அந்தோனியோ கிராம்சி – தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்

அந்தோனியோ கிராம்சி – தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் குறிப்புகள்

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த மார்க்சியர்களில் ஒருவர், அந்தோனியோ கிராம்சி. இத்தாலியில் பிறந்த கிராம்சி, டூரின் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். முதலாம் உலக யுத்தம் துவங்கியதும், தன் படிப்பை உதறித் தள்ளி விட்டு, முழுநேர தொழிற்சங்கவாதியாக மாறினார் கிராம்சி.

இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பில் தீவிரமாகப் பணியாற்றிய அவர், முசோலினியின் பாசிச ஆட்சிக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராடினார். இதற்காக, 1926ல் கைது செய்யப்பட்டார்.

பாசிச அரசு அவருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. பாசிச சிறையின் மோசமான ஒடுக்குமுறையும் கொடிய நோயும் இவரை உருக்குலைத்தன. மருத்துவ காவலில் சிகிச்சை பெற்ற கிராம்சி, தன், 46வது வயதில் மரணமடைந்தார். அவர் சிறையில் இருந்த காலத்தில், இத்தாலியின் வரலாறு, கல்வி, பொருளாதாரம் குறித்த தன் எண்ணங்களையும் மாற்றுச் சிந்தனைகளையும், 3,000 பக்கங்கள் கொண்ட, 32 குறிப்பேடுகளில் எழுதினார். கிறுக்கலாகவும், சங்கேத மொழியிலும் எழுதப்பட்ட அந்த குறிப்புகள், சிறையிலிருந்து மீட்கப்பட்டு இத்தாலியில் வெளியிடப்பட்டன.

கடந்த, 1929க்கும், 1935க்கும் இடையில், சிறையில் கிராம்சி எழுதிய குறிப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை வான்முகிலன் சிறப்பாகத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

பண்பாட்டினை கட்டுப்படுத்துதல்

கிராம்சியின் பண்பாட்டு மேலாண்மை பற்றிய எண்ணங்களும், குடிமைச் சமூகம் பற்றிய கருத்தாக்கமும், மிக முக்கியமான கோட்பாடுகள். பொதுவாக ஆளும் வர்க்கங்கள், மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு வன்முறையை மட்டும் தேர்வு செய்வதில்லை. பொய்யான பண்பாட்டுப் பிம்பங்களை, கருத்தாக்கங்களை உருவாக்கி, மக்களை நம்பவைத்து, தங்களின் அதிகாரத்தை நிறுவிக் கொள்கின்றன. ஒரு நாட்டைக் கைப்பற்றும் வேற்றுநாட்டு அரசன், அந்த நாட்டின் பண்பாட்டினை ஏற்றுக் கொண்டால், எளிதாக அவனால் அரசாள முடியும்; மக்கள் தன் பண்பாட்டினை மதிக்கும் ஒருவனை எளிதாக ஏற்றுக் கொண்டுவிடுவர்.

உண்மையில் இது ஒரு தந்திரம். அதிகாரம் இப்படிப் பண்பாட்டினை தனதாக்கி கொள்வதன் வழியே, தன் அதிகாரத்தை எளிதாக நிறுவி கொள்கிறது. இதற்கு மாற்றாக இன்னொரு வழியும் இருக்கிறது. அது, அந்த நாட்டின் தனித்துவமிக்கப் பண்பாட்டினை அழித்துவிட்டு, வேறொரு பண்பாட்டினை, மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்வது.
இதைக் கட்டாயமாகவோ, பொய்யான பரப்புரைகள் மூலமாகவோ நிறைவேற்றிக் கொள்வதும் அதிகாரத்தின் இயல்பே என்கிறார் மெக்கிவெல்லி. அதிகாரத்தை நிறுவுவதில், பண்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆகவே, பண்பாட்டினை கட்டுப்படுத்துதல் என்பது, சமூகத்தைக் கட்டுப்படுத்துதல் என்பதாகவே உருமாறுகிறது.
இந்தக் கோட்பாட்டினை முன்னிலைப்படுத்தி, கிராம்சி, இத்தாலியின் வரலாற்றையும் பண்பாட்டினையும், தெளிவாக விளக்குகிறார்.

அறிவு ஜீவிகள் யார்?

கிராம்சி வலியுறுத்தும் ‘பண்பாட்டு மேலாண்மை’யை, நாம் இந்திய சமூகத்தோடு பொருத்திப் பார்ப்பதன் வழியே, இந்தியாவின் வரலாற்றை, காலனியாக்கப்பட்ட விதத்தை, நாம் வேறுவிதத்தில் புரிந்து கொள்ள முடிகிறது. இன்றைய நவீனயுகத்தில், ஏகாதிபத்தியம் பண்பாட்டின் பெயரால் நுழைந்து, சமூகக் கட்டமைப்புகளை மெல்ல அழித்து ஒழிக்கிறது.

இரண்டு விதங்களில் இந்த செயல் நடைபெறுகிறது. ஒன்று, மரபான மூடநம்பிக்கைகளையும், பழக்கவழக்கங்களையும் ஆதரிப்பதன் மூலமும், அதற்கு எதிரான மாற்றுச் சிந்தனைகள் உண்டாகாமல் தடுப்பதன் மூலமும். இரண்டாவது, முற்றிலும் வேறுபட்ட அந்நிய பண்பாட்டை, சந்தை காரணங்களுக்காக உள்ளே நுழைத்து, அதை உயர்வான பண்பாடு என, மக்களை நம்ப வைத்து மாயையை உருவாக்குகிறது. இதுதான் ஏகாதிபத்தியத்தின் அடையாளம் என காட்டுவது என்கிறார் கிராம்சி. அறிவுஜீவிகள் என்போர் யார், அவர்கள் எதனால் அறிவுஜீவிகளாக அடையாளம் காணப்படுகின்றனர், ஒவ்வொரு சமூகக் குழுவும் தன் சொந்த அறிவுஜீவி வகையினரை உருவாக்கிக் கொள்கிறதா என ஆராயும் கிராம்சி, அதன் உருவாக்கத்தின் பின்னுள்ள கருத்தியல்களைத் துல்லியமாக ஆராய்கிறார்.

நகர்ப்புற அறிவுஜீவிகள், எப்படி கிராமப்புற அறிவு ஜீவிகளிடமிருந்து வேறுபடுகின்றனர் என்பதை ஆராயும் கிராம்சி, இந்தியாவிலும், சீனாவிலும், அறிவுஜீவிகளையும் மக்களையும் பிரிக்கும் இடைவெளி, மதரீதியான தளத்தில் வெளிப்படுகிறது எனக் குறிப்பிடுகிறார்.

கல்வி பற்றிய கிராம்சியின் எண்ணங்கள், முக்கியமான மாற்றுச் சிந்தனைகளாக முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக கல்விக்கும் வர்க்கத்திற்குமான உறவு, உத்தியோகமயக் கல்வி, கல்வி பற்றிய சிந்தாந்தம் ஆகியவற்றை விரிவாக ஆராயும் கிராம்சி, சமூக நடவடிக்கைகளில் பங்குபெற ஒருவனின் கல்வி, எவ்வாறு துணை நிற்க வேண்டும் என, விளக்குகிறார். இதற்காகப் பொதுப்பள்ளி உருவாக்கத்தின் பின்புலத்தையும், அதற்கான கல்வி கொள்கைகள் பற்றியும் நுட்பமாக எழுதியிருக்கிறார்.
பொருளாதாரம், வர்க்கம் என்ற அளவைகளை அடிப்படையாகக் கொண்டு, மேற்கு ஐரோப்பியச் சூழல்களில் மார்க்சியக் கோட்பாடு உருவானது.

ஐரோப்பா மட்டுமின்றி, மூன்றாம் உலக நாடுகளிலும் நிறவெறி, ஆணாதிக்கம், ஜாதி அமைப்பு, பழங்குடிச் சமூகங்கள், தேசிய இன அடையாளங்கள் போன்ற சூழல்களை எதிர்கொள்ளும்போது, என்ன விதமான நிலைப்பாடுகளை முன்வைக்கிறது, என்ற கேள்வியை எழுப்பும் பேராசிரியர் ந.முத்துமோகன், தனது ‘பன்மீயக் கட்டமைப்புகளும் மார்க்சியமும்’ என்ற கட்டுரையில், 20-ம் நூற்றாண்டின் மத்தியில், பன்மீய அமைப்புகள் என்ற யதார்த்தத்தை, ஏதோ ஒருவகையில் சந்தித்து, அதை எதிர்கொண்டோராகக் கிராம்சியையும் அல்த்தூசரையும் குறிப்பிடுகிறார்.

அரசியல் ஆவணம்: கிராம்சி, பண்பாட்டு அரசியல், குடிமைச் சமூகம் போன்ற கருத்தாக்கங்களைச் சென்று சேர்ந்தவர். அந்தோனியோ கிராம்சியின் ‘ஹெஜிமோனி’ என்ற கருத்தாக்கம், தமிழில் மேலாண்மை என்று மொழிபெயர்க்கப்படுகிறது.

அந்த கருத்தாக்கம், 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில், தொழிலாளர் வர்க்க மேலாண்மை என்ற பொருளில் ஒலித்தது உண்மைதான். ஆயின், அதை கிராம்சி பயன்படுத்தியபோது, கிராம்சிக்குப் பின் எடுத்தாளப்படும்போது, அதற்கு ‘மேலாண்மை’ என்ற பொருள் அவ்வளவு சரியானதாக அமைவதில்லை.

பலவகைச் சமூக முரண்களை ஒன்றுபடுத்தும் அரசியலை, அது முன்வைக்கிறது. ஏதாவது ஒருவகைச் சமூக முரணை முந்தியதாகக் காட்டாமல், முரண்களை ஒருங்கிணைக்கும் அரசியலை அது முன்மொழிகிறது என, ந.முத்துமோகன் குறிப்பிடுவது, இந்த நூலை வாசிக்கும் போது கவனிக்க வேண்டிய ஒன்றாகத் தோன்றியது.
கிராம்சியைப் புரிந்து கொள்வதும், அவரிடமிருந்து பாடம் கற்றுக்கொள்வதும், மாற்று அரசியலுக்கும், பொதுவுடைமை சித்தாந்தத்தின் அடுத்த நிலைக்கும், மிகவும் உபயோகமாக இருக்கும். அந்த வகையில், இது மிக முக்கியமான அரசியல் ஆவணம்.

(நன்றி: தினமலர்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp