பள்ளிக்கூடங்கள் பண்ணைகளாகவும், அதில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் பண்ணையார்களின் சேவகர்களாவும் மாறிவரும் இந் நாளில் எஸ். அர்ஷியாவின் `கரும்பலகை’ நாவல் வெளிவந்திருக்கிறது. புத்தகத்தின் அட்டையில் இருக்கும் உடைந்த சாக்பீஸ் துண்டுகள் இன்றைய அரசுப் பள்ளிகளின் அவல நிலையின் (சில அரசுப் பள்ளிகள் விதிவிலக்காக இருக்கலாம்) ஒரு குறியீடாகவேத் தோன்றுகிறது. நாவலாசிரியர், ”அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரும் வாழும் காலத்தில் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டவர்களாக இருப்பதில்லை. இதுவும் அதிகாரம் உருப்பெற்றக் காலத்திலிருந்தே தொடர்வதுதான்” என்கிறார். உண்மைதான்!
நாவலாசிரியர் அர்ஷியா அரசுப் பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களின் இட மாற்றம் சம்பந்தமாகப் படும் அக, புற அவஸ்தைகளையும், அதிலிருக்கும் அரசியலையும் பேசும் அதே தொணியில் தனியார் பள்ளிகளின் வணிக மனோபாவம் குறித்தும், ஊடகங்களின் ஆளுமையினால் சிறுநகரங்களில் உள்ளவர்கள் பேச்சியம்மாள், ரங்கநாயகி என்கிற பெயர்களை தீபிகா படுகோனே என்றும், ஜெனிஃபர் லோபஸ் என்றும் மாற்றிக் கொண்டு வலம் வருவதையும், வீதிக்குவீதி சாராயக்கடைகளைத் திறக்கும் அரசு கல்விசார் செயல்பாடுகளில் வேகம் காட்டுவதில்லை என்பதையும் சமூக அக்கறையுடன் கதாநாயகி ராஜலட்சுமி மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
எது வேண்டுமானாலும் மாறலாம் ஆனால் `பணம் பாதாளம் வரை பாயும்’ என்கிற முதுமொழி மட்டும் என்றைக்கும் மாறாது அரசு இயந்திரங்களில் நிலைத்து நிற்கிறது. நிற்கும். குடும்பச் சூழ்நிலை, செலவினங்கள் ஆகியவை கருதி இடமாற்றத்தில் `மாற்றம்’ செய்வதற்கு கல்வித் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கும், அமைச்சர்களுக்கும், அவர்களின் அடிப்பொடிகளுக்கும் பல லட்சங்களை தாரை வார்க்க வேண்டியிருப்பது குறித்தும், அரசுப்பள்ளிக்குப் பொருட்கள் வாங்குவதில் கமிஷன் அடிப்பது குறித்தும் நாவலில் பரவலாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பதினெட்டு ஆண்டுகளில் பதினைந்து ஆண்டுகாலம் தனியார் பள்ளியில் தேர்வு முடிவில் முதலிடத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, கட்டுப்பாடுகள் நிறைந்த, கடுமையான நிறுவனம், இல்லை, தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த ராஜலட்சுமியின் குடும்பப் பழமொழியான `அரைக்காசானாலும் அரசாங்கக்காசு’ என்பதற்கேற்ப அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடத் தேர்வுக்குச் செல்ல, அவள் தேர்ந்தெடுக்கப்பட்டு `கருத்தப்பாண்டியன் வலசு’ என்கிற இடத்தில் உள்ள பள்ளிக்கு ஆசிரியையாக நியமிக்கப்படுகிறாள். அப்போது அவள் அங்கிருக்கும் அலுவலரிடம், `மதுரைக்குப் பக்கத்துல வேகண்ட் ஏதும் இல்லையா சார்?’ என்று கேட்க அதற்கு அவர் சினிமா பாணியில் `இருக்கும்… ஆனா இங்கே இல்லை’ என்று நக்கலாகப் பதிலளிக்கிறார். அதாவது வேகண்ட் இருக்கிறது ஆனால் கவுன்சலிங் / பணியிடத் தேர்வின் போது பார்வைக்கு ஒட்டப்படும் பட்டியலில் அந்த ஊர் பெயர்கள் இருக்காது. ஏனெனில் அவை ஏற்கனவே `வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு வேண்டியவர்களுக்கு விற்கப்பட்டிருக்கும்’.
