அரூப நெருப்பு: அன்றாடங்களில் படரும் கனல்

அரூப நெருப்பு: அன்றாடங்களில் படரும் கனல்

தீவிர இலக்கியப் படைப்புகள் எழுதப்படும் காலத்தில் பொதுச்சமூகத்தில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கிவிடுவதில்லை. ஜெயகாந்தன் போன்ற ஒரு சில விதிவிலக்குகள் உண்டெனினும் அவரது படைப்புகள் கூட சரியான விதத்தில் உள்வாங்கப்பட்டது அவை எழுதப்பட்ட சமகால சலனங்கள் அடங்கியபிறகே. உதாரணமாக அவரது அக்கினிப்பிரவேசம் என்ற பிரபலமான கதையைப் பெரும்பான்மையானவர்கள் அறிந்திருந்தாலும் அதற்கு அன்று கிடைத்தது ஒரு சமூகப் பொது மனநிலையுடைய வாசிப்பு மட்டுமே. அக்கதையின் நாயகியை நோக்கி தீர்ப்பு சொல்கிறவையாகவே அவ்வாசிப்பு அமைந்தது. நாயகியின் கோணத்தில் வாசிப்பைத் திருப்பிக்கொள்ள அதன் நீட்சியான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலையும் அக்கோணத்தில் வாசித்துச் செல்ல நமக்கு ஒரு தலைமுறைக்காலமும் பெண்ணியம் குறித்த விவாதங்களும் தேவைப்பட்டிருக்கின்றன.

தீவிர இலக்கியப் படைப்புகள் சமூக மனநிலையில் நிகழும் மாற்றங்களை அல்லது மாற்றங்கள் நிகழவிருக்கும் கணுக்களை அல்லது மாற்றங்கள் நிகழ்ந்தாக வேண்டிய இருண்ட மூலைகளையே கருத்தில் கொள்கின்றன. ஏற்கனவே நிலைபெற்றுவிட்டவற்றின் நீட்சியாக அல்லாமல் ஒரு புதிய கோணத்தை உருவாக்க முயல்கின்றன. புதிய கோணத்திற்கென புதிய வடிவங்களையும் இலக்கியப் படைப்புகள் தேடிச் செல்கின்றன. புதுமையான வடிவம் அந்நியமான பேசுபொருள் இவற்றின் காரணமாகவே வாசகரிடம் இலக்கியப் படைப்புகள் ஒரு “இயல்பான” மனநிலையைக் கடந்து ஆழ்ந்து கவனிக்கும் மனநிலையை கோருகின்றன. இவ்வுழைப்பைக் கொடுக்க சமூகத்தால் உடனடியாக முடிவதில்லை. ஆனால் படைப்புகள் உத்தேசித்த மாற்றங்கள் நிகழ்ந்த பின் அதை தன் உள்ளுணர்வின் வழி எழுதிச் சென்ற படைப்பாளியை சமூகம் ‘கண்டுபிடித்து’ சிலாகிக்கிறது. “அப்பவே எழுதி இருக்கான் பாரேன்” என வியக்கிறது.

