“செயலே முக்கியம், அதன் பலன்கள் அல்ல. நீங்கள் சரியானவற்றை செய்ய வேண்டும். உங்கள் சக்திக்கு உட்பட்ட, உங்கள் காலத்தில் அதற்கு எந்த பலனும் கிடைக்காமல் போகலாம். ஆனால் அதன் பொருள் நீங்கள் சரியானவற்றை செய்யாமல் இருப்பது என்பதல்ல. உங்கள் செயலால் என்ன விளையும் என்பதை நீங்கள் ஒருபோதும் அறிய முடியாமல் கூட ஆகலாம். ஆனால் நீங்கள் எதையுமே செய்யவில்லை என்றால் எந்த பலனும் கிடைக்காது.”- மகாத்மா காந்தி
குஜராத்தி இலக்கிய ஆசிரியர்களில் ஒருவரான கிருஷ்ணலால் ஸ்ரீதரணி காந்தி இறந்த போது ஆற்றிய வானொலி உரையில் அவர் சாட்சியாக இருந்த ஒரு நிகழ்வை பற்றி சொல்கிறார். தண்டி யாத்திரை சென்றபோது காரதி எனும் சிறிய கிராமத்தில் தங்குகிறார்கள். ஒருநாள் காலை காந்திஜியை நோக்கி கிராமத்தினர் ஒரு குழுவாக பெண்கள் முன் நடக்க வெற்றி முழக்கத்துடன் ஊர்வலம் வந்தார்கள். பின்னால் வந்து கொண்டிருந்த இசை கலைஞர்கள் பீடு நடையின் தாளகதியை கட்டுப்படுத்தினார்கள். ஆண்கள் பழங்கள், மலர்கள் மற்றும் பண முடிப்புகளை தாங்கி வந்தார்கள். காந்திஜியை அவர்கள் பக்தியுடன் அணுகி மரியாதையுடன் அவருடைய காலடியில் காணிக்கைகளை வைத்தார்கள்.
“எங்கள் கிராமக் கிணறு..” காந்திஜியின் துளைக்கும் பார்வைக்கு பதிலாக கிராமத்தின் பிரதிநிதி தடுமாறினான். “எங்கள் கிராம கிணறு இத்தனை ஆண்டுகளாக நீரின்றி இருந்தது. உங்கள் புனிதமான காலடிகள் எங்கள் மண்ணை நேற்று தொட்டது, இன்று கிணறில் நீர் நிறைந்துவிட்டது. ஆகவே நாங்கள் வணங்க..”
“அட முட்டாள்களே!” என்று காந்திஜி காட்டமாக குறுக்கிட்டார். “அது ஒரு விபத்து என்பதில் சந்தேகமே இல்லை. உங்களுக்கு கடவுளிடம் எந்த அளவிற்கு செல்வாக்கு உள்ளதோ அதைவிட எந்த விதத்திலும் எனக்கு கூடுதல் செல்வாக்கு இல்லை.” காந்திஜியின் முகத்தில் இருந்த கடுமையான பாவனை மறைந்து தந்தையர் தனமான சிரிப்புக்கு வழிவிட்டது.
அவர் பொறுமையாக கற்காத கிராமத்து மனிதர்களுக்கு புரியும்படி எளிய உவமைகள் வழியாக இந்த மர்மத்தை விளக்கத் துவங்கினார்.
“பனை மரம் விழுந்து கொண்டிருக்கும் போது காக்காய் அதில் உட்கார்ந்தால், அதன் எடையால் தான் மரம் விழுந்தது என்பீர்களா? திரும்பி செல்லுங்கள்” பனையோலை தடுக்கில் அமர்ந்திருந்த சிறிய மனிதன் அவர்களுக்கு ஆணையிட்டான். “இந்த மாதிரி அற்ப விபத்துக்களைப்பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு உங்கள் நேரத்தை பாரத தாய்க்கு ஆடை அணிவிக்க நூல் நூற்கவும் நெசவு செய்யவும் செலவிடுங்கள்.” என்றார்.
