முட்டாள், விஷமத்தனமானவர், பைத்தியகாரத்தனமானவர், பார்ப்பனர்களிலும் கீழானவர், பெண்களை அவமதிப்பவர், அரைவேக்காடு, உழைப்புச் சுரண்டலிற்கு ஆதரவானவர், பிதற்றலாளர், அடாவடியானவர், சாதி ஒழிப்பிற்கு எதிரானவர், சாதி ஒழிப்பு எக்காலத்திலும் சாத்தியமில்லை என்றவர், சொத்துடமை வர்க்கத்தின் ஆதரவாளர், அறியாமைகொண்டவர், மூடநம்பிக்கையாளர் என்றெல்லாம் அண்ணல் அம்பேத்கரை முழு நீளத்திற்குத் துாஷணை செய்து ரோயல் டெம்மி சைஸில் 416 பக்கங்களில் ஒரு நூல். நூலைச் சுந்தரத் தெலுங்கில் வசைத்திருப்பவர்: ரங்கநாயகம்மா. தமிழில் மொழிபெயர்த்திருப்பவர்: கொற்றவை. நூலின் பெயர் “சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது! அம்பேத்கரும் போதாது! மார்க்ஸ் அவசியத் தேவை!”
2000-ல் வெளியிடப்பட்ட இந்நூல் தெலுங்கில் பத்து மறுபதிப்புகளைக் கண்டதாகவும் 2001-ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாகவும் மொழிபெயர்ப்பாளர் குறிப்புத் தெரிவிக்கிறது. 2016-ல் வெளியான தமிழ் மொழிபெயர்ப்பு குறுகிய காலத்திலேயே மூன்று பதிப்புகளைக் கண்டிருக்கிறது.
416 பக்கங்களையுடைய நுாலில் கடைசி ஒன்பதரைப் பக்கங்களில் (404 -413) இடம்பெறும் ‘சாதி குறித்து மார்க்ஸ்’ என்ற ஓர் அத்தியாத்தைத் தவிர மற்றைய அத்தியாயங்கள் அனைத்துமே அண்ணல் அம்பேத்கரின் எழுத்துகளின் மீதான ரங்கநாயகம்மாவின் கேள்விகளாலும் அதையொட்டி அவர் அண்ணல்மீது வைக்கும் வசை மேவிய விமர்சனச் சொற்களாலும் நிரப்பப்பட்டுள்ளன.
காளமேகம், கம்பரசம் போன்றவை கூட வசைகளுடன் கூடிய பிரதிகள்தான் எனினும் அவற்றை வாசிக்கும்போது அவற்றிலுள்ள இலக்கிய நயமும் பேசுபொருளும் நமது வாசிப்பு ஆர்வத்தைத் துாண்டக் கூடியன. ரங்கநாயகம்மாவின் பாணியோ நேரெதிரானது. எந்த இலக்கியக் கலப்போ, ‘சென்ஸோ’ இல்லாத சுத்தமான வரட்டுப் பாணி அவருடையது. வாசிப்புக்குத் திறக்காத இறுக்கமான வசைக்கோட்டை. எனினும் என் கைக்கு இந்நூல் கிடைத்ததும் இதைப் படித்து முடிக்க எனக்கு அதிக நாட்கள் எடுக்கவில்லை. யமுனா ராஜேந்திரன், இரயாகரன் போன்றோரின் நூல்களையே அசராமல் படித்து முடிக்கும் எனது அசாத்தியச் சகிப்புத்தன்மைக்கு முன்னால் இந்நூல் எம்மாத்திரம்!
அண்ணலின் தொகுப்பு நூல்களிலிருந்து துண்டு துண்டாக மேற்கோள்களைக் காட்டி அம்மேற்கோள்கள் மீது ஏராளமான குறுக்குச்சால் கேள்விகளை எழுப்பிக் கட்டப்பட்டிருக்கும் இப்பிரதியில் ரங்கநாயகம்மாவின் வரட்டு வசைகள் தவிர்ந்த சொந்தக் கருத்துகள் மிக அபூர்வமாகவே காணக்கிடைக்கின்றன. உண்மையில் இந்நூல் ஒரு பெரிய கேள்விக்கொத்துத்தான்.
கேள்வியின் நாயகி ரங்கநாயகம்மா அண்ணலில் நூல்களையாவது கருத்தூன்றிப் படித்தாரா? அண்ணலின் மேற்கோள்களைத் திரிக்காமல் யோக்கியமாக இருக்கிறாரா? என்றால் அதுவும் கிடையாது. அண்ணலோ, பெரியாரோ, கார்ல் மார்க்ஸோ, புத்தரோ யாருமே கேள்விகளிற்கும் விமர்சனங்களிற்கும் அப்பாற்பட்டவர்கள் கிடையாது. ஆனால் வைக்கப்படும் கேள்விகளும் விமர்சனங்களும் திரிப்பதையும் மறைப்பதையுமே அடிப்படையாகக் கொண்டிருந்தால் அவை அவதூறுகள் என்ற இழிநிலையை அடைந்துவிடும். அவதுாறுகளின் நோக்கம் ஒரு சமூக விடுதலைப் போராளியைக் காலி செய்வது என்றால் நுாலாசிரியர் மீது மட்டுமல்லாமல் அதை மொழிபெயர்த்தவர்கள், வெளியிட்டவர்கள், கொண்டாடியவர்கள் எல்லோர்மீதும் நம் சந்தேகத்தின் நிழல் படிந்தேயாகும். இவர்கள் அனைவருமே இவை அவதுாறுகள் எனச் சந்தேகமற நிரூபணம் ஆகும்போது தம் செயல்களிற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்கள் ஆவார்கள்.
ரங்கநாயகம்மாவின் நூல் அண்ணல் அம்பேத்கர், புத்தர், பவுத்த சங்கம், தலித்துகள், தலித் கட்சிகள் போன்றவற்றின் மீதான மார்க்ஸிய முலாம் பூசப்பட்ட அவதூறுகளின் பெருந் தொகுப்பேயாகும். சாம்பிளிற்கு ஒரு விநோதத்தைக் குறிப்பிடலாம்.
நூலின் 14-வது அத்தியாயத்தில் அம்பேத்கர் கூறியதாக இம்மேற்கோளை ரங்கநாயகம்மா குறித்துக்காட்டுவார்:
“மில் முதலாளிகளுக்குள்ள கூர்மதி தொழிலாளர்களிற்கு இருக்குமானால் அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளின்படி மில்முதலாளிகள் நடந்துகொள்ளும் நிலை ஏற்படும். ஆனால் தொழிலாளர்களுக்கு அத்தகைய விவேகம் ஒருபோதும் ஏற்படாது…” என இம்மேற்கோள் ஆரம்பிக்கும்.
அம்பேத்கருடையது என ரங்கநாயகம்மா சுட்டிய இம்மேற்கோள் காந்தியாருடையதாகும். இந்தச் சொற்களை அம்பேத்கர் தனது நூலில் மேற்கோள் காட்டி காந்தியாரை விமர்சிக்கிறார். தமிழில் முதற்பதிப்பு வெளியானதும் தோழர் ஆதவன் தீட்சண்யா இந்தப் பிழைபாடைச் சுட்டிக்காட்ட இரண்டாவது தமிழ் பதிப்பில் ரங்கநாயகம்மா “தெலுங்கில் வெளியான அம்பேத்கரின் தொகுப்பு நூலில் குறிப்பிட்ட மேற்கோளிற்கு அடைப்புக்குறிகள் இல்லாததால் காந்தியாருடைய மேற்கோளை அம்பேத்கருடையது என நினைத்துவிட்டேன்” என்று சொல்லி இரண்டாவது தமிழ் பதிப்பில் அம்மேற்கோளோடு சேர்த்து நான்கரைப் பத்திகளையும் நீக்கியிருக்கிறார்.
இது ஒரு பாராட்டுக்குரிய செயல் என்பது ஒருபுறமிருக்க, பதினொரு தெலுங்குப் பதிப்புகளும் ஒரு ஆங்கிலப் பதிப்பும் ஒரு தமிழ் பதிப்பும் வரும்வரை ரங்கநாயகம்மா உட்பட யாரும் இந்தக் குழறுபடியைக் கண்டுபிடிக்கவில்லை என்பதுதான் ஆச்சரியத்தை அளிக்கிறது. ஏறத்தாழ 16 வருடங்கள் இந்தக் குளறுபடி நீடித்திருக்கிறது. ஆங்கில மொழிபெயர்ப்பாளர் நூலில் இடம்பெற்ற அம்பேத்கர் மேற்கோள்களை ஆங்கிலத்திலிருந்தும் தமிழ் மொழிபெயர்ப்பாளர் அம்பேத்கர் தொகுப்புகளின் தமிழ் பதிப்பிலிருந்தும் எடுத்தேன் என்கிறார்கள். அவர்களது கவனத்திற்குக் கூட இந்தக் குழறுபடி தட்டுப்படவில்லையா. தெலுங்குப் பதிப்பில்தானே அடைப்புகுறி அச்சுப்பிழை, ஆங்கிலப் பதிப்பிற்கும் தமிழ் பதிப்பிற்கும் என்ன கேடு என்று கேட்கிறேன். இது எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானது அடைப்புக்குறி இல்லாவிட்டால் ரங்கநாயகம்மாவிற்கு மட்டுமல்ல மொழிபெயர்ப்பாளர்களிற்கும் கூட காந்தியாருக்கும் அம்பேத்கருக்கும் வேறுபாடு கண்டுபிடிக்க முடியாது என்பதுதான். அம்பேத்கர் குறித்த அவர்களது வாசிப்பு அத்தகைய மேலோட்டமானது அல்லது அலட்சியமானது என்பதற்கு நூல் முழுவதும் சான்றுகள் உள்ளதைப் பின்னால் பார்ப்போம்.
சரி இந்தக் குழறுபடிகளும் அவதூறுகளும் ஒருபுறம் கிடந்து தொலையட்டும், தந்தை பெரியாரைச் சாதிவெறியரென்றும், அண்ணலை ‘இந்துத்துவ அம்பேத்கர்’ என்றும் கார்ல் மார்க்ஸை ‘யூத இலுமினாட்டி’ என்றும் கூறும் எத்தனையோ அவதூறுகளைக் கண்டு கடந்தவர்கள்தானே நாங்கள் என ரங்கநாயகம்மாவின் அம்பேத்கர் தூஷணத்தைக் கடந்துசென்று ‘சாதியப் பிரச்சினைக்குத் தீர்வாக மார்க்ஸ் அவசியம் தேவை’ என்கிறாரே ரங்கநாயகம்மா அந்த அவசியத்தையாவது நுாலில் நிறுவிக்காட்டுகிறாரா அவர் என்பதை அறிய முயற்சித்தேன்.
அதற்கு முன்னே ரங்கநாயகம்மா கறாராக ஒன்றைச் சொல்லிவைக்கிறார்: “மார்க்ஸியம் குறித்து விவாதிக்க, ஒருவர் மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸின் எழுத்துகளை அடிப்படையாக் கொண்டு பேசவேண்டும். ருஷியாவில், சீனாவில், இந்தியாவில் இதரநாடுகளில் கம்யூனிஸ்டுகள் என்ன சொன்னார்கள், செய்கிறார்கள் என்பதை வைத்துப் பேசக்கூடாது” (பக்:309).
இப்படியாக லெனின், மாவோ, ட்ராட்ஸ்கி, ரோஸா லக்ஸம்ஃபேர்க், புகாரின், கிளாரா செட்கின், லீப்னெக்ட், க்ராம்ஷி , சே குவேரா, எம். என்.ராய், சிங்காரவேலர், சாரு மஜூம்தார் எல்லோரையுமே மார்க்ஸிய மரபிலிருந்து ஒட்டுமொத்தமாக டிஸ்மிஸ் பண்ணிவிடுகிறார் ரங்கநாயகம்மா. உண்மையில் ஜோஸப் ஸ்டாலின் கூட இவ்வளவு தொகையில் மார்க்ஸியர்களைக் கட்சியிலிருந்து வெளியேற்றியதில்லை.
