2018 ஜனவரி முதல் வாரத்தில் சிங்கப்பூரில் இந்திய அரசு வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (Pravasi Bhartiya Divas) தொடர்பான இரண்டு நாட்கள் நிகழ்ச்சியை புகழ்பெற்ற மெரீனா பே சாண்ட்ஸில் நடத்தியது. வேறு ஒரு அலுவலப் பணிக்காக சிங்கை சென்றிருந்த நான், இந்த நிகழ்வில் கலந்துகொண்டேன். உலகச் சந்தையில் காலடி எடுத்துவைக்க முயலும் என்னுடைய நிறுவனத்துக்கு இந்த வெளிநாடு வாழ் இந்தியர் தினக் கூட்டத்தில் பல தொடர்புகள் கிடைக்கும் என்பது என்னுடைய எதிர்ப்பார்ப்பு.
ஆனால் அங்கே ஏமாற்றமே விஞ்சியது. இந்தியாவிலிருந்து சென்ற இந்திய முதலாளிகள் சிங்கப்பூரில் தங்களுடைய வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கான ஒரே திட்டத்தோடு நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருந்தன. வர்த்தகம் சாராத பிற கலை, இலக்கிய, கலாச்சார நிகழ்வுகள்கூட 90 சதவீதம் வட நாட்டை மையப்படுத்தியதாகவே இருந்தன. யோகத்துக்கு யோகம் அடித்திருந்தது. இந்தியப் பிரதிநிதிகளாகச் சென்றிருந்தவர்களின் ஆகப்பெரும்பாலானோர் பனியாக்கள். நிகழ்ச்சியினூடே ஒரு சமயம் சற்றுக் கண்ணை மூடிக் கொண்டே மேடையில் பேசிக்கொண்டிருந்த ஒருவரின் வட இந்தியத்தன ஆங்கில உரையைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, தில்லியில் ஏதோ ஒரு பிஸினஸ் கான்பரன்ஸில் கலந்துகொண்டிருப்பதுபோன்ற உணர்வை அடைந்தேன். அது துயரமானதொரு உணர்வு.
தென்கிழக்காசியாவில் இந்தியர் என்றால் அதில் பெரும்பகுதி தமிழர்களாகவே இருந்துவருகிறார்கள் என்பது வரலாறு. ஆனால் மோடி அரசின் விழாவா பனியாக்களின் விழாவாக இருந்தது. அப்படியென்றால் அங்கே தமிழர்களே இல்லையா? இருந்தார்கள். சிங்கப்பூர் அரசின் பிரதிநிதிகளாக வந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களாக இருந்தார்கள்! ஆனால் அவர்களில் பலர் கலாச்சாரப் பிரதிநிதிகளாகவோ அரசு பிரதிநிதிகளாகவோ இருந்தார்கள். தமிழ் தொழிலபதிபர்கள் என யாரையும் பெரிதாகப் பார்க்கமுடியவில்லை.
இந்தியா பனியாக்களையே உலக அரங்கில் தன் நாட்டின் பிரதிநிதிகளாக முன்னிறுத்துகிறது. 80 சதவீத்த்துக்கும் மேல் சீனர்களை பெரும்பான்மையாகக் கொண்ட சிங்கப்பூர் தமிழர்களை முன்னிறுத்துகிறது. இந்த முரண்பாட்டைக் கண்டு நகைக்கமுயன்ற சமயத்தில்தான், அப்போது அண்ணாவின் பணத்தோட்டத்திலிருந்து வரிகள் நினைவுக்கு வந்தன.
1946 இவ் எழுதிய பலக் கட்டுரைகளையும் 1948 இல் எழுதிய சில கட்டுரைகளையும் கொண்ட அண்ணாவின் பணத்தோட்டம், புதிய இந்தியாவில் – அதாவது நேருவின் புதிய இந்தியாவில் – பனியா ஏகாதிபத்தியம் எவ்வாறு உருவாகிறது என்பதை சித்தரிக்கும் மிக முக்கியமானதொரு நூல். அந்த நூலில் ஓரிடத்தில் கூறுகிறார்: “வடநாட்டார் இத்துடன் திருப்தி அடையவில்லை அங்குள்ள மார்வார் குஜராத் முதலாளிகள் கண்ணோட்டம் இன்று தென்கிழக்கு ஆசிய நாடுகள் பூராவிலும் பரவி இருக்கிறது. ஜாவா, சுமத்ரா, போர்னியோ, மலாய், இந்தோ-சீனா, அன்னாம் என்னும் பல்வேறு இடங்களிலேயும் தமது வியாபார வலையை வீசுகிறார்கள். பாகிஸ்தான் கிளம்பியிராவிட்டால் மத்தியக் கிழக்கிலும் கண் பாய்ந்திருக்கும். ஆப்கனிஸ்தான், ஈராக், ஈரான் ஆகிய பகுதிகளிலும், வியாபாரத்தைப் பரப்பிவிடத் திட்டம் தயாரிப்பர்; வெற்றியும் பெறுவர்.
இதை அண்ணா எழுதியது 1946 இல். நான் கண்கூடாக பார்த்த்து 2018 இல். அவர்கள் திட்டத்தையும் தயாரித்தார்கள், வெற்றியையும் பெற்றுவிட்டார்கள். ஆனால் அண்ணா இந்தக் கட்டுரைகளை எழுதிய சமயத்தில் தென்கிழக்காசியாவில் தமிழ் வணிகர்களும் ஒரு முக்கிய வர்த்தக சக்தியாக இருந்தார்கள். குஜராத்திகளும் இருந்தார்கள் என்றாலும்கூட, புவிசார் அரசியல் கண்ணோட்டத்தில் தென்னிந்தியாவும் தென்கிழக்காசியாவும்தான். இயற்கையான கூட்டாளிகள். இரண்டாயிரம் ஆண்டுகளுகளாக தமக்குள் வர்த்தக பந்தம் கொண்டிருந்தவர்கள். ஆனால் இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் உருவாகும் புதிய இந்தியா தங்களுடைய தேசமாக இருக்கவேண்டும் என்பதில் பனியாக்கள் உறுதியாக இருந்தார்கள். மகாத்மா காந்தி அவர்களின் பக்கம் இருந்தார். நேருவின் சோசலிசம் அவர்களைக் கண்டு மட்டும் நடுங்கியது. மெல்ல மெல்ல அன்று தொடங்கிய பயணம் – இநதிய வர்த்தகத்தை பனியாமயமாக்கம் பயணம்- இன்று பெருமளவு வெற்றிபெற்றுவிட்டது. தென்னாட்டில் மட்டுமல்ல, இந்தியா ராஜதந்திரத் தொடர்புடைய எல்லா நாடுகளிலும் இந்தியாவின் தொழில் முகம் என்பது பனியாவின் முகமாகவே இன்று ஆக்கப்பட்டுவிட்டது. இந்திய பனியா முதலாளித்துவத்தை உலகப் பொருளாதார அச்சின் மையத்துக்குக் கொண்டு சென்றுவிடவேண்டும் என மோடியின் இந்தியா விரும்புகிறது. வாரத்தின் எட்டு நாள்களுக்கும் மோடி விமானமேறிப் பறப்பது அந்த விருப்பத்தைச் சாத்தியப்படுத்துவதற்கான மார்க்கெட்டிங்குக்காகத்தான்.
