, கிறிஸ்தவ மிசனரிகளால் சாதிக்க முடியாததை அய்யங்காளியின் தலைமையில் சுமார் ஓராண்டு காலம் நீடித்த தொழிலாளர் போராட்டம் சாதித்துக் கொடுத்தது.
நீதிமன்றங்களின் பீடங்களை “மேன்மக்களின்” புட்டங்களே ஆக்கிரமித்துக் கிடப்பதையும், தலித்துகளின் குரல்களுக்கு அங்கே இடமில்லாதிருப்பதையும் கண்டு ஆவேசமுற்ற அய்யங்காளி, மக்களைக் கொண்டு “சமூக நீதிமன்றங்களை” கட்டியமைக்கிறார். சட்டங்களும், நீதி நெறிகளும் என்னவாக இருந்தாலும் – ஒரு வேளை நியாயமாக இருந்தாலுமே கூட – அவற்றை வழங்கும் இடத்திலும் அமல்படுத்தும் இடத்திலும் எளிய மக்களின் நேரடிப் பங்கேற்பு இல்லையென்றால் மக்களுக்கான நீதி கிடைக்காது என்கிற உண்மையை இன்றைய ”நாகரீக” உலகின் மாந்தர்களுக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பாடமாக எடுத்துள்ளார் அய்யங்காளி.
பக்க வரம்புகளுக்கு உட்பட்டு அய்யங்காளியைக் குறித்த ஒரு துவக்க நிலை அறிமுகத்தை இந்நூல் ஏற்படுத்துகின்றது. தலித் மக்களின் மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட சாது ஜன பரிபால சங்கத்தின் செயல்பாடுகள், அவற்றினுள் உபசாதிகளுக்கிடையே நடந்த உட்பூசல்கள் குறித்து மேலும் வாசிக்க தூண்டும் வகையில் சுருக்கமாகவும் சாரமாகவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அய்யங்காளியின் போராட்டங்களை அடிப்படையாக வந்த இலக்கியங்கள் மற்றும் ரசிய புரட்சியின் தாக்கத்தில் புதிதாக உருவாகி வந்த இலக்கிய ஆளுமைகளின் பங்களிப்புகள் குறித்து இச்சிறு நூல் கோடிட்டுகாட்டுவதுடன் அவற்றைக் குறித்து மேலும் வாசிக்கும் ஆர்வத்தையும் தூண்டுகின்றது.
சாதிய இருள் சூழ்ந்த கொடூரக் கானகத்தில் சிங்கமாய்க் கர்ஜித்து மலையாய் உயர்ந்து நின்ற அய்யங்காளியைக் குறித்த ஒரு அறிமுகத்தைப் பெற்றுக் கொள்ள அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல்.
நூல்: "அய்யங்காளி: தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்"
ஆங்கில மூலம்: டி.எச்.பி செந்தாரசேரி
மலையாள மொழிபெயர்ப்பு : கெ.ஆர். மாயா
தமிழில் : மு.ந. புகழேந்தி.
பக்கங்கள்: 55
(நன்றி: வினவு)