வலசுவில் உள்ள பள்ளியில் சேர்வதற்கு அவள் தன் கணவன் தனசேகருடன் போகும் போது, `இது ரொம்ப இண்டீரியரோ?’ என்று கேட்க அதற்கு தனசேகர், “ டாஸ்மாக்கெல்லாம் இருக்குல. அப்ப இண்டீரியரெல்லாம் இல்ல. ஒன்னிய விட்டுட்டுப் போகும்போது, ஒரு கட்டிங் போட்டுட்டே போகலாம்!’ என்று கேலியுடன் சொன்னாலும் இன்றைக்கு அதுதான் நிதர்சனம்.
வலசுவிற்குப் பிறகு குள்ளப்பன் பட்டி, புதிரா குளம் என பணியிடங்கள் மாறி பொரண்டையூர் வருகிறாள். அங்கு வேலையில் சேர்வதற்கு முன் அந்த ஊர் எங்கேயிருக்கிறது என்பதை `கூகுளால்’ கூட கண்டுபிடிக்க முடியவில்லை (?!) என்று தெரியவரும் போது அவளுக்கு மனதில் ஒரு பய உணர்ச்சி ஏற்படுகிறது.
இறுதியில் குடும்ப சூழ்நிலை கருதி தான் வசித்து வரும் மதுரைக்கு அருகில் உள்ள திருப்புவனத்தில் வேகண்ட் இருக்கிறது என்பதறிந்து கஷ்டப்பட்டு இரண்டரை லட்சம் திரட்டுகிறாள் ஆனால் அரசு அதிகாரத்தில் மாற்றம் ஏற்பட, இரண்டரை, மூன்றாக உயர்கிறது. ராஜலட்சுமியால் மேலும் 50,000 ரூபாய் திரட்ட முடியவில்லை எனவே அவளுக்குப் பதிலாக இன்னொருவருக்கு நியமன உத்தரவு தயாராகிறது.
அவள் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் போது தங்கியிருந்த விடுதியில் மாவட்ட சிறப்பு மலர் ஒன்றைப் படிக்க நேரிடுகிறது. அதில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள மண்ண வேளாம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கூடம் பற்றியும், நெடுவாசல் வடக்குப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் கருப்பையன் கூறியிருந்த செய்தியையும் – “ நம்ம அரசாங்கம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நிறைவான ஊதியம், ஒரு மாதம் வரலைனாலும் சம்பளம், மழை பெய்தால் விடுமுறை, சம்பளத்துடன் கூடியப் பயிற்சி, பெண் ஆசிரியர்களுக்கு பேறுகால விடுமுறை, இவ்வளவும் கொடுக்குது. அது போக மாணவர்களுக்கு நாலுமுறை சீருடை, பாடப்புத்தகங்கள், எழுது பொருட்கள், காலணினு படிப்பதற்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செஞ்சு கொடுக்குது. இவ்வளவு சலுகை, வசதிகளுக்குப் பிறகும் கிராமப்புற மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கலேனா, தப்பு அரசாங்க மேலே இல்ல நம்ம மேலேதான்”- படிக்கிறாள். அவள் தான் வேலை பார்த்துவரும் பொரண்டையூர் பள்ளியையும் மாதிரிப் பள்ளியாக மாற்றிக் காட்ட வேண்டுமென்று நினைத்து திருப்புவனம் போஸ்ட்டிங் கிடைக்காத ஏக்கத்தைத் தணித்துக் கொள்கிறாள்.
ஆனால் விதி விடவில்லை, `இன்னிக்கு அஞ்சு மணிக்கு சி.இ.ஓவ நீங்க சந்திச்சுட்டு வீட்டுக்குப் போங்க டீச்சர்!’ என்று செல்லிடைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட அவள் `அடுத்து எந்த ஊரா இருக்கும்?’ என தன்னைத் தானேக் கேட்டுக் கொள்வதுடன் நாவல் முடிகிறது.
இதற்கு முன்னுரை எழுதியிருக்கும் தி.பரமேசுவரி கூறியிருப்பது போல சமூகத்தின் பல அடுக்குகளைச் சேர்ந்த மனிதர்களும் இந்நாவலை வாசிக்க வேண்டும். குறிப்பாக ஆசிரியர்கள் இந்நாவலைப் படித்து, தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் அதிகாரத்தில் இருப்பவர்களும் ஆசிரியர்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு சமூகத்தில் அவர்களின் அந்தஸ்து உயர உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் இல்லையெனில் மாணவர்கள் சேரவில்லை என்பதற்காக அரசுப்பள்ளிகளை மூட வேண்டிய* சூழ்நிலை உருவாகும். கரும்பலகை – சமூகப் பிரக்ஞையுள்ள ஒரு நாவல்!
(*தி இந்து இணையத்தள செய்தி: திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய மாணவர்கள் சேராததால் 2 அரசுத் தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டன. இன்னும் 10 பள்ளிகள் மூடப்படும் அபாயம்! – ஆகஸ்ட் 10, 2014)