இலக்கியம் என்றாலே அசாதாரண நாயகர்களின் கதை என்று இருந்து வந்த சூழலில், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழில் உருவான சிறுகதை வடிவம் பெரும்பாலும் சாதாரண மனிதர்களின் வாழ்வியலை கூறுவதாக அமைந்தது. சாதாரண மனிதன் தன் அன்றாட வாழ்வின் ஓட்டங்களுக்கும், துயரங்களுக்கும் இடையே ஏதோ ஒரு கணத்தில் ஒரு சிறு செயலின் மூலம் மாமனிதனாவதை சொல்லும் தற்கால இலக்கிய படைப்புலகின் முன்னோடி எழுத்தாளர்களில் திரு. அசோகமித்ரனும் ஒருவர்.
அசோகமித்ரன் அவர்களின் கதைகள் பெரும்பாலும் செகந்திராபாத் மற்றும் சென்னை என இவ்விரு பெருநகரங்களை சுற்றியே அமைந்திருக்கிறது. பெருநகரங்களின் மனித கட்டமைப்பின் பல்வேறு அடுக்குகளில் இருக்கும் மக்களையும் பாரபட்சமின்றி கதாபாத்திரங்கள் ஆக்கியிருக்கிறார். மகிழ்ச்சியும் துக்கமும் அனைத்து தரப்பு மனிதர்களுக்கும் பொதுவானது என்பதை அவரவர் இடங்களிலிருந்து மிக இயல்பாகவும் ஆழமாகவும் உணர்த்துகிறார்.
பெருநகரங்களுக்கே உரிய பெரியப்பெரிய கட்டிடங்களும், நெருக்கமான தெருக்களும், பலவிதமான மனிதர்களுக்கும் இடையே வளர்ந்த ஒருவர் தன் சாயலை, தனது சமூகப்பிரச்சினைகளை அசோகமித்ரன் அவர்களது கதைகளில் காணமுடியும்.
அசோகமித்ரன் அவர்களின் எழுத்துநடையை ஒரு தெளிந்த நீரோடை என சொல்லலாம் அதே சமயம் அவர் வார்த்தைகளில் மிகுந்த சிக்கனக்காரராகவும் இருக்கிறார். மிகைப்படுத்தப்பட்ட அழுகுணர்ச்சியை, வர்ணனைகளை அவர் கதைக்கு தேவையற்ற ஆடம்பரமாக கருதியிருக்கக்கூடும். சிறுகதைகளுக்கான விதிகளுக்கெல்லாம் தன்னை உட்படுத்திக் கொண்டவர் அல்ல.
அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்கான பொருளும், சமூகத்தின் மீதான அவரது நுணுக்கமான பார்வையும் பிரமிக்க வைக்கிறது. உதாரணமாக புத்தகத்தில் மயிலிறகு வளர்ப்பது பற்றிய கதையில் சிரித்து பேசும் வெகுளியான சிறுமியை இந்த சமூகம் வேறுவிதமாக பார்க்கும்போது அந்த சிறுமிக்கு ஏற்படும் வருத்தங்களையும், எல்லோருக்கும் போல் அவளுக்குள் இருக்கும் கனவுகளையும், அவளின் அன்பையும் அந்த சிறுமியின் இடத்தில் இருந்து பேசுகிறார். கொடுத்த கடனுக்கு பதிலாக தங்கள் வீட்டுக்கு வரும் கோணல் கொம்புடைய எருமை மாடு ஒரு கட்டத்தில் செல்லப் பிராணி ஆகிவிடுவதும் அதன் மறைவு தரும் துக்கத்தையும் கூறும் சிறுகதையில் அதை வளர்க்கும் சிறுவனின் மனதை மிக ஆழமாக பதிவு செய்கின்றார்.
அசோகமித்ரன் அவர்கள் மனதிற்கு வெளியில் நிகழும் வாழ்க்கையை பற்றி சொல்லியே மனதுக்குள் நிகழும் மாற்றங்களை உணர்த்தக்கூடியவர். அசோகமித்ரன் மனிதர்களின் துயரத்தையே தொடர்ந்து எழுதியிருக்கிறார். ஆனாலும் அவரின் எழுத்தில் வன்முறை கிடையாது. அவரின் கதை மனிதர்கள் அதிர்ந்து பேசுபவர்கள் அல்ல.
