புலிப்பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவன் சங்கர நாதன். தன் அக்கா மகள் பவளத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறான். மேலூர் ஆயத்த ஆடை கம்பெனிக்கு வேலைக்குச் சென்ற மனைவியை காணவில்லை என்று ஐந்துநாட்கள் ஊர் எல்லாம் தேடிக் களைத்து நண்பன் கொட்டாம்பட்டி சுந்தர் உதவியுடன் மேலூர் காவல்நிலையத்தில் புகார் தருகிறான். கதை இங்கே தொடங்குகிறது.
கதை தொடங்கியவுடன் கதை நம்முன் நேரில் நடக்கும் நிகழ்வைப் போன்றே இருக்கிறது. மதுரைத் தமிழை எழுத்தாகச் செதுக்கி இருக்கிறார் நாவலாசிரியர் எஸ். அர்ஷியா.
சங்கர நாதன் _ பவளம் வாழ்க்கைக் கதை, பவளம் ஏன் கணவனைவிட்டு ஓடிப் போகின்றாள் . யாரைத் தேடிச் சென்றாளோ அவன் ஏன் இவளை ஏற்றுக்கொள்ள வில்லை. அதன்பின் கணவன் ஊர்ச்செல்லா மல் பெங்களூர் செல்கிறாள்.
உமன் மிஸ்ஸிங் கேஸில் எந்தத் தடயமும் கிடைக்காமல் போலீஸ் திணறுகிறது.
காணாமல் போன பவளம் வீட்டில் கிடைத்த டைரியில் ஒரு ஆண்மகன் படம் வரையப்பட்டு இருக்கிறது. அதைமட்டும் வைத்து அவள் வேலை பார்க்கும் கம்பெனியில் நான்கு ஆண்டுக்கு முன் டிசைன் கட்டராக பணியாற்றிய முஜம்தீன் என கண்டுபிடித்து, அவன் ஊர் மம்மதியாபுரம் சென்று விசாரிக்க முஜம்தீன் தாத்தாவே திருப்பூரில் இருந்து வரவழைத்து முஜம்தீனை காவல்நிலையத்தில் ஒப்படைக்க, அவன் நான் அவளைக்கடத்தவில்லை என்று உண்மையை சொன்னாலும் காவல்துறை அனை நையப்புடைக்கின்றது.
முடிவில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மரணமடைகிறான்.
அவன் முஸ்லீம் என்பதால் அந்த அமைப்பு உரிமை நியாயம் கேட்டு போராட்டம், கலவரம் ஏற்பட்டு தமிழகம் முழுவதும் செய்தியாக டிவி பத்திரிக்கை என பரவுகிறது.
முடிவில் பவளம் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றம் முன் நிறுத்தப்படுகிறாள்.
கதை உமன் மிஸ்ஸிங் கேஸ் என ஆரம்பித்து நகர்ந்தாலும் கதை காவல்துறையின் அறிந்தும் அறியப்படாத அதிகாரத்தின் கதைகளை நமக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்கின்றது.
சாதிக்கவேண்டும் என்ற சிறுவயது முதலான கனவு நனவாகி உதவி ஆய்வாளராக பணியில் சேரும் திவ்யா.. பணியில் சேர்ந்த சில நாட்களில் கனவு சிதைக்கப்பட்டதை உணர்கிறாள். பணியில் ஏற்படும் சிரமங்கள் அவள் மூலமாக படிப்பவர்கள் அறிந்துகொள்ள முடிகிற சம்பவங்கள் கதையாக விவரித்து செல்கிறது.
பணியில் மட்டும்மல்லாது வீட்டிலும் மதம்மாறி காதல் திருமணத்திற்கு தடை என வேலையிலும் வீட்டிலுமுள்ள பிரச்சனைகளின் ஆழத்தை நமக்கு சுட்டிகாட்டுகிறார் ஆசிரியர்.
பெரிய அதிகாரத்தில் இருப்பவர்கள் தனக்கு கீழ் வேலைபார்க்கும் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகளை தருவார்கள். காவல் துறையோ மற்ற அதிகாரத்தைவிட சற்றே உயர்வானது என்பதாலும் சங்கம் வைக்க உரிமை இல்லாததாலும் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் துன்பம் அதிகம் என்பதை பெண் காவலர் பாத்திரம் மூலமாக பெண்களின் சங்கடங்களை நாம் அறியும்போது சற்றே திணறித்தான் போகின்றோம்.
காவல் ஆய்வாளர் மூலமே உலக சரக்கில் முதல்பத்து சிறந்த சரக்கை பட்டியல் படுத்தி குடிகாரர்களின் மனதை போதையேற்று கிறார், அர்ஷியா.
காவலர்களுக்கும் சிறப்பு பத்திரிக்கை நிருபர்களுக்குமான உறவுகள் ஓய்வுபெற்ற காவலர்கள் ஓய்வுபெற்றபின்பும் ஓய்ந்துபோகாமல் செயலாற்றி வருவதையும் கதைமூலம் அறியும்போது ஆச்சரியம் ஏற்படுகின்றது.
எப்போதும் நேர்மையான அதிகாரிகளாக இருந்தால் சஸ்பென்ட்., ஊர்மாற்றம், பணிஉயர்வு நிறுத்தம் உண்டு என்பதையும். அதேநேரம் பிரச்சனை என்றால் அங்கு விசாரணை அதிகாரியாக அல்லது காவல் அதிகாரியாக நேர்மையான அதிகாரிகளை நியமித்து எதிர்க்கட்சிகளையும் மக்களையும் பேசவிடாமல் செய்வது ஆளும் அரசுக்கு வாடிக்கை.
மேலூரில் காவல்நிலையத்தில் கலவரம் என்றவுடன் நேர்மையாளர் கடம்பன் ஆய்வாளராக நியமிக்கப்படுகிறார்.
பவளம் கணவனை பிரித்துசென்று நீதிமன்றத்தில் நிறுத்தியபின் பவளம் மீது கோபம் கொள்வதும் பின் பவளம்மீது பரிதாபப்படும் விதமாகவும் படிப்பவர்களுக்கு ஏற்படுத்தி இருப்பதும் கதைக்களத்தில் வலுவாக இருக்கிறது.
"வர்றான்கா இந்த காஜா மிசின் மாதிரி டக்டக்ன்னு என்னமோ செய்றான்கா. அப்புறம் அவன் தூங்குறான். நான் விடிய விடிய முழிச்சுக்கிட்டு கிடப்பேன். ஒருநாள் கூட சந்தோசமா புள்ளன்னு அவன் கேட்டதே இல்லேக்கா!'' என கண்ணீருடன் தன்னுடன் பணிபார்க்கும் பெண்ணிடம் கூறும்போது, பவளத்தின் வாழ்க்கையைப்போல் பல பெண்களின் உணர்வுகளையும் தொட்டுசெல்லும் விதமான எழுத்துநடை வசீகரிக்கின்றது.
மதுரைப் பேச்சை எழுத்தாக்கி ஓடவிடும் அசாத்தியம் அர்ஷியாவுக்கு மட்டுமே உண்டு.
பல கிளைகளாகக் கதை பரவி மரத்திற்கு அழகு சேர்ப்பதுபோல் எக்ஸ்பிரஸ் வேகத்தில் கதை நகர்கின்றது.
கோடங்கி கேட்கும் நிகழ்வாகட்டும், போனில் மட்டுமே பேசிக்கொள்ளும் திவ்யா_ ராபர்ட் ஹியூபர்ட் காதல் உரையாடல் ஆகட்டும் ரசிக்கும் படியாக இருக்கிறது.
முஜம்தின் மரணத்திற்கு தாத்தா நானே காரணமாயிட்டேனே என ஆஸ்பத்தரியில் கை உயர்த்தி அழும்போது படிப்பவர்கள் கலங்கிவிடுவர்.
மொத்தத்தில் வீட்டில், அலுவலகத்தில் என அதிகாரம் செய்யவே பிடிக்கும். அதுபோல் இந்த அதிகாரம் நாவலும் படிப்பவர்கள அனைவருக்கும் பிடிக்கும்.
(நன்றி: வேல்முருகன்)