உலக வரலாற்றில் மிகவும் முக்கியமான பத்தாண்டு என்று 1960-களைச் சொல்லலாம். அப்போதுதான் ரேச்சல் கார்சன் எழுதிய ‘மவுன வசந்தம்’ வெளிவந்தது. உலக அளவில் சூழலியல் சார்ந்து வெளிவந்த முதல் படைப்பு. ‘காட்டுயிர்ப் பாதுப்புக்கான பன்னாட்டு நிதியம்’ (டபிள்யு.டபிள்யு.எஃப்), ‘கிரீன்பீஸ்’ போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாகப் பணியாற்றும் அமைப்புகள் தொடங்கப்பட்டன. அதே பத்தாண்டில்தான் இந்தியாவில் மாபெரும் பஞ்சம் நிலவியது. இன்றைக்கு நம் விவசாயம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு மூல காரணமாகச் சொல்லப்படும் ‘பசுமைப் புரட்சி’ அப்போதுதான் கொண்டுவரப்பட்டது.
தமிழ் இலக்கியத்தில் சுற்றுச்சூழல் குறித்துப் பேசிய முதல் நாவலாக அறியப்படும் ‘சாயா வனம்’ அந்தப் பத்தாண்டில்தான் (1968) வெளிவந்தது. ‘வாசகர் வட்டம்’ அதை வெளியிட்டது. தன்னுடைய 25 வயதில் இதை எழுதிய சா.கந்தசாமிக்கு, இதுதான் முதல் நாவல். இது ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்த நாவலுக்கு, இது பொன்விழா ஆண்டு.
தஞ்சைக்கு அருகில் உள்ள சாயாவனம் என்ற ஊர்தான் நாவலின் கதைக் களம். அங்கு பரம்பரைப் பரம்பரையாகக் கடத்தப்பட்டுவரும் புளியந்தோப்பை விலைக்கு வாங்கி, அந்தத் தோப்பை அழித்து, அங்கு கரும்பு ஆலை ஒன்றைக் கட்ட நினைக்கிறான் கதையின் நாயகனான சிதம்பரம். அவனுடைய கனவு நிறை வேறியதா என்பதுதான் கதை. புளியந்தோப்பு என்பது வெறும் அடையாளத்துக்குத்தான். உண்மையில் அது ஒரு காடு. கந்தசாமியின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், அது ‘ஆரண்யம் போன்ற தோட்டம்’. சிதம்பரம் அந்தக் காட்டை எப்படி அழிக்கிறான் என்பதுதான் நாவலின் மையமாக இருக்கிறது. தனக்குத் துணையாகச் சிறுவர்கள் இருவரை வைத்துக்கொண்டு, அரிவாள், கோடரி போன்றவற்றைக் கொண்டு மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவற்றை வெட்ட ஆரம்பிக் கிறான். இயன்றவரையில் வெட்டிவிட்டு, மீதம் இருக்கும் பகுதிகளைத் தீயிட்டுக் கொளுத்தி விடுகிறான்.
காலம் காலமாக, அந்தத் தோப்புதான் ஊர் முழுவதற்கும் புளியைக் கொடுத்துக்கொண்டிருந்தது. அந்தத் தோப்பை அழித்த பிறகு, வேறு ஊர்களிலிருந்து புளியை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால் அந்தப் புளி, கிராம மக்கள் யாருடைய மனதையும் நிரப்பவில்லை. அந்த ஊர் ஆச்சி ஒருவர் சொல்வதுபோல, ‘புளியெ வாயிலெ வைக்க முடியல்லே’. இறுதியில், அவன் நினைத்ததுபோல கரும்பு ஆலையைக் கட்டிவிடுகிறான். ஆனால், அதனால் அவனுக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைத்ததா என்றால், அது பெரிய கேள்வி.
அந்த ஆச்சி அவனிடம் புளியைப் பற்றிச் சொல்லும்போது, அந்த ஊருக்கு அவன் வந்த போது இருந்த புளிய மரங்கள் அவன் நினைவில் படர்கின்றன. அப்போது, அவனுக்குள் ஏதோ ஒரு கலக்கம் வந்துவிடுவதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறார் கந்தசாமி. அந்த உணர்வு நமக்கும் படர்ந்துவிடுகிற கணத்தில், இந்தப் படைப்பு வெற்றிபெற்றுவிடுகிறது.
