உங்கள் அம்மா பழமையான எண்ணங்களை விடுத்து புதுமையாக இருக்கவேண்டுமென்று எண்ணியிருக்கிறீர்களா?உங்கள் அம்மா வசதியாக சல்வார் அணிந்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணியிருக்கிறீர்களா? ‘எதுக்கு இவ்ளோ கஷ்டபடறீங்க இந்த நீளமுடிய வைச்சுக்கிட்டு, கட் பண்ணுங்க’ என்று சொல்லியிருக்கிறீர்களா? ‘யாராவது ஏதாவது சொல்வார்கள்’ என்பதற்காக சிரமம் கொடுத்தாலும் தலைமுடியை குறைக்காமல் இருப்பவரா உங்கள் அம்மா?
அப்படியானால், உங்களுக்கும் எனக்கும் ஒற்றுமை இருக்கிறது.
பெரியம்மாவும், அம்மாவும் மாடர்னாக இருக்கவேண்டும் என்று நானும் ஆசைப்பட்டிருக்கிறேன். பெரியம்மா பொட்டு வைத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்பியிருக்கிறேன். நான் சைக்கிள் ஓட்டும் வயதில், அவர்கள் இருவரும் சைக்கிள் ஓட்டவேண்டுமென்றும், ஸ்கூட்டி ஓட்டியபோது அவர்களும் ஸ்கூட்டி ஓட்டவேண்டுமென்றும் சண்டை போட்டிருக்கிறேன். எட்டாவது படிக்கும்போது ‘சைக்கிள் ஓட்டுங்க’ என்று அம்மாவை நானும் குட்டியும் விழ வைத்து முழங்கையில் காயம் வர வைத்திருக்கிறோம்.
‘டீச்சர்னா கொண்டைதான் போடணுமா, குட்டி முடிலே கூட க்ரோக்கடைல் க்ளிப் வைச்சு கொண்டை போடலாம்’ என்றெல்லாம் முடியை வெட்ட ஐடியா செய்திருக்கிறேன். ‘ரிடையர் ஆகிட்டு என்கூடதானே இருப்பீங்க, அப்போ நான் சொல்றதைதான் கேக்கணும்’ என்று அதிகாரம் செய்திருக்கிறேன்.
பெரியம்மா, எண்ணத்தில் எனது நண்பர்களின் அம்மாக்களைவிட, முற்போக்காக இருந்தாலும், தோற்றத்தில் பழமையானவரே. எந்த சமூகக் கட்டுபாடுகளையும், அதன் நிழல் கூட என்மேல் படாமல் வளர்த்த பெரியம்மா , நான் கல்லூரி முடிக்கும் தருவாயில்தான் பொட்டிடவும், தலைமுடியை சிறிதாவது வெட்டவும் முன்வந்தார். ஏனெனில், அப்போது அவர் 45 வயதை தாண்டியிருந்தார். ‘வயசுக்கு வந்த பொண்ணு இருக்கு, இந்த அம்மா இப்படி ட்ரெஸ் பண்ணிக்குது’ என்று அந்த வயசுக்கு, இதற்கு மேல் எந்த சமூகமும் எதுவும் சொல்லவிட முடியாதில்லையா!
தோற்றத்திற்கே, அதுவும் இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டு பெண்மணிக்கே இவ்வளவு குழப்பங்கள் என்றால்….கடந்த நூற்றாண்டின் பெலகேயா நீலவ்னாவுக்கு எவ்வளவு உள்மனப் போராட்ட்ங்கள், குழப்பங்கள் இருந்திருக்கவேண்டும்? ஒரு புரட்சியாளரின் தாயாக அவர் தன்னை எத்தனை மாற்றிக் கொண்டிருந்திருக்க வேண்டும்?ஒவ்வொன்றையும் மாற்றிக்கொள்ள எவ்வளவு கடந்து வந்திருக்க வேண்டும்? அந்த வலிநிறைந்த… இல்லை, பழமையை உதறிய வலிமை நிறைந்த போராட்டத் தருணங்களை, உணர்ச்சி ததும்பும் கதை சொல்லல் மூலம் நம்மையும் அந்த காலத்திற்குள் கொண்டு செல்கிறது மாக்சிம் கார்க்கியின் “தாய்” நாவல்.
