அதிகாரம்’ என்பது குறிப்பிட்ட எல்லைக்குள் செயல்படுத்தக்கூடிய சிறப்புரிமை ஆகும். இது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. தந்தை/தாய் தனது குடும்பத்தினர்மீதும், ஆசிரியர் தனது மாணவர்கள்மீதும், வேலைகொடுப்பவர் வேலை செய்பவர்கள் மீதும் அதிகாரத்தைப் பயன்படுத்த உரிமையிருக்கிறது. அதிகாரத்தை எந்த அளவுக்கு உபயோகிப்பது என்பதற்கான எல்லை தனிமனிதர் சார்ந்ததாகவோ அல்லது அமைப்பு சார்ந்ததாகவோ இருந்தாலும் அதற்கான எல்லை முறையாக வரையறுக்கப்படவில்லை என்பது தான் உண்மை.
ஆட்சியில் அல்லது முக்கியமான பொறுப்பில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களது சீருடையும், பதவியும் தரும் அதிகாரம்’ அவர்களைப் போதைக்கு உள்ளாக்கி அதன்மூலம் மற்றவர்களைப் பலவிதங்களில் சிரமப்படுத்தி அல்ப சந்தோஷத்தை அனுபவிக்க வைக்கிறது. அதிகாரத்துக்கு அடிமையான பல பேர்களை நாம் தினசரி வாழ்வில் பார்க்கிறோம். அதனால்தான் முதுமையிலும் பதவிக்காக பரிதவிக்கும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.
ஏழரைப்பங்காளி வகையறா, பொய்கைக்கரைப்பட்டி, கரும்பலகை என்கிற நாவல்கள் மூலமும் பாலைவனப் பூ, நிழலற்ற பெருவெளி, திப்புசுல்தான் போன்ற மொழிபெயர்ப்பு நூல்கள் மூலமும் வாசகர்களுக்கு அறிமுகமான எஸ். அர்ஷியாவின் புதிய நாவல் `அதிகாரம்’.
ஆரம்பம் முதல் இறுதி வரை தொய்வில்லாமல், படிப்பவர்களுக்கு அலுப்பு ஏற்படாதவகையில் மதுரை வட்டாரத் தமிழில், காக்கிச் சீருடைக்காரர்களின் அதிகார மமதையை அச்சமில்லாமல், அப்பட்டமாகச் சொல்லியிருப்பது நாவலின் முதல் வெற்றி. எந்தவொரு பிராந்தியத்திலும் அதை நிர்வகிப்பதற்கான அதிகபட்ச அதிகாரம் குவிந்திருக்கும் இடம் அங்குள்ள காவல் நிலையம். சமகால அரசியல் குறித்த நையாண்டியும் அங்கங்கே தெறி’ப்பதால் படிக்கும்போது தன்னையுமறியாமல் சிரிப்பு வருகிறது.
மரவேலை செய்யும் சங்கரநாதனின் மனைவி பவளம். அவள் ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாள். பவளம் சங்கரின் கூடப்பிறந்த அக்காவினுடைய மகள். திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. ரஞ்சனி இவர்களது ஐந்து வயது மகள். இவர்களோடு சங்கரின் அம்மாவும் புலிப்பாறைப்பட்டியில் வசித்து வருகிறார்.
வழக்கம் போல வேலைக்குச் சென்ற பவளம் ஒரு நாள் மாலை வீடு திரும்பவில்லை. முதல் இரண்டு நாட்கள் பல இடங்களில் அவளைத் தேடும் படலம் நடக்கிறது. கோடாங்கியிடம் குறி கேட்பது உட்பட. மூன்றாம் நாளும் அவள் குறித்துத் தகவல் எதுவும் தெரியாததால் சங்கரின் நண்பன் கொட்டாம்பட்டி சுந்தர் யோசனையின் பேரில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்படுகிறது.
“பவளத்தைத் தேடுவது குறித்து ஆளாளுக்குச் சொன்ன யோசனைகள் அழகர்மலை உயரத்துக்குக் குவிந்தன. எப்படித் தேட வேண்டும் என்ற நுட்பங்கள் விலையில்லாமல் வந்து விழுந்தன” என நாவலாசிரியர் குறிப்பிடுவதில் யதார்த்தம் தொணிக்கிறது.
