உண்மையைச் சொல்லவேண்டுமெனில், தமிழில் ஒரு புதினத்தை மட்டுமே எதிர்பார்த்திருந்த எனக்கு, இது ஒரு பொக்கிஷம். வரலாறையும், மரபையும், எளிய மக்களையும், பணத்தையும், அதன் ஆற்றலையும், புதிய உலகம், புதிய கொள்கைகள் என்னும் பெயரால் இதயங்களைத் தவிர்த்து, இயந்திரங்களை சூடிக்கொண்டவர்களைப் பற்றியுமான ஒரு புனைவிலக்கியம். இவை எல்லாவற்றையும் விட நாவலின் மொழியியல், வெளி உலகிலிருந்து வாசகனையும் தன்னுள் ஒரு மௌன சாட்சியாக்கி விடுகிறது.
நானும் வாழ்ந்து விட்டேன் ஒரு வாழ்வை, அஞ்சுவண்ணம் தெருவில்.
எழுத்தாளர் அஷ்ரஃப் ஷிஹாப்தீன் சார் சொன்னது போல நாவலின் மூலக்கதையை படிக்காமலே போவது நலம். மார்க்கம் பற்றிய தீவிரமான கண்ணோட்டம் ஹராம், அல்லாஹ்வின் மேலான காதல் என்பது ஹராம், வரலாறு என்னும் பெயரால் கற்பனைக்கதைகளை கற்பித்துக்கொள்வது ஹராம், என எல்லாப் புலன்களை விட்டும் தங்களை மூடிக்கொள்பவர்கள், அல்லது பழைமைவாதம் = மூடத்தனம் = இணைவைப்பு எனும் புரிதல் கொண்டவர்கள், இந்த நாவலை வாசிக்காதிருக்கலாம் அல்லது மூலக்கதையையாவது படிக்காமல் கடந்து விடுதல் நலம். இந்த நாவலின் மையக் கருத்தினை முதல் பாகத்திலேயே போட்டுடைத்து நெஞ்சம் நிமிர்த்தி நிற்கிறார் மீரான் சாஹிப். அதிர்ந்து போகிறது இதயம். நொடிகளில் சுயபரிசோதனைக்களத்திற்கு தயார் செய்து அனுப்பி விடுகின்றது நம்மை. அடுத்தடுத்த பாகங்களில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் கதையை உரைக்கையில் கொதித்தும், குளிர்ந்தும், கசிந்தும், வெதும்பியும் நெஞ்சம் பலநிலை கொள்கின்றது. இறையையும், இறைநம்பிக்கையையும் பற்றி எம்மை விட யாரறிவார் என்னும் கர்வம் நிற்க இடமின்றி துரத்தப்படுகின்றது.
ஒவ்வொரு கதாபாத்திரமும் இச்சமூகத்தின் ஒவ்வொரு முகத்தினைக் காட்டுகிறது, அவர்களின் வாழ்வின் மூலம், சமூகத்தின் அலட்சியத்தையும், அவல நிலையையும் பட்டென போட்டுடைக்கிறது. எளிய மக்கள்தான் இந்த நாவலின் முக்கியஸ்தர்கள். அவர்களின் எளிமையான, மரபு சார்ந்த, ஐதீகங்களுடன் ஐயமறக் கலந்த நம்பிக்கைகள்தான் அஞ்சுவண்ணம் தெருவின் களம். இவர்களுடனும், இதைத் தவறு, இறை நம்பிக்கைக்கு எதிரானது என்றும் எதிர்தரப்பினர் செய்யும் நிராகரிப்பு, அவர்களின் அத்துமீறல்.... இவற்றுடனும் பயணிக்கிறோம் நாம். எளிய மக்களின் எளிய, ஆழமான நம்பிக்கையின் வேர்கள் அவர்களின் தனி மனித ஒழுங்கினைக் கடிவாளமிட்டுக் காக்கின்றன. புதிய உலகம், புதிய கலாச்சாரம், புதிய நம்பிக்கை என மரபுகளை மறந்து, விருட்சங்களை வேரறுத்து, நரைகளை முடிகளாய் ஒதுக்கித் தள்ளி முன்னேறும் மக்களின் ஒழுங்கீனம் அவர்களின் இறை நம்பிக்கையை கேலிக்கூத்தாக்குகிறது. கேள்விக்குரியதாக்குகிறது.
-தைக்காப்பள்ளியை ஒட்டிய பீ முடுக்கை,
அதன் சிதைந்த மதில்களையும் சுற்றுப்புறத்தையும் நினைவு கூர்வதாகட்டும்,
-ஷேக் மதார் சாகிபின் பணம் மாடிமேல் மாடி கட்டினாலும்,
மினாரா கட்ட இயலாத மனதைச் சொல்வதாகட்டும்,
-ஐவேளைத் தொழுகையை விடவும்,
மோதினாரை அழைத்து ஓர் ஃபாத்திஹா நடத்தினால் எல்லாம் சரியாகி விடும் என மோதினாரையும்,
இமாமையும் புரோக்கராய் மாற்றுவதாகட்டும்,
-அறிவும், ஒழுக்கமும், தன்னைத்தானே காத்துக்கொள்ளும் தைரியமும் கொண்டு வாழும் முஹம்மது உம்மாள்களை அரவணைக்கத் தெரியாத சமூகத்தை கூண்டிலேற்றுவதாகட்டும்,
-மெஹராஜ் மாலையை அரங்கேற்ற முழுச்சமூகமும் முகம் திருப்பிக் கொண்டபோதும் செட்டியார்கள் அதன் கண்ணியத்தை, முக்கியத்துவத்தை உணர்ந்ததையும், அதற்கான அங்கீகாரத்தை தருவதையும் சுட்டிக்காட்டுவதாகட்டும்,
-புலவர்களின், சிந்தனையாளர்களின், சீர்திருத்தவாதிகளின் வாழ்வையும், மரணத்தையும் குவாஜா அப்துல் லத்தீஃபின் இறுதி நாட்கள் மூலம் அப்பட்டமாய் காட்டுவதாகட்டும்,
ஒவ்வொரு கதாபாத்திரத்திலும், ஒவ்வொரு கிளைக்கதையிலும், வாசிப்பீராக என்ற முதல் கட்டளையுடன் தன்னிருப்பைத் துவங்கிய இச்சமூகத்தின் தற்போதைய அவலநிலையை தோலுரித்துத் தொங்க விட்டு விட்டார் ஆசிரியர்.