எந்த ஒரு திடீர்த் திருப்பங்களும் இல்லாத, மிகவும் எளிமையான கதை. அதைவிட எளிமை, ஆரவாரமற்ற மொழி நடை. யதார்த்தமான கதை மாந்தர்கள். உழைப்புக்குக் கூலியாகப் பணம் வாங்காமல் நெல் கேட்கிற, நெல்லைக் கொடுத்து நல்லெண்ணெய் வாங்குகிற பண்டமாற்றுக் கலாச்சாரம் என நாவலின் கட்டமைப்பு புதுமையான ஒரு கதை சொல்லல் முறையைக் கொண்டுள்ளது. 1960-களின் காலத்துக்கு அது புதுமைதான்! பணப் பயிர்த் தொழில் ஒன்றுக்காகக் காட்டை அழிப்பது என்கிற விஷயமே அப்போது புதியதுதான். அதை எழுத்தில் கொண்டுவந்தது, தமிழ் இலக்கியத்துக்குப் புதிய திறப்பை வழங்கியது. ஆனால், சா.கந்தசாமி, சுற்றுச்சூழலைப் பேசுகிற நாவலாகத்தான் அது இருக்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டு எழுதவில்லை. சொல்லப்போனால், இந்த நாவலின் எந்த இடத்திலும், சுற்றுச்சூழலை, காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று பிரச்சார தொனியே இருக்காது. மாறாக, ‘சாயாவனம்’ என்கிற காடு எப்படி இருக்கிறது என்கிற விவரிப்புகள் மூலமாகவே, ‘அந்தக் காடு பாதுகாக்கப்பட வேண்டுமே’ என்கிற எண்ணத்தை நமக்குள் எழச் செய்துவிடுகிறார்.
‘ஒவ்வொரு செடியாக வெட்டி வீழ்த்திக்கொண்டே முன் நோக்கிச் சென்றுகொண்டிருந்தான் சிதம்பரம்’ என்று நாவலின் ஓரிடத்தில் சொல்லிவிட்டு, அடுத்த பத்தியில் ‘மரமும் செடியும் கொடியும் மனிதனோடு நடத்தும் ஒரு போராட்டம். ஒவ்வொரு அடியும் பலமான தோல்விதான் அவற்றுக்கு. ஆனால், தன்னு டைய எதிரியைக் கொடூரமாக - கர்வத்தோடு பலவீனப்படுத்தின. தற்காலிகமாகவாவது அவன் சோர்ந்து களைப்புற்றுப் போனான்’ என்று எழுதுகிறார் கந்தசாமி. இப்படி, நாவலின் பல இடங்களில் வனத்தைத் தன் எதிரியாகப் பார்க்கும் பார்வை பரவியிருக்கிறது. இதை எழுத்தாளரின் பார்வையாகக் கொள்ளத் தேவையில்லை. அப்படிச் செய்வது தவறு. அந்தப் பார்வை, கதை நாயகனின் பார்வை. அவ்வளவுதான். அப்படித் தான் பார்க்க வேண்டும்.
பிறகு, கந்தசாமி இப்படி எழுதுகிறார்: ‘அவன் சலிப்புற்று அமரும்போதெல்லாம், ஒரு மரமோ ஒரு செடியோ மெல்ல அசைந்து, மலர்களை எவ்விதப் பிரயாசையுமின்றி உதிர்க்கும்’. ஆம், இயற்கை அப்படித்தான் இருக்கும். என்னதான் மனிதன், இயற்கையைப் பல விதங்களில் பாதித்தாலும், அதிலிருந்து தன்னைப் புதுப்பித்துக்கொள்கிற, மீண்டெழுகிற தன்மை இயற்கைக்கு உண்டு. அதனால்தான், அது மனிதனை மீறிய பெரும் சக்தியாக இருக்கிறது.. ‘சாயாவன’மாக இருக்கிறது!
(நன்றி: தி இந்து)