இந்த நிகழ்வை வாசித்தவுடன் தோன்றியது. ஒரு மனிதனுக்கு இப்புவியில் ஆகப் பெரிய சபலம் எதுவாக இருக்கும்? பெண்ணோ, பொன்னோ, மண்ணோ அல்ல. எந்த மனிதனும் தான் கடவுளாகும் வாய்ப்பை அத்தனை எளிதில் மறுக்க மாட்டான். தன் வாழ்நாளில் ஒரேயொருவனுக்காவது, ஒரேயொரு தருணத்திலாவது கடவுளாகிவிட வேண்டும் எனும் விழைவு இல்லாத மனிதர்கள் உண்டா என்று தெரியவில்லை. காந்தி அந்த சபலத்தை, தான் கடவுளாகும், அவதாரமாகும், புனிதராகும் சபலத்தை கடந்துவிட்டார். ஒருவேளை அவர் அதற்கு இரையாகி இருந்தால் இந்தியாவின் நீண்ட நெடிய புனிதர் நிரையில் அவரும் ஒருவராய் ஆகியிருப்பார்.
காந்தி நேர்மறையான ஆளுமையாகவே நம் குழந்தை பருவத்தில் நமக்கு அறிமுகமாகிறார். காலபோக்கில் நாம் வளரிளம் பருவத்தை அடைந்ததும் அவரை பற்றிய அவதூறுகளை வந்து அடைகிறோம். அந்த வயதில் எந்த உன்னதத்தின் மீதும் நமக்கு நம்பிக்கை இருப்பதில்லை. நம்மை பற்றிய மிகை பெருமைகள் நமக்குள் வளர்கின்றன. இயல்பாக வீர வழிபாடிற்கு சென்று விடுகிறோம். வீர வழிபாடு தவறில்லை. எது வீரம் என்பதுதான் சிக்கல். காந்தியை பெண் பித்தர் என்றும் கோழை என்றும் ஏமாற்று பேர்வழி என்றும் நம்மிடம் யாராவது சொல்லும்போது பெரும்பாலும் மறுப்பின்றி ஏற்கிறோம். அதை ஐயமின்றி பரப்புகிறோம். இந்த எட்டாண்டு கால காந்தியுடனான பரிச்சயத்தில் ஒன்றை சொல்ல முடியும். அரிதினும் அரிதான வெகு சில புள்ளிகளை தவிர பிற அனைத்துமே காந்தி மீதான அடிப்படையற்ற அவதூறுகள்தான். அதைவிட கொடுமை என்னவென்றால் இவற்றில் பெரும்பாலானவை திட்டமிட்ட உள்நோக்கத்துடன் ஒரு தரப்போ மற்றொரு தரப்போ பரப்பிவை கூட அல்ல. பெரும்பாலும் கட்டுகதையாக உற்பத்தியாகி சமூகத்தில் உலவுபவை. திட்டமிடப்பட்ட அரசியல் பிரசாரங்களுக்கு கூட சில நோக்கங்கள் உண்டு. ஆழத்தில் அவர்கள் உண்மையை அறிந்தாலும் கூட தங்கள் அரசியல் தரப்புகளுக்கு ஏற்ப உண்மையை திரித்து கொள்வார்கள்.