*
திராவிடர் கழகத்திலிருந்து மெல்லப் பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை அமைக்கும் நிலைக்கு நகர்ந்துகொண்டிருந்த காலத்தில், பெரியாரிடமிருந்து விலகிய புள்ளிகள் துலக்கமுற்றுக்கொண்டிருந்த தருணத்தில், அண்ணா தனது கற்பித தேசமான திராவிட நாட்டுக்கான அரசியல், பொருளாதார, கலாச்சார, சமூகச் சித்திரங்களை வரைந்துகொண்டிருந்தார். அவரது தனது அசலானக் கொள்கைகள் உருவாகிக் கொண்டிருந்தபோது, ஜனநாயகம், சோஷலிசம், நவீன குடியரசு உள்ளிட்ட சமகாலக் கருத்தாக்கங்கள் அண்ணாவின் மனத்தில் அவரது திராவிட நாட்டுக்கான சித்தாந்த விளிம்புகளையும் உருவாக்கின. அவரது அரசியல் நாற்றங்கால் திராவிடர் கழகமாக இருந்தாலும், அவர் தனி மரமாக வளர்ந்தார். அவர் 1944-49 காலத்தில் தனக்கேயான அரசியல் வியூகத்தை உருவாக்கத்தொடங்கிவிட்டார். பார்ப்பனரல்லாதோர் இயக்கம், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் போன்றவற்றின் முன்னுரிமைகளை மிகுந்த வேகத்துடனும் சற்றே பரபரப்புடனும் அண்ணா இக்காலத்தில் கடந்துகொண்டிருந்தார். உலகின் போக்குகள், அரசியல் பொருளாதாரம் தொடர்பாக அவர் தீவிரமான ஆய்வுகளில் இருந்தார் என்பது இக்காலகட்டத்தில் அவர் எழுதியக் கட்டுரைகளில் தெளிவாகிறது. திராவிட நாட்டுக்கான கனவை, வெறும் கனவாக அல்லாமல் அரசியல் இலக்காக மாற்றுகிற முயற்சியில் அண்ணா ஈடுபட்டபோது, அவர் பணத்தோட்டம் என்கிற மிகவும் அற்புதமானதொரு ஆயுதம் ஒன்றையும் உருவாக்கினார். அது அன்றைய தமிழ் இளைஞர்கள் மீது மிகப் பெரிய தாக்கத்தையும் செலுத்தியிருக்கிறது. அந்த மிகச்சிறிய நூலில் – சிலக் கட்டுரைகளில் – அண்ணா முன்வைத்த கருத்துகள் இன்றளவும் பொருத்தப்பாடு உடையவனவாய் இருப்பது மட்டுமல்ல வியப்பு, அந்த நூலில் இடம் பெற்றக் கருத்துகள் பிறகு ஏன் காத்திரமான கருத்தாக்கங்களாகவும் கொள்கைகளாகவும் அவருக்கு அடுத்தத் தலைமுறையினரால் வளர்த்தெடுக்கப்படவில்லை என்கிற கேள்விதான் அதைவிட பெரும்வியப்பு,
1947 ஆட்சி மாற்றக் காலத்தில் ஏற்பட்ட நிதி அதிகார மாறுதல்களை படம் பிடிக்கிறார் அண்ணா. நூலின் முதல் கட்டுரையான பணத்தோட்டம் என்பது அந்த மாற்றத்தைச் சித்தரிக்கிறது. சுயமரியாதை இயக்கத்தின் விளைபலனாக தந்தை பெரியார், அண்ணா, சர் ஏ டி பன்னீர்செல்வம் உள்ளிட்டத்த் தலைவர்கள் பேசத்தொடங்கிய திராவிட நாட்டுக் குறிக்கோளுக்கான பொருளாதாரா உள்ளுறையை இந்த நூலின் முதல் அத்தியாயமே மிகச்சிறப்பாக முன்வைத்துவிடுகிறது.
தென்னாட்டின் நிதி வடவர்களின் சிக்கிக்கொள்வதால் தென்னாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும். அதற்கு என்ன தீர்வு? தென்னாட்டை தனியாக ஆக்கிகொள்வதே. – மிக எளிமையான சூத்திரமாகவே இது தெரிகிறது. ஆனால் தங்களுடைய பொருளாதார பலம் அல்லது பலவீனத்தை அறிந்திராத தம்பிகளிடம் அதை விளக்கவேண்டிய அவசியம் அண்ணாவுக்கு ஏற்படுகிறது. தமிழ்நாட்டு முதலாளிகளிடம் நிலவிய அடிமைக் கலாச்சாரத்தையும் மூடநம்பிக்கைகளையும் இடித்துரைக்க வேண்டியிருக்கிறது. தனிநாடு என்பதை ஒரு சமூக, கலாச்சார விவகாரமாக மட்டுமல்லாமல் அரசியல் பொருளாதார விவகாரமாகவும் பார்க்கக்கூடிய பார்வையை கட்சிக்குள் உருவாக்கவேண்டியுமிருக்கிறது. இவை அனைத்தையுமே இந்த சிறிய நூலில் சாதிக்க முயன்றிருக்கறார் அண்ணா.
இந்தியாவின் முதலாளித்துவ வளர்ச்சியைப் பற்றி பேசும் மார்க்சியவாதிகள் இந்தியாவின் தனிச்சிறப்பான வர்ண வித்தியாசங்களையும் வட்டார வித்தியாசங்களையும் கணக்கிலெடுத்துக்கொண்டார்களா என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. ஆனால், இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பை விளக்கும்போது வர்ணத்தையும் வர்க்கத்தையும் வடக்கு-தெற்கு என்கிற பிளவையும் சேர்த்தே கணக்கில் எடுத்துக்கொள்கிறார் அண்ணா. இது இந்தியாவில் முதலாளித்துவ வளர்ச்சி குறித்த பார்வையை மேலும் முழுமையாக ஆக்குகிறது. (ஆனால் “இந்த” அண்ணாவை முடிந்தவரை புறக்கணித்திருக்கிறார்கள் நமது அறிவுஜீவிகள் என்பதுதான் வேதனையான உண்மை).
காலனியாதிக்கத்தின் முடிவில் ஏகாதிபத்திய மூலதனத்துக்கும் உள்நாட்டு மூலதனத்துக்கும் இடையிலான உறவை விளங்கிக்கொள்வதற்கு அண்ணாவின் அக்கால எழுத்துகள் உதவுகின்றன. இந்தியாவின் பனியா முதலாளிகள் வெறுமனே பிரிட்டிஷ் அரசின் ஏஜென்ட்கள் மட்டுமல்ல, அவர்கள் பிரிட்டிஷ் அரசின் உதவியோடு இங்கிலாந்து மூலதனத்தின் கூட்டாளிகளாகவும் பதவி உயர்வு பெற்றவர்கள் என்பதை அண்ணா விளக்குகிறார். 1947 ஆகஸ்ட் 15 நெருங்க நெருங்க பனியா மூலதனத்தின் ஏற்றத்தையும் அதே காலத்தில் தென்னிந்திய மூலதனச் சமூகங்களின் வீழ்ச்சியையும் நம் கண் முன்பு கொண்டு வந்துநிறுத்திவிடுகிறார் அண்ணா. தென்னாட்டில் பனியாக்களின் வருகை ஒரு படையெடுப்பைப் போல இருந்திருக்கிறது. அந்த படையெடுப்பு நிதிமூலதன கட்டமைப்போடு வருகிறது. உள்ளூர் மூலதனமோ பெட்டிப்பாம்பாக அடங்குகிறது. “வட்டிக்கடை நடத்திய நாட்டுக்கோட்டை செட்டிமார் பர்மா போய்விட்டனர். தங்க நகைமீது மட்டும் கடன் தருவோம் என்று கூறிக்கொண்டு காப்பும் கொலுசும் போட்டுக் கடை நடத்திய வைசியச் செட்டிமார் இருந்ததும் குறைந்துவிட்டது. இப்போது வட்டிக்கடைகள் "பூட்ஸ் அணிந்த" அதிகாரிகள் தங்கி வேலை செய்யும் பெரிய ஆபீஸ்களாகிவிட்டன,” என்கிறார் அவர்.
நிதி மூலதனம் பூட்ஸ் அணிந்துவருகிறது. அது பழையபாணி வர்த்தக மூலதனத்திடமிருந்து வித்தியாசப்பட்டது. யார் நிதியை கையாள்கிறார்களோ அவர்களிடம்தான் முதலாளித்துவ உற்பத்திக்கான அதிகாரம் தங்கியிருக்கிறது. அந்த முதலாளித்துவ உற்பத்தி வெறும் வர்க்க அடையாளங்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இந்தியாவில் காலனிய காலத்துக்குப் பிந்தைய முதலாளித்துவம் பனியா முதலாளித்துவமாகத்தான் உருவாகிறது என்பதை அண்ணா அறிகிறார். அவர் அந்த அறிதலைத் தொடங்கும் புள்ளியாக வங்கிகளின் வளர்ச்சியைப் பற்றிய ஆய்வு விளங்குகிறது. அந்த வங்கிகளைத்தான் பணத்தோட்டங்கள் என்று அண்ணா வர்ணிக்கிறார். “வயலுக்கு விதை அல்லது நாற்று இருக்கும் இடம்போல பாங்குகள் உள்ளன. வயலின் நிலை விதை வைத்திருக்கும் இடத்தானின் தயவைப் பொறுத்திருக்கிறது. தொழிலின் நிலை பாங்கியின் தயவைப் பொறுத்த்திருக்கிறது” என்கிறார் அண்ணா.
பணத்தோட்டமான பாங்க்கின் தலைமைப் பொறுப்பிலுள்ளவன் யார் ? அவனை பாங்க் பூசாரி என்கிறார் அண்ணா. யார் அந்த பூசாரி? பனியா. அவன்தான் வரம் தருகிறான். வரம் கேட்பவன் யார்? அவனும் பனியாதான். பனியாவின் வரம் பனியாவுக்குத்தான் செல்லும். இது உங்கள் பாடநூல் முதலாளித்துவம் அல்ல தோழர்களே! இது வேறு நூல் முதலாளித்துவம்ய இனத்தை இனத்தோடு சேர்க்கும் அரசியல். இதை அண்ணா உணர்ந்துகொண்டிருந்தார்.