ஆண்களின் அகவுலகை பேசும் “இந்த வருடமும்” என்று ஒரு சிறுகதை. தனது மாத சம்பள வேலையை இழந்த ஒருவர் தபால் நிலையத்தில் எழுதப்படிக்க தெரியாதவர்களுக்கு கடிதம் எழுதிக்கொடுத்து சம்பாதித்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு காரணத்தினால் தீபாவளி கொண்டாட முடியாமல் போகும் அவரது குடும்பத்தினருக்கு இந்த வருடமும் புதுத்துணியும் பட்டாசும் வாங்க காசு இல்லாத சூழ்நிலையில் ஒரு வயதான பெண் தன் மகனுக்கு காசோலை அனுப்பச் சொல்லி பணத்தை கொடுத்துவிட்டு செல்கிறார். நீண்ட மன போராட்டத்திற்குபின் இவர் அந்த தொகையில் பாதியை தன் குழந்தைகளுக்காக திருடிவிடுகிறார். அன்று மாலை வீட்டுக்கு சென்றால் அவரது மாமியார் இறந்திவிட்டதாக செய்தி வருகிறது. ஆக ’இந்த வருடமும்’ அவர்களுக்கு தீபாவளி இல்லை.
திடீரென்று வேலையை இழக்கும் மாத சம்பளக்காரனின் மன உளைச்சல்கள், யாரிடமும் கையேந்த முடியாத கௌரவம், வறுமையை புரிந்துகொண்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கும் குழந்தைகளையும் மனைவியையும் எதிர்கொள்ள முடியாத தாழ்வுணர்வு, முதல்முறை திருடும்போது ஏற்படும் தவிப்பு, தனக்குத்தானே கற்பித்துக்கொள்ளும் நியாயம், என தன் குழந்தைகளுக்கு பட்டாசு வாங்க பத்து ரூபாய் பணம் திருடும் ஒரு நடுத்தர வயது ஆணின் அக உலகை நான்கு பக்கக் கதையில் கூறிவிடுகிறார்.
இதில் குறிப்பிடதக்க விசயம் கதையின் முடிவுதான். “பாட்டி செத்துட்டாளாம்” எனும் செய்தியோடு கதையை முடித்துவிடுகிறார். மேற்கொண்டு அவனது மனநிலை என்னவாக இருந்தது என்ற விளக்கமில்லை. அங்கே அது தேவையுமில்லை. ஏற்கனவே அவனது துயரத்துடனும் குற்றவுணர்வுடனும் சேர்ந்தே பயணிக்கும் நாம் ஒரு கட்டத்தில் அந்த கதாபாத்திரமாகவே மாறி தீபாவளி இல்லாத துக்கத்தை முழுவதுமாக அனுபவிக்க ஆரம்பித்துவிடுகிறோம்.
இந்த கதையில் அவன் திருடுவதாக குறிப்பிடும் தொகை பத்து ரூபாய். இதை அவர் 1986ல் எழுதியிருக்கிறார். ஒரு பத்து ரூபாய் திருடும் நடுத்தர வர்க்கத்து ஆணின் மன உளைச்சலையும், நாட்டின் இன்றைய நிலைமையையும் பார்க்கும்போது இவ்வளவு ஆண்டுகளில் மனிதர்களிடம் இருந்து நேர்மை எங்கோ விலகிப்போயிருக்கிறது என்பது வருத்தமாக இருக்கிறது.
அசோகமித்ரன் அவர்கள் தன்னை ஒரு பெண்ணிய எழுத்தாளர் என்றோ, பெண்ணிய போராளி என்றோ அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. ஆனால் பெண்களின் உலகம் குறித்த அவரின் பார்வை விரிவானது. அசோகமித்ரன் தனது குழந்தை பருவ கதைகள் முழுவதிலும் அவர் வீட்டில் பெண்களுடன் இருப்பதாகவே சித்தரிக்கிறார். அதன் நீட்சியே பெண்களின் அகவுலகம் பற்றிய மிக நுணுக்கமான அவரது கருத்துக்களின் அடித்தளமாக இருக்கலாம்.
“சம்மதம்”(1986) என்றொரு கதை. ஒரு மதிய நேர வெயிலில் மல்லிகா மூடியிருக்கும் பால் டிப்போ ஒன்றின் முன் நின்றுக்கொண்டிருக்கிறாள். அந்த தெருவில் அவளை கடப்போர் திரும்பிப் பார்த்துக்கொண்டே செல்கின்றனர். எருமை மாடுகள் வந்து தன்னிச்சையாக அவள் நிற்கும் கடையின் அருகில் நிற்கின்றன. சிறிது நேரத்தில் அந்த டிப்பொ பையன் வந்து கடை திறந்து அவளை உள்ளே வந்து அமரச்சொல்கிறான். அவள் தயக்கத்துடன் வெளியே நிற்கிறாள்.
அங்கே மாட்டை கறப்பதற்கு ஓட்டி வந்தவர்கள் அனைவருக்கும் மல்லிகாவை தெரியும். ஆனால் எல்லோரும் வெறும் புன்னகையுடன் கடந்துவிடுகின்றனர். அறிமுகமில்லாதவர்கள் அவளையே உற்றுப்பார்க்கின்றனர். அவள் எங்கோ பார்ப்பது போல் நிற்கிறாள்.