சமூகத்தில் நிரம்பியிருக்கும் பீ முடுக்கின் வாடை, புத்தகத்தில் ஆரம்பித்து வாசகர் வீட்டு நடுக்கூடம் வரை துளைப்பது உறுதி.
எழுத்தாளர் ஜெயமோகன் சார், வஹாபியிஸத்திற்கும், மரபுகளுக்கும் நடுவிலான போரைத்தான் இந்த நாவல் குறிப்பிடுகின்றது என்கிறார். எதனால் அந்தப் பார்வை கொண்டார் என்பது எனக்கு புரியவில்லை. இதில் வஹ்ஹாபிஸம் கிஞ்சித்தும் இல்லை. ஆனால் மேதாவித்தனம் கலந்த, தான்தோன்றித்தனத்தில் பயிரிடப்பட்ட, வரலாற்றை துடைத்தெரிவோம் என்னும் ‘புதிய கொள்கை’யின் அலட்சியங்களில் உருவான, அட்டூழியங்களும், தொலைநோக்கற்ற குருடான பார்வைகளும் //‘கண்ணாடித் திரையில் எழுதி அனுப்ப அதை அங்கே கண்னாடித்திரையில் வாசித்து’ // போன்ற வரியிலேயே கழுவேற்றப்பட்டு விடுகின்றன.
கொண்டாடுகின்றேன் இப்புதினத்தை, இந்த தைரியத்திற்காகவே. அல்லாஹ்விற்காக, தவ்ஹீதிற்காக, மார்க்கத்திற்காக மட்டுமே என்று கூவித்திரியும் இந்த நவீன ‘அப்துல்லாஹ் இப்னு உபை’களை, மழையில் அழிந்து விடுமோ பள்ளி என்றஞ்சி புது ஓடுகள் இட்டுக் காப்பாற்றப்போன மச்சானைத் தடுத்தி நிறுத்தி திருப்பி அனுப்பும்போதும், வெற்றுச்சவடாலிலும், புதிய ஓடுகளை தம்மிடமே பாதுகாத்துக்கொண்டதிலும் அடையாளம் காட்டுகிறார். ....இவர்களின் காலடியில் தூள் தூளானது அஞ்சுவண்ணத்தெருவின் மண் மட்டுமல்ல, அதன் பாரம்பர்யமும், மனிதமும் கூட. எல்லா ஊர்களின் அஞ்சு வண்ணத்தெருக்களும் இவர்களால் அனாதை ஆனதை இதை விட சம்மட்டியால் யாரும் அடிக்க இயலாது.
இன்னும் சொல்லிக்கொண்டே போனால், அஞ்சு வண்ணத்தெருவிற்கே ஒரு அருஞ்சொற்பொருள் அகராதி எழுதி விடுவேனோ என்றஞ்சுகிறேன். :)
இந்தப் புதினத்தை விமர்சனத்தின் மூலமின்றி, முழு படைப்பையே வாசித்தறிதல் மிக நலம். மிகச் சிறப்பு. ஆசிரியரின் தைரியத்தையும், சமூகநிகழ்வுகளையும், அனாச்சாரங்களையும், சிதையும் வேர்களையும், இதையெல்லாம் கவனிக்காது பௌதீக விஷயங்களில் மூழ்கி நாளைய எதிர்காலத்தை சிறைச்சாலைகளுக்குள் நிரப்பும் அறிவீனத்தையும் ஒரே இழையில் நெய்ததையும், கண்ணியப்படுத்த வேண்டுமானால், என் பாஷையில், He and his mighty pen deserves a standing Ovation! Salutes Sir!!
காரணமேயின்றி பகுத்தறிவு பகுத்தறிவு என தன் வீம்பையும், பிடிவாதத்தையும் விட்டுத் தர இயலாமல், நிகழ்வுகளின் மூலமும், நிஜ மனிதர்களின் மூலமும் இறைவனின் வல்லமைகள் புரிய வந்தாலும், இறுதி வரை மறுக்கும் வாப்பாவைத்தான் கடைசி நிமிடம் வரை நம்மோடு பயணிக்க வைக்கிறார் ஆசிரியர்... ஏன்?
இத்தனையும், கண்ட கேட்டறிந்த, அனுபவித்த வாப்பாவும், இந்தப் புதினத்தையும் பத்தோடு பதினொன்றாய் வாசிக்கும் வாசகனும் ஒன்றுதான் என்பதைத் தவிர வேறு காரணம் என்னவாக இருக்கக்கூடும்?