இன்ஸ்பெக்டர் மணிமாறன் அய்யா’ ஆகிறார். கண்காணிப்பாளர் ஸ்டேஷனுக்கு திடீர் விசிட் வரும்போது அய்யா’ மிஸ்ஸிங்!. அங்கிருந்தவர்களிடம் ஸ்டேஷன் ஆபிசரை என்னை வந்துப் பாக்கச் சொல்லுங்க’ என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்படும் போது அய்யா’வின் பொலிரோ வந்து நிற்கிறது. அய்யா’வின் தாமதத்துக்கான காரணத்தைக் கேட்காமல், ஒரு உமன் மிஸ்ஸிங் கேஸ் இருக்காமே! அஞ்சு நாளா இன்னும் ஏன் எஃப்ஐஆர் போடாம வெச்சுருக்கீங்க? சிஎஸ்ஆரும் தரலையாமே! இதைக்கூட குடுக்காம அப்படியென்ன வேலை பாக்குறீங்க, ஸ்டேசன் ஆபிசர்?” என்றார். கடைசி சில வார்த்தைகளில் அழுத்தம் இருந்தது. அய்யா’விடமிருந்து பதில் எதுவும் இல்லை. இன்னும் ரெண்டு நாள்ல புல் டீடெய்ல்ஸோட ரிப்போர்ட்டும் வரணும். அந்தப் பொண்ண கோர்ட்ல ப்ரடியூஸ் பண்ணணும்!” என சொல்லி விட்டுப் புறப்பட்டு விடுகிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த `அய்யா’ தனது சகாக்களை முடுக்கி விடுகிறார். கொட்டாம்பட்டி சுந்தர் மூலம் அய்யா’ பவளம் குறித்து தகவல்களைச் சேகரிக்கச் சொல்ல, சுந்தரும் பவளம் வேலைபார்த்த நிறுவனத்தில் வேலைபார்க்கும் தனது உறவைச் சேர்ந்த பெண் மூலமாக சில செய்திகளைச் சேகரித்துக் கொடுக்க அதன் அடிப்படையில் அங்கு சில வருடங்களுக்கு முன்பு வேலை செய்து தற்சமயம் திருப்பூரில் ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்துவரும் மம்மதியாபுரம் முஜம்மின்னை, அவனது தாதா மூலம் விசாரணைக்கு உட்படுத்துகிறார்கள். அவன் அங்கு வேலை பார்த்த போது பவளத்தைப் பார்த்தது உண்மைதான் ஆனால் காதல், கத்திரிக்காய் எல்லாம் இல்லை. இதை அவன் பல முறை கூறியும் நம்பாத அய்யா’வும், அவரது சகபாடிகளும் முஜம்மினை அடித்துத் துவைக்க, அவன் துவண்டு விழுகிறான். அவன் உயிருக்கு எதுவும் ஆகி பிரச்சனை பெரிதாகி விடக்கூடாது என்பதால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறான். பலத்த உட்காயங்கள் ஏற்பட்டதால் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட, அவனது ஊர்க்காரர்களும், நண்பர்களும் நியாயம் கோரி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதற்கிடையில் தொழில்நுட்ப உதவியுடன் பவளம் பெங்களூரில் இருப்பது தெரியவர, அவளைக் கைது செய்து தமிழக போலீஸ் அழைத்து வருகிறது. அவள் எப்படி பெங்களூர் சென்றாள்; முஜம்மின்னுக்கும் அவளுக்குமான நட்பு எதுவரையில் இருந்தது என்பதெல்லாம் நாவல் தொட்டுச் செல்கிறது.
பவளத்தைக் கண்டுபிடித்தது, முஜம்மின் மரணம், அதனால் ஏற்பட்ட போராட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் எரிப்பு ஆகியவை குறித்த விசாரணை நடைபெறுகிறது. சமீபத்தில் அய்யா’வின் ஸ்டேஷனில் புதிதாகச் சேர்ந்த நேர்மையான எஸ்.ஐ திவ்யா, இந்த சம்பவம் தொடர்பாகத் தனக்குத் தெரிந்த விவரங்களைச் சொல்ல விரும்புகிறாள். தனது பணியில் இதுவும் ஒரு பகுதி என்று கருதுகிறாள் திவ்யா. காவல்துறையில் சேர்ந்த எட்டாண்டுகளில் முப்பத்திரண்டு முறை வேலைமாற்றத்துக்குள்ளான இன்னொரு நேர்மையான அதிகாரி கடம்பன். `நேர்மையான ஓர் ஆணை நிலைகுலையச் செய்ய அவன் மீது பாலியல் குற்றம் சாட்டினால் போதும். அதுதான் இங்கே நடக்கின்றது’ என்பதை அவர் அறிந்திருந்தார்.
காவல்துறையினரின் வேண்டுகோளுக்கு ஏற்ப’ பிரேதப் பரிசோதனை அறிக்கையை மாற்றி எழுதிய மருத்துவர்கள் குழு ஒரு பக்கம், காவல் நிலையத்தில் தனக்குக் கீழ் வேலை செய்யும், தன் சொல்படி கேட்காத, தனக்கு இணங்காத பெண் அதிகாரிகளை ஏதாவது ஒரு அத்துவானக் காட்டில் வேண்டுமென்றே டியூட்டிக்கு அனுப்ப, அடிப்படை வசதி கூட இல்லாத அந்த இடங்களில் அவர்கள் படும் வேதனையின் மூலம் ஆண் அதிகாரிகளின் வன்மத்தை ஆசிரியர் அழுத்தமாகக் கூறிச் செல்கிறார். உமன் மிஸ்ஸிங் கேஸ்’ சம்பந்தமாக தனது ஒத்துழைப்பை வழங்க முன்வந்த நேர்மையான மனிதரான தாதா கடைசியில் தனது பேரன் முஜம்மினைக் காவு கொடுக்க நேர்கிறது. இதைப் படிக்கும்போது நேர்மையே’ உன் விலை என்ன? எனக் கேட்கத் தோன்றுகிறது.
மதுரை மாவட்டம் என்றால் கிராணைட் இல்லாமல் இருக்குமா? சிஆர்பி நிறுவனத்தின் ஊடுருவல் அதிகார மட்டத்தில் எப்படியெல்லாம் வேலை செய்கிறது; அதை எதிர்த்துப் போராடும் சமூக ஆர்வலர்களின் கையறு நிலை போன்றவற்றை ‘நச்’சென்று படம்பிடித்துக் காட்டுவதோடு, பவளம் எழுதிய கவிதைகளைக் கதைப் போக்கிற்கு ஏற்ப இடைச்செருகியிருப்பது ஆசிரியரின் கவித்துவத்தையும் எடுத்துக் காட்டுகிறது.
ஆசிரியரின் ‘கரும்பலகை’ பள்ளி ஆசிரியர்களின் பணிமாற்றம் குறித்து அவர்கள் எதிர்கொள்ளும் வேதனைகளையும், பொய்கைக்கரைப்பட்டி’ விவசாய நிலத்தை எப்படி ரியல் எஸ்டேட் சுறாக்கள் விழுங்குகின்றன என்பதையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்கள் ஆகும்.
சமூகத்தில் நடக்கும் அக்கிரமங்களைக் கண்டு தனது கோபத்தையும், ஆதங்கத்தையும் அர்ஷியா தனது நாவல்களின்மூலம் வெளிப்படுத்திக் கொள்வதாகவே இதன் மூலம் நாம் அறியமுடிகிறது. ‘சரி, போலீஸ் வேலைக்குப் போறீங்க. சந்தோஷம். விரும்புறத செய்யணும். அது அதிகாரமிக்க ஒரு துறை. அதிகாரம்ங்கறது, மக்களுக்குப் பயன்படுறதா இருக்கணும். அதை மனசுல வெச்சுக்கிட்டு செயல்படுங்க!’ என்று திவ்யாவின் தோழி உமா சொல்வதாகச் சொல்வது சமூக அக்கறை கொண்ட ஆசிரியரின் குரலாகவே தொனிக்கிறது!
ஒரே ஒரு குறை, நாவலின் ஊடே சில இடங்களில் வரும் காவல்துறை சம்பந்தப்பட்ட சிஎஸ்ஆர், எஃப்ஐஆர், ஆர்டிஓ போன்ற வார்த்தைப் பிரயோகங்கள்தான். இதற்கான விரிவாக்கத்தைத் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
(நன்றி: புத்தகம் பேசுது)