மலையாள இலக்கிய வரலாற்றில் சில பெயர்கள் காலத்தின் – வரலாற்றின் – மாற்றங்களின் குறியீடுகளாக விளங்குகின்றன. கேரளாவின் 99 விழுக்காடு நில உரிமைகளைத் தங்கள் கைவசம் வைத்திருந்த (ப.14) நம்பூதிரிகளின் வாழ்வியல் ஆச்சார அனுஷ்டானங்கள் ஒட்டுமொத்த கேரளாவையும் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருக்கப் பயன்பட்டன. குடும்பத்தின் மூத்த மகன் அச்சன் நம்பூதிரிக்கு மட்டுமே நம்பூதிரி குலப் பெண்களை மணமுடிக்கும் உரிமை இருந்தது; சகோதரர்களாகிய அப்பன் நம்பூதிரிகள், குறிப்பாக அரசர் குலத்தோடு உறவு கொண்டிருந்த நாயர் குலப் பெண்களோடு “சம்பந்தம்” வைத்துக்கொள்ளலாமே தவிர, மண உறவு கொள்ள முடியாது. அப்பன் நம்பூதிரியைப் பிற சாதித் தாய்க்குப் பிறந்த குழந்தைகள் தீண்டவும் கூடாது என்ற கொடுமை இருந்தது (ப.15). நம்பூதிரிகளை மணக்கும் நம்பூதிரிப் பெண்களின் ‘குடும்ப வாழ்வு’ அடிமைச் சிறை வாழ்வாகவே இருந்தது. மார்புவரை சேலையுடுத்தி, ஓலைக் குடைகளைப் பிடித்துக்கொண்டு குளிக்கக்கூடத் தனிக் குளத்திற்குப் புறப்பட்ட இவர்கள் வாழ்க்கை, ஆசாரங்களுக்கு அடிமைப்பட்ட நடைப்பிண வாழ்க்கை யாகவே இருந்தது. இவர்கள் ‘அந்தர் ஜனங்கள்’ என அழைக்கப்பட்டனர்.
நூற்றுக்கணக்கான தன் சிறுகதைகள் மூலம் ஏற்கனவே உண்டாக்கியிருந்த தாக்கத்தால் சமூகப் போராளியாக விளங்கிய லலிதாம்பிகா (அந்தர் ஜனம்), தான் இறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்புதான், தனது அறுபத்தேழாவது வயதில் தன்னுடைய ஒரே நாவலான ‘அக்னி சாட்சியை’ (1976) எழுதினார். அவர் அனுபவித்த, கண்ட, உணர்ந்த, கொடுமைகள் ஒவ்வொன்றையும் கேள்விக்கு உட்படுத்தி, அப்பன் நம்பூதிரிக்கு நாயர் குலத்தில் பிறந்த தங்கம் என்ற பெண்ணின் – பாத்திரத்தின் வாயிலாகக் கதை கூறிச் செல்கிறார் (பக்.10-12).
மானம்பள்ளி மனையின் ஐதீகங்களை நம்பூதிரி சமூக அனுஷ்டானங்களை அணு பிசகாமல் மேற்கொள்ளும், நம்பூதிரி வீட்டு உண்ணியண்ணனை மணந்து தேவகி, குடிபுறப்பட்டு வருகிறாள்; சடங்காசாரங்களுக்குப் பிறகு நடுக்கூடத்தில் உண்ணியும் தேவகியும் வந்தமர்கி றார்கள். அப்பன் நம்பூதிரிக்கும் நாயர் குல அம்மாளுக் குட்டிக்கும் பிறந்த தங்கம் என்ற 14 வயதுப் பெண் புது மணமக்களைக் காண ஆர்வம் உந்த உள்ளே ஓட, “சீ! சீ! சூத்திரச்சி! விலகிப் போ, யாரையும் தொட்டுத் தீட்டாக்கி விடாதே” என்ற கொடுஞ்சொற்களால் (பக்.30-33) மனம் வெதும்பி அழுது கொண்டே வெளியே ஓடி, மனையை யொட்டிய தன் வீட்டுக்குள் நெற்களஞ்சிய அறைக்குள் ஒளிந்து கொள்கிறாள். அவளுக்குள் கேள்விகள் குமைகின்றன: நாம் எதனால் சூத்திரச்சி ஆனோம்? பேரன்புகொண்ட உண்ணியண்ணாவைப் பார்க்கக் கூடவா தடை?
உண்ணி அன்பான மனிதன்; ஒழுக்கமானவன். தங்கத்திற்குச் சமஸ்கிருதம் கற்றுத்தந்து அவள் மூலம் ஆங்கிலம் கற்றவன்; தங்கத்தின் மீது மிகப் பிரியமான வன். ஆனால் அதே சமயம் அச்சன் நம்பூதிரியையோ (தன் தந்தை), அப்பன் நம்பூதிரியையோ (சிற்றப்பா), தன் குல ஆசார மரபுகளையோ, விதிகளையோ, அனுஷ்டா னங்களையோ எள்ளளவும் மறுக்க – ஒதுக்க முடியாதவன்; மாற்றவும் முயலாதவன். கட்டிய மனைவியை இரவில் பார்க்கவும் ‘நல்ல நேரம்’ பார்க்க வேண்டும் என்ற மரபால் பல இரவுகள் கட்டிய மனைவியைப் பார்க்க இயலாமல் போனவன்.
