இன்று உலகெங்கிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் புரட்சிகர ஊற்றெழுச்சி அரபு மக்களின் பேரெழுச்சி ஆகும். ஸ்பெயினின் இன்டிக்னோக்கள், வால்ஸ்டீரிட்டைக் கைப்பற்றுவோம் என எழுந்த அமெரிக்க மூலதன எதிர்ப்பாளர்கள், இலண்டன் தெருக்கிளர்ச்சியாளர்கள் என அது உலகெங்கிலும் தனது தடங்களை விட்டுச் சென்றிருக்கிறது. இஸ்லாமிய மரபில் ஜனநாயகம் என்பது சாத்தியமில்லை என்பவர்களை மறுத்தபடி, அரபு உலகெங்கிலும் எழுந்த ஜனநாயகத்திற்கான வெகுமக்கள் திரள் எழுச்சி அது. மரபார்ந்த கருத்தியல் வரையறைகளைத் தாண்டி, காலனியச் சுமைகளை தமதுதோள்களில் இருந்து உதறியபடி, அரபு நிலப்படத்தை மறுவரையறை செய்த மக்கள் எழுச்சி அது. இஸ்லாம் என்பது வன்முறை வாழ்முறை என்பதனை மறுத்து, வன்முறையல்லாத புதிய மக்கள்திரள் போராட்டமுறை குறித்த தேடலை உலகெங்கிலும் எழுப்பியது அரபுப் புரட்சியின் அனுபவங்கள். இன்றைய உலகில் அரபுப் புரட்சியின் அரசியல் முக்கியத்துவத்தையும், புதிய போராட்ட வடிவங்களுக்கான அதனது தேடலையும் ஆவணப்படுத்தும் முகமாக எழுதப்பட்ட கட்டுரைகள் இங்கு நூல் வடிவம் பெற்றுள்ளன.
இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் துனீசியாவில் கிளர்ச்சி தொடங்கிய 2010 டிசம்பர் 17முதல் 2012 அக்டோபர் வரை 20 மாத காலகட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள். இப்போது தொகுத்துப் பார்க்கிறபோது இக்கட்டுரைகளில் கணிசமானவை, கட்சி சார்ந்த தமிழக மார்க்சிஸ்டுகளுக்கு எதிர்வினையாக எழுதிய கட்டுரைகளாகவே இருக்கின்றன. காரணம், இவர்கள் அரபுப் புரட்சியை எதிர்மறையாக அணுகினர்; வெறுமனே ஏகாதிபத்திய எதிர்ப்பு எனும் வகையில் மட்டுமே விலகி நின்று பார்த்தனர். மக்களை ஒடுக்கிக் கொண்டிருக்கும் அரபு சர்வாதிகாரிகளுக்கு ஆதரவான பார்வை கொண்டிருந்தனர். இந்தவகைக் கட்டுரைகள் அனைத்துமே தமிழகத்தை மையமாகக்கொண்ட கீற்று இணைய இதழிலேயே தொடர்ந்து எழுதப்பட்டன. அரபுப் புரட்சியின் நெடுங்கால அங்கமான பாலஸ்தீனம் குறித்த இரு கட்டுரைகள் உயிர்மை இதழிலும், நோர்வே சுவடுகள் இதழிலும் வெளியாயின.
பத்தாண்டுகளின் முன் சுவடுகளில் வெளியான ஹனன் ஹஸ்ராவியின் மொழிபெயர்ப்புக் கட்டுரை விதிவிலக்காக, இத்தொகுப்பின் உள்ளடக்க ஒருமை கருதியே சேர்க்கப்பட்டது.
அரபுப் புரட்சியில் மட்டுமல்ல, பொதுவாகவே எதிர்ப்பு அரசியலில் தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் கருதி, விக்கிலீக்ஸ் தோற்றுநர் ஜூலியன் அசாஞ்சே குறித்த கட்டுரையும், அரபுப் புரட்சியை உடனுக்குடன் பிம்பங்களாகப் பதிவு செய்த அல்ஜஸீரா ஊடகம் குறித்த கட்டுரையும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. கறுப்பின வழித்தோன்றலான பரக் ஒபாமா ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது உலகெங்கிலும் அந்நிகழ்வு ஆரவாரமாக வரவேற்கப்பட்டது. அமெரிக்காவின் கொள்கை நிலைப்பாட்டில் அந்த மாற்றம் எந்த ஆக்கவிளைவையும் ஏற்படுத்த முடியாது என்பதை வலியுறுத்தி அக்கட்டுரை எழுதப்பட்டது.
இதுவன்றி மிகமுக்கியமான இரு கட்டுரைகள் அரபுப் புரட்சியை ஒட்டி இரு பெரும் இடதுசாரிச் சிந்தனையாளர்களான தபாஸி, ஜிஸாக் இடையில் மூண்ட கோட்பாட்டு விவாதங்களையும், அரபுப் புரட்சியின் போட்ட வழிமுறையில் பாதிப்புச் செலுத்தியதாகச் சொல்லப்படும் அமெரிக்க அமைதிவழிக் கோட்பாட்டாளர் ஜீனே சார்ப் குறித்த விவாதங்களையும் தொகுக்கும் முகமாக எழுதப்பட்டன. அறுதியாக, அரபுப் புரட்சியின் உலக அளவிலான தாக்கம் குறித்ததான வால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் எழுச்சி, இலண்டன் இளைஞர் கலகம் ஆகியன குறித்தும் இரு கட்டுரைகள் தொகுப்பில் இருக்கின்றன.