சாதியப் பிரச்சினைக்கு மட்டுமல்ல பல்வேறுவகையான சமூக – பொருளியல் – பண்பாட்டுப் பிரச்சினைகளிற்கும் மார்க்ஸியத்தின் கூறுகள் நமக்கு இன்றும் வழிகாட்டுபவையே. ஆனால் மார்க்ஸ்தான் சர்வகாலத்திற்குமான முற்றுண்மை கிடையாது. அவருடைய எழுத்துகள் அடிக்கவோ திருத்தவோ வளர்த்துச் செல்லவோ முடியாத கல்வெட்டுகளல்ல. அதை அவரே ஒப்புக்கொள்வார். “இளைஞர்கள் சில சமயங்களில் பொருளாதாரத் தரப்பின்மீது அழுத்தம் கொடுப்பதற்கு மார்க்சும் நானும் பகுதியளவிற்கு பொறுப்பாவோம். மற்றைய கூறுகளிற்கு உரிய அழுத்தம் கொடுப்பதற்கு காலமும் இடமும் சந்தர்ப்பமும் எப்போதுமே எங்களிற்கு வாய்க்கவில்லை” என்று சொல்லித் தங்களது போதாமையையும் இடைவெளியையும் கம்பீரமாக ஒப்புக்கொண்டவரல்லவா ஏங்கெல்ஸ்!
குறிப்பாக, சாதியச் சமூகங்களில் மார்க்ஸியத்தின் பாத்திரம் குறித்து நீண்ட பெறுமதிமிக்க விவாதங்களை நடத்திய நிலம் நம்முடையது. இந்திய – இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் நக்ஸல்பாரிகளும் கட்சிக்கு வெளியேயான இடது அறிவுஜீவிகளும் தலித் அரசியலாளர்களும் அம்பேத்கரியர்களும் திராவிட இயக்கத்தவர்களும் நீண்டகாலமாக இதுகுறித்து விவாதித்திருக்கிறார்கள். இது குறித்து ஏட்டில் எழுதப்பட்ட பக்கங்களை அடுக்கினால் அவை அளவிலும் பண்பிலும் ஆயிரம் பாபெல் கோபுரங்களிலும் பெரியவை.
ரங்கநாயகம்மா மார்க்ஸை முன்வைத்து தனது நூலில் புதிதாக என்னதான் சொல்லிவிட்டார்? எதுவுமேயில்லை. காலம் காலமாக அரைத்த அதே பழைய மாவுதான். தொழிற்பிரிவினையே சாதியின் தோற்றத்திற்கும் படிநிலைக்கும் காரணம். உழைப்புச் சுரண்டலிற்கு முடிவு கட்டுவதுதான் சாதி ஒழிப்பிற்கான ஒரேவழி. இந்த இரண்டு வார்த்தைகளையும் சொல்லிவிட்டு 150 வருடங்களிற்கு முன்பு மார்க்சும் ஏங்கெல்சும் இந்திய சமூக அமைப்புக் குறித்த தமது மட்டுப்படுத்தப்பட்ட அறிதலோடு எழுதிச் சென்ற சில பத்திகளை மேற்கோள்களாகக் காட்டிவிட்டு “சாதியொழிப்பிற்கு மார்க்ஸ் அவசியம் தேவை” என மங்களம் பாடி முடித்துவிடுகிறார் ரங்கநாயகம்மா.
உண்மையில் இப்போதெல்லாம் சாதிய ஒழிப்பில் நேர்மையான அக்கறைகொண்ட யாருமே மரபு மார்க்ஸியத்தின் வழியே, சாதியத்தின் தோற்றத்திற்குக் காரணம் உழைப்புப் பிரிவினை, சுரண்டலை ஒழித்தால் சாதி ஒழிந்துவிடும் எனச் சொல்வதில்லை. மாறாக இந்துத்துவவாதிகளும் சாதியமைப்பு முறையின் ஆதரவாளர்களும்தான் இதை மறுபடியும் மறுபடியும் தொலைக்காட்சி விவாதங்களிலும் முகநுால்களிலும் கூறி சாதியின் அடிவேரான இந்து மதத்தில் கீறல்கூட விழாமல் காத்துக்கொண்டு, சாதியானது தொழில் வளர்ச்சிப் போக்கில் இயல்பான ஒன்றெனவும் சுரண்டல் நீடிக்கும்வரை சாதியை ஒழிப்பது கடினமெனவும் தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை விடுத்துக் கல்வியில் கவனம் செலுத்துமாறும் பொருளாதாரரீதியாய் முன்னேறினால் சாதியச் சுமையிலிருந்து விடுபட்டுவிடலாம் என்றும் கூறுகிறார்கள். இந்தப் பொருளாதாரவாதங்களையெல்லாம் முக்கால் நுாற்றாண்டிற்கு முன்பே தனது ஆய்வுகளின் வழியே எதிர்கொண்டு தகர்த்துப்போட்டவர் அம்பேத்கர். அந்த ஆய்வுகளை இலட்சம் பக்கங்களில் சான்றாதாரங்களுடன் எழுதிவைத்துப் போயிருக்கிறார் அண்ணல்.
மார்க்ஸிய சமூக விஞ்ஞானத்தைக் கையிலெடுக்கையில் கூடவே சமகாலத்திற்கான அதன் பொருத்தப்பாடுக் கூறுகளையும் பொருத்தமின்மைக் கூறுகளையும் நாம் விவாதித்துக் கணக்கிலெடுத்தே செயற்பட முடியும். உலகம் முழுதும் ஏராளமான விவாதங்களும் செயற்பாடுகளும் கடந்த இரு நூற்றாண்டுகளாக அவ்விதம் நடந்துவருகின்றன. உற்பத்தி உறவுகள், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம், மார்க்ஸ் முன்னறிவித்த தவிர்க்கவே முடியாத வர்க்கப் புரட்சி, பால் சமத்துவம் போன்ற விசயங்களிலெல்லாம் மானிட சமுதாயம் மார்க்ஸிய மூலவர்களிடமிருந்து பெற்ற அறிவுச் செல்வத்திற்காக மாறாத நன்றியுடன் ஆனால் இப்போது அவர்களிடமிருந்து விலகி கருத்துநிலையில் வெகுதூரத்திற்கு முன்னேறி வந்துவிட்டது. மார்க்ஸிய மூலவர்கள் அறியாத சமூகநல அரசுகள், நவீன வங்கி அமைப்பு முறைகள், பன்னாட்டுத் தேசியக் கம்பனிகள், உலகமயமாக்கல், சூழலியல் அரசியல், அணு ஆயுத அரசியல், சாதியத்தின் நவீன வடிவம், LGBT அரசியல் என்ற சகாப்தத்திற்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் மனித சமூகம் இதுகுறித்தெல்லாம் ஓயாமல் உரையாடியபடிதான் வரலாற்றில் முன்னோக்கி நகர்கிறது.
