இருபதாம் நூற்றாண்டு இந்தியாவின் மிகப் பெரிய ஆளுமையான தாதாசாகிப் அம்பேத்கர் சாதிச் சிமிழுக்குள் அடைக்கப்பட்டும், அவருக்குரிய இடம் மறுக்கப்பட்டுமிருப்பது வருத்தத்திற்குரியது. இதனால்தான் நாடெங்கிலும் உள்ள அவரது சிலைகள் இரும்புக் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த நாட்டின் ஒரு நீதிமன்ற வளாகத்திற்குள் அதர்மத்தை எழுதிய மனுவிற்குக் கூட சிலை வைக்க முடியும் ஆனால் இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய அம்பேத்கருக்கு சிலை வைக்க முடியாது என்பதுதான் கசப்பான யதார்த்தம். நீதித்துறை இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கியமான தூண் என்று அம்பேத்கர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
ஆனால், இந்திய நீதித்துறை ஏனோ அம்பேத்கரை நினைவுகூரத் தவறியுள்ளது. இதிலிருந்து சற்றே வேறுபட்டவர் நீதிபதி சந்துரு. ஏழாண்டுகள் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் அம்பேத்கர் ஒளியில் தனது தீர்ப்புகள் எழுதப்பட்டதாகப் பெருமையுடன் கூறுகிறார். இவ்வாறு எழுதப்பட்ட தீர்ப்புகளை வரலாற்றுப்படுத்தும் வண்ணம் புத்தகமாகவும் எழுதி வருங்காலச் சந்ததியினருக்கு விஷயதானமாகக் கொடுத்துள்ளார்.
இளம் பருவத்திலேயே இடதுசாரிச் சிந்தனைகளுடன் வளர்ந்த சந்துரு இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ் மாநிலச் செயலாளராகச் செயல்பட்டுள்ளார். முப்பதாண்டு காலம் வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில் ஏழை எளிய மக்களுக்காகவும், விளிம்பு நிலை மனிதர்களுக்காகவும் வாதாடியவர். நீதிபதியாக ஏழாண்டு காலம் பணியாற்றிய காலத்திலும் சட்டத்தின் வழி நின்று நீதியை நிலை நாட்டியவர். “நீதியரசர்கள் கிருஷ்ண அய்யர், பி.என்.பகவதி, சின்னப்பரெட்டி, பி.ஏ.தேசாய் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவர் நீதிபதி சந்துரு” என்று பதிப்புரையில் தோழர் ரவிக்குமார் கூறுவது சாலப் பொருந்தும். அணிந்துரையில் வெ.இறையன்பு இ.ஆ.ப., “ இது வெறும் நூலல்ல; ஓடுக்கப்பட்ட மக்களுக்காக ஓயாமல் துடித்துக் கொண்டிருக்கும் ஓர் இதயத்தின் இடைவிடாத துடிப்பு” என்று மிகச் சரியாகக் கணித்துள்ளார்.
நூலாசிரியர் சந்துரு தன்னுடைய முன்னுரையில் அம்பேத்கர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறார். அம்பேத்கர் இறந்து 35 ஆண்டுகளுக்குப் பின்னரே மத்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்கியது. நாடாளுமன்றத்திலும் அவரின் உருவப்படம் வைக்கப்பட்டது. ஔரங்காபாதில் உள்ள மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரைச் சூட்ட வேண்டுமென்ற இயக்கத்திற்கு எதிராக ஆதிக்க சாதிகள் நடத்திய கலவரத்தில் இரு தலித்துகள் கொல்லப்பட்டனர். ஆயிரம் தலித்துகளின் குடியிருப்புகள் தீக்கிரையாகின. அதேபோல் தமிழகஅரசும் ஒரு மாவட்டத்திற்கும், ஒரு போக்குவரத்துக் கழகத்திற்கும் அம்பேத்கர் பெயரைச் சூட்ட முடிவெடுத்தபோது ஆதிக்க சாதியினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். வடசென்னையில் இருக்கும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு அம்பேத்கர் பெயரிட மாநில அரசு முன்வந்தபோது அதை எதிர்த்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்திற்கு வந்தது. இத்தீர்ப்பை எழுதிய நீதியரசர் சந்துரு “மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டுவது தமிழக அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி அம்பேத்கருக்குச் செய்யும் மிகப் பெரிய மரியாதையாகும், அதையும் ஏப்ரல் பதினான்காம் தேதிக்குள் (அவருடைய பிறந்த நாள்) செய்து அவரின் நினைவைப் போற்றிட வேண்டும்” என்று அறிவுரைசெய்தார். ஆனால், தமிழக அரசு இன்றுவரை இதை நிறைவேற்றவில்லை என்று வேதனையோடு குறிப்பிடுகிறார். அம்பேத்கரை அறியாத, படியாத யாரெவரும் இந்திய மண்ணில் சமூக மாற்றத்தையோ, சமூகச் சமத்துவத்தையோ கொண்டுவர முடியாது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் சந்துரு.
