அர்த்தசாஸ்திரம்: உலகின் முதல் பொருளாதார நூல்

அர்த்தசாஸ்திரம்: உலகின் முதல் பொருளாதார நூல்

அரசியல் பொருளாதாரம் பற்றிய உலகின் முதல் ஆவணம் என்று அர்த்தசாஸ்திரம் அறியப்படுகிறது. இந்திய வர்த்தக வரலாற்றைப் பல பாகங்களில் அறிமுகப்படுத்தும் பெங்குவின் ஆலன் லேன் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் முதல் நூலாகவும் அர்த்தசாஸ்திரம் வெளியிடப்பட்டுள்ளது. அறம், பொருள், இன்பம் மூன்றையும் விவரிக்கும் அர்த்தசாஸ்திரத்தில் இருந்து செல்வம் பற்றிய பகுதிகளை மட்டும் எளிமையாகத் தனது புத்தகத்தில் (Arthashastra: The Science of Wealth) அறிமுகப்படுத்தியுள்ளார் தாமஸ் டிரவுட்மன். ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட அர்த்தசாஸ்திரம், ஓர் அரசன் தனது நாட்டை எப்படி நிர்வகிக்கவேண்டும், குடிமக்களை எப்படி நடத்தவேண்டும், வரிகள் எப்படி விதிக்கப்படவேண்டும், தானியங்கள் எப்படிப் பங்கிடப்படவேண்டும், ராணுவ நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்ளவேண்டும் உள்ளிட்ட பல அம்சங்களை ஆராய்கிறது. அர்த்தசாஸ்திரத்தை இயற்றிய ஆசிரியர் என்று கௌடில்யர், சாணக்கியர், விஷ்ணுகுப்தர் ஆகியவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.

மாக்கியாவெல்லியின் தி பிரின்ஸ் புத்தகத்தோடு ஒப்பிடப்படும் அர்த்தசாஸ்திரத்தை இப்போது வாசிக்கும்போது சில விஷயங்களில் நாம் கவனமாக இருக்கவேண்டும். முதலில் இந்த ஆவணத்தை அன்றைய காலகட்டத்து அரசியல், வரலாற்று, பொருளாதாரப் பின்னணியோடுப் பொருத்திப் புரிந்துகொள்ளவேண்டும். இரண்டாவதாக, இன்றைய சூழலோடு அதனைப் பொருத்திப் பார்த்து அதிலிருந்து நமக்கு ஏதேனும் பாடங்கள் கிடைக்காதா என்று பார்க்க முயற்சி செய்யக்கூடாது. மூன்றாவது, அர்த்தசாஸ்திரத்தின்படிதான் அன்றைய ஆட்சிமுறை நிலவியது என்று அவசரப்பட்டு முடிவுசெய்துவிடக்கூடாது. காரணம் அர்த்தசாஸ்திரத்தின்படிதான் அன்றைய அரசர்கள் ஆட்சி செய்தனரா என்பது நமக்குத் தெரியாது. அரசருக்கு ஆளிக்கப்பட்ட ஆலோசனைகளின் தொகுப்பு என்னும் அளவில் ஒரு வரலாற்றுப் பிரதியாக மட்டுமே அர்த்தசாஸ்திரத்தை நாம் அணுக இயலும்.

முடியரசு, குடியரசு இரண்டில் எது சிறந்தது என்னும் கேள்வியை எழுப்பும் அர்த்தசாஸ்திரம், முடியரசே சிறந்தது என்னும் முடிவுக்கு வருகிறது. இன்றைய சூழலுக்கு ஏன் அர்த்தசாஸ்திரம் பொருந்தாது என்பதற்கு இது ஓர் உதாரணம் மட்டுமே. அதே சமயம் இன்றைய யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் பல அம்சங்களும் அர்த்தசாஸ்திரத்தில் உள்ளன. ஓர் உதாரணம் : ‘நாக்கில் வைக்கப்பட்ட தேனையோ விஷத்தையோ சுவைக்காமல் இருக்க முடியாது. அதுபோல அரசனுடைய பணத்தைக் கையாளும் ஒருவனால், சிறிதளவே ஆனாலும், பணத்தைச் சுவைக்காமல் இருக்கமுடியாது. நீரில் நீந்துகிற மீன் தண்ணீரைக் குடிக்கிறதா இல்லையா என்று எப்படி அறிய-முடியாதோ அதுபோல பணிகளை நிறைவேற்ற நியமிக்கப்பட்ட அதிகாரிகள் பணமோசடி செய்வதை அறிய இயலாது. வானில் பறக்கும் பறவைகளின் வழியைக்கூட அறியமுடியும். ஆனால் தன் எண்ணங்களை மறைத்துச் செயல்படும் அதிகாரிகளின் வழிகளை அறியமுடியாது.’ (2.10.32-34).