தேவகி – பேரழகி, படித்தவள், அன்பே உருவானவள், சாதி வேறுபாடு பார்க்காதவள், தன் அண்ணன் பி.கெ.பி’யின் புரட்சி நடவடிக்கையால் ‘பெண் தனிமைப்பட வேண்டிய வஸ்து அல்ல’ என எண்ணுபவள். கணவன் நல்லவன்; ஆனால் தனக்குப் பயன்படாதவன்; தன் சாதாரண ஆசையை நிறைவேற்ற ஆசாரம் பார்ப்பவன். இறுதியில் அவ்வளவு பெரிய மனையில் தேவகி மிகவும் தனிமைப்படுகிறாள். தங்கம் மட்டுமே உற்ற தோழி! வெளி உலக உறவுகளைத் தங்கத்தின் மூலம்தான் ஏற்படுத்திக் கொள்கிறாள்.
தங்கம் – உறுதியானவள், பிடிவாதக்காரி. அன்புக்காக ஏங்கும் அண்ணியின் உணர்வுகளை உண்ணி அண்ணனுக்குப் புரிய வைக்க முயலுகிறாள். தேவகியின் மீது பேரன்பு கொண்ட அவனுடைய நேரமோ தேவாரம் படிப்பதிலும் மற்றும் மற்றமற்ற நாள் கடமைகளிலும் ஓடிவிடுகின்றது. தங்கம் பிடிவாதம் பிடித்து மானம்பள்ளி யின் அனைத்து உறவுகளையும், அன்பையும் பிரிந்து தொடர்ந்து படிப்பதற்காக நகரத்திற்குச் செல்கிறாள்.
காலம் சிலருக்குக் காலனாகிறது. இறந்த தன் அம்மா வைப் பார்க்கக் குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி, தேவகி, மானம்பள்ளி மனையைவிட்டுப் புறப்படுகிறாள்; கணவனோ வாய் பேசாது கல் என நிற்கிறான். மீண்டும் மானம்பள்ளிக்கு வரத் தடை விதிக்கப்படுவதால், தேவகி, காந்திய இயக்கத்தில் சேர்ந்து தீவிரமாகப் பாடுபடுகிறாள்; காந்தியடிகளின் அன்பைப்பெற்று அவருடன் ஆசிரம வாழ்வை மேற்கொள்கிறாள். இறுதியில், பல பேருடைய தீமைகளைப் பாவங்களைத் தன் மேல் ஏற்று அனைவரின் பாவங்களுக்காகவும் தியானம் மேற்கொள்ள கங்கைக் கரையை அடைந்து கடின தவ வாழ்விற்குப் பிறகு யோகினி மடத்தின் தலைவியாகிறாள்.
உண்ணியண்ணனின் இறப்புக்குக் ‘கடனாற்ற’ காசிக்கு வந்த தங்கம் தேவகியை அடையாளம் காண்கிறாள்; தன் மகனுடனும் பேத்தியுடனும் யோகினி மடத்துத் தலைவியாக இருக்கிற தேவகியை – சுமித்திரானந்தா வைக் கண்டு உண்ணி தந்தனுப்பிய ‘சிறு தாலியை’ அவளிடம் ஒப்படைக்கிறாள். தங்கத்தின் மகனைக் காணும் தேவகி தன் நிலை மறந்து “மகனே மகனே” எனக் கதறுகிறாள். பக்கத்தில் நித்தியமாக எரிந்து கொண்டிருக்கும் ஓம குண்டம் அனைத்திற்கும் அக்னி சாட்சியாக விளங்குகிறது.
கேரளாவின் நிலம், ஆட்சி, சமுதாயம் இவற்றின் மீதிருந்த நம்பூதிரிகளின் ஆதிக்கம், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், மிக இறுகிப் போயிருந்தாலும், விடுதலை இயக்கம், கம்யூனிச இயக்கம், கிறித்வர்களின் கல்விச் சேவை, தலித் எழுச்சி போன்றவற்றால் 20ஆம் நூற்றாண்டில் இளகத் தொடங்கியது. நம்பூதிரி சாதிக்குள்ளேயேயிருந்து வெளிப்பட்ட அப்பன் நம்பூதிரிகளின் ‘சுய சாதித் திருமணம்’ என்ற முழக்கம் அன்றைய காலகட்டத்தில் பெரும் புரட்சியாய்க் கருதப்பட்டது.