பனியாக்கள் என்ன செய்தார்கள்? அண்ணா கூறுகிறார்: “ இந்த பரந்த உபகண்டமெங்கும் பரவி "பணத்தைக்” கொண்டு தமது அரசை அமைத்துக்கொண்டனர். பாங்குகளின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்து கொண்டனர். இதுபோது, வடநாட்டிலும் இங்கும் பெரிய பெரிய பாங்குகளைத் துவக்கி நடத்துகின்றனர். தொழில் வளர்ச்சிக்கு, "ஜீவநாடி" அவர்களிடம் இருக்கிறது. அந்த "ஜீவநாடிகள்" மேலும் மேலும் அவர்களிடமே போய் சிக்குகின்றன. இனி அவர்கள் வைத்ததுதான் சட்டம், இட்டது பிச்சை என்று கூறவேண்டிய நிலைக்கு இந்த வளர்ச்சி இருக்கிறது. திராவிட நாட்டிலே "தொழில் வளர்ச்சி” இல்லை என்று சென்ற திங்கள் இறுதியிலே சென்னையில் கூடிய தொழில் வளர்ச்சி மாநாட்டார் பேசினர். புதிய தொழிற்சாலைகள் ஏற்படவேண்டும். வளம் இருக்கிறது, கொண்டு செலுத்துபவர் முன்வரக் காணோம் என்று மாநாட்டிலே எடுத்துக்கூறப்பட்டது. உண்மை! ஆனால், முழு உண்மையல்ல! தொழிற்சாலைகள் ஏற்படவேண்டுமானால் எந்த பணபலம் அதற்கு அவசியமோ, அதனைத் திராவிடம் பெறமுடியவில்லை. அந்தப் பலம், வடநாட்டினரால் பண்படுத்தப்பட்டு பக்குவமாக இருக்கிறது. எனவே, அவர்களுடன் போட்டியிடத் தென்னாட்டினரால் முடியவில்லை. துணிந்து துவக்கினாலும் வடநாட்டுப் போட்டி ஏற்பட்டுவிடும் என்ற அச்சமும், அந்தப் போட்டி ஏற்பட்டால், வீண் நஷ்டம் அடைய நேரிடும் என்ற திகிலும் இருக்கிறது.” என்கிறார் அண்ணா
அந்த அச்சம் அர்த்தமற்றது அல்ல என்கிறார் அவர். “கப்பலோட்டிய "சிதம்பரம் பிள்ளையை” ஈன்றெடுத்த தமிழகம் தொழில் திறமையை இழந்துவிட முடியாது; ஆனால் அழகான சுற்றுச் சார்பு, சூழ்நிலை கெட்டுக்கிடக்கிறது. எனவேதான் இங்கு பட்டமரம் அதிகமாகவும் ஒரு சில துளிர்கள் மட்டுமே தொழிலுலகிலும் உள்ளன. எதிர்காலத்தில் புதிய தொழிற்சாலைகள் வளர வேண்டுமானால், பணம் ஏராளமாகவும் தாராளமாகவும் கடனாகத் தேவை. வட நாட்டினரிடம் பெரிய பாங்குகளின் சூத்திரக்கயிறு இருப்பதால் அவர்களால்தான் அந்த இயந்திரத்தை ஆட்டி வைக்க முடியும். அவர்கள் விரும்பினால் எத்தனை தொழிற்சாலைகளையும் துவக்க உதவி செய்யமுடியும். விரும்பாவிட்டால் தடுக்க முடியும். ஆகவே புதிய தொழிற்சாலைகள் அமைக்க விரும்புவோர் வடநாட்டினர் நிறுவி நடத்திவரும் பாங்குகளின் தயவை நாடித் தீரவேண்டும். அந்தத் தயவு இந்நாட்டவருக்குக் கிடைக்குமா என்று வாதிக்கத் தேவையில்லை. இனம் இனத்தோடுதான் சேரும். எனவே, இங்கு புதிய தொழில் நடத்த ஒரு கரம்சந்துக்கு இருக்கிற அளவு வசதி ஒரு கருப்பண்ணன் செட்டியாருக்குக் கிடையாது. இந்தியா ஒரு நாடு என்ற கொள்கையின்படி ஆட்சிமுறை நடப்பதால், கருப்பண்ணன் செட்டியார் நாட்டிலே கரம்சந்த் தொழில் நடத்த வருவதைத் தடுக்க முடியாது. சொந்த நாட்டிலேயே கரம்சந்துக்கு இடமளித்துவிட்ட இளித்தவாயர் வடநாட்டிலேயா போய் தொழில் நடத்துவர்? அவருடைய வாழ்வும், அவர் வாழும் நாட்டின் வாழ்வும் வறண்டு கிடக்கும்; மார்வார், குஜராத் மாளிகைகளிலே மாடிகள் மேலும் மேலும் உயரமாகும்! இப்படி ஆகலாமா பொருளாதார வளர்ச்சியிலே சம எடை இல்லாது போகுமே; தென்னாடு வெறும் மார்க்கெட்டாகவும், வடநாடு மான்செஸ்டர், ஷெப்பீல்டு, லங்காஷயர் போன்ற தொழிற்சாலைகள் நிரம்பிச் செல்வம் கொழிக்கும் இடமாகவும் இருந்தால், சீமையிடம் இந்தியா அடிமைப்பட்டது போலத்தான், வடநாட்டினிடம் தென்னாடு அடிமைப்படும்… இன்னும் கொஞ்ச நாட்களிலே இது விளங்கிவிடும்.” என்கிறார் அண்ணா.
பணத்தோட்டத்தில் அண்ணாவின் ஆய்வு அவரது இரண்டு முக்கியமான நிபுணத்துவங்களை வெளிக்காட்டுகிறது. ஒன்று சமகால உலக அரசியல், பொருளாதார நெருக்கடிகள் குறித்த அவரது நெடுநோக்கு. மற்றொன்று, இந்தியத் துணைக்கண்டத்தின் வர்ண-வர்க்க சமன்பாடுகள் மீதான அவரது நுண்ணோக்கு. இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், இந்தியாவில் பணப்பெருக்கம் ஏற்பட்டது. பனியாக்கள் அந்தப் பணப்பெருக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டார்கள். இக்காலத்தில் நடந்த்தை ஒரு யுத்த உருவகத்தைக் கொண்டே அண்ணா விளக்குகிறார்: நாட்டிலே உணர்ச்சி மிக்கவரெல்லாம் "வெள்ளையனே! வெளியே போ!" என்று முழக்கமிடும் "தேசிய”க் காரியத்திலே ஈடுபட்டிருந்தனர். எனவே சந்தடியைச் சாக்காகக் கொண்டு சத்தமின்றி உள்ளே நுழைந்த வடநாட்டவரைப் பற்றிச் சிந்திக்க நேரமில்லை. வடநாட்டார், பண நடமாட்டம் ஏராளமாக இருப்பது கண்டு, இந்தப் பெருக்கம், புதிய தொழிற்சாலைகள் அமைக்கப் பயன்பட்டுவிடும் என்பதை உணர்ந்து, அந்தச் சக்தியைக் கட்டுப்படுத்தித் தங்கள் கரத்திலே வைத்துக்கொள்ள வேண்டுமென்று திட்டம் தயாரித்து, பல புதிய பாங்குகளை ஏற்படுத்தி விட்டனர். அதாவது பொருளாதாரப் போருக்குப் புதிய பாசறைகள் ஏற்படுத்திக் கொண்டனர். இந்தப் போர் ஆரம்பிப்பதற்கு முன்புவரை, ஜப்பானுக்குப் பழைய இரும்பு விற்று வந்தோம். பிறகு நமது இரும்பு நமக்கே குண்டாகி, நம்மவரை நாசம் செய்தது. இப்போது, வடநாட்டார் அமைக்கும் பொருளாதாரப் பாசறைக்கும் நாமே பொருளும் தருகிறோம். டிபாசிட்டுகள், சேமிப்புகள் என்ற பெயரால் எவ்வளவோ பணம் பாங்குகளிலே சென்று தங்குகின்றன. இந்தப் பணமே பிறகு இந்நாட்டுத் தொழில் வளர்ச்சிக்கோ ஊறு தேட உதவக்கூடும்.” – அண்ணாவின் ஒவ்வொரு சொல்லும் இன்று மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது விளிம்பு நாடுகளின் மூலதனம் மைய நாடுகளுக்கு இடம்பெயரும்போது விளிம்பு நாடுகளுக்கு எவ்வாறு அது ஊறுவிளைவிக்கிறது என்பதை வரலாற்றாசிரியர்கள் நிறைய எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். அதைத்தான் அண்ணா சுட்டிக்காட்டுகிறார். அண்ணா பொருளாதாரத்தையும் அரசியலையும் இணைக்கும் இந்தப் புள்ளியில் ஒரு அரசியல்-பொருளாதாரவாதியாக மிளிர்கிறார். 1946 இல் அவர் இதைக் கூறிய காலகட்டம் என்பது காலனிய ஆதிக்கம் முடிவடைந்து கொண்டிருக்கும் காலகட்டம். ஆனால் முற்றிலும் முடிவடைந்துவிட்டிருக்காத காலகட்டம். பழைய காலனியம் ஒழிந்து புதிய காலனியம் தொடங்கும் காலகட்டம். இந்தியாவைப் பொறுத்தவரை அது மூலதனத்தின் ஆட்சி பனியாக்களின் கையில் நிரந்தரமாக தங்கத்தொடங்கியக் காலகட்டம். அந்த நிகழ்வு நடக்கும்போதே அதைக் கையும் களவுமாக பிடித்துவிடுகிறார் அண்ணா.
