இந்நூல் பல ஆண்டு காலம் ஆசிரியராக இருந்து பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல். இந்நூல் அறிவியல் என்ற ஒரே கருப்பொருளின்கீழ் எழுதப்பட்டுள்ள 53 அறிவியல் பாடல்களையும், 24 அறிவியல் புதிர்களையும் கொண்டது. நூலின் தொடக்கத்தில் வேதியியல் வார்த்தைகள் மற்றும் அறிவியல் ஸ்லோகம் என தந்திருக்கும் கருத்துக்கள் அறிவியலில் முக்கியமான கருத்துகள்,
I see… I forget. பார்த்தேன்… மறந்தேன்
I look… I Remember கவனித்தேன்… நினைவில் கொண்டேன்
I observe… I Understand உற்று நோக்கினேன்… உண்மை தெளிந்தேன்
என்பதுவும்,
I hear… I forget பார்த்தேன்… மறந்தேன்
I read… I remember படித்தேன்… நினைவில் கொண்டேன்
I do… I understand செய்தேன்… தெளிவு பெற்றேன்
என்பதுவும் அறிவியலில் பார்த்து, கேட்டு கற்றுக்கொள்வதைவிட உற்று நோக்கி, செய்து கற்றுக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
இதைத்தான் எளிய பரிசோதனைகளின் நாயகன் திரு அரவிந்த் குப்தா, “நீச்சலைப்பற்றி நீங்கள் ஆயிரம் புத்தகம் படித்திருக்கலாம்… ஏன் நீச்சலில் நீங்கள் டாக்டர் பட்டம் கூட வாங்கி இருக்கலாம், ஆனால் தண்ணீரில் இறங்காமல் உங்களால் நீச்சலைக் கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் முடியாது” என்பார். இதே அரவிந்த் குப்தா அவர்களின் கருத்தைத்தான் அதாவது செய்து கற்றலே அறிவியல் என்பதை மேற்கண்ட இரண்டு ஸ்லோகங்களும் குறிப்பிடுகிறது.
இந்நூலில் மிக நுட்பமான அறிவியல் கருத்துக்களையும் கவிதை நயத்துடன் பாடலாக கூறியுள்ள விதத்தில் நூலாசிரியரின் அறிவியல் புலமையோடு, அவரின் பாடல் புணையும் திறனும் வெளிப்பட்டு நிற்கிறது. அறிவியல் தமிழ் இந்நூலின் மூலம் தனது அடுத்த அடியை எடுத்து வைக்கிறது.
அணு முதல் அண்டம் வரையிலும் அறிவியலின் பிரிவுகளான இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலின் பல பகுதிகளையும் பாடியுள்ளார் கவிஞர்.
உதாரணத்திற்கு ஒரு கவிதையையும், சில புதிர்களையும் பதிவிடுகிறேன்.
கண்ணாடி என்னும் தலைப்பிலான பாடல்,
“கடுத்தது காட்டும் முகம்போல
அடுத்தது காட்டும் கண்ணாடி
ஒவ்வொரு வீட்டிலும் பார்த்திடலாம்
உருவம் பார்க்கும் கண்ணாடி
சீவி முடித்து அலங்கரித்து
சிங்காரிக்க கண்ணாடி
உருவம் மாற்றிக் காட்டாமல்
இடவலம் மாற்றிடும் கண்ணாடி
ரசம் பூசிய கண்ணாடி
சமதள ஆடி கண்ணாடி
புறங்கை போன்றது குவியாடி
உள்ளங்கை போன்றது குழியாடி
பாட்டி அணிகிறாள் கண்ணாடி
பார்வைக் குறைவுக்குக் கண்ணாடி
தாத்தா அணிகிறார் கண்ணாடி
தெளிந்த பார்வைக்குக் கண்ணாடி
பார்வைக் குறையைப் போக்குவது
ஆடி அல்ல, லென்சாகும்
எட்டப் பார்வைக்குக் குவிலென்சாம்
கிட்டப்பார்வைக்குக் குழி லென்சாம்”
ஆறாம் வகுப்பில் ஆரம்பிக்கும் ஒளியியல் பாடம் மேல் வகுப்பு வரை மிக முக்கியமான பாடமாக உள்ளது. இந்தப் பாடங்களின் முக்கிய கருத்துக்களை எல்லாம் தாங்கிய பாடலாக இது உள்ளது. இதை வகுப்பில் பாடும்போது பசுமரத்தாணிபோல இளம் மாணவர்கள் மனதில் பதிந்துவிடுவதை யார் தடுக்க முடியும். இதைப்போலவே அணு என்ற பாடலும். இதனையும் எட்டாம் வகுப்பில் அணு அமைப்பு பாடத்திற்கு ஊக்கமூட்டும் பாடலாக அளிக்கும்போது பாடம் பிடிக்காத மாணவன்கூட பாடல் பிடித்து அணுவினைப் பயில்கிறான். இதைப்போலவே 53 தலைப்புகளில் மிகச்சிறப்பான அறிவியல் பாடல்களை தன் நீண்ட நெடிய அனுபவத்தால் ஆக்கித் தந்துள்ளார் நூலாசிரியர்
இதைப்போலவே நூலின் கடைசியில் 24 அறிவியல் புதிர்கள்.விடுகதை வடிவில் இருக்கும் இப்புதிர்கள் நிச்சயம் குழந்தைகளின் சிந்தித்து விடையளிக்கும் ஆர்வத்தினை வளர்க்கும். உதாரணத்திற்கு சில புதிரைக் காண்போம்…
சிவப்பு மனிதன்
ஊர்சுற்றப் போனான்
நீல மனிதனாய்த்
திரும்பி வந்தான் அவன் யார்?
ஒரு குளித்தில் குளித்தான்
சிவப்பானான்
மறுகுளத்தில் குளித்தான்
நீலமானான்
அவன் யார்?
ஈரல் போல மென்மையாம்
எளிதில் அதை வெட்டலாம்
தண்ணீருக்குள் இருக்குமாம்
நீரில் மிதக்கச் செய்திட்டால்
காற்றுப் பட்டுச் சீறுமாம்
எடை குறைந்த உலோகமாம்…
எளிதில் பற்றி எரியுமாம்
காரவகை உலோகமாம்
கணித்து அதைக் கூறுவாய்!
இந்தப் புதிருக்கெல்லாம் விடை என்ன?
நீங்களே புத்தகம் வாங்கித் தெரிந்து கொள்ளுங்கள். அருமையான அனைவருக்குமான அறிவியல் நூல். நிச்சயம் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களின் சிந்தனையைத் தூண்டும்..