இந்தியாவின் செயலுாக்கமுள்ள இடதுசாரிகள் கடந்த முப்பது வருடங்களில் வெகு வேகமாகச் சாதியம் குறித்த மார்க்ஸிய மரபுவாத சிந்தனையிலிருந்து விலகி அம்பேத்கரியம், பெரியாரியல், தலித் அரசியல் போன்றவற்றோடு தம்மை இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ரங்கநாயகம்மா, 19-ம் நூற்றாண்டிலேயே தேங்கி நின்றுவிடுகிறார். மார்க்ஸிய மூலவர்களிற்குப் பிறகு நிகழ்ந்த எந்த மாற்றங்களையும் அவர் கிரகிக்கத் தயாராகயில்லை. மார்க்சும் ஏங்கெல்சும் தவிர்ந்த எவரொருவர் எழுதியதையும் செயற்பட்டதையும் அவர் மார்க்ஸியமாக ஏற்கத் தயாராகயில்லை என்கிறபோது அவருக்கு அம்பேத்கர் எம்மாத்திரம். எனவே அவர் மூர்க்கமாகவும் முழுவதுமாகவும் அண்ணலை நிராகரிக்கிறார். இந்த உலகத்தில் எவரொருவரையும் விட சாதியப் பிரச்சினை குறித்து அதிகம் சிந்தித்தவரும் எழுதியவரும் தலித் மக்களிற்காகக் களத்தில் இறங்கி இரத்தம் சிந்திப் போராடியவரும் இந்தியாவில் எவரொருவரை விடவும் தலித் மக்களால் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவருமான அண்ணலை அவர் வசைத்து நிராகரிக்கிறார்.
சரி அண்ணலையும் அவரது ஆய்வுமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் நிராகரித்துவிட்டீர்கள். நீங்கள் முன்னிறுத்தும் அந்தச் 19-ம் நூற்றாண்டு மார்க்ஸியம், சாதி ஒழிப்பிற்கு முன்வைக்கும் வழிதான் என்ன? வர்க்கப் புரட்சி என்பீர்கள். அதை நமது சாதியச் சமூகத்தில் சாதிக்கும் வழிமுறைகள், அதைநோக்கிய அரசியல் வேலைத்திட்டங்கள், புரட்சியைச் சாதிப்பதற்கான கட்சி வடிவம், சாதியைக் கடந்து ஒடுக்கும் சாதிப் பாட்டாளியையும் ஒடுக்கப்பட்ட சாதிப் பாட்டாளியையும் அய்க்கியப்படுத்தும் செயற்தந்திரம் இவற்றையெல்லாம் முன்வைத்துவிட்டு நீங்கள் சாதியொழிப்பிற்கு மார்க்ஸ் அவசியத் தேவை எனச் சொன்னால் ஒடுக்கப்பட்டவர்கள் உங்கள் பின்னே திரள மறுக்கமாட்டார்களே. அதுவரைக்கும் ஒடுக்கப்பட்ட சாதிகளிற்கு அம்பேத்கர் காட்டிய வழியைவிட வேறு நாதியுள்ளதா சொல்லுங்கள்! தீண்டாமை ஒழிப்புப் களப் போராட்டங்கள், ஒடுக்கப்பட்ட சாதிகளது அரசியல் அணிதிரட்சி, இட ஒதுக்கீடு, பஞ்சமி நில மீட்பு, இந்து மதத்திலிருந்து வெளியேறுதல், மதமாற்றம், அரசியல் அதிகாரத்தில் பங்கைக் கோருவது போன்ற அண்ணலின் அடிச்சுவட்டில் அவர்கள் முன்னேறிக்கொண்டுதான் இருப்பார்கள். இரண்டு நாட்களிற்கு முன்பு சென்னையில் குலுங்கிய நீல அண்ணாசாலை அதைத்தான் காட்டிற்று. அதைப் பொறுக்காமல் கஸ்துாரிகள் ட்வீட் செய்கிறார்கள், ரங்கநாயகம்மாவைப் போன்ற வாய்ப்பாடு மார்க்ஸியர்கள் நுால் எழுதுகிறார்கள். எழுதும் அளவில்தான் வேறுபாடு. நோக்கம் மட்டும் ஒன்றே.
2
ரங்கநாயகம்மாவின் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியாகியதன் பின்னாக இந்த அபாண்டமான நூல் குறித்து விரிவான எதிர்வினைகள் ஏதும் எனக்குத் தெரிய வெளியாகவில்லை. ஆதவன் தீட்சண்யா இரு பதிவுகளை எழுதியிருந்தார். எனினும் அவரும் நூலுக்குள் புகுந்து விரிவாக எழுதவில்லை. தோழர் எஸ்.வி.ஆரும் இந்நுாலைச் சுருக்கமாகச் சில வார்த்தைகளில் நிராகரித்துப் பேசினார் என எங்கோ படித்தேன். இவற்றைத் தவிர வேறுசில முகநூல் விமர்சனக் குறிப்புகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக காணக்கூடியதாக இருந்தது.
தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கத்தின் தலைவரான கவிஞர் ம. மதிவண்ணன் இந்த நூலிற்கு எழுதிய ஆதாரங்களுடனான மிக விரிவான மறுப்பு 344 பக்கங்களில் “அண்ணல் அம்பேத்கர்: அவதூறுகளும் உண்மைகளும்” என்ற தலைப்பில் சில மாதங்களிற்கு முன்பு வெளியாகியிருக்கிறது. ரங்கநாயகம்மாவின் நுாலின் தமிழ் மொழிபெயர்ப்பில் உள்ள பிரச்சினைகளை மதிவண்ணன் சுட்டிக்காட்டுவதிலிருந்து தொடங்கலாம்:
இந்த நூலில் நெடுகவும் கையாளப்படும் ‘கீழ்சாதி’ என்ற சொல்லாடல் நமக்கு ஆத்திரத்தை ஊட்டுவது. எந்தக் காலத்தில் வாழ்கிறோம் நாம்? மதிவண்ணன் கேட்கிறார்:
”எந்த உறுத்தலும் இன்றி கீழ் ஜாதி மக்கள், மேல் ஜாதி மக்கள்; என்று நூல் முழுவதும் நமது உலக மகா மொழிபெயர்ப்பாளர் எழுதிச் செல்கிறார். ஒருமுறை இருமுறை தவறியல்ல நூறுமுறை தெரிந்தே இவ்வாறு எழுதிப் போகிறார்…”
“… தமிழிலும் கூட தாழ்த்தப்பட்ட மக்கள் என்றோ தலித் மக்கள் என்றோதானே அவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். நீங்கள் என்னவென்றால் ரொம்பச் சாதாரணமாகக் கீழ்சாதி மக்கள், கீழ்சாதி மக்கள் எனக் குறிப்பிடுகிறீர்களே. நீங்கள் மேல்சாதி அவர்கள் கீழ்சாதி என்று ஏதேனும் ஒப்பந்தம் உங்கள் முன்னிலையில் கையெழுத்தாகியிருக்கிறதா? அப்புறம் என்ன தைரியத்தில் கீழ்சாதி, கீழ்சாதி எனச் சொல்கிறீர்கள்? யார் கொடுத்தது இந்தத் திமிர்? ஏழை உழைக்கும் மக்களைச் சுரண்டிக் கொழுத்த ஏத்தமா? முதலில் இப்படி எழுதியதற்கு பகிரங்கமாக நிபந்தனையில்லாமல் மன்னிப்புக் கேளுங்கள்.”
தமிழ் மொழிபெயர்ப்புத் தவறுகளையும் சுட்டுகிறார் மதிவண்ணன். அம்பேத்கர் மேற்கோளிலுள்ள hooves (எருதின் குளம்புகள்) என்பதை தமிழில் ‘காற்றழுத்தத் துப்புரவுக் கருவி’ (hoover) என மொழிபெயர்த்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். இது வெறுமனே ஒரு சொல் தவறு அல்ல. மொத்த மேற்கோளுமே இந்தத் தவறால் கேலிக்குள்ளாகிறது. களத்துமேட்டில் எருதின் குளம்புகளிற்குப் பதிலாகக் காற்றழுத்தத் துப்புரவுக் கருவி விவசாய வேலைக்கு வருகிறது. சோளத்திற்கு உமியிருக்கிறது.
இவ்வாறாகத் தொடங்கி எட்டுபக்கங்களிற்கு இந்த மொழிபெயர்ப்பு வழுக்களின் பட்டியல் நீள்கிறது. எனினும் இவை வெறும் மொழிபெயர்ப்பு வழுக்கள் என நாம் நாம் கடந்து செல்லாதவாறு சில தவறுகள் வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளன என்கிறார் மதிவண்ணன்.
ரங்கநாயகம்மாவின் நூலின் 15- வது அத்தியாயத்தில் இடம்பெறும் ‘புத்தரும் அவர் தம்மமும்’ நூலின் பகுதிகளை பெரியார்தாசனின் தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பாளர் கொற்றவை எடுத்துள்ளார். அதில் தேவைப்படும் இடங்களில், தான் திருத்தங்களைச் செய்திருப்பதாக மொழிபெயர்ப்பாளர் குறிப்பில் கொற்றவை குறிப்பிடுகிறார். அந்தத் திருத்தங்கள் குறித்து மதிவண்ணன் கடுமையாகச் சாடிவிடுகிறார்:
“ஒரு அம்பேத்கரியர் (பெரியார்தாசன்) மிகுந்த ஜனநாயக உணர்வுடன் தாழ்த்தப்பட்ட மக்கள், பெண்கள், விளிம்புநிலை மனிதர்களை மரியாதையாக விளித்திருப்பார். ‘நாவிதரான உபாலி நான் ஏன் பிக்குவாகக் கூடாது எனத் தனக்குத்தானே கேட்டுக்கொண்டார்’, ‘ராஜகிரகத்தில் சுப்புரபுத்தா என்னும் குஷ்டரோகி வாழ்ந்து வந்தார்’ இதுமாதிரி… ஆனால் நமது உலகமகா மொழிபெயர்ப்பாளர், பெரியார்தாசன் கொடுத்த மரியாதைப் பன்மை விகுதிகளை எல்லாம் ஒருமை விகுதிகளாக மாற்றுகிறார். “உபாலி சந்நியாசி ஆனான்”, “தன்னியா ராஜகிரகத்தைச் சேர்ந்த குயவன்”, ”சுப்புரபுத்தன் புத்தரின் உபதேசங்களைக் கேட்க வந்தான்”. இவர்களெல்லாம் கறார் மார்க்ஸியவாதியான அல்லது டுபாக்கூர் மார்க்ஸியவாதியான மொழிபெயர்ப்பாளரால் தங்களது மரியாதைப் பன்மை விகுதியை இழக்கின்றனர்.“
ரங்கநாயகம்மாவின் நூலில் (பக்151) அம்பேத்கரின் மேற்கோள் மொழிபெயர்ப்பில் தலைகீழாக மாற்றப்பட்டிருப்பதையும் அம்பேத்கர் நூல் தொகுப்பைச் சான்றாக முன்வைத்து மதிவண்ணன் குறித்துக்காட்டுகிறார். அதேபோல மேற்கோள்களின் நடுவிலுள்ள வார்த்தைகளை விழுங்கிவிடுவது அல்லது நீக்கிவிடுவதையும் (ர.நா.பக்: 214) மூலப் பிரதியோடு ஒப்புநோக்கிக் குறித்துக்காட்டுகிறார். வரலாற்று மாந்தர்களின், இடங்களின், சாதிகளின் பெயர்களெல்லாம் தப்பும் தவறுமாக இஷ்டத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டிருப்பது குறித்து ஒரு நீண்ட பட்டியலையே மதிவண்ணன் தந்துவிடுகிறார். அந்தப் பட்டியலை அவர் இவ்வாறு முடித்துவைக்கிறார்:
“புத்த பிக்குவான ரத்தபாலா அம்பேத்கரால் Ratthapala என்று குறிப்பிடப்படுவார். இந்துமத அனுஷ்டானங்களுக்கு ஏற்ப ரத்தினபாலன் என்று (மொழிபெயர்ப்பாளரால்) சுத்திசெய்யப்பட்டுவிடுகிறார்.”
