“மாஸ்கோவில் மழை பெய்தால் மாதவரத்தில் குடைபிடிக்கிறார்கள்” என்று உலக அரசியல் பேசுகிறவர்களைக் கேலியும் கிண்டலும் செய்த காலமும் ஒன்றிருந்தது. அந்நிலை சற்றே மாறிவருகிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக அமெரிக்கா ஆட்டங்கண்டால், அம்பத்தூர் தொழிற்பேட்டை கூட தள்ளாடும் என்பதனை மக்கள் உணரத்துவங்கியிருக்கிறார்கள். “பொருளாதார நெருக்கடி”, “crisis”, “recession” போன்ற வார்த்தைகள் எல்லாம் டீக்கடை விவாதங்களில் கூட தவறாமல் இடம் பெறுகின்றன. ஆனால் இவ்விவாதங்கள் எல்லாமே நமக்கு வாய்த்திருக்கிற ஊடகங்களின் மந்திர வார்த்தைகளை நம்பி ஒரு சிறிய வட்டத்திற்குள்ளாகவே நடப்பவையாகத்தானிருக்கிறது.
உலகின் எங்கோ ஒரு நாட்டின் மூலையில் நிகழ்கிற எந்தவொரு அரசியல் நிகழ்வும்/மாற்றமும் உலகின் மற்றனைத்து பகுதிகளையும் ஏதோவொரு வகையில் பாதிக்கிறது என்கிற உண்மையினை அறிந்து கொள்ளாமல், மாற்று உலகத்தின் எந்தக் கதவுகளையும் அசைத்துவிடக் கூட முடியாது. பின்லேடன் கொலைக்கும் அமெரிக்காவின் தேர்தலுக்கும், பாலஸ்தீன் மீதான தாக்குதலுக்கும் இஸ்ரேலின் தேர்தலுக்கும், ஆப்பிரிக்காவின் வறுமைக்கும் ஐரோப்பாவின் செழுமைக்கும், கோக் நிறுவனத்தின் இலாப உயர்விற்கும் கொலம்பியாவின் தண்ணீர் பற்றாக்குறைக்கும், பெட்ரோல் விலையுயர்வுக்கும் உலகின் பல போர்களுக்கும் எவ்விதத் தொடர்புகளும் இல்லை என்று இனியும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால், உலகின் வரைபடமே மாறியிருக்கிறது; நாடுகள் புதிதாக உருவாகியிருக்கின்றன; எல்லைக் கோடுகள் விரிவடைந்தும் சுருங்கியும் போயிருக்கின்றன. மூன்றாம் உலகப்போராக பனிப்போரும், நான்காம் உலகப்போராக உலகமயமாக்கப் போரும், ஐந்தாம் உலகப் போராக தேசங்களை திவாலாக்கும் பொருளாதார நெருக்கடிப் போரும் உலக மக்களை தொடர்ந்து வாட்டிக் கொண்டே வந்திருக்கின்றன. இவை குறித்தெல்லாம் உண்மையான தகவல்களோடு மக்களிடம் பேசுவதற்கு தொலைக்காட்சி, செய்தித்தாள் போன்ற எந்த ஊடகங்களும் தயாராக இல்லை. வெறும் பொழுதுபோக்கு ஊடகமாக மட்டுமே மக்களிடையே முன்னிறுத்தப்படுகிற சினிமா என்கிற ஊடகமும், தன்னால் இயன்றவரை உலக அரசியலை பேசாமல் மறுத்தோ அல்லது தவறாக சித்தரித்தோதான் வலம் வந்துகொண்டிருக்கிறது.
ஆண்டாண்டு காலமாக தமிழ் பேசும் நல்லுலகிற்கு, உலகத் திரைப்படமென்றால் ஆங்கில ஆலிவுட் திரைப்படங்களாகத்தான் இருந்து வந்திருக்கிறது. டைனோசர் முதல் டாம் க்ரூசு வரை தமிழ்பேசும் எந்தத்திரைப்படங்களும் உலக அரசியலின், உழைக்கும் மக்களின் உண்மை நிலையினை நமக்குச்சொல்லியதில்லை. பெரிய பெரிய கட்டிடங்களைக் காட்டியவர்கள், அதற்குள்ளே சுரண்டப்படுகிற மக்களின் உழைப்பை நமக்குக் காட்டியதில்லை. அதிலும், ‘அமெரிக்கா ஒரு சொர்கபுரி’ என்கிற மாயத்தோற்றத்தினை உலகமக்களின் மனதில் உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க ஆட்சியாளர்களைப்போலே அவர்களின் திரைப்படங்களும் பெரும்பங்கு வகித்து வந்திருக்கின்றன. தேசபக்தித் திரைக்கதைகள் எழுதி, பெரிய பெரிய கட்டிடங்களைக் காட்சியமைப்பில் வைத்து, மனிதன் வாழ்வதற்கான சிறந்த இடம் அமெரிக்காதான் என்று உலக மக்களின் மனதிலெல்லாம் கருத்துருவாக்கம் செய்வதன் பின்னணி என்னவாக இருக்க முடியும்? அமெரிக்க ஆட்சிமுறையும் முதலாளித்துவ போக்கும்தான் அந்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கான காரணம் என்பதை நம்முடைய பொதுபுத்தியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வலியுறுத்துவதன்றி வேறொன்றுமில்லை.
அரசியலற்ற ஃபேன்டசி திரைப்படங்களையும் ஆதிக்க அரசியலை மறைமுகமாகச் சொல்கிற அதிரடி ஆக்சன் படங்களும்தான் நமக்கு உலகத் திரைப்படங்களாக திணிக்கப்படுகின்றன.
மிகச்சமீப காலமாகத்தான் இணையம் என்கிற ஊடக வளர்ச்சியின் காரணமாக, நிறைய உலகத் திரைப்படங்களைப் பார்க்கிற வாய்ப்பு நம்மில் பலருக்குக் கிடைத்திருக்கிறது. எந்தத் தமிழ்ப்படம் எந்த நாட்டுத் திரைப்படத்திலிருந்து திருடப்பட்டிருக்கிறது என்பதனை எளிதில் கண்டுபிடித்துவிடும் அளவிற்கு பலருடைய உலகத் திரைப்பட அறிவு வளர்ந்திருக்கிறது.
நான் பார்த்த திரைப்படங்களை விவரிப்பதன் மூலமாக சில நாடுகளின் முக்கியமான அரசியல் நிகழ்வுகளையும், அரசியல் மாற்றங்களையும் சொல்ல வேண்டும் என்கிற ஆவலில் எழுதப்பட்ட கட்டுரைகள்தான் இவை. இக்கட்டுரைகளில் ‘திரைப்படம்’ என்கிற மொழிகுறித்தோ, திரைப்பட உருவாக்கத்தின் உள்விவரங்களான நடிப்பு, திரையியக்கம், படத்தொகுப்பு போன்றவை குறித்தோ எங்கேயும் பேசப்பட்டிருக்காது. கட்டுரைகளின் மையத் திரைப்படங்கள் பேசுகிற அரசியலையும் அதைச்சார்ந்த நிகழ்வுகளையும் மட்டுமே முன்வைப்பதுதான் இக்கட்டுரைத் தொகுப்பின் முக்கிய நோக்கம்.
- இ. பா. சிந்தன் (முன்னுரையில்)