யோசித்து பார்க்கையில் காந்தியின் உயரம் நம்மை தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நம் முழு ஆற்றலையும் செலவழித்து அவரை சாரசரியாக்க முயன்று கொண்டே இருக்கிறோம். காந்தியின் உயரம் தொந்திரவு செய்கிறது என்பதால் அவரை இன்னும் இன்னும் மேலே உயர்த்தி நம் புலனுக்கு வசப்படாத இடத்தில் பாதுகாப்பாக தள்ளிவிட முயல்கிறோம். இவ்விரு வகையிலும் அவர் பார்வையில் இருந்து தப்பி நாம் ஆசுவாசமடைய முயல்கிறோம். காந்தி ஒரு மனிதர் தான், விழைவுகளும், கனவுகளும் அலைகழிக்கும் மனிதர், தன்னுடைய லட்சியங்களை, அதன் எல்லைகோடுகளை மேலும் மேலும் என உயர்த்தி தொட முனைபவர், அரிதாக வெற்றியும் பல நேரங்களில் தோல்வியும் அடைந்தவர். கடவுளோ, தேவ தூதனோ அல்ல. ஆனால் நம்மை விடவும் மேம்பட்ட மனிதர், சில நூற்றாண்டு கால வரலாற்றில் வாழ்ந்த மாமனிதர்களில் ஒருவர், அவர் ரகசியங்கள் ஏதுமற்றவர். தன் தோல்விகளையும் அச்சங்களையும் தன் முயற்சிகளையும் நம்முன்னே அப்பட்டமாக கடைவிரித்தவர். காந்தி அவர் கொண்ட லட்சியங்களால், அதற்கான முயற்சிகளால், அதை அடைய முயன்று தோற்றதினால் நமக்கு நெருக்கமாகிறார். எனக்கு காந்தி மகாத்மா அல்ல. அவர் என்னை தொந்திரவு செய்பவர். என்னை கேலி செய்து சிரிப்பவர். முடிவுகளை நோக்கி நிர்பந்திப்பவர். செயற்கைக்கோள் துவங்கி கழிவறை வரை எல்லாவற்றையும் பற்றி அவருக்கு சொல்வதற்கு எதாவது உண்டு. ஆகவே இன்றும் என்னுடன் அந்தரங்கமாக உரையாடுபவர். காவேரியா? ஸ்டெர்லைட்டா? கூடங்குளமா? காந்தி என்ன நிலைப்பாடு எடுத்திருப்பார்? என் நிலைப்பாடு என்ன? ஒருக்கால் அவருக்கு எதிரான நிலைபாடை நான் கொண்டிருந்தால் அவரை தர்க்கரீதியாக திருப்திபடுத்தி என் தரப்பிற்கு ஆதரவாக்கும் அளவுக்கு என் தரப்பு வலுவானதா? அப்படியில்லை என்றால் அவர் தரப்பிற்கு நான் மாற வேண்டும். அந்த மனத்திண்மை எனக்கிருக்கிறதா? காந்தி எனக்கொரு உரைக்கல்.
22/8/2011 அன்று ‘காந்தியம் இன்னும் சாகவில்லை’ என்ற பெயரில் சூத்ரதாரி எம்.கோபாலகிருஷ்ணன் அண்ணா ஹசாரே குறித்து எழுதிய கட்டுரையே காந்தி- இன்று தளத்தில் முதன் முதலாக பதிவான கட்டுரை. இந்த ஏழு வருடங்களில் ஐந்நூறு இடுகைகளை கடந்து பயணித்து கொண்டிருக்கிறது. அண்ணா ஹசாரே இயக்கம் துவங்கிய காலத்தில் அருந்ததி ராய் போன்றவர்கள் தொடர்ச்சியாக அவரை நிராகரித்து எழுதி வந்தார்கள். அப்போது ஜெயமோகன் ஹசாரே குறித்தும் ஊழல் எதிர்ப்பின் முக்கியத்துவம் குறித்தும் முனைப்புடன் எழுதி வந்தார். அந்த சூழலில் அரங்கசாமி, ராமச்சந்திர சர்மா, பாலாஜி ஸ்ரீனிவாசன், சுந்தரவடிவேலன் ஆகியோர் அண்ணா ஹசாரேவிற்காக துவங்கிய தளத்தில் என்னையும் சேர்த்து கொண்டார்கள். அண்ணா ஹசாரே இயக்கம் சுனங்கியதும், பிற நண்பர்களின் ஆர்வமும் செயலூக்கமும் சுணங்கியது. அவரை பற்றியும் அவர் இயக்கத்தை பற்றியும் அவருடைய பணிகளை பற்றியும் எழுதுவதற்கு ஓர் எல்லை உண்டு என்பதை உணர்ந்து கொண்டோம். அப்படியான நெருக்கடியில் இந்த தளம் காந்தியை நோக்கி திரும்பியது. அப்போது நண்பர் நட்பாஸ் என்னுடன் இணைந்து கொண்டார். காந்தி- இன்று தளத்தின் சரிபாதி கட்டுரைகளாவது எங்கள் இருவரின் நேரடி பங்களிப்பில் உருவானவை என சொல்லலாம். காலபோக்கில் எத்தனையோ நண்பர்கள் அவ்வபோது காந்தி – இன்று தளத்திற்காக கட்டுரைகள் அளித்திருக்கிறார்கள்.