கொற்றவை இந்த விமர்சனங்களை கவனத்துடன் உள்வாங்கிக்கொள்வது அவரது அடுத்தடுத்த மொழிபெயர்ப்பு முயற்சிகளிற்குச் சிறப்பும் நியாயமும் சேர்க்கும் என்று கருதுகிறேன்.
3
ரங்கநாயம்மாவின் திரிப்புகளையும் அவதூறுகளையும் மதிவண்ணன் தனது நூல் முழுவதும் கட்டுடைத்திருக்கிறார். கடுமையான உழைப்போடு மட்டுமல்லாமல் கடும் சகிப்புத்தன்மையுடனும் பொறுமையுடனும் மதிவண்ணன் எழுதியிருக்கும் மறுப்பு நூலின் அனைத்து அம்சங்களையும் இங்கே குறித்துக்காட்டுவது சாத்தியமில்லை. தோழர்கள் மதிவண்ணனின் நூலை முழுமையாகப் படித்துவிடுவதே ரங்கநாயகம்மாவின் திரிப்புகளையும் உள்ளடி வேலைகளையும் புரிந்துகொள்வதற்கான சுருக்க வழியாகும். எனினும் சில புள்ளிகளைக் கீழே சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.
நூலில் இந்தியாவில் தீண்டாமைக்கு உள்ளானவர்களின் தொகையாக 1951-ம் வருடம் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பைச் சுட்டிக்காட்டி 5 கோடியே 13 இலட்சம் என எழுதுகிறார் ரங்கநாயகம்மா. ரங்கநாயகம்மாவின் ஆய்வுச் சோம்பலை சுட்டும் மதிவண்ணன் அந்தத் தரவுகூட அம்பேத்கர் தொகுப்பு நூல் 9-லிருந்து எடுக்கப்பட்டது எனவும் இன்றைய 2011 சென்ஸஸ் தொகைப்படி தீண்டாமைக்கு உள்ளானவர்களின் தொகை 20 கோடியே 13 இலட்சம் என்றும் குறித்துக்காட்டுகிறார்.
“இதைத் தேடுவதற்கு ஒரு நிமிடம் ஆகுமா? அதற்குக் கூட மெனக்கெடாமல் அம்பேத்கர் அரும்பாடுபட்டுத் திரட்டிய தரவுகளை -நவீன கால கணினி போன்றவற்றின் உதவியில்லாமல் – எந்தக் கூச்சமும் இல்லாமல் ரங்கநாயகம்மா சொல்கிறார் என்றால் இதற்குப் பெயர் என்ன. இது உழைப்புச் சுரண்டலில் சேராதா?“ எனக் கேட்கிறார் மதிவண்ணன். 1951-ன் தரவுகளை முன்வைத்து 2000-ல் ஆய்வு நுாலை முன்வைப்பதும் அதை 2016-ல் தமிழில் வெளியிடுவதும் ஒருவகையான ஆய்வு மோசடியே. இன்றைக்கு தீண்டாமைக்கு உள்ளாகயிருக்கும் மக்களின் தொகையை குறைத்துக்காட்டும் அல்லது மறைத்துப்போடும் எத்தனமில்லையா இது? “இப்பல்லாம் எங்க சார் சாதி பாக்கிறாங்க“ என்ற குரல் இதற்குள் ஒழிந்திருக்கவில்லையா?
தீண்டாமை, அடிமைமுறையை விட மோசமானது என்பதைச் சான்றுகளுடன் விரிவாக விளக்கியிருப்பார் அம்பேத்கர். அது குறித்து ரங்கநாயகம்மா சொல்கிறார்: “தீண்டாமையை விட ரோமானிய காலத்தின் அடிமைத்தனம் நூறு மடங்கு மேலானது என்று ஒரு நபர் சொல்கிறாரென்றால் அவர் ஒரு கொச்சையான தர்க்க போதைக்குள்ளாகி மனம் அடைபட்டுப்போனார் என்றுதான் சொல்லவேண்டும்.”
ரங்கநாயகம்மாவின் இந்த ஏளனத்தை மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் எழுத்துகளை முன்வைத்து எதிர்கொள்கிறார் மதிவண்ணன். அடிமையைவிட பாட்டாளியின் நிலை எப்படி மோசமானது என மார்க்ஸிய மூலவர்களின் எழுத்துகளிலிருந்து மதிவண்ணன் ஆதாரம் காட்டுகிறார் (பக்: 86). ஆனால் அத்தோடு அங்கேயே தேங்கி நின்றுவிடுவதில்லை மதிவண்ணன். அம்பேத்கர் ஏன் அடிமைமுறையிலும் தீண்டாமைமுறை கொடுமையானது எனச் சொன்னார் என அண்ணலின் எழுத்துகளை சான்றாக விரிவாகத் தொகுத்துத் தந்து நிறுவியும்காட்டுகிறார்.
”தீண்டத்தகாதவர்கள் பூணூல் அணிவதையோ சந்தியாவந்தனம் செய்வதையோ அம்பேத்கர் எதிர்க்கவில்லை. என்ன வகையான சீர்த்திருத்தம் இது?” எனப் போலியாகச் சலித்துக்கொள்கிறார் கேள்வியின் நாயகி.