இவ்வளவு நீளமான பீடிகைக்கு காரணம் இல்லாமல் இல்லை. எல்லா திசைகளிலும் புதுமைகளும் பரவசங்களும், விழித்திருக்கும் நேரமெல்லாம் நம் விழிகளை விரிய வைத்தபடியே இருக்கும் இன்றையச் சூழலில் உண்மையான அகத்தூண்டலை கண்டடைவது சிக்கலானதாகி இருக்கிறது. இலக்கிய அனுபவம் என்பது எப்போதும் இந்த மேற்பரப்பின் சலனங்களைக் கடந்தபின் அடையப்படுவது. அத்தகைய சலனங்களை பிரதிபலித்துக் காட்டும் படைப்புகள் எளிதில் கவனம் பெறலாம் சிலாகிக்கப்படலாம். ஆனால் அவற்றினும் அதிகமான விழிவிரிப்பை கொடுக்கக்கூடியவற்றின் முன் அவை சிறுத்துவிடும். தொடர் அருவிபோல் கொட்டும் பரவசத்தகவல் குவியலில் இருந்தும் முன்னூற்று அறுபது டிகிரியிலும் நம்மை ஒரு மேலோட்டமான பரவசத்தில் ஆழ்த்தும் வீண் சிதறல்களில் இருந்தும் விலகியே தரமான இலக்கியத்தை அடையாளம் காண வேண்டியிருக்கிறது. கே.என்.செந்திலின் அரூப நெருப்பு சிறுகதைகள் தொகுப்பு இத்தகைய தீவிரமான இலக்கிய அனுபவத்தைக் கொடுக்கவல்லது. புதுமையான கதைகூறல் முறைகளும் அன்றாடங்களின் தீவிரத் தருணங்கள் வழியாக பயணிக்கும் கதைகளையும் கொண்ட தொகுப்பு இது.

தமிழ் சிறுகதைகள் வடிவரீதியாக அடைந்திருக்கும் தேக்கத்தை உடைப்பவையாக இக்கதைகளை வாசிக்க முடியும். யாருமே அறியாத வாழ்க்கையையோ புதுமையான நடைமுறைகளையோ சொல்லும் வடிவமாக நான் சிறுகதைகளை எண்ணவில்லை. அறியாத ஒரு வாழ்வை சித்தரிப்பதையோ ஒரு பழங்குடி நம்பிக்கையை கட்டுடைப்பதையோ ஒரு சிறுகதைச் செய்யலாம். ஆனால் ஆசிரியரின் தேடல் மற்றும் தேர்வுகள் மட்டுமே இந்த புதுமையான களங்களை முடிவுசெய்கின்றன. எவ்வளவு புதுமையான கதைக்களத்தை எடுத்துக் கொண்டாலும் கூறுமுறையில் சறுக்கக்கூடிய படைப்புகள் நல்ல சிறுகதைகளாக எழுவதில்லை. சிறுகதை எடுத்துக் கொள்ளும் கூறு பொருளில் மட்டுமல்ல கூறுமுறையிலும் தன்னுடைய வெற்றியையும் புதிய சாத்தியங்களையும் அடைகிறது என்பதை இக்கதைகளை வாசிக்கும் போது அறிய முடிகிறது.

முன்னுரையில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளது போல இத்தொகுப்பில் தங்கச்சிலுவை, அரூப நெருப்பு, நிலை போன்ற படைப்புகள் நாவலாக விரித்து எழுதப்படுவதற்கான சாத்தியங்களையும் சிக்கல்களையும் கொண்டுள்ளன. ஆனால் வெளிப்பாட்டுக்கு இவ்வடிவத்தை தேர்ந்தெடுத்து இருப்பதால் இக்கதைகள் முன்வைக்கும் உணர்வுநிலைகள் மிகுந்த செறிவுடன் வெளிப்படுகின்றன.

விரியும் சிறுகதையின் வடிவங்கள்

எஸ்.செந்தில்குமாரின் ‘மழைக்குப்பின் புறப்படும் ரயில்வண்டி’ எனும் நூல் நெடுங்கதைகளின் தொகுப்பாகவே வெளிவந்தது. பக்க அளவை மட்டும் வைத்துப் பார்த்தால் அந்த நூலில் உள்ள கதைகளைப் போல இத்தொகுப்பில் உள்ள கதைகளும் நெடுங்கதைகளே. ஆனால் சிறுகதையின் மரபான வடிவம் தகர்க்கப்பட்டு புது வகையான வடிவம் உருவாகி வருவதன் சமிக்ஞைகளாகவே எஸ்.செந்தில்குமாரின் நூலையும் இந்த நூலையும் நான் காண்கிறேன். வடிவத்தில் மட்டுமல்லாது செறிவான கதைக்களங்களை தேர்ந்தெடுப்பதிலும் கே.என்.செந்தில் கவனம் செலுத்துகிறார். அதுவே இத்தொகுப்பை முக்கியமானதாக மாற்றுகிறது.