கேரளாவில் பெண்ணுரிமைக்கான எழுச்சி 1920களில் தொடங்கியது என்றாலும் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், வி.டி. பட்டதிரிப்பாட்டின் (1896-1982) ‘அடுக்களையில் இருந்து அரங்கத்திற்கு’ என்ற நாடகம் நம்பூதிரிகளின் வழமையான பெண் ஒடுக்குமுறை களுக்கு வெடிவிதையாய் அமைந்தது. இதை நன்கு உள்வாங்கிக் கொண்ட லலிதாம்பிகா, தன் சாதிப் பெண்களின் துயரத்தைப் பற்றி மட்டுமின்றி அப்பன் நம்பூதிரிகளால் பாதிக்கப்பட்ட நாயர் குலப் பெண்களின் குடும்பச் சீரழிவைப் பற்றியும் அம்பலப்படுத்தி எழுதினார். விமர்சகர் எம்.என்.காரசேரியின் சொற்களில் கூறுவதென்றால், “குடும்பத்தாலும் சமூகத்தாலும் ஒடுக்கப்பட்டு வாழ்ந்த கேரளத்துப் பெண்கள் தங்களது உரிமைகளுக்காக உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த வரலாறுதான் ‘அக்னி சாட்சி’” (ப.12) எனக் குறிப்பிட வேண்டும்.
கேரள இலக்கிய வரலாற்றில் சில இலக்கியப் படைப்புகள், வரலாற்று வழிகாட்டிப் பலகைகள் ஆகும். வைக்கம் முகம்மது பஷீர் (எங்கள் தாத்தாவுக்குக் கொம்பன் யானை இருந்தது), தகழி (கயிறு), கேசவதேவ் (அயல்கார்), ஜோசஃப் முண்டசேரி (பேராசிரியர்), பொற்றேக்காட் (விஷக்கன்னி), ஓ.வி.விஜயன் (கசாக்கிண்டெ இதிகாசம்), எம்.டி.வாசுதேவன் நாயர் (நாலுகட்டு), ஆனந்த் (கோவர்தனின் பயணங்கள்), ஆகியன போல லலிதாம்பிகாவின் “அக்னி சாட்சி” வரலாற்றின் திருப்பு மையமாகவும், ஆவணமாகவும், கதை செல்நெறியில் அழகியல் சாதனையாகவும் அமைந்துள்ள இலக்கியப் படைப்பாகும். இந்தியாவில் சாதிவெறி முற்றாக அழிக்கப்படும்போது இப்படிப்பட்ட நாவல்கள் மீண்டும் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்படும் வரலாற்று நூல்களாகவும் அமைய வாய்ப்புகள் உள.
மொழிபெயர்ப்பு ஆசிரியர் யூசுப், இந்த நாவலைப் பார்ப்பனப் பேச்சு நடையிலேயே மொழிபெயர்த்திருப்பது பயனுடையதுதானா என்பது வாசகர்களைப் பொறுத்து வேறு படுவதாகும். ஆனால், ‘அப்பன்’ என்ற சொல் மலையாளத்திலும் வழக்கில் இருக்கும்போது ‘அஃப்பன்’ என மொழிபெயர்த்திருப்பது தவறு என்றே தோன்றுகிறது.
ஒரு பதில்: (குளச்சல் மு. யூசுப்)
கடைசி பாராவில், ’அப்பன்’ என்ற சொல் மலையாளத்திலும் வழக்கில் இருக்கும்போது, அஃப்பன் என மொழிபெயர்த்திருப்பது தவறு என்றே தோன்றுகிறது” என்று ஆய்வு மாணவி குறிப்பிட்ட தகவல் சார்ந்து : “மலையாளத்திலும் தமிழிலும் அப்பன் என்றால் தந்தையைக் குறிக்கும் என்பது சரிதான். ஆனால், இது தந்தையைச் சுட்டுகிற இடம் மட்டும் அல்ல! சித்தப்பா வைச் சுட்டுகிற இடமும்கூட! அஃப்பன் என்பது, தனக்குப் பிறந்த பிள்ளைகள்கூட தன்னைத் தொட்டால் தீட்டாகி விடுபவரும், சுயசாதியில் திருமணம் செய்ய இயலாத வரும், நாயர் குடும்பத்தில் ’வெறும் சம்பந்தம்’ மட்டும் செய்துகொள்பவருமான இளைய நம்பூதிரியைக் குறிப்பிடுகிற சொல். ஆகவே, அஃப்பன் நம்பூதிரியை ‘சித்தப்பா’ என்று சொல்லி விடலாம் என்றால், அதுவும் தவறாகி விடும். இது கலாச்சாரம், சாதிய மேலாண்மை உட்பட, மேற்கண்ட பல்வேறு அம்சங்கள்கொண்ட ஒரு வார்த்தை. ஆகவே, அஃப்பன் என்று குறிப்பிட்டு, ஒரு அடிக்குறிப்பும் தந்தேன். கலாச்சாரத்தையும் சேர்த்து மொழிபெயர்த்து விடக்கூடாது என்பதற்காக! (மலையாளத்தில் அல்லாஹ் என்ற வார்த்தை இருந்து, அதை தமிழின் பொதுவான வார்த்தையாகிய கடவுள் என்று குறிப்பிட்டால், அந்தச் சொல்லுக்கான சுய அடையாளம் மறைந்து போகும்.