கல்லூரி காலத்தில் ரயில் பயணத்திற்கு வழித்துணையாக வீட்டிலிருந்த ‘தி மதர்’ நாவலை எடுத்து வாசித்திருந்தாலும் முதல் ஒன்பது அத்தியாயங்களுக்கு மேல் தாண்ட முடியவில்லை. அப்போது தாய் நாவலை என்னால் முழுமையாக ஏன் வாசிக்க முடியவில்லை என்று யோசித்து பார்க்கிறேன். அன்றைய இரசிய சமூகத்தின் கொந்தளிப்பான காலத்தைப் போன்றது இல்லை நம் சூழல். கட்டுப் பெட்டியாக மட்டுமே வாழ சபிக்கப்பட்டிருக்கும் தமிழ் சமூகத்தில் ஒரு இளம்பெண் தாய் நாவல் படிப்பதற்கான மன எழுச்சி இங்கே இருக்காதோ?
தற்போது, ‘தாயை’தமிழில் வாசித்தேன். அநேகமாக நாவல் முழுவதும் உண்மையாக நடந்தவையாகவே இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. அல்லது அந்த காலத்தின் வரலாற்றுணர்வை மாக்சிக் கார்க்கி தனது கலைப் பார்வையின் மூலம் மிகவும் நெருங்கியிருக்கலாமென்றும் தோன்றுகிறது.
பாவெல் எனும் புரட்சியாளரின் தாய் நீலவ்னா கொஞ்சம் கொஞ்சமாக தன் நிலையிலிருந்து எப்படி தனது மகனின் கருத்துகளால் ஈர்க்கப்படுகிறாள், உண்மையை புரிந்து கொள்கிறாள், புரட்சியாளர்களுக்கு உதவ உத்வேகம் கொள்கிறாள், தனது வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியை எப்படி கண்டடைகிறாள் என்பதை உணர்வு பொங்க சொல்லுவதோடு நம்மையும் அந்த தாயோடு பயணிக்க வைக்கிறது நாவல்.
ஒரு ஆலைகுடியிருப்பிலிருந்து ஆரம்பிக்கிறது பெலகேயா நீலவ்னாவின் கதை. புகைபோக்கிகளுடனும், தொழிலாளிகளை குறித்த நேரத்தில் வர ஆணையிடும் சங்குடனும் கம்பீரமாக நிற்கும் அத்தொழிற்சாலை அப்பகுதி மக்களை நாள்முழுதும் சக்கையாக உறிஞ்சியெடுக்கிறது. அவர்களது வாழ்க்கையில் குறிப்பாக ஆண்களது சந்தோஷம் என்பது குடிப்பதும் சண்டையிடுவதுமே. நீலவ்னாவின் கணவனும் இதற்கு விதிவிலக்கல்ல. கிட்டதட்ட இருபது வருடங்கள் கணவனிடம் அடியும் உதையும் வாங்கியே அவளது இளமைக்காலம் கழிந்துவிடுகிறது. அவளது கணவன் இறந்துவிட, நீலவ்னாவின் மகன் பாவெலும் அதே ஆலையில் வேலைக்குச் சேர்கிறான்.
பாவெலுக்குச் சில தோழர்களுடன் பரிச்சயம் ஏற்படுகிறது. அவனுக்குள் மாற்றங்கள் உண்டாகிறது. ஒரு தொழிலாளி கிட்டதட்ட முப்பது வருடங்கள் உழைத்து கண்ட பலன் ஒன்றுமில்லை, ஆலைதான் வளர்ச்சியடைகிறதே தவிர அவர்களது வாழ்க்கையில் கிஞ்சித்தும் மாறுதல் ஏற்படவில்லை, தமது அடிமை நிலையிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டுமென்றால் தொழிலாளிகள் இறுக்கமாக இணைவதே இதற்கு விடை என்பதை உணர்ந்துக்கொள்கிறான். நிறைய புத்தகங்களை வாசிக்கிறான். அவனோடு இன்னும் பல தோழர்கள் வீட்டிற்கு வருகிறார்கள். ஒன்றாக வாசிக்கிறார்கள். தங்களுக்குள் விவாதிக்கிறார்கள்.
பெலெகேயா நீலவ்னா இவை அனைத்தையும் பார்க்கிறாள். அவர்கள் பேசுவதைக் கேட்கிறாள். அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து கொள்கிறாள். தனது கடந்த கால வாழ்க்கையையும் அவளது தோழிகளின் வாழ்க்கையையும் நினைத்துப் பார்க்கிறாள். பாவெல் பேசுவதைக் குறித்து மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியை அடைந்தாலும் தனது மகனின் பாதுகாப்புக் குறித்து கலக்கமடைகிறாள். ஏனெனில், பாவெல் படிப்பது அத்தனையும் தடை செய்யப்பட்ட புத்தகங்கள். அவை தொழிலாளிகளின் உண்மை நிலையைப் பேசுவதோடு அந்த நிலைமைய மாற்றுவதற்கான வழியையும் போதிக்கின்றன.
சிறிது சிறிதாக பாவெலின் வீட்டில் கூட்டம் அதிகரிக்கிறது. எங்கிருந்துதான் மனிதர்கள் வருகிறார்களோ தெரியாது, குறித்த நேரத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களுக்கு தேநீர் வைத்துக் கொடுப்பதும், வெந்நீர் கொடுப்பதும் அவர்கள் பேசுவதை கேட்பதுமே தாய்க்கு ஆனந்தம். தாயாலும் அவர்களைப் போல வாசிக்க முடிந்தால்…..பாவெலில் நண்பர் அந்திரேய் மூலமாக வாசிக்கக் கற்றுக்கொள்கிறாள் அந்தத் தாய்.
இதன் நடுவில், வீடு போலிசாரால் சோதனையிடப்படுகிறது. பாவெலின் நண்பரை கைது செய்து கொண்டு செல்கிறார்கள். இது தாயை அதிர்ச்சிகுள்ளாக்குகிறது. ஆனாலும், தொழிற்சாலைக்குள் பிரசுரங்கள் பரவுவதை யாராலும் தவிர்க்க முடியவில்லை. தொழிலாளிர்களிடையே பேசிய பேச்சுக்காக போலீஸ் பாவெலை கைது செய்கிறது. தாய்க்கு கதறியழ வேண்டும் போலிருக்கிறது. ஆனால், அமைதியாக ஏற்றுக்கொள்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக தானே பிரயத்தனப்பட்டு புத்தகங்களை வாசிக்கிறாள். பாவெலின் நண்பர்களுக்கு பிரசுரங்களை ஆலைக்குள் தொழிலாளிகளிடையே தொடர்ந்து விநியோகிப்பது எப்படியென்று தெரியவில்லை.
தாய் இவ்வேலையை செய்ய முன்வருகிறாள். ஒருவேளை விநியோகிப்பது நின்று விட்டால் செய்தது பாவெல்தான் என்று நிரூபணமாகிவிடும். இதற்கு ஒரேவழி, பிரசுரங்கள் தொடர்ந்து ஆலைக்குள் தொழிலாளிகளுக்குக் கிடைக்கச் செய்வதுதான் என்று நண்பர்கள் பேசுவதைக் கேட்டதும் அவள் அவ்வேலையை செய்வதாக முன்வருகிறாள்.
ஆப்பம் விற்கும் பெண்ணுடன் உதவி செய்பவராக தொழிற்சாலைக்குள் செல்கிறாள் தாய். பிரசுரங்கள் தொழிலாளிகளின் கைகளை அடைகின்றன.
இதில் தாய்க்கு பெரிதும் மகிழ்ச்சி. தனது மகனிடம் இதைப் பற்றி உடனே சொல்லவேண்டும் என்றும் அவன் இதை அறிந்தால் எவ்வளவு மகிழ்ச்சியடைவான் என்றும் எண்ணுகிறாள். இரவுகளில் உறங்கப் போகும் முன் இயேசுவிடம் இந்தக் குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்யவும் தயங்குவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தாய் தனது மகனின் புதிய மார்க்கத்திலிருக்கும் உண்மையை அறிந்துக்கொள்கிறாள். அதுவே சத்தியம் என்றும் உழைக்கும் மக்கள் அனைவரும் இதனை உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்றும் எண்ணுகிறாள். பாவெலும் சிறையிலிருந்து வந்துவிடுகிறான்.