ஏழாண்டுகாலப் பதவி காலத்தில் அறுபதினாயிரத்திற்கும் மேற்பட்ட தீர்ப்புகளை வழங்கிச் சாதனை படைத்தவர் சந்துரு. இந்நூலில் அம்பேத்கர் ஒளியில் எழுதப்பட்ட பதினைந்து தீர்ப்புகள் பற்றிய விவரணைகளைப் பதிவு செய்துள்ளார். 1935ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் நாக்பூரில் உள்ள தீட்சா பூமியில் 2.5 லட்சம் தோழர்களுடன் பௌத்த மதத்தைத் தழுவினார். அன்று அம்பேத்கருடன் மதம் மாறிய தலித்துகளுக்கு 34 ஆண்டுகள் கழித்தே (4-6-1990 முதல்) தலித்துகளுக்குரிய சலுகைகள் கிடைத்தன.ஆனால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து தனது பாரபட்ச நிலையைக் கடைபிடித்தது. பௌத்த மதத்திற்கு மாறியவர்களுக்குப் பட்டியல் சாதியினருக்கான சலுகைகள் கிடையாது என்று கூறிவந்தது. இதனை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில் நீதிபதி சந்துரு உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார். அத்தீர்ப்பில் அம்பேத்கர் பௌத்த மதத்திற்கு மாறியதற்கான காரணங்களை விளக்கியதோடு, தேர்வாணையத்தின் தூங்கு மூஞ்சித்தனத்தையும் சாடியுள்ளார்.
ஆங்கிலேய கலெக்டர் 1891ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பரிதாப நிலை கருதி அவர்களுக்கு நிலங்களை வழங்கிட சிபாரிசு செய்தார். இப்பஞ்சமி நிலங்களை ஆதிக்க சக்திகளும், கட்டுமான நிறுவனங்களும் பறித்துக் கொண்டன. பஞ்சமி நிலங்களை மீட்க தமிழகத்தில் இயக்கங்கள் தொடங்கின. இதனால் விழித்துக் கொண்ட வருவாய்த்துறை, பஞ்சமி நில பரிவர்த்தனைகளைக் கையகப்படுத்த முயன்றனர். இதனை எதிர்த்து கட்டுமான நிறுவனங்கள் தொடுத்த வழக்கு உயர்நீதி மன்றத்திற்கு வந்தபோது வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு பஞ்சமி நிலங்களை தலித்துகளுக்கு மீட்டுக் கொடுப்பதற்கு அதிகாரம் உண்டு என்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை சந்துரு அவர்கள் வழங்கியுள்ளார். ஆனால் இத்தீர்ப்பை எந்த சட்ட சஞ்சிகையும் வெளியிடவில்லை. காரணம்; தலித்துகளின் உரிமைகள் பற்றிய தீர்ப்பு அல்லவா? இத்தீர்ப்பில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பூர்வகுடி மக்களின் தலைவர் எழுதிய கவிதையையும் குறிப்பிட்டு தீர்ப்பிற்கு அழகு சேர்த்துள்ளார். செவ்விந்தியர்களும் இந்தியாவின் தலித்துகள்போல் தங்களின் உரிமைகளையெல்லாம் இழந்து, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் அல்லவா?
