இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பல சம்பவங்கள் ஆரிய ஆதிக்கத்தை நிலை நிறுத்தவே பயன்பட்டுள்ளது.
திலகர் தொடங்கி பாரதி வரை அனைவரும் ஆங்கிலேயர் ஏன் இந்தியாவை விட்டுப் போக வேண்டும் என நினைத்தார்கள் என்று வரலாற்றை புரட்டிப் பார்ப்போமானால், அதற்குப் பின்பு ஒரு பார்ப்பன ஆதிக்க அரசியல் ஒழிந்திருக்கும். பொதுவாக பார்ப்பனர்கள் தங்களுக்கு நேர்ந்த பாதிப்பை சமூக பாதிப்பாக மாற்றுவதில் கெட்டிக்காரர்கள்.
இந்தியாவின் பெரும்கேடானது சாதியச் சமூக அமைப்பாகும். அந்தச் சாதியை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுவதே சுதந்திரப் போராட்டம் என சாயம் பூசப்பட்டது. அப்படிப் பூசப்பட்ட புனைவே வீர? வாஞ்சி நாதனின் ஆஷ் படுகொலை.
ஆஷ் படுகொலைக்குக் பின்னால் உள்ள அரசியலை, புதுக்கோட்டையைச் சார்ந்த தோழர் மருத்துவர் ஜெயராமன் அவர்கள் பல்வேறு ஆதாங்களைத் திரட்டி வாஞ்சிநாதன் மீது கட்டப்பட்டுள்ள பிம்பங்களை உடைக்கிறார். ‘ஆஷ் படுகொலை புனைவும் வரலாறும்’ என்ற நூலின் மூலம் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் இன்னொரு பக்கத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார். இந்த நூலை காட்டாறு வாசகர் களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமைப் படுகிறோம்.
கலெக்டர் ஆஷ் படுகொலைக்குப் பின்பு ரயில் பெட்டியில் பெண்களின் கழிவறையில் தன்னைத் தானே கூட்டுக்கொண்ட வாஞ்சிநாதனின் சட்டை பையிலிருந்து கைப்பற்றப் பட்ட கடிதத்தில் - தான் எதற்காக கலெக்டர் ஆஷ் அவர்களைக் கொலை செய்தேன் என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளான். ஆனால், அன்று முதல் இன்று வரை நமது வரலாற்று? அறிஞர்களில் பல பேருக்கு ஏன் குழப்பம் ஏற்படுகின்றது என்று புரியவில்லை. பொதுவாக தேசியம் என்ற கருத்து மூளைக்குள் புகுந்து விட்டாலே உண்மையை மறைத்து கற்பிதங்களைக் கட்டமைக்க வேண்டியவர்களாகிவிடுகின்றனர்.
“ஆங்கில சத்ருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதான தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகின்றார்கள்“.
“எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குருகேவிந்து, அர்ஜீனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில்”
(இந் நூலில் 31ம்பக்கம்)
மேலே கூறப்பட்டுள்ள வரிகள் கலெக்டர் ஆஷ் அவர்களைக் கொலை செய்வதற்கான காரணங் களை எழுதியுள்ள வாஞ்சி அய்யரின் கடிதத்தின் சில வரிகள். அந்தக் கடிதத்தில் மிகத் தெளிவாக எழுதிவிட்டான். “அழியாத ஸனாதான தர்மத்தை” என, இதற்கு மேல் இங்கு ஆராய்ச்சி செய்வதற்கு ஒன்றுமில்லை. வாஞ்சியின் கோபம் இந்தியாவைச் சுரண்டுகின்றார்கள் என்று வரவில்லை. மாறாக தங்களின் ஆரிய ஆதிக்கத்தை அழிக்கின்றார்கள் என்றுதான் வந்துள்ளது.
ஆனால் இவ்வளவு புரியும்படி கடிதம் எழுதி வைத்திருந்தாலும் நமது இடதுசாரித் தோழர் களுக்கு இன்றுவரை வாஞ்சியின் மீதான பாசம் குறைவதில்லை. மேலும் இராமன், கிருஷ்னன், சிவாஜி, அர்ஜீனன் போன்றோர்கள் எந்த தர்மத்தைச் செழிக்க வைக்க ஆட்சி செய்தார்கள் என்பதும் நமக்குத் தெரியும். அவர்கள் நான்கு வர்ணங்களைப் பாதுகாக்கும் ஆட்சிதான் நடத்தினார்கள் என்பதும் சிவாஜியைத் தீட்டுக் கழித்துத்தான் மன்னராக மாற்றினார்கள் என்பதும் வரலாறு. ஆக வாஞ்சியின் கோபம் முழுக்க முழுக்க ஜாதி வெறியே தவிர சுதந்திர வேட்கை அன்று.