ஒற்றைப்படையான கதை சொல்லல் உணர்வொழுங்கினை நீடிக்க விடுவதற்காக செய்யப்படும் விரைவான கதையோட்டம் போன்றவையெல்லாம் இல்லாமல் வெவ்வேறு மனிதர்களின் உணர்வுச் சிக்கல்களையும் உறவுச் சிக்கல்களலயும் கூர்மையாக அடையாளப்படுத்தியபடியே நகர்கின்றன இக்கதைகள். ஒரே கதைக்குள் வெவ்வேறு கதை சொல்லிகள்(வாசனை), கதை சொல்லியின் குரலில் நகர்ந்து சட்டென ஆசிரியரின் குரல் தோன்றுவது(அரூப நெருப்பு) சம்பவ விவரிப்பின் போதே நனவோடையாக மற்றொரு கதையைச் சொல்வது என வெவ்வேறு உத்திகள் கதைகளில் கையாளப்பட்டுள்ளன. அதேநேரம் ஒரு மைய ஒழுங்கு கதைகளில் நீடிக்கவும் செய்கிறது.

கதைகள்

முதல் கதையான தங்கச்சிலுவை பெயரே சொல்வது போல ஒரு கிறிஸ்துவ கதைக்களத்தைச்arooba-neruppu_FrontImage_596 சித்தரிக்கிறது. பிரான்சிஸின் கட்டுப்பாட்டில் உள்ள தேவாலயத்தில் இருக்கும் தங்கச்சிலுவையைத் திருட அவ்வூரின் முக்கிய நபர்களில் ஒருவரான மேத்யூ முயல்வது ஒரு இழையாகவும் அச்சிலுவை அங்குவரக் காரணமாக இருந்த பிரான்சிஸின் அப்பா வில்சனின் கதை மற்றொரு இழையாகவும் சிலுவையைத் திருடச் செல்லும் ஆபிரகாமின் கதை மற்றொரு இழையாகவும் பின்னப்பட்டுள்ளது இக்கதை. மகளின் மீதான அன்பின் காரணமாக சிலுவையைத் திருடும் ஆபிரகாமின் அன்புணர்வு நீதியுணர்வாக மாறுவதை சித்தரிப்பதோடு கதை முடிகிறது. சிலுவையைத் திருடியபின் ஆபிரகாமுக்கு வரும் கனவில் நடக்க முடியாத அவன் மகள் பாக்கியம் மேத்யூவின் மகள் காத்ரீனாவுடன் கைகோத்தபடி சந்தோஷமாக விளையாடுவதாக வரும் சித்தரிப்பு இத்தகையில் முக்கியமானது. ஒரு வகையில் கேத்ரீனா போல அவன் மகள் ஆகவேண்டும் என்றெண்ணியே அவன் அச்சிலுவையைத் திருடுகிறான். அவன் குற்றவுணர்வடைவது ஒரு சிறந்த தருணம் எனினும் குற்றமும் தண்டனையும் போன்ற பெருநாவல் இங்கு நிலைநாட்டிவிட்ட உணர்வையே இக்கதை வாசித்து முடிக்கும் போது தருகிறது. வெவ்வேறு இழைகளை சரியாகப் பின்னி இருப்பதாலேயே இக்கதை முக்கியமானதாகிறது. கதைக்குள் ஒலிக்கும் விவிலிய வாசகங்கள் அடர்வுடன் இருக்கின்றன.