துவங்கிய புதிதில் இது தொகுக்கும் தளமாக செயல்பட துவங்கியது. பின்னர் மொழியாக்கம் செய்ய துவங்கினோம். அடுத்த கட்டமாக மொழியாக்கமாக இல்லாமல், கட்டுரையின் கருத்துக்களை விவாதமாக விரிவாக்கி கட்டுரைகள் எழுதினோம். காலபோக்கில் புத்தக அறிமுகங்களும் அசலான ஆய்வு கட்டுரைகளும் வரத்துவங்கி முழு பரிணாமம் அடைந்தது. காந்தி, காந்தியர், காந்தியம் என எங்கள் தளத்தின் பேசுபொருள் விரிந்தபடி செல்கிறது. ஆஷிஸ் நந்தி, மகரந்த் பரஞ்சபே, ராமச்சந்திர குகா, ஜீன் ஷார்ப் போன்ற முக்கிய அறிஞர்கள் மட்டுமின்றி வங்காளதேசத்தின் ஜர்ணா தாரா சௌத்ரி, இலங்கையின் ஜெயராம்தாஸ் போன்ற அறியப்படாத ஆளுமைகள் பற்றியும் காந்தி – இன்று தளத்தில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ அளித்த உந்துதலில் இயங்க துவங்கியது காந்தி- இன்று. கட்டுரைகள் எழுதப்பட்ட காலங்களில் ஐம்பதோ அறுபதோ பேர்களால் வாசிக்கப்பட்டு வந்த சூழல் மாறி இப்போது ஒவ்வொரு கட்டுரையையும் குறைந்தது ஆயிரம் பேராவது வாசித்திருக்கிறார்கள். சமூக ஊடக விவாதங்களில் தரவாக காந்தி- இன்று கட்டுரைகள் பகிரப் படுகின்றன. காந்தி- இன்று கட்டுரைகளில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள் அச்சு பத்திரிக்கைகள் இணைய பக்கங்கள் என பல இடங்களுக்கு பரவி இருக்கின்றன.
காந்தி- இன்று தளத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் முதல் தொகுப்பு 2012 ஆம் ஆண்டு சொல்புதிது பதிப்பகத்தால் ‘காந்தி- எல்லைகளுக்கு அப்பால்’ எனும் பேரில் வெளியிடப்பட்டது. ஜீன் ஷார்ப், மைக்கேல் பிளாட்கின், கிளேர் ஷெரிடன் மற்றும் லாயிட் ஐ ருடால்ப் ஆகிய நால்வரின் ஆக்கங்களை கொண்டு காந்தி இந்தியாவிற்கு வெளியே என்னவாக சென்றடைந்து இருக்கிறார் எனும் பேசுபொருளில் உருவானது. அதன் பின்னர் நாராயண் தேசாய் அவர்களின் காந்தி கதா அனுபவம் பற்றிய கட்டுரையும், கண்ணன் தண்டபாணி அவரை எடுத்த நேர்காணலும் சர்வோதயா பிரசுரமாக சிறிய நூலாக ‘காந்திய காலத்திற்கு ஒரு பாலம்’ என்ற பேரில் வெளியானது. நண்பர் க. கார்த்திகேயன் காந்தி – இன்று தளத்தில் தொடராக மொழியாக்கம் செய்த மில்லி போலாக்கின் ‘காந்தி எனும் மனிதர்’ சர்வோதயா வெளியீடாக வெளிவந்தது.