1941-44 யுத்தகாலத்தில் நாமெல்லாம் யுத்தம் யுத்தம் என்று பதறிக்கொண்டிருந்த காலத்தில்– கத்தியின்றி ரத்தமின்றி நடந்த யுத்தம் வடநாட்டு பனியாக்கள் தென்னாட்டு மூலதனம் மீது நடத்தி முடித்த வெற்றிகரமான யுத்தம்தான். இதுதான் தமிழ்நாட்டின் மூலதன அல்லது தொழில் வளர்ச்சியின் அடித்தளத்தைத் தகர்த்தெறிந்தது என்பதுதான் அண்ணாவின் பார்வை. ஒரு பெரிய பண சக்தி வடவரின் கையில் இருக்கிறது. அந்த சக்தி எவ்வளவு வன்மை கொண்டது? சுயமரியாதை இயக்கத்தின் சுடரொளியான அண்ணா அதை அழகாக வர்ணிக்கிறார்: இந்தப் பெரிய சக்தியின் முன்பு திராவிட நாட்டிலே உள்ள கனதனவான்கள் அவ்வளவு பேரும், தங்கள் பொருளையும், அதிலே ஒரு பகுதியைத் திருவிழா தானம் ஆகியவற்றுக்காகச் செலவிட்டதால் கிடைத்ததாகக் கருதிக்கொண்டுள்ள அருளையும் திரட்டி நிறுத்தினாலும், எடை சரியாக இருக்க முடியுமா? பண பலம் எங்கே இருக்கிறது? ஏகாதிபத்ய பீடம் எவ்விடம் இருக்கிறது? என்பதைக் காட்டிவிட்டோம்.
*
பனியாக்கள் தங்களுடைய புதிய இந்தியாவை உருவாக்கிக் கொண்டிருந்தபோது நமது தமிழ் தனவான்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? அண்ணா நகைக்கிறார்: “பழனிமலை அப்பனுக்கு படிகட்டுக் கைங்கரியம் செய்து கொண்டிருந்தனர்”.
இந்திய தேசிய மயக்கத்தை குற்றவாளி கூண்டில் ஏற்றுகிறார் அண்ணா: “பண அரசு கோட்டை கட்டி, அதன் மீது வெற்றிக் கொடியைப் பறக்க விட்டுக்கொண்டு வடநாடு வாழ்கிறது. அதன் வல்லமை வளருகிறது. இங்கே தாயின் மணிக்கொடி பாரீர்! என்ற கீதத்தோடு திருப்தி அடைந்துவிடுகிறோம். இது சரியா முறையா? தேசியம் பேசுபவர் அங்கு பண அரசு அமைக்கிறார்கள். இங்கு இன அரசு கேட்கும் நம்மை ஏளனம் செய்கிறார்கள், நமது தேசியத் தோழர்கள்.”
பனியாக்களின் ராஜ்யத்தை ஒழிக்கவேண்டுமானால் இன அரசு வேண்டும் என்று அண்ணா கேட்கிறார். “இந்த வடநாட்டுப் பொருளாதார ஏகாதிபத்தியத்தை ஒழிக்கத்தான் திராவிட நாடு தனி அரசாக வேண்டும் என்று கூறுகிறோம். துருக்கியை முஸ்தபா கமால்பாட்சா தனி அரசாக்கியதும் செய்த முதல் வேலை அதுவரைத் துருக்கியைத் தங்கள் பொருளாதாரப் பிடியிலே வைத்துக்கொண்டிருந்த அர்மீனியர்கள் என்ற வகுப்பினரின் ஆதிக்கத்தைச் சட்டம்மூலம் ஒழித்ததுதான். பிறகுதான் துருக்கி மூச்சுவிட முடிந்தது. அதற்கு முன் வரை துருக்கி ஐரோப்பாவின் நோயாளி என்று கேலி செய்யப்பட்டு வந்தது. திராவிடம் தனி அரசு ஆனால் இங்கு தொழில் துறையிலும் பொருளாதாரத்துறையிலும் வடநாட்டார் ஆதிக்கம் செலுத்த முடியாதபடி சட்டரீதியான ஏற்பாடுகளைச் செய்துகொள்ள முடியும். இந்நாட்டுப் பணத்தைப் பர்மாவுக்குக் கொண்டு போகாமல் இருக்கச் செய்யவும் முடியும். வடநாட்டு முதலாளிகள் மோப்பம் பிடித்துக்கொண்டு இங்கு வருவதையும் தடுக்கமுடியும்! இந்நாட்டவரை வெளிநாட்டுக்குக் கூலிகளாக அனுப்பிவைக்கும் மானக்கேடான காரியத்தைத் தடுத்து அவர்களை இங்கே வாழவைக்க முடியும், இவ்வளவு இன்பம் தரும் மார்க்கம், திராவிடம் தனி அரசு ஆகவேண்டுமென்ற இலட்சியத்தில் இருக்கிறது. இதனை எங்கே உணருகிறார்கள்! காசியைத் தங்களுக்கு புண்ய ஷேத்திரமாகவும், டில்லியை அரசியல் தலைமை ஸ்தலமாகவும், வார்தாவை தேசிய பீடமாகவும், பம்பாயை இலட்சுமி கோயிலாகவும் ஏற்படுத்திவிட்டு இங்கு, "செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே". என்று பாடுகிறார்கள். இன்பத்தேனா பாய்கிறது? உண்மையா!
காங்கிரஸ் உருவாக்கிக்கொண்டிருக்கும் புதிய இந்தியாவையும் அதன் அடிநாதமாக விளங்கும் காந்திய, இந்திய தேசியத்தையும் பல இடங்களின் அடித்துநொறுக்குகிறார் அண்ணா. குறிப்பாக 1946 இல் தமிழ்நாட்டில்/தென்னாட்டில் நடந்த ஒரு பெரிய அடாத காரியத்தை அவர் விவாதத்துக்கு எடுத்துக்கொள்கிறார். அப்போது, சென்னை மாகாணத்துக்கு தங்குதூரி பிரகாசம் என்கிற ஆந்திரக்காரர் முதல்வராகிறார். தென்னிந்தியாவின் தொழில்துறையை – குறிப்பாக டெக்ஸ்டைல் துறையை – முழுமையாக நாசம் செய்கிற ஒருவேளையை பிரகாசம் செய்கிறார். கதர் வளர்ச்சி என்கிற பெயரில், எல்லா டெக்ஸ்டைல் மில்களையும் மூடிவிடுவது என்று அவர் முடிவெடுக்கிறார். காங்கிரஸ்காரர்களே அதிர்ந்துபோய்விடுகிறார்கள்.
பம்பாய்க்கும் தென்னாட்டுக்கும் – அதாவது பனியா முதலாளிகளுக்கும் தென்னாட்டின் சகல சமூகங்களையும் சேர்ந்த முதலாளிக்கும் இடையில் உள்ள வித்தியாசம் ஏற்கனவே பாரதூரமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் மில்களை மூடுவதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம். அண்ணா சுட்டிக்காட்டுகிறார்: “ஆலையில் தயாரிக்கப்படும், துணி சம்பந்தமாக மட்டிலுமே சென்னைக்கும் பம்பாய்க்கும், 1-11 என்ற முறை. பொதுவாக உள்ள மற்ற விஞ்ஞான ரசாயன யந்திர சாதனத் தொழில் வளர்ச்சி வியாபார வளர்ச்சி, பணபல வளர்ச்சி ஆகியவற்றை கவனித்து கணக்கிட்டால் சென்னையைப் போலப் பம்பாய், 11 மடங்கல்ல பலப்பல மடங்கு அதிகமுள்ள வடிவெடுக்கும் இந்நிலையைத்தான், பொருளாதார ஏகாதிபத்யம், புதிய வல்லரசு, பொன்விலங்கு, பண அரசு, பிர்லாஸ்தான் என்று பல கூறி இதுவரை விளக்கி வந்தோம். சீமைக்கும் இந்தியாவுக்கும் இதுபோல நிலைமை இருந்ததைக் கூறித்தான், சுயராஜ்யப் போர் துவங்கப்பட்டது. சென்னை குப்பமாகி வருகிறது. அந்த வீழ்ச்சியைத் துரிதப்படுத்த முதல் அமைச்சர் முனைந்திருக்கிறார்….” என்கிறார் அண்ணா.
முதலாளித்துவம் கண்மூடித்தனமானதல்ல. நீதி தேவதைகளைப் போல. அது வர்க்கம் மட்டுமல்ல, இனமும் வர்ணமும்கூடத்தான். தென்னாட்டில் முன்பே நன்கு வளர்ந்திருந்த ஜவுளித்தொழிலை காங்கிரஸ் ஆட்சி அழிக்கலாமா என்று கேள்விகேட்கும் அண்ணா, அதிலும்கூட ஏன் வடக்கு தெற்கு பிரச்சினை என்றும் கேள்வி எழுப்புகிறார். “(மில் ஒழிப்பு) தேவை - முடியும் என்றே வைத்துக்கொண்டாலும், இதனை இந்தியா பூராவுக்கும் திட்டமாகக் கொள்ளாமல் சென்னையில் மட்டும் நடத்த முயல்வானேன்? வடநாடு என்று பொதுவாகக் கூறினாலும் பொருந்தாது - காங்கிரசை ஆதரிக்கும் மாகாணங்களிலே மட்டுமே இதைப் பற்றிப் பேசவாவது முடியும் - வங்கம் - சிந்து - பஞ்சாப் எல்லை - அசாம் போன்ற இடங்களிலும் வடக்கே உள்ள சுதேச சமஸ்தானங்களிலும் இது பற்றிப் பேசமுடியாது - அங்கெல்லாம் காந்தீயக் கதர்த் திட்டத்தைப் புகழக்கூட மாட்டார்கள். காங்கிரஸ் மாகாணங்களிலே மட்டுமே காந்தியாருடைய தாட்சண்யத்துக்காக பேசலாம். இது பற்றி - அப்படியும் செய்யவில்லை. பம்பாய், ஐக்கிய மாகாணம் ஆகிய இடங்களிலுள்ள முதலமைச்சர்களை அழைத்து, அவர்களையும் மில் ஒழிப்புக்கு ஒப்புக்கொள்ளச் செய்யும்படி செய்திருந்தால், ஏதோ வருகிற கஷ்டம் எல்லோருக்குந்தான், நமக்கு மட்டுமல்ல என்ற அளவாவது ஆறுதல் இருக்கும். இங்குள்ள காங்கிரஸ் நண்பர்களுக்கு இப்போது அதுவும் இல்லையே!:” என்கிறார்.
தொடர்கிறார்: “அங்கே எல்லாம் புதிய மில்களை அமைக்கிறார்கள் - புதிய மெஷின்கள் 100 கோடி ரூபாய் செலவில் தருவிக்கத் திட்டமிடுகிறார்கள் - நிபுணர்கள் மேனாடுகளில் புகுந்து விஞ்ஞான வசதிகளைத் தேடுகிறார்கள் - வெளிநாடுகளிலே வியாபாரத் தொடர்புகளை ஏற்படுத்துகிறார்கள். இவற்றை எல்லாம் காணும் சென்னைக்குப் பம்பாயின் மில் துணி உற்பத்தியிலே பத்தில் ஒரு பாகம் மட்டுமே உற்பத்தி செய்யும் சென்னைக்கு, மில் ஒழிப்புத் திட்டமா? எந்த வகையான நியாயம் இது?” அதைப் போலவே தென்னாட்டின் பொருளாதார வளர்ச்சி பம்பாயுடன் இணைக்கப்பட்டால் என்ன ஆகும் என்பதையும் கண்டு அதிர்ந்துபோகிறார். அதாவது, இந்திய அரசின் புதிய திட்டப்படி ஏ, பி, சி எனப் பிரிக்கப்பட்ட மண்டலங்களில் பம்பாய் மண்டலத்தோடு சென்னை மாகாணம் சேர்க்கப்பட்டது. இது பம்பாய் சென்னையைச் சுரண்ட உதவுமே ஒழியே சென்னை வளர உதவாது என்றும் எதிர்க்கிறார்.
இந்த நிலை தொடருமானால், தென்னகத்தின் நிலை என்னவாக இருக்கும்? –. “ஆகவே, அந்தச் சரக்குகள் இங்கே குவியும்; அதன் மூலமாகப் பணம் இங்கிருந்து அங்கு போகும் - இதனைத்தான் ஏகாதிபத்தியம் இதுவரை செய்துவந்தது - இன்று அதன் கிளை ஸ்தாபனம் பம்பாயில் இருக்கிறது - சென்னை சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்படும் கைதி போலச் சென்னை, பரங்கி ஏகாதிபத்தியத்தின் கையில் சிக்குகிறது - இதற்காக, சிதம்பரம் பிள்ளையின் வாழ்வு சிதைந்தது - குமரனின் ஆவி பிரிந்தது - காசிராஜனும், ராஜகோபாலனும் தூக்குமேடை அருகே சென்று திரும்பினர். பல்லாயிரக்கணக்கில் வாலிபர்கள் தியாகத் தீயில் குளித்தனர்.”
சங்க காலத்திலிருந்தே உலகின் முக்கிய ஆடை ஏற்றுமதி மையங்களில் ஒன்றாக இருந்துவந்த தமிழ்நாட்டின் ஜவுளித்தொழில் வளம் நலிகிற அதே சமயத்தில்தான், சுதந்திர இந்தியா உருவாவதற்கு முன்பே உலகச் சந்தையின் மீது பனியாக்கள் கண்வைத்துவிட்டார்கள் என அண்ணா புள்ளிவிவரங்களை அடுக்குகிறார். பணத்தோட்டம் நூலின் மிக முக்கியமான வாதங்கள் இந்தப் பகுதியில் இருக்கின்றன. இந்தியா உலகின் மிகப்பெரிய டெக்ஸ்ட்டைல் ஏற்றுமதி நாடாக மாறிக்கொண்டிருக்கிறது. உலகம் எந்த துணியை வாங்கும்? பம்பாய் மில்லிருந்து தயாரிக்கப்பட்ட துணியையா, சென்னை மாகாணத்தின் பத்தாம் நம்பர் கதரையா என்று கேட்கிறார் அண்ணா. “1937-38-ம் ஆண்டுக் கணக்குப்படி, மேற்கண்ட இடங்களிலேயும், இன்னும் பல்வேறு இடங்களிலேயும், இந்தியா, வியாபாரம் செய்வதற்கான வசதிகளைச் சர்க்கார் செய்துள்ளனர். உலகிலே, பருத்தி உற்பத்தியில், உயர் ஸ்தானம் வகித்துள்ள நாடுகளில் இந்தியா ஒன்று - எனவே நெசவுத் தொழிலில் தலைசிறந்து விளங்கி, வெளிநாடுகளுக்கு ஆடை அனுப்பும் வசதி இருக்கிறது. ஆனால், இந்த நாடுகள் 14ம் நெம்பர் கதர்நூல் ஆடையல்ல விரும்புவது! சென்னை கதர்த்திட்டத்தோடு நின்றுவிட்டால், இந்த நாடுகளில் வடநாட்டு ஜவுளிதான் செல்லும்; வியாபாரத்துறை வடநாட்டுக்குத்தான் இருக்கும்” என்கிறார்.
திராவிட இயக்கத்தலைவர்களிலேயே உலக அரசியலையும் புவிசார் அரசியலையும் நெடுங்கால வரலாற்று யதார்த்தங்களையும் இணைத்துப்பார்ப்பதிலேயே தலைசிறந்தவரான அண்ணா நம் கவனத்தை ஈர்க்கிறார்: “சென்னையில், பூகோள அமைப்பைக் கவனிப்பவர்கள், தென்கிழக்கு ஆசியாப் பகுதியிலுள்ள நாடுகளுடன் தொடர்பு கொள்வதற்குச் சென்னையிலே சிலாக்கியமான இட அமைப்புப் பெற்றிருப்பதை அறியலாம். ஆனால், சென்னை வீட்டுக்கொரு ராட்டையை வைத்துக்கொண்டிருக்க வேண்டுமாம்! எவ்வளவு கடின சித்தமிருக்க வேண்டும் இந்தத் திட்டத்தை நமக்குச் சுமத்த!!”
அண்ணா கூறிய இந்தக் “கடின சித்தம்”, மிகவும் கவர்ச்சிகரமான குரல்களினூடாக தமிழ்நாட்டின் மீது சுமத்தப்பட்டது. காந்தியத்தின் பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றி இக்காலத்தில் நாம் காணும் பார்வை வேறாக இருக்கலாம். ஆனால் அக்காலத்தில் அதற்கு வேறு அரசியல் பின்புலமும் இருந்திருக்கிறது என்பதை அண்ணாவால் அறிகிறோம். காந்தி ராட்டைச் சுழற்றுங்கள், கிராமங்களுக்கு தற்சார்பு ஏற்படுத்துங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்ததெல்லாம் நடைமுறையில் பிர்லாக்களுக்கு தென்னாட்டுச் சந்தையை திறந்துவிடுவதற்கான ஏற்பாடகவே முடிந்தது.