அடுத்த கதையான அரூப நெருப்பு மிகச்சிக்கலான ஒரு குடும்பத்தை சித்தரிக்கிறது. முதல் கதையான தங்கச்சிலுவை நீங்கலாக மற்றெல்லா கதைகளிலும் கதாமாந்தர்களினுள் இந்த நெருப்பு கனன்ற படியே உள்ளது. அது உக்கிரமாக வெளிப்படும் கதையாக இதைச் சொல்லலாம். தந்தை மகன் அம்மா போன்ற சம்பிரதாய உறவுமுறைகளில் இக்கதை நிகழ்த்தும் மீறல் அனைத்து கட்டுகளையும் கடந்து மனிதனுள் கொப்பளிக்கும் உணர்வுகளை தரிசிக்கச் செய்கிறது. தெலுங்கு பேசும் குடும்பமாக அரூப நெருப்பின் கதையில் வரும் இக்குடும்பம் சித்தரிக்கப்பட்டுள்ளது. கோவிந்தன் இள வயதில் கொண்ட பெண் தொடர்பின் காரணமாக அவள் இறந்த பிறகு அவருக்குப் பிறக்காத அவள் மகனை வீட்டுக்கு அழைத்து வருகிறார். கணேசன் என்ற பெயரில் வரும் அவனே கதைசொல்லி. வீட்டு வேலைகளைச் செய்து அடிமை வாழ்வு வாழும் கணேசனை கோவிந்தனின் மகன் நாகுவுக்கு பிடிப்பதில்லை. இளைஞனாக கணேசனும் நாகுவும் வளர்ந்துவிட்ட பிறகு விஜயா என்ற தன் மற்றொரு மனைவியை மகனுடன் வீட்டுக்கு அழைத்து வருகிறார் கோவிந்தன். அவள் வந்த பிறகு அங்கு நிகழும் மாற்றங்கள் நாகுவுக்கும் விஜயாவுக்குமான தொடர்பு கணேசன் விஜயாவின் மகன்மீது கொண்ட அன்பினால் அச்சூழலை கையாள்வது கணேசன் மீதான விஜயாவின் வெறுப்பு இறுதியில் அடையாளம் அற்றவனான கணேசன் அவ்வீட்டில் அதிகாரம் மிக்கவனாக அமர்வதுடன் கதை முடிகிறது. பல்வேறு உணர்வு நிலைகளின் வாயிலாக பயணிக்கும் இக்கதை இத்தொகுப்பின் முக்கியமான கதை.

அடியாட்களின் உலகை சித்தரித்துச் செல்லும் மூன்றாவது கதையான வெஞ்சினத்தில் பழகிய உணர்வுகளையே அதிகமாகப் பார்க்க முடிகிறது. கதை சொல்லிக்கும் சடையனுக்குமான மோதல் அதன் வழியே தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்புகள் பழிவாங்கல்கள் விபச்சாரியான பெண்ணை கதை சொல்லி மணந்து கொள்வது என ஒரு வழக்கமான பாணியிலேயே கதை நகர்கிறது. பலம் வாய்ந்தவனான கதை சொல்லியை பலம் குன்றிய ஒருவன் கொல்வதாக முடித்திருப்பது இக்கதையை வழக்கமான முடிவுகளில் இருந்து சற்று வேறுபடுத்தி நிறுத்துகிறது. நாயின் மீது நாயகனுக்கு இருக்கும் பயம் பேனா நிறத்திற்கு ஏற்றவாறு அதிகாரிகளின் பதவியை குறித்து வைத்திருப்பது போன்ற சித்தரிப்புகள் கதையில் ஈர்க்கின்றன.