நண்பர் ‘யாவரும்’ ஜீவ கரிகாலனோடு சென்ற புத்தக கண்காட்சியின்போது பேசிக்கொண்டிருந்த போது காந்தி- இன்று தளத்தில் இருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகள் தொகுப்பாக வர வேண்டியதன் அவசியத்தை பற்றி விவாதித்தோம். அம்பேத்கார், பெரியார் ஆகியோருக்கு உள்ள புரட்சி பிம்பம் ஆச்சரியமாக ஏனோ காந்திக்கு இல்லை. இத்தனைக்கும் இன்று பரவலாக நாம் பின்பற்றும் பெரும்பாலான போராட்ட வடிவம் அவருடைய கொடையே. ஒரு ஓரமாக அமர்ந்து ராட்டையில் நூல் நூற்கும் ஆபத்தற்ற கிழவர் என்பதாக காந்தியைப் பற்றிய நம் பொது பிம்பம் உள்ளது. காந்தியை அணுகி வாசிக்கும்போது மட்டுமே அவருள் இருக்கும் கலகக்காரன் புலப்படுவான். காந்தி ஓர் அரசின்மைவாதியும் கூட. காந்தியின் புரட்சி நமக்கு எளிதில் பிடிபடாமல் இருப்பதற்கு காரணம் அவர் எதிரிகளை உருவகிப்பதில்லை என்பதே. ஆகவே காந்திய புரட்சி நம் சுய மேம்பாட்டை அலகாக கொண்டது. நம் எல்லைகளை நாம் மீறி செல்வதே அதன் சாரம். முற்றிலும் நேர்மறைத்தன்மை கொண்டதும் கூட.
இந்த சூழலில் காந்தி- இன்றிலிருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகள் அடங்கிய தொடர் தொகுதிகளை வெளியிடலாம் எனும் முடிவுக்கு வந்தோம். அவ்வகையில் இத்தொகுப்பில் நான் எழுதிய பதினெட்டு கட்டுரைகள் உள்ளன. தேர்ந்தெடுத்த மொழியாக்க கட்டுரைகள் ஒரு தொகுதியாக வரவுள்ளன. என்னைத் தவிர பிறர் எழுதிய அசல் கட்டுரைகளை ஒரு தொகுதியாக கொண்டு வரும் யோசனையும் உள்ளது. பாபா ஆம்தே, குமரப்பா, சுந்தர்லால் பகுகுணா, கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் போன்ற காந்திய ஆளுமைகள் பற்றிய அறிமுகங்கள் கொண்ட ஒரு தொகுப்பு கொண்டு வரும் திட்டமும் மனதில் உள்ளது.
குறியீடாக மட்டும் காண்பவர்கள் அவருடைய ஆளுமையை தவிர்க்க சொல்கிறார்கள். காந்தியின் ஆளுமை சிக்கலானது. விமர்சிக்கத்தக்க அம்சங்கள் உள்ளடக்கியது. ஆகவே காந்திய ஆளுமையை தூக்கிப் பிடித்தால் அதை சாக்காக கொண்டு காந்தி எனும் குறியீடை வீழ்த்திவிடுவார்கள் என்பது அவர்களின் வாதம். ஆனால் காந்தி ஒரு குறியீடாக அவருடைய ஆளுமையின் பீடத்தின் மீது தான் நிற்கிறார். அந்த குறியீட்டின் ஆற்றல் ஊற்று அவருடைய ஆளுமையின் சத்தியமே. அப்படி துண்டித்து பார்க்க கூடாது என்பதே என்னைப் போன்றவர்களின் வாதம். இந்த தொடர்பை உணர்ந்ததால் தான் காந்தி எனும் குறியீடை விட்டுவிட்டு காந்தி எனும் ஆளுமையை வீழ்த்தும் நோக்கில் கருத்துலகில் அவதூறுகளும் விமர்சனங்களும் எழுப்பப்படுகின்றன என்பதை கவனிக்க வேண்டும். ஆகவே இத்தொகுப்பில் காந்தி எனும் குறியீடுக்கும் அவருடைய ஆளுமைக்கும் நிகரான முக்கியத்துவம் அளிக்க விரும்பினேன். அதுவே காந்தியை முழுமையாக அணுகுவதற்கு சரியான முறை. முதல் பத்து கட்டுரைகள் காந்தி எனும் குறியீடை, அவர் எதற்காக வாழ்ந்தாரோ அந்த இலட்சியங்களின் தற்கால முக்கியத்துவத்தை பற்றி பேசுகின்றன. அடுத்த எட்டு கட்டுரைகள் காந்தி எனும் ஆளுமையை மையபடுத்தியதாக உள்ளன.