மேநாள் நெருங்குகிறது. மேநாள் பேரணிக்கான வேலைகள் நடக்கின்றன. மகனின் மேலுள்ள பாசத்தினால் தாய்க்கு அழுகை முட்டுகிறது. ஏனெனில், பேரணியை தலைமை தாங்கி நடத்தப் போவது பாவெல். போலிஸ் சிறைக்கு அனுப்பினாலும் அனுப்பலாம். தாயால் சிலநேரங்களில் ஒரு தாயாக நடந்துக்கொள்வதை தவிர்க்க முடிவதில்லை. ஆனாலும், தாங்கிக் கொள்கிறாள்.
பெரும் எழுச்சியுடன் மேநாள் பேரணி நடக்கிறது. பெரும் கூட்டம் திரள்கிறது. தாயால் பாவெல் அருகில் கூட நெருங்க முடியவில்லை. ஆனால், பாவெல் தனது மகன் என்று தாயின் மனம் மகிழ்ச்சி கொள்கிறது. பேரணியில் பாவெல் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவதோடு முதல் பாகம் முடிகிறது.
இரண்டாவது பாகத்தில், தாய் ஒரு புரட்சியாளராக பரிணமிப்பதும், நாட்டின் பல பகுதிகளுக்கு பயணம் சென்று பிரசுரங்களை சேர்ப்பிப்பதும், தனது மகனைப் போல பல புரட்சியாளர்களைச் சந்திப்பதும் உணர்வுமிக்க வகையில் விவரிக்கப்படுகிறது. உழைக்கும் மக்களும்,விவசாயிகளும் ஒன்று சேர்ந்தால்தான் முதலாளித்துவத்தை ஒழிக்க முடியும் என்றும் அதில்தான் மக்களின் விடுதலை இருக்கிறது என்றும் தாய் உண்ர்ந்துக்கொள்கிறாள். புதிது புதிதாக மனிதர்களைச் சந்திக்கிறாள். ஆரம்பத்தில் அவளுக்கு ஏற்படும் தயக்கங்களும், அவர்களுடன் நட்பு கொள்வதும் மிக இயல்பாக எழுதப்பட்டிருக்கிறது.
வாசிக்கும் நமக்கு, அநேக இடங்களில் உணர்ச்சிப் பெருக்கால் கண்களில் நீர் கோர்த்துக்கொள்கிறது. மக்களின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரையும் ஈந்த அநேக இளைஞர்கள்……புதிய உலகை கனவு கண்ட இளைஞர்கள்….
வாசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கணத்தில், நானும் அந்தத் தாயைப் போல இருக்க மாட்டோமா என்ற ஆசை தோன்றியது. ஏனெனில், இதுநாள் வரை வாழ்ந்து வந்த வாழ்க்கையின் பிழைப்புவாதம் பின்னோக்கி இழுக்க, முற்றிலும் புதுமையான சத்தியமான கருத்துகள் நம்மை முன்னோக்கிச் இழுக்க நமக்குள் நடைபெறும் ஒரு சிறு போராட்டத்தைத்தான் தாயும் பிரதிபலிப்பதாகத் தோன்றியது. அந்த போராட்டத்தை வாழாமல் நாமும் தாயின் உணர்வை அடைய முடியாது என்றே தோன்றுகிறது.
இவை நடுவில், அந்தத் தோழர்களுக்கிடையிலான வாழ்க்கை முறை, அவர்களுக்கிடையிலான காதல், இசை எல்லாம் வெகு இயல்பாக வந்து செல்கிறது. உடல்நிலை சரியில்லாத ஒரு தோழரின் மரணம், அதன் பாதிப்புகள், உழைத்து ஓடாய் தேய்ந்த மனிதனின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள், தாய் ட்ரங்கு பெட்டியில் பிரசுரங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் சென்று முஜீக்குகளிடம் சேர்ப்பது, தாயை அவர்கள் இனம் கண்டுக்கொள்வது என்று இரண்டாம் பாகம் முழுக்க தாயின் புரட்சிக்கான பயணம் கண்முன் விரிகிறது. இவை நிச்சயம் உண்மை நிகழ்ச்சிகளாகத்தான் நடந்தேறியிருக்க வேண்டும்.