பிணவறையில் வேலை செய்கிறவனின் கதையைச் சொல்கிறது வாசனை. அவனும் அவனை விருப்பமே இல்லாமல் வேறு வழியின்றி மணந்து கொண்ட மனைவி பச்சையம்மாளும் கதை சொல்லிகளாக வருகின்றனர். வீரம் ஆண்மை போன்ற அச்சடிக்கப்பட்ட உணர்வுகளுக்கு வெளியே தன் உணர்வுகளை அமைத்துக் கொள்கிறது இக்கதை. உண்பதில் விருப்பம் கொண்ட கதை சொல்லி அவனை முழுமனதுடன் வெறுக்கும் அவன் மனைவி ஆகியோருக்கு இடையேயான ஊடாட்டங்களை மிகுந்த நேர்த்தியுடன் சொல்கிறது. தனக்கு அமைந்த வாழ்வு போதாத பெண் அதனினும் சிறந்த வாழ்வு அமைந்தவளை பார்க்கும் போது கொள்ளும் ஆங்காரத்தால் கணவனை அவமதிப்பதோடு இக்கதை முடிகிறது. இத்தொகுப்பின் மிகுந்த கரிசனம் நிறைந்த கதையாக இதனை வாசிக்க முடியும். பிணத்தை அறுப்பவனுடன் கூட அருவருப்படையும் பெண் எளிய இன்பங்களைக்கூட அடைய முடியாத ஆண் என இக்கதை உருவாக்கும் சிக்கல் மிக ஆழ்ந்தது.

மாறாட்டம் வேற்று ஆண் ஒருவனிடம் பிரியம் கொள்ளும் மனைவியை எதிர்கொள்ளும் கணவனின் கதை. ஒரு குடும்பத்தை சித்தரிப்பதில் எழுத்தாளர் செந்திலிடம் கைகூடிவரும் லாவகம் வியக்க வைக்கிறது. ஒரு பொதுவான தமிழ் மனநிலை உடைய குடும்பத்தின் அத்தனை அம்சங்களையும் பிரதிபலிப்பதாக உள்ளன அரூப நெருப்பு வாசனை மாறாட்டம் போன்ற கதைகள். தன்னிலையில் சொல்லப்படாத இக்கதையில் பரமேஸ்வரின் மனைவி புவனா மெல்ல மெல்ல ராஜேஷிடம் மனமிழப்பதை நடுக்குற வைக்கும் நிதானத்துடன் சொல்லிச் செல்கிறார் செந்தில். புவனா பரமேஸ்வரன் என இருவரின் மனங்களிலும் மாறி மாறி சஞ்சரித்து கதை சொல்லப்படுகிறது. இறுதியில் புவனா ராஜேஷுடன் கூடுவதை கண்டபிறகும் பரமேஸ்வரன் அந்நிகழ்வை மனச்சலனத்துடன் கடக்கிறான். மறுநாள் தெளிந்த மனநிலையில் அவன் எடுக்கும் முடிவு மனித மனதின் ஆழங்காண முடியாத இருட்குழியின் முன் நிறுத்துகிறது..

இளவயதில் அப்பாவுக்கு பயந்து வீட்டைவிட்டு ஓடிவரும் சிறுவன் காணும் உலகத்தால் அவன் உலகின் குரூரத்தை வக்கிரத்தை உடல் அளிக்கும் பரவசங்களை கண்டு கொள்வதாக அமைந்துள்ளது திரும்புதல் கதை. ஓரினச்சேர்க்கையால் வதைபடும் சோமு, கதை சொல்லியால் அன்புடன் மட்டுமே பார்த்துவிட முடியாத உடல் ரகசியங்கள் அறிந்துவிட்ட பருவத்தில் அவன் முன் நிற்கும் மீனா அக்கா , பிரிந்து வந்த அம்மாவைக்குறித்த ஏக்கம் ,குப்பைமேட்டில் கதை சொல்லியைவிட அவலமாக வாழும் குழந்தைகள்(பதினான்கு வயதான கதை சொல்லியைவிட இருமடங்கு வயதானவனும் குழந்தையாகவே வருகிறான்) என நீள்கிறது இக்கதை. இறுதியில் சூழலின் குரூரம் தாங்க முடியாமல் கதை சொல்லி தப்பித்து ஓட நினைப்பதோடு இக்கதை முடிகிறது.