மதுரை தத்தநேரியில் இருக்கும் சுடுகாடு மாநகராட்சியால் பராமரிக்கப்படுகிறது. மயானத்தில் சாதி அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது விசித்திரமானதாகும். இப்பிரச்சனை குறித்த வழக்கு உயர்நீதி மன்றத்திற்கு வந்தபோது மாநகராட்சி சட்டத்தில் சாதிக்கொரு இடம் கொடுக்க வழி ஏதுமில்லை. அப்படி ஒரு விதி இருந்தால் அது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு புறம்பானதாகும் என்ற தீர்ப்பை சந்துரு அவர்கள் வழங்கினார். இத்தீர்ப்பிற்குப் பொருத்தமான தமிழ்த் திரைப்படப் பாடல் ஒன்றையும் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். ரம்பையின் காதல் என்ற திரைப்படத்தில் வரும், “சமரசம் உலாவும் இடமே— நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே” என்ற பாடல் முழுவதையும் மேற்கோள் காட்டியுள்ளார்.
ரோசா பார்க் என்ற அமெரிக்க கறுப்பினப் பெண்மணி நடத்திய “மாண்ட்கமரி நடைப்பயணம்” வரலாற்றில் பதிவாகியுள்ள வீரஞ்செறிந்த போராட்டமாகும். இதுபோன்ற உரிமைக்கான போராட்டம் திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி கிராமத்திலும் நடந்துள்ளது. சிவந்திப்பட்டி-திருநெல்வேலி பஸ், தலித் காலனியிலிருந்து புறப்படுவது பழக்கத்தில் இருந்து வந்தது. இதனால் பஸ்சில் முதலில் ஏறும் தலித்துகள் உட்கார்ந்தும், அடுத்த நிறுத்தத்தில் ஏறும் ஆதிக்க சாதியினர் நின்றுகொண்டும் பயணிக்க நேரிடும். இதைப் பொறுக்காத அவ்வூரின் ஆதிக்க சாதியினர் மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவரைத் தலையிட வைத்து பஸ் புறப்படும் இடத்தை மாற்றிவிட்டனர், இதனால் தலித் மக்கள் இரண்டு கிலொ மீட்டர் சுமைகளையும் தூக்கிக்கொண்டு நடந்துவர வேண்டிய சிரமம் ஏற்பட்டது. இவ்வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்திற்கு வந்தபோது, நீதிபதி சந்துரு “இது தீண்டாமையின் நவீன வடிவமாகும் இதை அனுமதிக்க முடியாது” என்று அம்பேத்கர் ஒளியில் தீர்ப்பளித்தது, தலித்துகளின் உரிமை காக்க உதவியது.
“இடஒதுக்கீட்டிற்கான போராட்டம் சாதியத்திற்கான போராட்டம் அல்ல. சாதியத்தை அழிப்பதற்கான போராட்டம்” என்று அம்பேத்கர் கூறியுள்ளார். தமிழக அரசு சத்துணவு ஊழியர் பணி நியமனத்தில் மத்திய அரசின் ஒரு சுற்றறிக்கையின் அடிப்படையில் இடஒதுக்கீடு முறையைக் கடைப்பிடிக்கவில்லை. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த போத்துமல்லி என்ற பெண் சத்துணவு ஊழியர் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்று கோரி வழக்குத் தொடுத்தார். நீதிபதி சந்துரு இவ்வழக்கில் அளித்த தீர்ப்பு ஒரு மைல் கல்லாக அமைந்தது. “இடஒதுக்கீட்டின்படி ஒரு தலித் பெண்மணிக்கு வேலை அளிப்பது வெறும் பொருளாதார அதிகாரம் வழங்கும் செயலாக மட்டுமல்ல, சமுதாயத்தில் தலித்துகள் பற்றி இருக்கும் ஒருமுக நிலையை மாற்ற உதவும் விஷயமாகவும் இருக்கும். ஒரு தலித் சமையலர் சமைக்கும் உணவை உண்ணும் குழந்தைகள் எதிர்காலத்தில் அம்மக்கள் மீது கடைபிடிக்கப்படும் தீண்டாமைக் கொடுமை ஒழிய உதவிடும்” என்று தன் தீர்ப்பில் சந்துரு குறிப்பிட்டார். இத்தீர்ப்பை அமுல்படுத்திய தமிழக அரசு, சத்துணவு ஊழியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு கடைபிடித்திட அரசாணையை வெளியிட்டது. இதனால் தமிழகமெங்கும் 25,000 தலித் பெண்களுக்கு வேலை கிடைத்தது.