தமிழ்நாட்டின் பொருளாதார நலன், சுதந்திர இந்தியாவின் அதிகாரம் பனியாக்களிடம் இருப்பது, புதிய உலக வாய்ப்புகள் தமிழருக்கு கிடைக்காமல் பனியாக்களுக்கே சிக்குவது போன்றவற்றை குறுக்கும் நெடுக்குமாக ஆராயும் அண்ணாவின் கருத்துகளின் கோட்பாட்டுப் பின்புலத்தை விளக்க இங்கே ஒரு நீண்ட மேற்கோளை தரவிருக்கிறேன்.
அண்ணா கூறுகிறார்: வடநாட்டவர், தமது பணம், இங்கு கிடைக்கும் பணம் இவ்வளவும் திரட்டி இங்கு தொழில் நடத்தி, இலாபத்தை வடநாட்டுக்குக் கொண்டு செல்கின்றனர். பழைய நாட்களிலே, ஏதேனும் ஓர் படையெடுப்பின் மூலமாக, ஒரு நாட்டுச் செல்வத்தை மற்றோர் நாடு கவர்ந்துசெல்ல முடிந்தது; இப்போது அந்தச் சிரமம் இன்றி வியாபாரக் கோமான், தமது டெலிபோன், தந்தி சம்பாஷனைகள் மூலமாகவே கோடி கோடியாக ஒரு நாட்டுப் பொருளை எடுத்துச் செல்ல வழி கிடைத்துவிட்டது.
“வடநாட்டார் இத்துடன் திருப்தி அடையவில்லை அங்குள்ள மார்வார் குஜராத் முதலாளிகள் கண்ணோட்டம் இன்று தென்கிழக்கு ஆசிய நாடுகள் பூராவிலும் பரவி இருக்கிறது. ஜாவா, சுமத்ரா, போர்னியோ, மலாய், இந்தோ-சீனா, அன்னாம் என்னும் பல்வேறு இடங்களிலேயும் தமது வியாபார வலையை வீசுகிறார்கள். பாகிஸ்தான் கிளம்பியிராவிட்டால் மத்தியக் கிழக்கிலும் கண் பாய்ந்திருக்கும். ஆப்கனிஸ்தான், ஈராக், ஈரான் ஆகிய பகுதிகளிலும், வியாபாரத்தைப் பரப்பிவிடத் திட்டம் தயாரிப்பர்; வெற்றியும் பெறுவர்.
“வடநாட்டு முதலாளிகள், இத்தகைய வெற்றி பெறுவதற்கான சகல வழிகளையும் அமைத்துக் கொண்டனர். அவர்கள் ‘முறை’ ‘திறமை’ ‘போக்கு’ மேனாட்டவரிடமிருந்து கற்றுக்கொண்டனர். அரசியல் துறையிலே செல்வாக்கு தேடிக்கொள்ளும் விஷயத்திலே வடநாட்டு வணிக வேந்தர்கள் மேனாட்டவரையும் தோற்கடித்து விட்டனர் என்று கூறலாம்.
“நாட்டு விடுதலைக் கிளர்ச்சியை அவர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர். காங்கிரசின் துவக்க கால முதலாகவே, ‘தலைமை நிலையம்’ - திட்டம் தயாராகும் இடம் - வடநாடாகிவிட்டது. எனவே, தமிழ்நாடு, (இந்திய) விடுதலைக் கிளர்ச்சியிலே ஈடுபட்டது, வடநாட்டுக்கு இலாபமாகிவிட்டது. சீமைச்சாமான் பகிஷ்காரம், சுதேசி இயக்கம், வடநாட்டுக்குச் சாதகமான நிலைமையை ஏற்படுத்திவிட்டது. அசோகனின் கரம் தட்டிய காலத்திலும், திறக்கப்படாத திராவிடநாட்டுக் கதவு திறக்கப்பட்டு, வடநாட்டுப் பாகை அணிந்தோர் நுழைந்தனர். வாகை சூடிக்கொண்டனர். இங்கு நாம் இளித்தவாயரானோம்.
“காந்தீயம், எளிய வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்தது. கிராமீய சேவையை வற்புறுத்தி, குடிசைத்தொழில் ஆர்வமும் கற்றுக்கொடுத்தது. எனவே இங்கு, ராட்டை சுழன்றது. குத்துவிளக்கு எரிந்தது. கைக்குத்து அரிசி மிகுந்தது; ஆனால் அதே காந்தீய போதனையிருந்தும் காந்தியார் வாழும் வடநாட்டிலேயோ, வியாபாரிகள் விமானங்களில் ஏறி வெளிநாடு சென்றனர்; மின்சார சக்தியை வேலைக்கு அமர்த்திக்கொண்டனர். ராஜதனப் பாலைவனங்களை எல்லாம், பாரீஸ் இலண்டனாக்கினர். இந்தச் சூஷமத்தை இங்குள்ள தேசியவாதிகள் உணரவில்லை. இன்றும் அநேகர் உணர மறுக்கின்றனர். காந்தியாரைக் கண்கண்ட தெய்வமாகக் கொண்டாடும் வடநாட்டிலே, “மெஷினே மனிதனைக் கெடுத்தது” என்ற தத்துவத்தையும், "கதரே தாரகம்" என்ற சித்தாந்தத்தையும் போதிக்கும் காந்தியாரைக் கடவுளாகக் கொண்டாடும் வடநாட்டிலே, எப்படி டாட்டாவும், பிர்லாவும், பஜாஜும், தலாலும் ஆலைகளையும் பெருத்த தொழிற்சாலைகளையும் வைக்க முடிந்தது? எப்படி இவர்கள், காந்தியாரின் சீடர்களாக இன்றும் வாழ முடிகிறது?
“காந்தீயப் போதனையை ‘அபின்’ ஆக்கித் தமிழகத்திலே கொடுத்துவிட்டு, தமிழரைச் செயலற்றவர்களாக்கி, அந்த நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு வடநாட்டார் மேனாட்டவர் சொந்தம் கொண்டாடும் அளவுக்கு, ‘பங்காளிகள்’ ஆகும் அளவுக்கு, தொழில் துறையில் வேக வேகமாக முன்னேறி விட்டனர்.
இங்கே நமது நாட்டவர் கிராமப் புனருத்தாரணத் திட்டத்தைத் தயாரித்துக் கொண்டுள்ளனர்; நமது முதலமைச்சரோ வீட்டுக்கொரு ராட்டையைத் தந்துவிடுகிறேன் என்றார். இதேபோல் வடநாட்டவர் இங்கே வனஸ்பதி துவக்குகிறார்கள். அவர்கள் வரி செலுத்துவார்களல்லவா என்று ஆசைமொழி கூறுகிறார் மந்திரியார். வெளிநாட்டுச் சரக்கினிடம் இங்குள்ள மக்களுக்கு வெறுப்பு ஏற்படச் செய்தாகிவிட்டது. வெளிநாட்டுச் சரக்கை உபயோகிப்பதே தேச பக்திக்கு இழிவு என்ற நிலை உண்டாகி விட்டது.
“வடநாடு, தென்னாடு என்ற பேதம் கூடாது, நாமெல்லாம் ஒரே நாட்டு மக்கள், பாரததேசம் என்று சொந்தம் பாராட்டியாகிவிட்டது. இந்தச் சொந்தம் காரணமாகக் கொண்டு மலை மலையாகப் பொருளை வடநாட்டிலே உற்பத்தி செய்து, இங்கே அனுப்பியாகிவிட்டது. இங்கே இயற்கைச் செல்வம் மங்க, உள்நாட்டு "முதல்" தூங்க, மீறி பர்மா போனால் அங்கு சுத்தி சுத்தி மிரட்டுவது கண்டு ஏங்க, தொழிலில்லாததால் மக்களிடை துயரம் தேங்க, அதனைத் தீர்த்துக்கொள்ள தேயிலைக் காட்டுக்கு ஓடி உடல் கெட்டுக் காலும் வயிறும் வீங்க, அதனைச் சிந்து ஆக்கி நமது நடிகர்கள் இசை முழங்கக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை நீடிக்கவிடலாமா! திராவிட கழகத்தாரை அல்ல, நாம் கேட்பது, காங்கிரசாரைக் கேட்கிறோம் - நேர்மையாளர்கள் அனைவரையும் கேட்கிறோம். நீதியின் பெயரால் கேட்கிறோம் - ஏழை எளியவர்களின் சார்பிலே நின்று கேட்கிறோம் - இனியும் பிறக்க இருக்கும் நமது பின் சந்ததியாரின் பெயர் கூறிக் கேட்கிறோம். காவிரியும் பெண்ணையும் கேலிச் சிரிப்புடன்தான் பாய்ந்தோடுகிறது. நமது சுரங்கங்கள், நம்மைக் கையாலாகாதவர்கள் என்று கடுமொழி கூறுகிறது, நமது பின் சந்ததி நம்மை, வடநாட்டுக்கு அடிமைகள், வளம் இருந்தும் பயன்படுத்தும் வகையற்றவர்கள், என்று கண்டிக்குமே! இதற்காகவேனும், யோசித்து ஆவன செய்யவேண்டாமா காங்கிரஸ் தமிழர்கள் என்று கேட்கிறோம்.
“மேனாட்டவரின் நிலையை அடைந்ததோடு இல்லை; வடநாட்டு வணிகர்கள், இன்று பிரிட்டிஷ் அமெரிக்கக் கோடீஸ்வரர்களுடன் ‘கூட்டு’ சேர்ந்து பல தொழில்களைத் துவக்கி உள்ளனர். நிலை அவ்வளவு உயர்ந்துவிட்டது.
“உயர்ந்த நிலையுடன் அவர்கள் திருப்தி அடையவில்லை. நம் நாட்டு வணிக வேந்தர்கள், வியாபாரக் கோமான்கள் திருமலை திருப்பதி, பூரிஜெகன்னாத் காசி, கயா, கண்டி, கதிர்காமம் சென்று, வரம் கேட்டுக்கொண்டிருக்கும் வேளையிலே வடநாட்டு முதலாளிமார் இலண்டன், வாஷிங்டன், பாரிஸ், பிரஸ்ஸல்ஸ் ஆகிய "க்ஷேத்திரங்களுக்கு போய்” முருகன், முக்கண்ணன், காந்திமதி ஆகிய தேவதேவியரை அல்ல, மோட்டார், விமானம், இரும்பு, எஃகு, ரசாயனம், கண்ணாடி ஆகிய பலவிதமான தொழிலிலே உள்ள நிபுணர்களைக் கண்டு பேசித் தொழில்முறை நுண்ணறிவு மெஷின் வகை அமைப்பு முறை ஆகியவை பற்றித் தெரிந்துகொண்டு வருகின்றனர். தாளச் சத்தமும், மேளச் சத்தமும் கேட்டு ரசிக்கும் நமது நாட்டுத் தொழிலில்லா இரும்புப் பெட்டிக்காரர்கள் அறிவார்களா. இந்த வடநாட்டு வணிகர்கள் அங்கே இருந்து பெற்றுவரும் ‘வரம்’. இந்த உபகண்டத்துச் சூத்திரக்கயிறை அவர்களிடம் சேர்த்து வைக்கும். பிறகு அந்தக் கயிற்றுக்கு ஏற்றபடி இங்குள்ளவர்கள் ஆடும் பொம்மைகளாகிவிட நேரிடும் என்ற சூக்ஷமத்தை.” (மேற்கோள் முற்றிற்று)
உபகண்டத்துச் சூத்திரக்கயிறு! ஓர் ஆழ்ந்த அரசியல் ஞானியாலும் உலக அரசியலின் உண்மையை நன்கறிந்த ஒருவராலும்தான் இப்படிப்பட்ட ஒரு சொல்லைச் சொல்லமுடியும். இந்தியத் துணைக்கண்டத்தின் சூத்திரக்கயிறு பனியாவிடம்தான் இருக்கிறது. அதுதான் அகண்ட பாரதக் கோட்பாட்டுக்கும் ஈழத்து இனப்படுகொலைக்கும் ஓயப்போகாத காஷ்மீர் சிக்கலுக்கும் வடகிழக்கு தேசிய இனங்கின் கனவுகள் நிர்மூலமாவதற்கும் – இன்று மோடியின் இந்தியா ஒற்றை இந்தியாவாக மாறுவதற்கும் காரணமான சூத்திரக்கயிறு. நீட், ஜிஎஸ்டி, கூடங்குளம், பாதுகாப்பு ராணுவத்தளவாட தொழில்வளாகங்கள், ஹைட்ரோகார்பன் என இன்றைய தமிழகம் தத்தளிப்பது இந்தக் கயிறு அதன் கழுத்தில் தூக்குக்கயிறாக மாட்டப்பட்டிருக்கிறது என்பதால்தான். இந்தக் கயிற்றுக்கு ஏற்றபடி இங்குள்ளவர்கள் பொம்மைகளாக ஆகி ஆடிக்கொண்டிருக்கிறார்கள் – அண்ணாவின் பெயரைத் தாங்கிய கட்சியின் முதல்வர்கள்.
இந்தச் சூத்திரக்கயிறை அறுக்கும் முயற்சிதான் அண்ணாவின் திராவிட நாட்டு முழக்கம். அண்ணா தொடர்ந்து சொல்கிறார்: “திராவிடநாடு திராவிடருக்காக வேண்டும் என்பதற்கு நாம் காட்டும் பல காரணங்களிலே ஒன்று. இந்தியா எனும் ஒரு அமைப்பிலே நாம் இணைந்திருக்கும் வரையில், சகல துறைகளிலும், வடநாட்டார் ஆதிக்கம் செலுத்துவார்களேயொழிய திராவிடத்துக்கு உரிய நிலை கிடைக்காது என்பதாகும். வடநாட்டார் சரித காலத்திற்கு முன்பிருந்தேயுங்கூட, தென்னாட்டவரைத் தாழ்த்தி வைப்பதையே நோக்கமாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. முடியுடை மூவேந்தர்கள் காலத்திற்குப் பிறகு திராவிடத்தின் பிடி தளர்ந்துவிட்டது, நடை குன்றிவிட்டது, கலையும் வாழ்வும் கருகின, செல்வம் தேய்ந்தது, சீர் அழிந்தது. இம்மட்டோ! திராவிடத்திலே தன்னம்பிக்கையும் தோய்ந்தது. பண்டு வாழ்ந்ததும் மறந்தனர்” என்றும் “ஒரு நாட்டின் வாழ்வு, மற்றோர் நாட்டின் பொருளாதாரச் சக்கரத்திலே பிணைக்கப்பட்டுவிடுவது சாதாரண விஷயமல்ல! கைதியின் நிலை!! அந்த நிலை, திராவிடத்துக்கு ஏற்பட்டிருக்கிறது”
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் தமிழர்களுக்கு இந்த இக்கட்டு – கைதியின் நிலை – ஏற்பட்டிருக்கிறது என்பதைத்தான் வெளிநாடு வாழ் இந்தியர் கூட்டத்தில், மலாக்கா நீரிணையில், தமிழ் - தென்காசிய குறுக்குவெட்டுப் புள்ளியில் நடந்தேறிய ராஜதந்திர சூதாட்டத்தில், நான் பார்த்தேன். மீண்டும் ஒரு தோல்வியை நான் உணர்ந்தேன். அண்ணா எச்சரித்திருந்தாரே!
*
சுயமரியாதை இயக்கத்தினூடாக வளர்ந்த திராவிட இயக்கச் சிந்தனை மரபில் அண்ணாவுக்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது. அந்தத் தனித்துவம் அண்ணாவின் தமிழ் அடித்தளத்தின் காரணமாக உருவான ஒன்று. தமிழ் நோக்குநிலையிலிருந்து தன் சம காலப் போக்குகளை பார்க்கவும் ஆராயும் செய்த அண்ணாவின் சிந்தனைகள் அவர் வாழ்ந்த காலத்திலும்சரி இப்போதும் சரி உரிய அளவுக்கு சீர்தூக்கிப் பார்க்கவோ விவாதிக்கப்படவோ ஆராயப்படவோ இல்லை என்பதே உண்மை.
பெரியார், அண்ணா இருவருமே விடுதலை அரசியலை முன்னெடுத்தவர்கள். ஆனால் பெரியாரின் நோக்குநிலை சமூக விடுதலையின் அரசியல் சிந்தனைகளிலேயே ஊன்றியிருந்தது. அதாவது விடுதலையின் உள்ளுறையாக சமூக நீதியை அவர் முன்மொழிகிறார். அண்ணா அதை ஏற்கிறார். ஆனால் அத்துடன் அதில் பொருளாதாரம், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைச் சேர்க்கிறார். அது ஒரு தேசிய நோக்குநிலையை அண்ணாவிடமிருந்து வெளிப்பட உதவுகிறது.
பெரியாரின் அரசியல் அடித்தளம் சமூக விடுதலை என்பதாகவும் அண்ணாவின் அடித்தளம் தேசிய இன விடுதலையாக அமைகிறது. இது அணுகுமுறை மற்றும் உலகப்பார்வை சார்ந்த வித்தியாசமே ஒழிய ஒன்றைக் குறைத்து மற்றொன்றை முன்வைக்கிற விஷயமல்ல என்பதையும் இங்கே கூறவேண்டியிருக்கிறது.
பெரியாரிமிடமிருந்து அண்ணா விலகும் புள்ளியில்தான் பணத்தோட்டம் உருவாகிறது. எந்த ஒரு தேசிய விடுதலை இயக்கத்துக்கும் தேசிய முதலாளித்துவ வளர்ச்சியின் பங்கை அது வெளிப்படுத்துகிறது. அதே சமயம், அதை சமகால உலகப் போக்குகளுக்கு கீழே கொண்டுவந்து அண்ணா வைக்கிறார். காலனிய காலகட்டத்தின் முடிவு, சமதர்ம உலகின் எழுச்சி ஆகிய இரு மாபெரும் நிகழ்ப்பாடுகளின் வெளிச்சத்தில் அண்ணாவின் திராவிட நாடு அரசியல் உருவாகிறது. அதாவது சமூக ஜனநாயக உள்ளடக்கம்கொண்ட தேசியவாத அரசியலை அண்ணா உருவாக்குகிறார்.