ஆச்சரியப்படுத்தியதென்னவெனில், மக்களனைவரும் பிரசுரங்களை வாசிக்க ஆர்வமாக இருப்பதும், பிரசுரங்கள் கிடைக்காதாவென்று ஏங்குவதும் படிப்பறிவில்லாதவர்களும் கூட தங்களின் அவல நிலைக்கான உண்மைக் காரணத்தை அறிந்துக்கொள்ள விரும்புவதும், புரட்சிதான் தீர்வென்று நம்புவதும்தான்.
இன்று நாம் அந்நூற்றாண்டு மக்களைப் போல இல்லை. பலவகைகளில் முன்னே வந்துவிட்டோம். ஆனாலும், அவர்களை போன்ற சிந்தனைகளோ அல்லது சமூகமயமான தீர்வுகளை நோக்கியோ செல்லாமல் போராட்டக் குணத்தை இழந்து நிற்கிறோம்.
ஒருவேளை பாவெலும்,அவனது நண்பர்களும், தாயும் சேர்ந்து கஷ்டபடுபவர்களுக்கு உணவு கொடுத்தோ அல்லது செருப்பில்லாமல் கஷ்டபடுபவர்க்ளுக்கு செருப்பு வாங்கித் தந்தோ, வேலை வாங்கித்தந்தோ தங்கள் தொண்டுள்ளத்தை நிரூபித்திருக்கலாம். ஒன்றிரண்டு மாதங்களிலோ வருடங்களிலோ அந்த தொண்டும் அணைந்து போயிருக்கும். ஆனால், எதற்கும் சமரசப்படுத்திக்கொள்ளாமல் மனிதகுல விடுதலைதான் சமூகமயமான தீர்வு என்று ஏன் தங்கள் வாழ்வையே அர்ப்பணிக்க வேண்டும்?எத்தனையோ ஆபத்துகள் இருப்பது தெரிந்தாலும் அச்செயல்களில் ஏன் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்?
இன்றும் கூட, எண்ணற்ற தோழர்கள் கொள்கை மீது கொண்ட பற்றால் மனிதகுல விடுதலைக்காக வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்திருக்கிறார்கள். கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தும் கூட, சற்றும் அஞ்சாமல், சாதிய அடக்குமுறையை எதிர்த்து, அரசாங்கத்தை எதிர்த்து வீதியில் இறங்கி போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். நாம் வசதி என்று கருதும் அனைத்தையும் அற்பமாக எண்ணி உதறி தள்ளியிருக்கிறார்கள்.ஆனால் ஹார்வார்டுகளிலும், ஆக்ஸ்போர்டுகளிலும் படித்து வந்த டாக்டரேட் மேதைகளோ நம்மை சுரண்டுகிறார்கள். நமது உயிரை பணயம் வைக்கிறார்கள். பள்ளியை/கல்லூரியைத் தாண்டாத தோழர்கள், அல்லது அப்படி படித்திருந்தும் அதை தூக்கியெறிந்துதானே சமூகத்திற்காக/நமக்காகக் குரல் கொடுக்கிறார்கள்?
ஆனால், நம்மில் எத்தனை பேர் இதனை உணர்ந்திருக்கிறோம்? ஒன்றிரண்டு பேர்களுக்கு நம்மாலானதை பிச்சையிடுவதைப் போல செய்துவிட்டு தானப்பிரபு பட்டம் கட்டிக்கொள்கிறோம். புரட்சி செய்துவிட்டதைப் போல இறுமாந்து போகிறோம். நாம் சுயநலவாதிகளாக இருந்து கொண்டு, அந்த சுயநலத்திற்கும் காரணம் காட்டிக்கொண்டு தோழர்களை பிழைக்கத் தெரியாதவர்களென்றும், ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லையென்றும் அவர்களை இழிவுபடுத்தியத்தைத் தவிர வேறு என்ன?
தாயின் உலகில் ஊக்கத்துடன் பயணம் செல்லுங்கள். புதிய மனிதானாகவும், வாழ்க்கையின் பொருளை உணர்ந்தவராகவும் திரும்புவீர்கள்.
(நன்றி: வினவு)