அரபுப் புரட்சி எழுப்பிய பிரச்சினைகள், தோற்றுவித்த நம்பிக்கைகள், அதனுடைய முரண்கள் என்பதற்கு அப்பால், இதனை எவ்வாறு இடதுசாரிகள் புரிந்துகொள்ள வேண்டும் எனும் இறுதிக் கேள்விக்கான பதில்தேடலை இந்தத் தொகுப்பின் கடைசிக் கட்டுரை கொண்டிருக்கிறது. இந்த வகைக் கோட்பாட்டுக் கட்டுரைகள் இலண்டன் குளோபல் தமிழ் இணையத்துக்கெனவே பிரத்யேகமாக எழுதப்பட்டன. அரபுப் புரட்சி, அடிப்படையில் வன்முறை வழியிலான புரட்சி அல்ல. ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் இலட்சியங்களும் அதற்கு இல்லை. திரட்டிக் கொள்ளப்பட்ட திட்டவட்டமான கொள்கைகள், ஒன்றிணைந்த அரசியல் தலைமை ஆகியவற்றையும் அது கொண்டிருக்கவில்லை. இந்த எழுச்சியைப் புரட்சி எனச் சொல்ல முடியுமா என்ற கேள்வியையும் விமர்சகர்கள் எழுப்புகிறார்கள். வன்முறையிலான ஆயுதப் போராட்டங்களுக்கு எதிர்காலமில்லை எனும் சூழலில், பயங்கரவாதத்திற்கு எதின போர் முனைப்புப் பெற்றுவிட்ட சூழலில், இந்தக் கருத்தாக்கத்தை கியூபா முதல் சீனா வரையிலான மார்க்சிஸ்ட்டுகளும் ஏற்றுக்கொண்டுவிட்ட சூழலில், வன்முறையற்ற புதிய போராட்டத்திற்கான, தந்திரோபாயங்களுக்கான மக்கள்திரள் பாதையை அரபுப் புரட்சி தோற்றுவித்தது என அதனைக் காண்பாரும் இருக்கிறார்கள்.
அரசியல் கட்சிகள் கடந்த சிவில் சமூகத்தின் எழுச்சியே அரபுப் புரட்சி என மதிப்பிடுவாரும் இருக்கிறார்கள். தமிழகத்தில் தோன்றிய கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கம், முல்லைப்பெரியாறு எதிர்ப்பு இயக்கம், மரணதண்டனை எதிர்ப்பு இயக்கம் என்பவற்றில், அதன் மக்கள் திரள் பாதையில் அரபுப் புரட்சியின் தாக்கங்களை அதனுடைய பயிலுநரான என்னால் காணமுடிகிறது. மனித உரிமை, சிவில் சமூக உரிமை, சமூகநீதி, சூழலியல், பெண்ணுரிமை, மூலதன எதிர்ப்பு, நிலத்திற்கான உரிமை போன்றவற்றை முன்வைத்த புதிய சமூக இயக்கங்களே இலத்தீனமெரிக்க நாடுகளில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வர வழிசமைத்தன. இன்று ஆட்சிப் பொறுப்பேற்ற பின் அந்த இடதுசாரிகளுக்கு அந்த இயக்கங்களே சவாலாகவும் இருக்கின்றன. அதிகாரத்தில் அமர்ந்த இடதுசாரிகள் இன்று இந்தப் புதிய சமூக இயக்கங்களின் கோரிக்கைகளிலிருந்து அந்நியமாகி இருக்கிறார்கள். விலகி நிற்கிறார்கள். பல சமயங்களில் எதிரிகளாகவும் இருக்கிறார்கள். இதற்குக் காரணமாக அவர்தம் தொழிலாளி வர்க்க மையவாதத்தையும், ஏகாதிபத்திய எதிர்ப்பில் அனைத்தையும் கரைத்துவிடுகிற அவர்களது மரபார்ந்த பார்வைகளையும் காணமுடியும். இச்சூழலில் பின்சோவியத், பின் புட்சிகர, பின்செப்டம்பர் யுகத்தின் பன்னாட்டு அசியல் எழுச்சியாக அரபுப் புரட்சி இருக்கிறது. அது பல்வேறு நம்பிக்கைகளையும், விவாதங்களையும், புதிய போராட்ட வடிவங்களுக்கான தேடல்களையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.
இந்த நூலிலுள்ள கட்டுரைகள் அரபுப் புரட்சியின் அத்தனை முரண்பாடுகளுடனும் அதனுடைய கட்டுதளையற்ற சுதந்திர வேட்கையை ஆவணப்படுத்தியிருக்கிறது. வெகுமக்கள் திரள் போராட்ட வடிவங்களை அவாவுகிற எவருக்கும் அரபுப் புரட்சி என்பது பல்வேறு படிப்பினைகளையும், காத்திரமான சிந்தனைகளையும் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் நான் திடமாகச் சொல்வேன். மட்டற்ற சுதந்திரத்துடன் எனக்கு எழுத வாய்ப்பளித்த எனது நண்பர்களான கீற்று ரமேஷ், நடராஜா குருபரன், மனுஷ்யபுத்திரன், இளவாலை விஜயேந்திரன் ஆகியோருக்கு இத்தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்த காலங்களில் மிகுந்த உற்சாகத்துடன் அவ்வப்போது என்னுடன் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட எனது அருமை நண்பர் லிங்கராஜா வெங்கடேசுக்கு எனது அன்பு. தொகுப்பை நேர்த்தியுடன் அழகுறக் கொணரும்
அடையாளம் பதிப்புக்குழுவினருக்கு எனது அன்பும் நன்றியும் உரியது.
- யமுனா ராஜேந்திரன் (முன்னுரையில்)