இந்த கட்டுரைகள் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை. காந்தியும் பகத்தும், காந்தியும் 55 கோடியும் ஆகிய இரண்டு கட்டுரைகளும் ஆய்வுத்தன்மை கொண்டவை. இக்கட்டுரை உருவாக்கத்தில் நண்பர் ராட்டை ரகு, தேசிய காந்தி அருங்காட்சியக இயக்குனர் அ. அண்ணாமலை போன்றோர் சில தரவுகளை அளித்து உதவினார்கள். காந்தியின் சமூகம், இந்திய வரலாற்றில் ஒத்துழையாமை போராட்டங்கள் போன்ற நீள் கட்டுரைகள் விவாதத் தன்மை கொண்டவை. முதல் இரண்டு கட்டுரைகள் காந்திய கல்விமுறை பற்றியதாக உள்ளன. அடுத்த இரண்டு கட்டுரைகள் காந்தியின் மத பார்வையை பற்றி பேசுகின்றன. அதற்கடுத்த மூன்று கட்டுரைகள் காந்தியின் மிக முக்கியமான கொடையான அகிம்சை எனும் போராட்ட முறையின் தற்கால முக்கியத்துவத்தை பற்றி, அதன் வரலாற்று சுவடுகளை பற்றியதாக உள்ளன. அதற்கடுத்த மூன்ற கட்டுரைகள் காந்தியின் தற்கால சமூக தேவையை, அவருடைய சமூக பார்வைகளை பற்றியதாக உள்ளன.
காந்தி எனும் ஆளுமையை பற்றி பேசும் கட்டுரைகளை கால வரிசைப்படி அமைத்திருக்கிறேன். மில்லியின் காந்தி அவருடைய தென்னாப்ரிக்க வாழ்வை சொல்வதாகும். ஜெயராம்தாஸ் இருபதுகளின் மத்தியில் காந்தியை சந்தித்த சிங்கள ஆளுமை. அதற்கு அடுத்து காந்தியும் பகத்தும் கட்டுரை காலம்காலமாக பகத் சிங் தூக்கிற்கு காந்தி எதுவும் செய்யவில்லை எனும் அவதூறை நோக்கி எழுதப்பட்டுள்ளது. அடுத்த கட்டுரை தண்டி யாத்திரையை பற்றியது. காந்தியும் 55 கோடி கட்டுரை காந்தி மேற்கொண்ட இறுதி உண்ணா நோன்பை பற்றிய கட்டுரை. அன்புள்ள புல் புல் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை. அதுவே இத்தொகுதியின் பெயரும் கூட. காந்தியின் நகைச்சுவை உணர்வை பற்றியது. வின்சன்ட் ஷீன் எழுதிய காந்தி சரிதை பற்றிய கட்டுரை காந்தியின் முழு வாழ்வை குறித்து ஒரு சித்திரம் அளிக்க வேண்டும் என்பதற்காக. இறுதி கட்டுரை ‘காந்தியை அறிதல்’ தரம்பாலின் நூலை முன்வைத்து காந்தியின் சாரத்தை, அவருடைய முக்கியத்துவத்தை சொல்லும் முழுமை பார்வை கொண்டது.
2011 – 2017 வரை வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை. இத்தொகுதிக்காக இவற்றை மீள வாசிக்கும்போது எனது சிந்தனைகளில் சில மாறுதல்கள் நேர்ந்ததை உணர முடிகிறது. காம்ரேட் காந்தி போன்ற ஒரு கட்டுரையை இப்போது எழுதுவேனா எனத் தெரியவில்லை. பகத் சிங் கட்டுரையில் சில பிழைகளும் விடுபடல்களும் இருந்தன. கண்ணன் வெங்கட்ராமன் அவற்றை சுட்டிக்காட்டி இருந்தார். அக்கட்டுரையை திருத்தி விரிவாக்கி இருக்கிறேன். ‘அன்புள்ள புல்புல்’ கட்டுரையும் இன்னும் சில நிகழ்வுகள் சேர்ந்து விரிவாகியுள்ளது. பிற கட்டுரைகளில் சிற்சில திருத்தங்கள் உள்ளன. சில கட்டுரைகளில் ஒரே பேசுபொருள் மேற்கோள்களாக மீள மீள வரலாம். ஆனால் அக்கட்டுரையின் வடிவிற்குள் அதற்கான அவசியம் உள்ளதால் அவற்றை நீக்க முடியவில்லை.
காந்தி - இன்றின் இணையாசிரியராக தளத்தை நடத்த உதவிய நண்பர் நட்பாஸ் அவர்களுக்கு நன்றி. காந்தியை எனக்கு மறு கண்டுபிடிப்பு செய்துகொள்ள உதவிய எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி. தொடர்ந்து காந்தி- இன்றில் எழுதி வரும் நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி. இணையத்தில் கட்டுரைகள் இருக்கும்போது இப்படியான ஒரு தொகுப்பை கொண்டு வருவது தொழில்ரீதியாக லாபமாக இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை. எனினும் இரண்டாம் எண்ணம் ஏதுமின்றி ஆர்வத்துடன் பதிப்பித்த நண்பர் ஜீவ கரிகாலனுக்கு நன்றி. எப்போதும் என் எழுத்து பணிக்கு ஊக்கமாக இருக்கும் அம்மாவிற்கு, மனைவி மானசாவிற்கு, எழுத அனுமதிக்கும் சுதீருக்கு அன்பும் வணக்கங்களும். சில கட்டுரைகளை வெளியிட்ட சொல்வனம், தமிழ் தி இந்து, காலம் மற்றும் ஆம்னிபஸ் போன்ற ஊடகங்களுக்கு நன்றி.
கடந்த நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த வேறு எந்த அரசியல்வாதியை விடவும், சிந்தனையாளரை விடவும், மெய்யியலாளரை விடவும் முக்கியமானவர் காந்தி. அதற்கு மிக முக்கியமான காரணம் இலட்சியங்கள் எத்தனை உயரத்தில் இருந்தாலும் அதை அடைவதற்கான வழிமுறை நடைமுறை சாத்தியம் கொண்டவையாக இருந்தன. எல்லாவற்றையும் விட, இது அவநம்பிக்கையின் யுகம், உண்மை பொருளற்று போன காலகட்டம், இப்போதும் இனி வரும் காலங்களிலும் காந்தி நமக்கு அதிகம் தேவைபடுவார். காந்தி நம்மை மனிதர்களை நம்ப சொல்கிறார். அவர்களின் நல்லியல்புகளை நோக்கி உரையாட சொல்கிறார். அன்பின் ஆற்றலை கைகொள்ள சொல்கிறார். இன்று இவையெல்லாம் கேட்பதற்கு வாழ்வறியாத அப்பாவியின் பேச்சாக தோன்றலாம். ஆனால் நாம் மறுக்க முடியாத அளவிற்கு அவர் போதித்தவைகளுக்கான நிரூபணங்களை விட்டுச் சென்றிருக்கிறார். அவதூறுகளுக்கு அப்பால் அவரை அறிய வேண்டியதே நம் பணி. அந்த நோக்கில் இந்த தொகுப்பு வாசகருக்கு ஒரு நல்ல துவக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
சுனில் கிருஷ்ணன்
காரைக்குடி 14/5/18