பல நாடுகளின் விடுதலை வரலாற்றை உருவகப்படுத்திச் சொல்வதென்றால், ஒரே காலத்தில் மீட்புவாத அரசியலையும் (REVIVALISM) மறுமலர்ச்சிவாத அரசியலையும் (RENAISSANCE) அண்ணா வந்தடைந்தார். பின்கு தேசிய அரசு, சமதர்மம், ஜனநாயகம், குடியரசுவாதம் ஆகியவற்றுக்கு நகர்ந்தார். தமிழ் இனம், மொழி, பண்டையப் பெருமை என்பவற்றிலிருந்து அண்ணா கண்டுணர்ந்தவையெல்லாம் மீட்புவாதமாக உருவெடுக்கிறது. ஆனால் அது கடந்த காலப் பெருமையாகவே தங்கிவிடாமல் எதிர்காலத்துக்கான உரமாக இடப்படுகிறது. அண்ணா மட்டுமல்ல, திராவிட இயக்கத்தின் ஒரு பெரும்பகுதியினரின் அரசியல் என்பது சாதிசமயபேதமற்ற, உலகில் செல்வச்செருக்கோடு எழுந்துநின்ற, அறிவியல்பூர்வமான தமிழ் தொன்மத்தின்மீது கட்டப்பட்டது என்பதை எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் அப்படிக்கட்டப்பட்டதற்கு பின்னால் இருந்து தொழிற்படும் காரணி எது? – இதை பலரும் புரிந்துகொள்ள முடியவில்லை. திமுகவின் அரசியலை நிலப்பிரபுத்துவத்தின் மீதான காதல் என்று பல இடதுசாரிகள் வர்ணித்திருக்கிறார்கள். நவீன பெரியாரியவாதிகளின் கருத்துகளும் அப்படித்தான். இரண்டு விதமான “ராஜராஜ சோழன்கள்” இருந்தார்கள் என்பது இந்த விமர்சகர்களுக்கு புரிந்ததே கிடையாது. தமிழ்நாட்டின் முகம் நோக்குவது வடக்கை நோக்கி அல்ல, தென்கிழக்காசியாவை நோக்கி என்கிற புவிசார் அரசியல் யதார்த்தத்தின் வெளிப்பாடுதான் அண்ணா. சுருக்கமாகச் சொல்லப்போனால், அண்ணாவின் திராவிடம் என்பது ஒரு லேபிள், உள்ளே இருந்த சரக்கு தமிழ்த்தேசியம்.
பெரியார் சாராம்சத்தில் ஒரு கட்டவிழ்ப்பாளர். அண்ணா சாராம்சத்தில் ஒரு கட்டமைப்பாளர். பிற்போக்கில் தோயாத பழமை என்பதுதான் அண்ணாவின் அடிப்படை அணுகுமுறை. இன்றைய தமிழன் தொழில்தொடங்கமுடியாமல் இருக்கிறானே என்பதை உணர்த்தவே அவர் கிளியோபாட்ராவைப் பற்றிப் பேசினார். பாண்டி நாட்டு முத்து பற்றி பேசினார். அண்ணாவும் கலைஞரும் நாவலரும் பாரதிதாசனும் சம்பத்தும் பிற திமுக தலைவர்களும் பேசிய பழம்பெருமை என்பது கடந்த காலத்தை நோக்கிச் செல்வதற்கான ‘ராமராஜ்ய முயற்சி’ அன்று. ஆண்ட பரம்பரை அரசியல் அன்று. அது எதிர்காலத்தை நோக்கிய நகர்வுக்கானதாக இருந்தது.
அவர்களுடைய திராவிடப் பொன்னாடு சங்க காலத்தில் தொடங்கிவிடுகிறது. ஆனால் அது வென்றெடுக்கப்படவேண்டிய எதிர்காலமாகவே இருக்கிறது. “இடையில் இழந்தோம், மீண்டும் கைகொள்வோம்” என்பது ஓர் அரசியல் உத்தி. அதுதான் தமிழ்நாட்டின் நவீன தமிழின உரிமை அரசியலை காட்டுத்தீ போல பரப்பியது. நவீனத் தமிழ்த்தேசியத்தின் அல்லது தமிழ்த்தேசியத்தின் நவீன முகத்தின் தோற்றமும் அதுதான். தோற்றுவித்தவர் அண்ணா. மொழி, இனம், தொன்மம், தமிழர் மரபு, திருக்குறள், தொல்காப்பியம், சங்கம், சிலப்பதிகாரம் என அவர்கள் விரிந்து பரவிய தளத்தின் அடித்தளத்தில் சமூக- பொருளாதார மீட்சிக்கான தேடல்தான் இருந்தது.
ஆனால் எதிர்ப்பாராத விதமாக இந்தப் பயணம் தனது இலக்கை எட்டவில்லை. தோல்வியிலும் திரிபிலும் முடிந்தது. சிலர் இதை துரோகம் என்கிறார்கள். ஆனால், வரலாற்று யதார்த்தம் என்று சொல்வதே சரியாக இருக்கும். (இதைப்பற்றியும் இதே பணத்தோட்டம் நூலில் துலக்கமுறும் அண்ணாவின் சமதர்மக் கருத்துகள் பற்றியும் தனியாக எழுதுவேன்).
அண்ணாவின் தேசியவாதமும் சமதர்மமும் இன அரசும் ஏன் முழுமையான தீர்வை நோக்கி நகரவில்லை? ஏன் திராவிட நாடு உருவாகவில்லை? இதற்குப் பதில் தேட, உங்கள் முன்பு இரண்டு தேர்வுகள் இருக்கின்றன:
முதலாவதான தேர்வு மிகச்சுலபமானது: அண்ணா ஒரு கோழை, திராவிடமே மாயை, திராவிட நாட்டுக்காக அவர்கள் போராடவே இல்லை; அது ஏமாற்று, அவர்கள் சினிமா மாயையில் தொலைந்துபோனார்கள். பதவி வெறிக்காகத்தான் தேர்தல் அரசியலை நாடினார்கள், அடுக்குமொழி பேசினார்களே ஒழிய ஆழமாக ஆராய மறுத்தார்கள் என்றெல்லாம் சொல்லி, அண்ணாவை நிராகரித்துவிடுவது ஒரு வழி. அது எளிய வழி.
இரண்டாவது வழி ஒன்று இருக்கிறது. அது காய்தல் உவத்தல் இன்றி அண்ணாவின் விடுதலை அரசியலின் உருவாக்கத்தையும் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் ஆராய்வது, அதிலிருந்து கற்றுக்கொள்வது.
இந்த இரண்டாவது வழியை நாம் தேர்ந்தெடுத்தால் நமக்கு பலனளிக்கும். ஏனென்றால் முதல் வழியைத் தேர்த்தெடுத்தவர்கள் திராவிட நாடு குறித்த சரியான ஆய்வை இதுவரை மேற்கொள்ளவில்லை. எல்லாவற்றையும் அண்ணா போன்ற தலைவர்களின் குணாதிசயங்களின் வெற்றி தோல்விகளாகவே பார்த்துவந்தார்கள். அதே சமயம், அவர்கள் அண்ணா சென்ற அளவுக்கான தூரத்தைக் கூட கடக்காதவர்கள்.
அண்ணா அசலான விடுதலைச் சிந்தனையாளன். தமிழ்த்தேசியத்தின் தலைமகன். தமிழ்நாட்டின் சன்யாட்சென். தமிழ்நாட்டின் கமால் பாட்சா. அண்ணாவை வணங்கத்தேவையில்லை. ஆனால் அவரை மறைக்க, மறுக்க, மறக்கத் தேவையுமில்லை. அண்ணா என்கிற தமிழனின் சிந்தனையை தமிழர்களுக்கு மீண்டும் எடுத்துச்செல்லவேண்டிய காலத்திலுமிருக்கிறோம்.
அண்ணா கூறிய உபகண்டத்தின் சூத்திரக்கயிறுதான் இன்று இந்துத்துவ பாசிச அரசின் தெற்காசியத் தூக்குக்கயிறாக உருவாகியிருக்கிறது. அந்த பனியா முதலாளித்துவம்தான் உலகமய பொருளாதாரத்தின் தெற்காசிய ஏஜெண்ட்டாக இன்று நமது எல்லா வளங்களையும் பறிக்கிறது. அண்ணா சொன்ன புதிய ஏகாதிபத்தியம் இன்னும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. அந்தப் பணத்தோட்டம் ஓர் எம்ஜிஆர் படமுமல்ல.
(கட்டுரையாளரின் மின்னஞ்சல் முகவரி: ZSENTHIL@GMAIL.COM)