ஆயிஷா” 20 பக்கங்களே கொண்ட ஒரு குறு நாவல், ஆனால் இதைப் படித்து முடிக்கும் போது நிச்சயம் உங்கள் மனதை ஒரு சோகம் கவ்வும்.
ஒரு அறிவியல் ஆசிரியை தனது அறிவியல் புத்தகத்துக்கு எழுதிய முன்னுரையாக இந்த ஆயிஷா குறுநாவல் உள்ளது.
துறுதுறு பத்தாம் வகுப்பு மாணவி ஆயிஷா. கேள்விகளால் ஆன ஆயிஷா. விடைகளை மட்டுமே எதிர்பார்க்கும் ஆசிரியர்களுக்கு கேள்விகளால் ஆன ஆயிஷா பிரச்சினை ஆகிறாள். இந்த கதை சொல்லும் ஆசிரியைக்கும் அப்படியே.
ஆனாலும் ஆயிஷா துரத்தித் துரத்திக் கேட்கும் கேள்விகளில் செக்குமாடாய் கல்வி கற்பிப்பதில் செத்துப் போயிருந்த ஆசிரியை முதல் முறையாய் ஆசிரியையாக பிறப்பெடுக்கிறார். தொடர்ந்து ஆயிஷா கேள்விகளால் ஆசிரியையோடு மிகப் பெரிய உறவுக் கோட்டையை எழுப்புகிறாள். அது அந்த ஆசிரியை புதிதாய் வாசிக்க, கற்றுக்கொள்ள, தேட உயிர்ப்புத் தருகிறது.
10 ம் வகுப்பு மாணவி ஆயிஷா 11 ஆம் வகுப்பு மாணவிக்கு கணக்கு சொல்லித்தரும் போது அவளின் அறிவு அங்கே கொண்டாடப்படுவதற்கு மாறாக தண்டிக்கப்படுகிறது. அறிவைக் கொலை செய்யப்படும்போது உண்டாகும் வலி, வேதனை, ரணம் இங்கே யாரால் புரிந்து கொள்ளப்படுகிறது.
சின்னச் சின்ன கேள்விகளால் ஆயிஷா தன் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்கிறாள். ஆனால் அதே அறிவியலே அவளை நம்மிடமிருந்து பிரித்தெடுக்கும் போது நம் மனதை மெல்லக் கவ்வும் வலியைத் தவிர்க்க முடியவில்லை.
கல்விமுறையில் மாற்றம் வேண்டும் என்று இப்போது சலனம் கேட்கும் காலம். ஆனால் இந்த 20 பக்கங்கள் கொண்ட குறுநாவல் எழுதப்பட்டது 1985ல். இப்போது வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனை, எட்டுக்கும் மேற்பட்ட மொழி பெயர்ப்பு என பல சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறாள் இந்த ஆயிஷா.
இந்த குறு நாவலை எழுதியவர் இரா.நடராசன். இவர் பள்ளி தலைமை ஆசிரியர், 50 க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர், சிறுவர் இலக்கியத்திற்கான சாகித்திய அகாடமி விருது பெற்றவர். இவர் இப்போதெல்லாம் இந்த ஆயிஷா நாவலின் பெயரால் "ஆயிஷா" நடராசன் என்றே அறியப்படுகிறார்.
ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நாவலைத் தான் எழுதியதாக ஆயிஷா நடராசன் குறிப்பிடுகிறார்.
திண்டிவனத்திற்கு அருகில் ஒரு கல்லூரி மாணவன் பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கத் தன் உடலையே பரிசோதனைச் சாலையாக மாற்றிக்கொண்டு மரணத்தைத் தழுவினான். இதுவே ஆயிஷா கதைக்கான அடிப்படை. “1985-ம் ஆண்டே 'ஆயிஷா’ எழுதப்பட்டுவிட்டது என்றால் நம்புவீர்களா? அனுப்பிய இடங்களில் எல்லாம் கதை திரும்பி வந்தது. 'ஆயிஷா’ சொல்லும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அப்போது நம் சமூகத்தில் இல்லை. குழந்தைகளுக்கு நம் கல்விமுறையில் அளிக்கப்படும் தண்டனைகளில் ஒரு தவறும் இல்லை என்றேதான் நினைத்துஇருந்தது சமூகம். 10 ஆண்டுகள் விடாமல் முயன்றேன். பின்னர், 1995-ல் 'கணையாழி’ குறுநாவல் போட்டியில் இரா.முருகன், சுஜாதா இருவரும் நடுவராக இருந்து 'ஆயிஷா’வைத் தேர்ந்தெடுத்தார்கள்.'' என்கிறார். கல்விக்கூட சிந்தனைகள், கல்வி முறையில் மாற்றங்கள் இதுகுறித்தெல்லாம் சமூகம் இப்போதுதான் பேசத்தொடங்கியிருக்கும் நிலையில் 1985ல் ஆயிஷா எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.
குழந்தைகளுக்காக ஆசிரியர்களும், பெற்றோர்களும் தவறாமல் வாசிக்க வேண்டிய புத்தகம்.