கல்வி நூல் வரிசையில் இது வித்தியாசமான நூல். அடிப்படை அறிவியல்களான இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் போன்றவற்றில் சேர்ந்து உயர்கல்வி பயில நமது இந்திய மாணவ,மாணவிகள் ஏன் இவ்வளவு தயக்கம் காட்டுகிறார்கள், என்பதை தரவுகளின் அடிப்படையில் இந்நூல் அலசுகிறது. இந்நூலின் ஆசிரியர் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசின் விஞ்ஞான பிரசார் நிறுவனத்தில் மூத்த விஞ்ஞானி. சம காலத்தில் தி இந்து இதழ் போன்றவற்றில் பல அறிவியல் கட்டுரைகளை எழுதி வருபவர். பல அறிவியல் புத்தகங்களை எளிய தமிழில் எழுதியுள்ளார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் முக்கியமான ஒருவர்.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயம் தான் சர்வதேச பொருளாதாரத்தில் கொடிகட்டிப் பறந்தது. பின்னர் சுமார் 1800 களில் ஐரோப்பாவில் தொழில் புரட்சியின் காரணமாக இயந்திரம் மற்றும் இயந்திரம் படைக்கும் திறன் போற்றப்பட்டது. இந்தியாவில் காலனியாதிக்கம் முடிவுக்கு வந்த 1950 களில் டிராக்டர், பாய்லர் மற்றும் அதிநுட்ப கருவிகள் போன்ற கனரக இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் அறிவும் ஆற்றலும்தான் யார் உலகின் தலைவன் என்பதை உறுதி செய்தது. பின் எலக்ட்ரானிக் தொழில் முக்கியத் தொழிலானது. அடுத்து மின்னியல், வெப்பவியல், அணுமின்னியல் போன்ற துறைகள் முக்கியத்துவம் பெற்று அறிவியல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டது. அறிவியல் தொழில்நுட்ப சார் வளர்ச்சி தான் அந்தந்த நாட்டின் பொருளாதார தலைவிதியை தீர்மானித்தது. சர்வதேச வியாபாரம் என்பது அறிவியல் தொழில்நுட்ப ஏற்றுமதி என ஆகியது. கடந்த இருபது ஆண்டுகளாக finance capital எனப்படும் முதலீடு தொழில் தான் ஏற்றுமதியில் முன்னணி. சீக்கிரமே எதிர்காலத்தில் இந்த நிலை வெகுவாக மாறும் என்கின்றனர் நோக்கர்கள். வரும் காலம் அறிவு சார் பொருளாதார – knowledge economy- காலம் எனவும் கட்டியம் கூறுகின்றனர் நோக்கர்கள். இவ்வாறு ஆறு தலைப்புகள் கொண்ட இந்நூலில் முதல் தலைப்பில் இந்நூலாசிரியர் கூறுகிறார். இதுவே இந்தப் புத்தகத்தின் நோக்கமும் கூட.
21 ஆம் நூற்றாண்டில் கனரகத்தொழில், பாரம்பரிய உற்பத்தி தொழில் அல்லது விவசாயம் என்பதில் முக்கியத்துவம் இல்லை. அறிவு உற்பத்தி தொழில் தான் இந்தப் புதிய சமூகத்தின் அடித்தளமாக இருக்கும் என கூறுகின்றனர். அறிவுசார் பணிகளே வளரும் புதிய அறிவு சார் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக இருக்கும் என்கின்றனர். இத்தகைய அறிவுசார் பொருளாதார சமூகத்தில் உயர்கல்வி வளர்ச்சி இன்றியமையாதது. அடிப்படை அறிவியல் இதில் பெரும் செல்வாக்கு செலுத்தும். அறிவு சார் உற்பத்திக்கு எஞ்சினியரிங், மேலாண்மை படித்த மாணவ மாணவிகளை விட அடிப்படை அறிவியலில் பி.எச்.டி படித்த மாணவ மாணவியரின் ஆராய்ச்சி செய்யும் திறன் தேவை.
1998-2007 என பத்து ஆண்டுகளில் உயர்கல்வியில் இந்தியாவில் சுமார் 45561 பேர் பி.எச்.டி பட்டம் பெற்றுள்ளனர்.இதில் வெறும் 11449 பேர்தான் அதாவது வெறும் 25.1% தான் அடிப்படை அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்கள். அடிப்படை அறிவியலோடு தொடர்புடைய விவசாயத்தில் 12.9% பேர், பொறியியல் துறையில் 8.6% பேர், மருத்துவத்தில் 7.2 % பேர். இந்த பத்தாண்டுகளில் அடிப்படை அறிவியலில் பி.எச்.டி பட்டம் பெற்றவர்களில் வேதியியலில் பட்டம் பெற்றவர்கள் 3556(31.1%) , தாவரவியலில் 1645(14.4%) மற்றும் இயற்பியலில் 1662(14.2%) கணிதம் முதலான துறைகளில் சொற்பமானவர்களே பி.எச்.டி பட்டம் பெற்றுள்ளனர் என்கிறது ஆய்வு. தற்போது இந்தியா அடிப்படை அறிவியலில் ஆண்டுக்கு சுமார் 20000 பி.எச்.டி க்களை உருவாக்கி வரும் வேளையில் சீனாவோ ஆண்டுக்கு 50000 பேரை உருவாக்குகிறது. அறிவியலில் பி.எச்.டி பட்டம் பெற்றவர்களில் ஆண்கள் 66.4% பெண்கள் 33.6%. இவ்வாறு பல தரவுகள் இந்தப் புத்தகத்தில் கொட்டிக்கிடக்கின்றன.
இந்நூலாசிரியர் 1. அறிவியல் கல்வி 2. அறிவியல் உயர் கல்வி சந்திக்கும் சவால்கள் 3. பிசா ஆய்வும் இந்தியக் கல்வித் தரமும் 4. அமிர்தா பள்ளிக்குப் போகணுமா? 5. நெருக்கடியில் இந்திய அறிவியல் 6. சுடலைக்குயில் ஆய்வும் பங்கேற்பு அறிவியல் கல்வியும்
என்னும் ஆறு தலைப்புகளில் நூலாசிரியர் அடிப்படை அறிவியலின் அவசியத்தையும், பிசா ஆய்வில் இந்திய அறிவியலின் உண்மை நிலையையும், அடிப்படை அறிவியலின் பக்கம் மாணவ மாணவிகளை திருப்ப நாம் செய்ய வேண்டியதைப் பற்றியும் பலதரவுகளின் அடிப்படையில் விளக்குகிறார்.
அறிவியல் என்பது புதுமை; இளமை. என்றும் மார்க்கண்டேயன். அறிவியல் துறையில் இளம் ரத்தம் பாய வேண்டும். அதுவும் கேள்வி கேட்கும் மனப்பான்மையுடன் பழமையை விலக்கி புதுமை காணும் மனம் கொண்ட இளைஞர்கள் தேவை. அதனை அடைவதற்கான வழிமுறைகளை அறிவியலில்ஆர்வமுள்ளவர்கள் தெரிந்து கொள்ளவும், தனது புரிதலை மேம்படுத்திக் கொள்ளவும், இளைய சமுதாயத்தை அடிப்படை அறிவியல்பால் நல்வழிப்படுத்தவும் இந்தச் சிறு நூலை வாசிக்கலாம்.