கலெக்டர் ஆஷ் அவர்கள் ஆங்கிலேயர் கிடையாது. அவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐரிஸ் இனத்தவர் ஆவார். ஆங்கிலேயர் அல்லாத அயர்லாந்து தேசத்தைச் சார்ந்த ஆஷ் அவர்களைக் கொல்ல காரணம் என்ன என்பதை மிக விரிவாக இந்நூலில் விளக்கியுள்ளார். குறிப்பாக அன்றைய காலகட்டத்தில் நடைபெற்ற கோரல் மில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களைத் துப்பாக்கிச் சூட்டிற்க்கு உத்தரவிட்டவர் என சில குற்றச்சாட்டுகள் உள்ளன. அவை அனைத்தும் இட்டுக் கட்டப்பட்டவை என ஆசிரியர் ஆதாரங்களோடு நிருபிக்கிறார்.
கோரல் மில் துப்பாக்கிச்சூட்டின் போது ‘வின்ச்’ என்ற ஆங்கிலேயர்தான் கலெக்டர். ஆஷ் அவர்கள் சப் கலெக்டர். ஒரு சப் கலெக்டரால் துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவு போட முடியாது என்பது சட்டம். மேலும் கோரல் மில் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய வ.உ.சி அவர்களுக்குத் தண்டனை வழங்கிய நீதிபதி ‘பின்ஹே’ ஒரு ஆங்கிலேயர். ஆக துப்பாகிச் சூட்டிற்குக் காரணமான கலெக்டர் மற்றும் போராட்டக்காரர்களைத் தண்டித்த நீதிபதி என இரண்டு ஆங்கிலேயர்களையும் சுடாமல் ஆஷ் அவர்களைச் சுட வேண்டிய காரணம் என்ன? என இந்த நூலின் ஆசிரியர் கேள்விக்கு தேசியவாதிகளின் பதில் என்ன? வாஞ்சியின் கடிதத்தில் கூறியது போல ஸனாதான தர்மத்தை மீறிவிட்டாரா கலெக்டர் ஆஷ் அவர்கள்?
ஆஷ் படுகொலையின் வழக்கு விபரங்கள், நீதிமன்ற விசாரணை என பல செய்திகளை புள்ளி விவரத்துடன் பதிவு செய்துள்ளார். அதில் எங்கேயும் ஆஷ் மக்களிடம் கொடுமையாக நடந்து கொண்டார் என எந்த குற்றச்சாட்டும் இல்லை. மேலும் அன்றைய பத்திரிகைச் செய்திகள் கூட ஆஷ் அவர்களை நல்ல நிர்வாகியாகப் பதிவு செய்கிறது. அன்றையக் காலக்கட்டத்தில் தமிழகத்தில் வந்த இரண்டு முக்கியமான பத்திரிக்கைகள் ஒன்று பார்ப்பன நலனுக்காக பாடுபட்ட ‘இந்து’ ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபட்ட ‘ஒருபைசா தமிழன்’ இரண்டுமே கலெக்டர் ஆஷ் அவர்களைப் பற்றி நிர்வாகத் திறம் மிக்கவர் என்றும் இரக்கம், மனிதாபிமானம் உள்ளவர் என்று பதிவு செய்துள்ளது. ஆக இந்தியர்களைக் கொடுமைப் படுத்தவில்லை. மனிதநேய மிக்கவர் என்று அறியப் பட்டவர் ஏன் கொல்லப்பட்டார்?
இந்நூலின் 270ம் பக்கத்தில் “நீதிமன்ற தீர்ப்பு வாசகங்களின் படி, ஆய்வாளர்களின் கடுந்துரைகளின் படி, ஆஷ் கொல்லப்பட்டதற்கும் சதி, சுதேசம், வட இந்திய விடுதலைச்சதி, விடுதலை வேள்வி, சுதந்திரப் போராட்டம் என்ற கருத்தாக் கத்திற்கும் எந்த விதத் தொடர்பும் கிடையாது“
இந்நூலில் வாஞ்சி பற்றி வந்த அனைத்து நூல்களையும், நீதிமன்ற விசாரனைகளையும் சாட்சியங்களையும் அவர்கள் அடித்த பல்டி களையும் விரிவாக அலசி ஆராய்ந்து மேற்கண்ட வரிகளை பதிவு செய்துள்ளார். அப்படியெனில் ஆஷ் கொலைக்கு அரசியல் காரணம் கிடையாது என நிருபிக்கப்பட்ட பின்பு வேறு என்ன காரணம் இருக்கலாம்? வாஞ்சி அய்யரின் கடிதத்தில் குறிப்பிட்டதைப் போல் அழியாத ஸனாதானத் தர்மத்தை அழித்தாரா கலெக்டர் ஆஷ்?
ஆஷ் அவர்களின் மனைவி எடுத்த ஒரு மனிதாபிமானச் செயலே கொலைக்கு காரணமென அப்பகுதி மக்கள் சொல்லுகின்ற வாய்வழிச் செய்தி பற்றி இந்த நூலின் 272ம் பக்கத்தில் பதிவு செய்கிறார்.
“சேரியில் வாழும் சாதியில் கீழான, பிரிவைச் சேர்ந்த(இந்து மதத்தைச் சேர்ந்த) பெண் அக்கிரஹாரத்தின் வழியாகச் சென்றதால் - செல்ல வைத்ததால் அக்கிரஹாரத்தின் புனிதம் கெட்டு விட்டது எனத் திரண்ட பிராமணர்கள் கலெக்டர் ஆஷிடம் சென்று, அதற்குக் காரணமான அவரது துணைவியார் செய்த “சமூக விரோதச் செயலுக்கு” மன்னிப்பு கேட்குமாறு கூச்சலிடுகிறார்கள். மன்னிப்பு கேட்க மறுத்து விட்ட ஆஷ், மேலும் தன் துணைவியார் செய்த செயல் சரியானது என்றும் நியாயப்படுத்துகிறார்.
“ஆக அழியாத ஸனாதானத்தைக் காப்பாற்ற வாஞசி அய்யர் செய்த கொலைக்கான காரணம் தெளிவாகப் புரிகிறது. மேலும் இன்றும் மருத்துவ மனைக்கும் சேரிக்கும் நடுவில் அக்கிரஹாரம் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. ஏன் இது வழக்கின் விசாரணையில் எந்த இடத்திலும் பதிவாக வில்லை. அங்குதான் ஆரியத்தின் மிகப் பெரிய சதி அடங்கியுள்ளது. மிகவும் ஸனாதான வெறி பிடித்த வ.வே.சு அய்யர், பாரதி ஆகியோர் வாஞ்சியின் நெருங்கிய நண்பர்கள் ஏன் கைது செய்யப்பட வில்லை? இந்த வழக்கின் குற்றவாளிகள் 14 பேரில் ஒருவர் நீதிமன்றத்தில் சொல்லியும் பாரதியும் வா.வே.சு அய்யரும் ஏன் கைது செய்யப்படவில்லை?
இந்த வழக்கின் விசாரனை அதிகாரியாக இருந்த சர்.சி.பி. இராமசாமி அய்யரின் இனப்பாசமே காரணம் என நூலாசிரியர் சந்தேகம் எழுப்புகிறார். இந்நூலின் 274ம் பக்கத்தில் “சர்.சி.பி. ராமசாமி அய்யர் இனப்பாசத்தின் அடிப்படையில் இச் செய்தியை முழுமையாக மறைத்திருக்கின்றார் என்று சந்தேகிப்பதற்கு சூழ்நிலைகளும் வாஞ்சியின் கடிதமும் ஆதாரமாக இருக்கின்றது”
மேற்கண்ட செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இரண்டு நாடார் சமூக இளைஞர்கள் அன்றைய உயர் படிப்பான அய்.சி.எஸ். படித்துவிட்டு திருவாங்கூர் சமஸ்தான திவான் ராமசாமி அய்யரிடம் வேலை கேட்ட போது, இரண்டு தென்னை மரங்களைக் கொடுத்து நீங்கள் மரமேறிப் பிழையுங்கள் என்று சொன்ன ஜாதி வெறியன்தான் இந்த திவான் ராமசாமி அய்யர்.
அந்த அடிப்படையில் பார்த்தோமானால் திருமதி மேரி ஆஷ் அவர்களின் மனிதாபிமானச் செயலுக்கு எதிராக நடந்த கொலை என ராமசாமி அய்யர் பதிவு செய்ய வாய்ப்பில்லை. மேலும் பாரதி, வா.வே.சு க்கள் தப்பிக்க விடப்பட்டுள்ளனர். எனவே இந்தக் கொலை என்பது ஆரிய ஸனாதான தர்மத்தை நிலைநாட்டவே நடந்தது என்பதை விரிவாக பதிவு செய்துள்ளார்.
மேலும் ஆங்கிலேயர்கள் எப்படி ஆரிய பார்ப்பனர்களின் ஸனாதான தர்மத்தை அழிக்க முயற்சித்தார்கள் என்பதை தெளிவாக ஆங்கிலேயர் செய்த சமூக புரட்சிகளையும், அதன் மூலம் இங்குள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், பெண்கள் பயனடைந்தார்கள் என்பதையும் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
இந்தியச் சுதந்திரப் போராட்டத்தைச் சந்தேகக் கண்ணோடு பார்த்த பெரியார், அம்பேத்கர் அவர்களின் சிந்தனை நமக்குத் தெளிவாகிறது. மேலும் வாஞ்சி ஆதரவாளர்களின் புத்தகங்கள், நடுநிலையோடு ஆய்வு செய்யப்பட்ட புத்தகங்கள், நீதிமன்ற ஆவணங்கள் என அனைத்துத் தரப்புச் செய்திகளையும் வைத்து மிகத் தெளிவான ஆய்வை செய்துள்ளார் தோழர் ஜெயராமன். வாஞ்சி அய்யரை ஆதரிக்கும், பாரதியை ஆதரிக்கும் இடதுசாரி, தேசியவாதிகள் இதற்கு பதில் சொல்லுவார்களா? அல்லது வழக்கமான கள்ள மவுனத்தோடு கடந்து செல்வார்களா? சமூக மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல் இது.
(நன்றி: கீற்று)