சாதி மறுப்பு காதல் திருமணங்களுக்கு தமிழகத்தில் இன்று மிகப்பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது. காதலர்களை அவர்களின் பெற்றோர்களே கொடூரமாகக் கொல்லும் அளவிற்கு சாதிவெறி தலைவிரித்தாடுகிறது. எழுத்தாளர் இமையம் “பெத்தவன்” என்ற சிறு கதையில் இச்சமூக அவலத்தைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். இத்திருமணங்களைத் தடுக்கும் பொருட்டு ஆதிக்க சாதியினர் கூட்டணியே ஏற்படுத்தியுள்ளனர். சென்னை உயர்நீதி மன்றத்தில் இதுபோன்றதொரு சுவையான வழக்கில் சந்துரு அவர்கள் அளித்த தீர்ப்பு இன்றைய சமூகச் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சாதி மறுப்பு திருமணத்திற்கு உதவப்போனவர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் இருந்ததனால் காவல்துறையில் வேலை மறுக்கப்பட்டார் சிவநேசன் என்ற இளைஞர். திருமண வயதை அடைந்த காதலர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு சிவநேசன் சாட்சியளித்தது குற்றமாகாது என்றும் அவருக்கு வேலையளிக்க மறுத்தது தவறென்றும் கூறி தீர்ப்பளித்தார்.
மதுரை மாவட்டம் பொதும்பு அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் அப்பள்ளியின் தலித் சிறுமியர் மீது நடத்திய பாலியல் வன்முறை பற்றிய வழக்கு, ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியில் அருந்ததியர் நடத்திவந்த மாட்டிறைச்சிக் கடைகளை மூடச்சொல்லி தொடரப்பட்ட வழக்கு, தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் ஆதிவாசிப் பெண்கள் காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளால் வன்புணர்ச்சிக்கு ஆளான வழக்கு, மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் இருந்த தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்ட வழக்கு, கோயில்களில் தலித்துகளின் வழிபாட்டு உரிமைகள் குறித்த வழக்குகளில் எல்லாம் நீதிபதி சந்துரு அம்பேத்கர் வழி நின்று தீர்ப்புகள் வழங்கியுள்ளார்.
உயர்நீதி மன்றத்தில் தீர்ப்புகளைத் தமிழில் எழுத முடியாது, சரிதான். ஆனால் அத்தீர்ப்புகளின் சாரத்தை புத்தகமாக வெளியிடும்போது தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கலாம். ஆங்கிலம் அறியாத வாசகர்களுக்குப் பயனளித்திருக்கும். ஆக மொத்தம் ஆங்கிலம் பாதி தமிழ் பாதி என்று இரு மொழிப் புத்தகமாக இது வெளிவந்துள்ளது. மனித உரிமைப் போராளிகள் அனைவரும் படித்திட வேண்டிய புத்தகமிது. காவல்துறை, வனத்துறை, நீதித்துறை, வருவாய்த்துறை போன்ற அரசுப் பணிகளில் சேர்ந்திடும் இளைஞர்கள் அனைவரும் இப்புத்தகத்தைப் படிக்கும் பட்சத்தில் தலித் நேசமிக்க அரசு ஊழியர்களாக, மனித நேயமிக்க மானிடர்களாகத் திகழ்ந்திடுவார்கள்.
(நன்றி: புத்தகம் பேசுது)