அரசன் என்றால் ராஜபோக வாழ்க்கை, நிரம்பி வழியும் வசதிகள், கணக்கிடவியலா பொன், பொருள் என்று மட்டுமே நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவருடைய வாழ்க்கை சவாலானது என்கிறார் டிரவுட்மன். ஓர் அரசனுக்குத் தொடர்ந்து ஆபத்தும் அச்சுறுத்தல்களும் தோன்றிக்கொண்டே இருக்கும். அரண்மனைக்கு உள்ளிருந்தும், வெளியில் இருந்தும். தொடர்ந்து கண்காணித்து இந்தச் சவால்களை முறியடிக்கவேண்டிய கட்டாயத்தில் அரசர் இருக்கிறார். தன் சொந்தக் குடும்பத்திடம் இருந்து ஓர் அரசன் எப்படித் தன்னைக் காத்துக்கொள்ளவேண்டும் என்றும் அந்தப்புரத்தில்கூட எப்படியெல்லாம் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கவேண்டும் என்றும் விரிவாக அர்த்தசாஸ்திரம் விளக்குகிறது.

அமெரிக்க, பிரெஞ்சுப் புரட்சிகளைத் தொடர்ந்து முடியாட்சி உதிர்ந்து குடியாட்சிக்கான அவசியம் உலகளவில் உணரப்பட்டது. சமூகப் பொருளாதாரக் கட்டுமானங்கள் மாற்றம் பெற்றன. அரசர் ஒருவரே பலம் பாய்ந்தவர், அதிகாரம் மிக்கவர் என்பதால் பொருளாதாரத்தை இயக்கும் உந்துசக்தியாகவே அவரே இருக்கவேண்டும் என்று அர்த்தசாஸ்திரம் வலியுறுத்துகிறது. சந்தையில் குறிப்பிட்ட பண்டங்களின் விலை அதிகரிக்கும்போது அரசரின் மாயக்கரம் பாய்ந்து வரவேண்டும். சமநிலைச் சரியும்போது, விலைவாசி உயரும்போது, பஞ்சம் ஏற்படும்போது இந்த மாயக்கரம் நீண்டுவந்து அமைதியை ஏற்படுத்தவேண்டும். வணிகர்களையும் பொது-மக்களையும் பாதுகாப்பதற்காக, அரசர் தலையிட்டுப் பொருட்களின் விலைகள் கட்டுக்கடங்காமல் போவதைத் தடுக்கவேண்டுமென்று அர்த்தசாஸ்திரம் அறிவுறுத்துகிறது.

தாமஸ் டிரவுட்மன் எழுதுகிறார். ‘அர்த்தசாஸ்திரத்தைப் படிக்கும்போது புலப்படும் ஒரு உண்மை வர்த்தகம் என்பது சந்தைகளில் பொருட்களை விற்பனை செய்வதல்ல. மாறாக, அது தொழிற்கூடங்களில் இருந்து பொருட்களைச் சந்தைக்குச்கொண்டு செல்லும் முறைகளைப்பற்றியது. இது சந்தையை மையமாகக்கொண்டு வர்த்தகத்தை ஆராயும் தற்போதைய முறைக்கு மாறானது.’

ஓர் அரசர் பல்வேறு திறன்களைப் பெற்றிருக்கவேண்டும். அல்லது திறன் பெற்ற துறைசார் அறிஞர்களை அருகில் வைத்துக்கொள்ளவேண்டும் என்கிறது அர்த்தசாஸ்திரம். விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எத்தகைய பயிர்கள், எப்போது, எவ்வளவு பயிரிடப்படவேண்டும், அறுவடை செய்யப்பட்ட தானியங்கள் எவ்வாறு பங்கிடப்படவேண்டும் என்பது திட்டவட்டமாகக் கணக்கிடப்பட்டு வரையறுக்கப்பட்டுள்ளது. ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான தானியங்கள் அளிக்கப்பட மாட்டாது. உழைக்கும் மக்களுக்கும் செல்வந்தர்களுக்கும் வெவ்வேறு அளவுகளில் தானியங்கள் அளிக்கப்படும். பிராமணர்களுக்கும் அரசர்களுக்கும் போர் வீரர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் வெவ்வேறு தர வகைகள் ஒதுக்கப்படும்.

‘விவசாயக் குடும்பங்கள், அவற்றால் உற்பத்தி செய்யமுடியாத பொருட்களுக்கு ஈடாக அவை தயாரிக்கும் பயிர்களின் ஒரு பகுதியைப் பண்டமாற்று செய்கின்றன. உபரி உற்பத்தியை வரியாகவும் செலுத்து-கின்றன. அர்த்தசாஸ்திர காலத்திலிருந்து இந்தியா இதுபோன்ற சிறிய அளவிலான குடும்பம் சார்ந்த விவசாயத்தையே மேற்கொண்டு வருகிறது. அதிகமான நிலங்களை வைத்திருந்த நிலவுடைமையாளர்கள் இருந்த-போதிலும், அதிகப் பரப்பளவிலான விவசாயம் குறைந்த அளவிலேதான் மேற்கொள்ளப்பட்டது.’

வணிகர்களிடம் அரசர் கவனமாக இருக்கவேண்டும். அவர்கள் பல்வேறு பொருள்களைக் கொண்டுவருவதால் நிச்சயம் அவர்களை மதிக்கவேண்டும். அதே சமயம் பொதுமக்களை ஏமாற்றுபவர்களாகவும் வணிகர்கள் இருப்பதால் அரசர் விழிப்புடன் இருக்கவேண்டும் என்கிறது அர்த்தசாஸ்திரம். ‘வணிகர்களும் வர்த்தகர்களும் காணப்பட்டாலும், அவர்கள் பின்புலத்திலேயே ஒழுங்குபடுத்த வேண்டியவர்களாக, வரிவிதிக்க வேண்டியவர்களாக, தவறான நடவடிக்கைகளில் ஈடுபடாதபடி கண்காணிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். ’ வெளிநாட்டு வர்த்தகத்தை அர்த்தசாஸ்திரம் ஆதரிக்கிறது. வர்த்தகக் கண்காணிப்பாளர்மூலம் வெளிநாட்டு வர்த்தகத்தில் அரசர் பங்குகொள்ளு-மாறு வலியுறுத்துகிறது.

முடியரசுதான் சிறந்தது என்று அர்த்தசாஸ்திரம் நம்பியது ஏன்? ‘குடியரசுகளைவிட முடியரசுகள் சிறந்து விளங்கியதற்கு முடியரசுகளின் பொருளாதார வலுவே முக்கியக் காரணமாக விளங்கியது. மூலதனத்தை எளிதில் திரட்ட முடிந்ததால் முடியரசுகள் அத்தகைய வலுவான பொருளா-தாரத்துடன் திகழ முடிந்தது.’ இன்னோரிடத்தில் டிரவுட்மன் எழுதுகிறார். ‘அதிக லாபத்தைத் தடுக்க வரிகளையும் அபராதங்களையும் விதிக்கும் அதிகாரங்களும் அவரிடத்தில் இருந்தன. வெற்றியை உறுதிப்படுத்தவும் அபாயங்களைத் தடுக்கவும் அரசரிடம் மந்திரக்கோல் எதுவும் இருக்கவில்லை. நிரம்பி வழியும் கருவூலம், வலுவான படை, உழைப்பாளிகளான மக்கள், வழக்குகளைத் தீர்க்க வலுவான முறைகள் ஆகிய ஒன்றுக்கொன்று இணைந்த சிலசமயம் போட்டியிடக் கூடியவற்றினிடையே ஒரு சமநிலையை நிறுவுவதன்மூலம் அரசர் நாட்டின் அமைதியைக் கட்டிக்காக்கலாம். அர்த்தசாஸ்திரம் வெற்றிக்கான உத்தரவாதத்தை அளிக்காவிட்டாலும், அரசருக்கும் அமைச்சர்-களுக்கும் தேவையானவற்றை அறிவார்ந்த முறையில் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டியாக விளங்குகிறது.’

அரசரைக் காட்டிலும் வணிகர்கள் பலர் அப்போது கூடுதல் செல்வச்செழிப்புடன் இருந்தனர் என்பதை அர்த்தசாஸ்திரத்தில் இருந்து அறியமுடிகிறது. ஆனால் அவர்களுடைய செல்வத்தின் வளர்ச்சி அரசர்களுடைய தொடர்பினால், அவர்களுக்கிடையே நடைபெற்ற ஆடம்பரப் பொருட்களின் வர்த்தகத்தால் வளர்ந்ததே தவிர தனிப்பட்ட முறையில் அல்ல என்கிறார் டிரவுட்மன். இந்த அம்சங்களை இன்றைய அரசியல் சூழலிலும் நம்மால் காணமுடிகிறது. அதேபோல், தங்கத்தின்மீதான மோகம் அன்றிருந்தைப்போல் இன்றும் தொடர்கிறது என்கிறார் டிரவுட்மன்.

ஒப்பீடுகளை இந்த அளவோடு மேலோட்டமாக முடித்துக்கொள்வதே சரியாக இருக்கும். மேற்கொண்டு ஆராய்ந்து இன்றைய காலகட்டத்துக்கு அர்த்தசாஸ்திரத்தை இழுத்து வந்து பார்ப்பது அவசியமற்றது. மற்றபடி டிரவுட்மன் குறிப்பிடுவதைப்போல், நமது இன்றைய நிலைமையை ஒரு விரிவான நோக்கின்மூலம் அறிந்துகொள்ள அர்த்தசாஸ்திரத்தை உபயோகப்படுத்திக்கொள்வதில் தவறில்லை.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp