கல்கி, ‘ சிவகாமியின் சபதம்’ நாவலைப் பல வருடங்களாகத் தொடர்ந்து பத்திரிகையில் எழுதினார். பின்னர், அது நாவலாகவும் வந்தது. அதன் கதைச் சுருக்கத்தை அரைப் பக்கத்தில் எழுதிவிட முடியும். தமிழ்மகன் எழுதிய ‘வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ நாவல் 182 பக்கங்கள்தான். அதன் கதைச் சுருக்கத்தை எழுதவே முடியாது. ஏனென்றால் நாவல்தான் சுருக்கம். ஆயிரம் பக்கங்கள் வரக்கூடிய நாவல் சுருக்கப்பட்டிருக்கிறது. அத்தனை செறிவு.
ஐயாயிரம் வருடத்துச் சம்பவங்களைச் சொல்லும் இந்த நாவலின் கதை இரண்டு கிளைகளாகப் பிரிந்து, சமாந்திரமாகப் பயணப்படுகிறது. ஒரு கிளை, தேவ் என்னும் விஞ்ஞானி பற்றியது. இவனுடைய மூளை அதிசயமாக இயங்குவதால், அடிக்கடி கனவுலகத்துக்குள் நுழைந்துவிடுகிறான். அனாதியான காலகட்ட நிகழ்வுகள் அப்போது அவன் மனத்திரையில் அசைகின்றன. மருத்துவர்களுக்குத் திகிலூட்டும் வண்ணம் இந்த நிகழ்வுகள் தேவ் மூளையில் முன்னும் பின்னுமாகப் படம்போல ஓடுகின்றன.
செவ்வாய் கிரகத்தில் ஒரு நகரத்தை நிர்மாணிக்கும் வேலை தேவிடம் ஒப்படைக்கப்படுகிறது. 8,000 யந்திர மனிதர்களை உருவாக்குகிறான். 3,000 விஞ்ஞானிகள் இவன் தலைமையின் கீழ் உழைக்கிறார்கள். ஒரே ஆண்டில் நகரத்தை நிர்மாணிக்க வேண்டும். ஆனால், கனவுலகத்துக்குள் இவன் தன்னை அறியாமல் அடிக்கடி மூழ்கிவிடுவதால் மருத்துவர்கள் இவனை மீட்க முயற்சிக்கிறார்கள்.
வெண்ணிக்குயத்தியார் என்ற சங்ககாலப் பெண் புலவர் எழுதிவைத்த தமிழர் வரலாறு தொலைந்துபோன சம்பவமும் தேவின் மூளையில் ஓடித் தொந்தரவு செய்கிறது. இதைத் தேடிப்போவது இன்னொரு பக்கத்தில் நடக்கிறது. எது உண்மை, எது கனவு, எது வரலாறு, எது கற்பனை என்பது தெளிவாகாமலே கதை பின்னிப் பிணைந்து முன்னேறுகிறது. இதனுடன் சேர்த்து பல சுவையான தகவல்கள் அவ்வப்போது வெளிப்படுவதால் நாவலைக் கடைசி மட்டும் படிக்கும் ஆவல் தூண்டப்படுகிறது.
சிந்து சமவெளி நாகரிகம் 6,000 வருடங்களுக்கு முற்பட்டது. உயர்ந்த நகரநாகரிகம் இருந்ததற்கான தடயங்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கின்றன. இரண்டாயிரம் வருடங்கள் பழமையான சங்க இலக்கியம் தமிழர்களின் வரலாற்று நூல். நிழல் விழாத நடு உச்சி நேரம் இரண்டு குச்சிகளை நட்டுத் திசையறிந்து, மாடமாளிகைகள் அமைத்து வாழ்ந்த உயர்வான தமிழர் நாகரிகத்தைப் பற்றி அது சொல்லும். சிந்துச் சமவெளி நாகரிகத்துக்கும் சங்க காலத்து நாகரிகத்துக்கும் இடையில் காணப்பட்ட ஒற்றுமை நாவல் நீளத்துக்கு அலசப்படுகிறது. சிந்து சமவெளி வரிவடிவங்களும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுத்த பானை எழுத்துக்களும் ஒற்றுமையாக இருப்பது வியப்பை அளிக்கிறது.
சங்க இலக்கியத்தில் சொல்லப்படும் ஊர்ப் பெயர்கள் பல சிந்துவெளிப் பிரதேசத்தில் இன்றும் புழங்குகின்றன. குன்று, குறிஞ்சி, ஆமூர், கொற்கை, பாலை, வஞ்சி, கிள்ளி, நொச்சி, போன்ற ஊர்களைச் சொல்லலாம். பாகிஸ்தானில் குறைந்தது நூறு கிராமங்களுக்கு தமிழ் பெயர்கள் இருக்கின்றன. ஊர்கள் மாத்திரமல்ல, தமிழ்ச் சொற்களும் எகிப்து, சுமேரியா, கொரியா மொழிகளில் கலந்து கிடக்கின்றன. ஜப்பான் தேசத்தில் தை மாதத்தில் அறுவடை முடிந்ததும் அதை தமிழர்கள்போலவே விழாவாகக் கொண்டாடுகிறார்கள். தமிழிலே ‘பொங்கலோ பொங்கல்’ என்கிறோம். அவர்கள் ‘ஹொங்கரோ ஹொங்கர்’ என்கிறார்கள்.
சிந்துச் சமவெளி மக்கள் பேசிய மொழி தமிழ் என்பதைப் பல சான்றுகள் மூலம் நிரூபித்திக் காட்டியவர் தொல்பொருள் ஆய்வாளரான பாதர் ஹிராஸ். இந்த வாதத்தை அவர் 1953-ல் வைத்தார். ஆரம்பத்தில் பலர் எதிர்த்தாலும் நாளடைவில் இந்த முடிவை உலக ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். சிந்துச் சமவெளி மொழியமைப்பு திராவிட மொழியமைப்புஎன ஐராவதம் மகாதேவன் சொல்கிறார். சிந்துச் சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ்தான் என்பது இன்று கீழடி ஆய்வின்மூலம் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
இந்த நாவலில் வரும் நங்கூரம் 2,000 வருடங்கள் பழமையானது. அதிலும் ஒரு வகை எழுத்து காணப்படுகிறது. சங்க காலத்து வெண்ணிக்குயத்தியார் என்ற பெண் புலவர் எழுதி, தொலைந்துபோனது என்று கருதப்பட்ட தமிழர் வரலாறு எங்கே கிடைக்கும் என்ற தகவல் அந்த நங்கூரத்தில் எழுதப்பட்டிருக்கிறது. நாவல் முழுக்கப் பல ஆயிரம் வருடங்களாக, அந்த நங்கூரத்தின் தேடுதல் நடக்கிறது. நங்கூரத்தைக் கண்டுபிடித்தால் தமிழர் வரலாற்றைக் கண்டுபிடிக்கலாம் என்பது நம்பிக்கை.
மரபணுவில் எழுதியிருக்கிறதோ என்று ஐயப்படும்படி தமிழ் மீது அதீத பற்றுக்கொண்டவர்கள் தமிழர்கள். வேறு எந்த நாட்டிலாவது தமிழவன், தமிழினி, தமிழ்மன்னன் போன்ற பெயர்கள் காணக் கிடைக்குமா? 1965-ல் தமிழ்நாட்டில் இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து நடந்த 18 நாள் போராட்டத்தை அடக்க ராணுவம் அனுப்பப்படுகிறது. சரவணன் என்ற பத்திரிகையாளன் இந்தச் சம்பவத்தை ஆவணப்படமாக எடுக்கிறான். அண்ணாதுரை, கருணாநிதி போன்ற பெரும் தலைவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். தமிழுக்கு எதிரிகள் இருக்கிறார்கள் என்ற அச்சம் உறுதியாகிறது. சரவணன் இனம் தெரியாத ஆட்களால் கொல்லப்படுகிறான்.
நாவலின் சில பகுதிகள் 2037, 2038-ம் ஆண்டுகளில் நடைபெறுகிறது. உலகம் எவ்வளவு தூரம் மாறியிருக்கிறது என்பதற்கு அவ்வப்போது கோடி காட்டப்பட்டிருக்கும். கம்பியில்லா மின்சாரம் வந்துவிட்டது. காந்த அட்டை உள்ள எவரும் மின்சாரத்தை உண்டுபண்ணிக்கொள்ளலாம். தொலைக்காட்சியில் புதுவிதமான சானல்கள் காணப்படுகின்றன. கே.ஆர்.விஜயாவை த்ரிஷாவாக மாற்றி படம் பார்க்கலாம். ஒரு மணி நேரம் ஓடும் திரைப்படத்தை, கணினி 10 நிமிடமாகச் சுருக்கித்தரும். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் செல்லும்போது அங்கே வெப்ப நிலை வேறாக இருக்கும். உங்கள் உடல் சூட்டை அந்தக் காலநிலைக்கு ஏற்ற மாதிரி கூட்டிக் குறைக்கலாம். பாரமான மேலங்கிகள் தேவையில்லை. வாடகைக்கு வானூர்திகள் சாரதியுடனோ, சாரதி இல்லாமலோ கிடைக்கும்.
நாவல் பல இடங்களில் பிரமிப்பூட்டியது. ஒரு பக்கத்தைப் படித்துவிட்டு அடுத்த பக்கத்தைத் திருப்பினால் அதில் இன்னும் பிரமிப்பு கூடுகிறது. எப்படி ஒருவரால் தமிழ் இலக்கியம், வரலாறு, தொல்லியல், அகழ்வியல், அறிவியல், அரசியல் மற்றும் மரபணுவியல் எனப் பல துறைகளையும் ஒரு நாவலுக்குள் கொணர முடிந்தது? தமிழிலே இது புது வரவு.
நாவலின் இறுதிப் பகுதிக்கு வரும்போது கதை இப்போதுதான் ஆரம்பமாவது போன்ற தோற்றம் கிடைக்கிறது. எந்த ஓர் அத்தியாயத்தையும் எடுத்து எந்த ஒழுங்கிலும் படிக்கலாம். முதலில் இருந்து கடைசிவரை படிக்க வேண்டிய அவசியமே இல்லை. நாவலின் இரண்டாம் பாகம் வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. முன்னொருவரும் தொடாத பல துறைகளைத் தொட்டு படைத்த இந்த நாவல் தமிழுக்கு ஒரு முன்மாதிரி. தமிழ்மகன் பாராட்டப்பட வேண்டியவர். அடுத்த பாகத்துக்குக் காத்திருக்க வேண்டிய ஆவலைத் தூண்டிவிட்டு, நாவல் ஓர் இடத்தில் வந்து நிற்கிறது. முடியவில்லை.
(நன்றி: தி இந்து)