இந்தக் கேள்விக்கும் அம்பேத்கர் எழுத்துகளைச் சான்றாகக் கொடுத்துப் பதில் கொடுக்கிறார் மதிவண்ணன். சடங்குகளிற்கும் பூஜைகளிற்கும் எதிரான அண்ணலின் கண்டன உரைகள் அவை (ம.வ.பக்: 106 -108). “இந்த அனைத்து உரைகளும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஆற்றிய உரைகள் தாம். இவற்றையெல்லாம் ரங்கநாயகம்மா படித்தாரா படிக்காமல் பேசுகிறாரா?” என மதிவண்ணன் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லப் போவது யார்?
“அம்பேத்கரது ஆய்வின் பல பகுதிகளில் இந்துமத நுால்களில் காணப்படும் பொருளற்ற விஷயங்களும் பயனற்ற விவரணைகளும் காணப்படுகின்றன“ (ர. நா. 66) எனும் ரங்கநாயகம்மாவின் அதிருப்தி குறித்து மதிவண்ணன் எழுதுகிறார்:
“இந்து மதத்தின் புதிர்கள் நுாலைத்தான் மேற்கண்டவாறு (ரங்கநாயகம்மா) குறிப்பிடுகிறார். இந்து மதத்தின் புதிர்கள் என்கிற அம்பேத்கரின் கடைசி காலத்தைய நுால் அவரது மரணத்திற்கு முப்பத்தொரு ஆண்டுகள் கழித்தே வெளியிடப்பட்டது. அது வெளியான சில மாதங்களுக்குள் அமராவதியில் கூடிய மராத்தா மகாமண்டல் என்கிற மராத்தாக்களின் சாதிய அமைப்பு அந்நுாலின் பிரதிகளை எரித்தது. அதைத் தொடர்ந்து வலதுசாரி சிவசேனை அமைப்பு இந்நுாலைத் தடைசெய்யப் போராடித் தடை செய்ய வைத்தது. மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள தலித் மக்கள் கிளர்ந்து எழுந்து போராடியே அத்தடையை நீக்க வைத்தனர். பொருளற்ற விஷயங்களும் பயனற்ற விவரணைகளும் இருந்ததால்தான் மேற்கண்ட நிகழ்வுகள் எல்லாம் நடந்தனவா. இந்துத்துவவாதிகளைப்போலவே அம்பேத்கரின் நுலை எதிர்கொள்ளும் ரங்கநாயகம்மா உண்மையில் யார் இடதுசாரியா அல்லது இந்துத்துவவாதியா? “
இந்து புராணங்கள் மீதான அண்ணலின் விமர்சனங்கள் குறித்து ரங்கநாயகம்மா தொடர்கிறார்: “ இந்தக் கதைகளையும் அதன்மீதான அம்பேத்கரின் விமர்சனத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் இக்கதைகளை எழுதிய பிராமணர்களே மேலானவர்கள் என்று சொல்லலாம். புதிரை விளக்குகிறேன் பேர்வழி என்று பெண்களை அவமதித்ததைத் தவிர, அம்பேத்கர் வேறெதையும் செய்யவில்லை” (ர.நா. பக் 70).
ரங்கநாயகம்மாவின் இந்த அருவருக்கத்தக்க ஏளனத்திற்கான பதிலை மதிவண்ணன் தனது நுாலில் ‘பார்ப்பன இலக்கியமா? நிலப்பிரபுத்துவ இலக்கியமா?’ என்ற அத்தியாயத்தில் 16 பக்கங்களில் அளித்திருக்கிறார். தமிழ் மொழிபெயர்ப்பாளர் இவ்விடத்தில் ‘பிராமணர்’ எனப் பார்ப்பனர்களை விளித்திருப்பதும் மதிவண்ணன் ‘பார்ப்பனர்கள்’ என விளிப்பதும் கூட முக்கியமான வேறுபாடுகளே. பார்ப்பனர்களைப் பிராமணர் என அழைப்பதிலுள்ள வர்ணக் கோட்பாடு நவிற்சியையும் பார்ப்பனர்களைப் “பிராமணர்கள்“ என அழைப்பது பஞ்சமா பாதகங்களில் ஒன்றெனச் சொல்லிப் பெரியார் உரைத்ததையும் இங்கே குறித்துக்கொள்ளலாம்.
சாதிமறுப்புத் திருமணம் குறித்து ரங்கநாயகம்மா சொல்பவை சாதிய விஷம் விஷம் விஷம். கீழேயுள்ள வார்த்தைகளை மொழிபெயர்க்க உண்மையில் கொற்றவைக்கு கை கூசவில்லையா என்ன!
“ஒரு கீழ்சாதி நபருக்கும், மேல்சாதி நபருக்கும் திருமணம் நடக்கும்போது, மேல்சாதியைச் சேர்ந்த நபர்தான் துணிவை வெளிப்படுத்த வேண்டும். கீழ்ச்சாதியைச் சேர்ந்த நபரால் துணிவை வெளிப்படுத்த முடியாது. மேல் சாதியைச் சேர்ந்த நபர் மட்டுமே நல்லெண்ணம், நாகரிகம், துணிவு மற்றும் சமூக எதிர்ப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தினார் என்பதே இதற்குப் பொருள்” (ர.நா. பக்:173).
தர்மபுரி இளவரசன், பெரம்பலுார் பார்த்திபன்,ஓமலுார் கோகுல்ராஜ், உடுமலைப்பேட்டை சங்கர், திண்டுக்கல் சிவகுருநாதன் இவர்களெல்லாம் நல்லெண்ணம், நாகரிகம், துணிவு அற்றவர்களா? எனக் கேட்கிறார் மதிவண்ணன். அதைத் தொடர்ந்து விரிந்த வரலாற்று – பண்பாட்டுப் புலத்தில் சாதிமறுப்புக் காதல் மற்றும் மணப் பட்டியல்களின் ஆதாரத்துடன் விளக்கி ரங்கநாயகம்மாவின் மார்க்ஸிய முகமூடியை உரித்துப் போட்டுவிடுகிறார். உள்ளே இருப்பது ஆதிக்க சாதி முகத்தைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்!
சாதிகளின் தோற்றம், வேதங்கள், புராணங்கள், இந்துமதம், பவுத்தம், பௌதீக மறுபிறப்பு கோட்பாடு, புத்தர், புனே ஒப்பந்தம், இந்திய அரசியல் சாசனம், பொதுவுடமைத் தத்துவம், பொருளாதாரம், வரலாறு என எத்தனை எத்தனையோ விரிந்த பொருள்களில் அண்ணல் அம்பேத்கர் எழுதிச் சென்ற விடயங்களும் நிகழ்த்திய உரைகளும் ஆற்றிய களப்பணிகளும் ரங்கநாயகம்மா வாயில் விழுந்து சாதிய விஷமாக அவரது நூலின் பக்கங்களில் படர்க்கின்றன. அத்தனை விசமத்தனமான கேள்விகளிற்கும் சவடால்களிற்கும் மிக விரிவாகவும் தெள்ளத் தெளிவாகவும் மதிவண்ணன் சான்றுகளுடன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
காந்தியார் – அம்பேத்கர் மேற்கோள் குழறுபடி தெரியவந்தவுடன் ரங்கநாயகம்மா அந்தப் பகுதிகளை நூலிலிருந்து நீக்கிவிட்டதுபோல மதிவண்ணன் சுட்டிக்காட்டியிருக்கும் பிழைகளையும் தவறுகளையும் தனது நூலிலிருந்து நீக்கிவிடுவதே யோக்கியமானது. அவர் அப்படி நீக்கினால் நூலின் அளவு கண்டிப்பாகப் பாதியாகக் குறைந்துவிடும். அந்த மறையாத மறுபாதியில் அண்ணலிலிருந்து எடுத்தாளப்பட்ட மேற்கோள்கள் மட்டுமேயிருக்கும். அவற்றிலும் பிழையாக அல்லது விழுங்கி மொழிபெயர்க்கப்பட்ட மேற்கோள்களை நீக்கினால் புத்தகம் கால்வாசியாகச் சுருங்கிவிடுவது நிச்சயம்.
மதிவண்ணனின் மறுப்பு நுாலில் குறையொன்றுமில்லையா எனக் கேட்டால் இருக்கத்தான் செய்கிறது. முள்ளை முள்ளால் எடுக்கிறேன் பாரென்று அவரும் ‘துடைப்பக்கட்டை மார்க்ஸிஸ்டு’ என்றெல்லாம் ரங்கநாயகம்மாவையும் ‘டுபாக்கூர்’ என்றெல்லாம் தமிழ் மொழிபெயர்ப்பாளரையும் வசைக்கிறார். உண்மையில் இந்த வசைகள் மதிவண்ணனின் பெறுமதிமிக்க நுாலிற்கு எந்த விதத்திலும் வலுச் சேர்ப்பதில்லை. அதேவேளையில் எவ்வளவுதான் மதிவண்ணன் முயன்றாலும் அவரால் ரங்கநாயகம்மாவின் வசைகளில் பத்திலொன்றைக் கூடத் திருப்பிச் சொல்ல இயலவில்லை. அந்த ஏரியாவில் ரங்கநாயகம்மாவே சாம்பியன். அதேவேளையில் ரங்கநாயகம்மாவின் வசைகளையும் மதிவண்ணனின் வசைகளையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்துவிடவும் முடியாது. அம்மையார் ஹெச்.ராஜா – சேகர் வகையறா. மதிவண்ணன் பத்திரிகையாளர்கள் எறிந்த கல்!
அம்பேத்கரைத் திரித்து இந்துத்துவ அம்பேத்கராக்கவும் அவரது சிலைகளிற்கு காவி பூசவும் இந்துத்துவவாதிகள் ஒருபுறம் முயற்சிக்கிறார்கள். இன்னொருபுறம், இடது என்ற கோதாவில் அம்பேத்கரை முதலாளிய ஆதரவாளராகவும் மூடுண்ட சிந்தனையாளராகவும் சொல்லி ஒழித்துக்கட்ட நடக்கும் முயற்சிகள், இன்னொருபுறம் இந்துமதத்தையும் அதன் சடங்குகள் சாஸ்திரங்களையும் ஒழிக்காமல் சாதியை ஒழிக்கவே முடியாது என்ற அம்பேத்கரது விரிவான ஆய்வுகளைத் தெரிந்திருந்தும் சொரணையேயின்றி இந்து மதத்தையும் அதன் சடங்குகளையும் ஆதரித்து நிற்கும் கள்ளத்தனமான சாதியக் கசடு கொண்டவர்கள், மறுபுறத்தில் கோட்டுப் போடுவேன்டா, கால் மேலே கால் போட்டு உட்காருவேன்டா என்று அண்ணலை வெறுமனே திருவுருவாக்கும் கபாலிகள் என்றிருக்கும் இன்றைய சூழலில் வெளியாகியிருக்கும் மதிவண்ணனின் நுால் மிக முக்கியமான கருத்து ஆயுதமாகிறது நமக்கு. ஏனெனில் இந்நுால் வெறுமனே ரங்கநாயகம்மாவிற்கான மறுப்பு மட்டுமேயல்ல. அம்பேத்கரை விரிந்ததளத்தில் ஆய்வு செய்து எழுதப்பட்டிருக்கும் இந்நுால் அம்பேத்கரின் இதுவரை வெளிப்படாத பரிமாணங்களைத் தமிழிற்குக் கொண்டுவந்தும் சேர்த்துள்ளது. அண்ணல் குறித்து இத்தகைய ஒரு ஆழமான பன்முகப் பார்வை தமிழில் இதுவரை இல்லை என்றே சொல்லலாம். மதிவண்ணனின் வார்த்தைகளோடு இக்கட்டுரையை முடிக்கிறேன்:
“இந்தியா கண்ட மாபெரும் அறிவுக் கடல் அண்ணல் அம்பேத்கர் ஆவார். அவருடைய எழுத்துகளைத் திறந்த மனதுடன் முன்முடிவுகளின்றி அணுகுவது, உண்மையிலேயே ஒரு மாபெரும் அனுபவமாக இருக்கும்!”
(நன்றி: ஷோபா சக்தி)