இத்தொகுப்பின் சற்றே பலவீனமான கதை பெயர்ச்சிதான். சிக்கனமாக வாழ்க்கை நடத்த விழையும் தம்பதிகள் ஒரு கலவரத்தில் சிக்கிக் கொள்ளும் போது கலவரத்தையும் நனவோடையாக அவர்களது வாழ்க்கைச் சூழலையும் சித்தரித்துச் செல்கிறது இக்கதை. இவற்றுக்கு இடையேயான இணைப்பு பலகீனமாக இருப்பதும் இறுதி முடிவு ஊகிக்கக்கூடியதாக அதேநேரம் மேற்கொண்டு திறப்புகளை அளிக்காததும் இக்கதையை இத்தொகுப்பில் இருந்து சற்றே அந்நியப்படுத்துகிறது.

ஒரு தருணத்தில் கதையைத் தொடங்கி நனவோடையாக பின்னோக்கிச் சென்று விவரிக்கும் உத்தி இத்தொகுப்பின் எல்லா கதைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெவ்வேறு வகையான விவரிப்புகள் வழி கதை மீண்டும் மையத் தருணத்தை தொடுவதாக அமைகிறது. இவ்வுத்தி வெற்றிகரமாக வெளிப்படுவதும் சிறுகதையின் கச்சிதத்தோடும் கவித்துமான முடிவுடனும் அமைந்த மிக வெற்றிகரமாக கதையாக இறுதிக் கதையான “நிலை”யைச் சுட்ட முடியும். ஒரு குடும்பம் நொடிக்கிறது. அக்குடும்பத்தில் ஒற்றை ஆணாக எஞ்சிவிட்ட மகனின் முயற்சிகள் தோல்வியுறுகின்றன. அவன் மணக்க விரும்பிய உறவுப்பெண் வேறொரு வீட்டுக்கு மணமகளாகச் செல்கிறாள். அப்பா பித்துப்பிடித்தவராகிறார். அவர்களின் நினைவுகளை சுமந்து நிற்கும் பூர்வீக வீட்டை மழையினூடாக நடந்து சென்று அப்பாவும் கதை சொல்லியான மதேஸ்வரனும் அடைவதான தருணத்தை உச்சமாகக் கொண்டு கதை முடிகிறது. இருள் குளிர் என்று நகரும் இக்கதையில் இறுதியில் ஒளிவரும் தருணம் அற்புதமானது.

“நான் அப்படியே இருபது வருடங்கள் பின்னோக்கிக் கடந்து சிறுவனாக அவர் அருகில் சென்றேன்” என்ற வரி அப்பா குறித்த குற்றவுணர்வும் வெறுப்பும் நீங்கி அவன் விடுதலையுணர்வுடன் அப்பாவை நெருங்கிச் செல்வது அதன் பின் இடிந்த வீடு என துயராக இறந்தகாலம் நிற்பது அனைத்தும் இணைந்து இக்கதையை சட்டென உயர்த்தி நிறுத்துகின்றன.