இப்போது மல்லிகா அந்த பையனிடம் அவர் “இன்றாவது வருவாரா” என கேட்கிறாள். “ஒருவேளை வரலாம். வராமலும் போகலாம். அவரது மாட்டை வேலை ஆள் கறப்பதற்கு கொண்டு வருகிறான்” என்று சொல்கிறான். மறுபடியும் சிறிது நேரம் காத்திருக்கிறாள். கால்கள் வலிக்கிறது. வெயில் அதிகமாக இருக்கிறது.
பால் வாங்க டிப்போவில் சேர்ந்த கூட்டம் கலைய, டிப்போ பையன் கடையை அடைக்க ஆரம்பிக்கிறான். இப்போது அவளை கவனித்த அவன், “இன்னும் காத்திருக்கீங்களா?” என்று கேட்கிறான். அவனிடம் இவள் ஒரு உதவி கேட்கிறாள். “ஒரு 500 ரூபாய் பணம் வேண்டும். அவருக்கு தர வேண்டியதிலிருந்து கழித்துக் கொள்ளுங்கள்” என்கிறாள். அவன் சற்று கோபமாக ”அது முடியாது” என்கிறான். பிறகு அவனே வருத்தப்பட்டு “அவரை கேட்காமல் செய்யமுடியாது. வேண்டுமென்றால் புதியதாக வேறு வக்கில் பார்க்கலாம்” என்று சமாதானமாக பேசுகிறான்.
அவள் “இன்னொருமுறை கோர்ட்டுக்கு அலையமுடியாது. வேண்டாம்” என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள். அவன் தன்னால் “50 ரூபாய் தர முடியும் ஆனால் திருப்பி கொடுக்கவேண்டும்” என்கிறான். அவள் தன்னுடைய வேலையை அவர் சொன்னதால் விட்டுவிட்டதும், தற்போது சேல்ஸ்கேர்ள் ஆக கக்ஷ்டப்படுவதையும் சொல்கிறாள்.
“அநேகமாக நாளைக்கு அவர் வரலாம். வந்து பாருங்க” என்கிறான். மேலும் ”இப்போது பணம் வேண்டுமா?” என்கிறான். சிறிது யோசித்துவிட்டு அவள் “சரி கொடுங்கள்” என்கிறாள்.
அவன் தன்னிடம் இருக்கும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நோட்டுக்களை எண்ண ஆரம்பிக்க அவள் “நடுத்தெருவில் வேண்டாமே” என்கிறாள். அவன் மன்னிப்பு கேட்டுவிட்டு கடையின் ஓரமாக செல்கிறான்.
வெறும் அரை மணி நேர காட்சிதான் கதை. கதையில் எந்த இடத்திலும் அறிமுகங்களோ, அவள் வாழ்க்கை இப்படி ஆனதற்கான விளக்கமோ இல்லை. கணவனிடமிருந்து சட்டப்படி பிரிந்து வாழும் பெண்ணை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை அந்த சிறிது நேர காட்சியில் உணர்த்திவிடுகிறார். அங்கு வரும் மக்களின் மன ஓட்டங்களை அவர் விவரிப்பதில்லை. திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் தங்கள் குடும்பத்தினருக்காக வேலையை விடுகின்றனர். அதே பெண்கள் அந்த குடும்பத்தைவிட்டு பிரிந்துவிட்டால் திரும்பவும் வருமானதிற்காக கிடைக்கும் தற்காலிக வேலைகளில் இருக்கும் சிக்கல்களையும் இந்த சிறுகதையில் குறிப்பிடுகின்றார்.
நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் கணவனிடமிருந்து பணம் வாங்க முடியாத அவளின் துயரம் இன்றும் அதிகம் பெண்களுக்கு இருக்கின்றது. நீதிமன்றம் வரை சென்றவள், தனித்து வாழ்பவள், சேல்ஸ்கேர்ளாக வேலை பார்த்தவள் என்று ஒரு பக்கம் துணிச்சலான பெண்ணாக இருந்தாலும் நடுத்தெருவில் ஒரு ஆணிடமிருந்து பணத்தை வாங்குவதை அவள் அவமானமாக நினைக்கும்படிதான் இந்த சமூகம் இருக்கிறது என்பதையும் கடைசி வரியில் உணர்த்துகிறார். இந்த கதையை படித்துமுடிக்கும்போது மல்லிகா நின்றிருந்த தெருவின் சூட்டையும், அவளின் இயலாமையையும் நாம் மனதால் உணரமுடியும்.
இந்த வாழ்வு ஏற்கனவே தன் போக்கில் நிறைய வலியை தந்துக்கொண்டே இருக்கிறது. அவற்றை கடந்து நாம் தொடர்ந்து பயணிக்க தேவையானதெல்லாம் அன்பும், கருணையும், நம்பிக்கையுமே என்பதே அவர் கதைகள்மூலம் வாசகர்களாகிய நாம் அடைவது.
(நன்றி: மு. வித்யா)