கே.என்.செந்திலின் புனைவுலகு

அன்றாடம் காணக்கூடிய வாழ்வின் திரிபுகளை இவரது புனைவுகள் சித்தரிக்கின்றன. கதாமாந்தர்கள் கொந்தளிப்பவர்களாக துயருகிறவர்களாக வஞ்சமும் பரிவும் நிறைந்தவர்களாக உயிர்ப்புடன் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். எல்லாக் கதைகளும் முன் பின்னான நனவோடை உத்தியில் நகர்ந்தாலும் கதைகளின் உணர்வும் கையாளும் சிக்கல்களும் வேறு வேறு வண்ணங்களில் மிளர்கின்றன. நம்பிக்கை இழக்காத தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத தைரியமிக்க பல பெண் சித்தரிப்புகள் இக்கதைகளில் உள்ளன. மாறாக ஆண்கள் குழப்பமுற்றவர்களாக உணர்வுகளை வெளிக்காட்டுவதில் தயக்கம் நிறைந்தவர்களாக பெண்களை அஞ்சுகிறவர்களாக அன்பிற்கான ஏக்கம் நிறைந்தவர்களாக வருகின்றனர். சமூகச் சித்தரிப்பு என்ற வகையில் பெரும்பாலான கதைகளில் பொருளாதார பலமின்மை ஆண்களை குன்றச் செய்கிறது(மாறாட்டம்), இக்கட்டுகளில் நிறுத்துகிறது(தங்கச்சிலுவை), தாழ்வுணர்வு கொள்ள வைக்கிறது(வாசனை), அடையாளச் சிக்கலை மையப்படுத்தும் கதையான அரூப நெருப்பில் கூட கதை சொல்லி அதிகாரத்தின் வழி பொருளாதார பலம் பெறுவதுடனே கதை முடிகிறது. பெண்களை உயிர்ப்புடன் சித்தரிப்பதும் துளியும் மயக்கமோ கற்பனைகளோ இன்றி உண்மையான தீவிரமான தருணங்களைக் கொண்டு மட்டுமே வாழ்வை அணுகும் தெளிவும் இக்கதைகளை தீவிர நிலைகளிலேயே நிறுத்துகிறது. சிறுவர்களின் உலகை சித்தரிக்கும் திரும்புதல் மட்டும் இந்த இறுக்கத்தில் இருந்து சற்றே விலகி நிற்கிறது. அம்மா எனும் படிமம் பல கதைகளில் மிகுந்த உணர்வுபூர்வமான படிமமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான முக்கியக் கதாப்பாத்திரங்கள் அம்மாவை இழந்ததன் ஏக்கத்தை சுமப்பவர்களாக வருகின்றனர்.

இத்தொகுப்பில் குறையென நான் உணரும் ஒரு அம்சம் இச்சிறுகதை தருணங்களின் பின்னணியில் இருக்கும் தெளிவின்மை. வலுவான சூழல் சித்தரிப்புகள் இருந்தாலும் இந்த மனிதர்களை எந்த பின்புலத்தில் நிறுத்தி புனைந்து கொள்வது என்ற கேள்விக்கு தீர்க்கமான விடை புனைவினுள் இல்லை. கிறிஸ்துவ குடும்பம் தெலுங்கு பேசும் குடும்பம் போன்ற அடையாளங்களுக்கு வலுசேர்க்கும் காரணிகள் குறைவாக உள்ளன. வலுவான கதைக்களத்தினை இக்கதைகள் கொண்டுள்ளதால் இயல்பாக அது நடைபெறும் சூழல் சார்ந்த பிரக்ஞையையும் கோருகின்றன.

அதேநேரம் குடும்பம் பணியிடம் போன்ற குறைவான சூழலை எடுத்துக் கொண்டு அதனுள் அகம் அடையும் தீவிரத் தருணங்களை தொட்டிருப்பதை இக்கதைகளின் வெற்றியாக சொல்ல முடியும். அதோடு முன்பே குறிப்பிட்டது போல இக்கதைகள் கையாள நினைக்கும் தமிழ் வாழ்வின் ஆண் பெண் உறவுச்சிக்கல்கள் குழந்தைகளின் அகத்தை துன்புறுத்தும் பொதுச்சூழலின் உணர்வின்மை பொருளாதாரம் மனிதனின் உணர்வு ரீதியான இருப்பில் செலுத்தும் தாக்கங்கள் போன்றவை இன்னும் விவாதத்திற்கு வரவில்லை.

வடிவ ரீதியாக மேலும் சிறந்த படைப்புகளை நோக்கி நகரும் எத்தனத்தினை வெளிக்காட்டும் இத்தொகுப்பு தமிழ்ச் சிறுகதை உலகின் மிக முக்கியமான நூல் என தைரியமாகச் சொல்லலாம்.

(நன்றி: வல்லினம்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp