செப்டெம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குப் பிறகு அடிப்படைவாதம், தீவிரவாதம் பற்றிய விவாதங்கள் உலகம் முழுவதிலும் அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் பாதிப்பு, உலகின் பாதிப்பாக மாறியது. அமெரிக்காவின் எதிரிகள் உலகின் எதிரிகளாக மாறிப்போயினர். அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இதனைத் தெள்ளத்தெளிவான ஓர் அரசியல் சித்தாந்தமாகவே வடிவமைத்து அறிவித்தார். ‘நீங்கள் எங்களுடன் இல்லையென்றால் எதிரிகளுடன் இருக்கிறீர்கள் என்று பொருள்.’ இந்த விதியின்படி இஸ்லாமியர்கள் மட்டுமல்ல அவர்கள் தரப்பு நியாயங்களை எடுத்து வைத்துப் பேசும் தாரிக் அலியும்கூட அமெரிக்காவின் எதிரிதான். அவரைப் பொருத்தவரை இருப்பதிலேயே ஆபத்தான தீவிரவாதி அமெரிக்காதான். எனவே, அடிப்படைவாதத்தின் தாய் என்று அமெரிக்காவை அவர் அழைக்கிறார்.
தாரிக் அலியின் அடிப்படைவாதங்களின் மோதல் ஒரு நவீன கிளாசிக்காக மாறிக்கொண்டிருக்கிறது. செப்டெம்பர் 11 தாக்குதல்களை எப்படி அமெரிக்கா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது என்பதை இந்தப் புத்தகம் மிகத் தெளிவாக விவரிக்கிறது. இப்படித்தான் பர்ல் துறைமுகத் தாக்குதலைப் பயன்படுத்தி இரண்டாம் உலகப் போரில் நுழைந்து ஹிரோஷிமாவையும் நாகசாகியையும் இரக்கமின்றி அழித்தது அமெரிக்கா. இப்படித்தான் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் அத்துமீறி நுழைந்து கலகம், கொலை, ஆட்சிக்கவிழ்ப்பு என்று பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து தன் நோக்கங்களை நிறைவேற்றிக்கொண்டது அமெரிக்கா. இன்றளவும் அமெரிக்கா தன் சாம்ராஜ்ஜிய விரிவாக்கக் கனவையும் ஏகாதிபத்திய செயல்திட்டத்தையும் வெவ்வேறு வழிகளில் செயல்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது.
அதற்கு அமெரிக்காவுக்குத் தேவைப்படும் ஒரே விஷயம், எதிரி. வரலாறு முழுவதிலும் அமெரிக்கா பல புதிய எதிரிகளை இப்படி அடையாளப்படுத்திக்கொண்டே வருவதையும் தொடர்ந்து அந்த எதிரிகள்மீது போர் தொடுத்து அழித்துக்கொண்டே வருவதையும் நாம் காணலாம். சிவப்பு அபாயம் என்று முத்திரை குத்தி கம்யூனிஸ்டுகள் மீதும் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று சொல்லி முஸ்லிம்கள்மீதும் அமெரிக்கா இப்படித்தான் போர் தொடுத்தது.
சந்தைப் பொருளாதாரத்தை விரிவாக்குவதற்காக மேற்கொள்ளப்படும் ஏகாதிபத்தியப் போர் என்று இதனை தாரிக் அலி அழைக்கிறார். தனது புத்தகத்தின் மையமாக இஸ்லாத்தை எடுத்துக்கொண்டு அவர் ஆய்வு செய்கிறார். இஸ்லாம் எப்படி உருவானது? அதன் வரலாறு என்ன? அதன் கலாச்சார, பண்பாட்டு விழுமியங்கள் எப்படி உருவாயின? இஸ்லாத்துடன் தீவிரவாதம் பிணைக்கப்பட்டது எப்போது, யாரால்? இஸ்லாம் என்றால் அடிப்படைவாதம் என்று பொதுப்புத்தியில் ஒரு வலுவான சிந்தனை உருவானது எப்படி? தாடி வைத்த ஒவ்வொருவரையும் பர்தா அணிந்த ஒவ்வொருவரையும் உலகம் சந்தேகக் கண் கொண்டு இன்றும் பார்த்து வருவது ஏன்?
அடிப்படைவாதங்களின் மோதல் இந்தக் கேள்விகளை விரிவாக எதிர்கொண்டு உரையாடுகிறது. ஒரு மதமாகத் தோன்றி ஓர் அரசியல் கருத்தாக்கமாக இஸ்லாம் விரிவடைந்த கதையும் ஊடாக இதில் விவரிக்கப்படுகிறது. ஒரு பக்கம் இஸ்லாம் இன்னொரு பக்கம் அமெரிக்கா என்று மட்டும் இதனைச் சுருக்கிப் பார்த்துவிடமுடியாது. உலகம் தழுவிய அளவில் நடைபெறும் இந்த மோதலில் பல நாடுகளின் பங்களிப்பு உள்ளது. இஸ்லாத்தை உலகம் எப்படி எதிர்கொண்டது என்பதையும் எதனால் அது எதிர்க்கப்பட்டது என்பதையும் தகுந்த வரலாற்றுப் பின்னணியில் புரிந்துகொண்டால்தான் இந்த மோதலைப் புரிந்துகொள்ள முடியும்.
பார்ப்பதற்குத் தடிமனாக இருப்பதாலேயே ஒரு புத்தகம் கடினமாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதற்கு தாரிக் அலியின் இந்தப் புத்தகம் ஒரு உதாரணம். ஒரு நாத்திகவாதியாக இருந்தபோதிலும் இஸ்லாமியப் பின்னணியில் வளர்ந்தவர் தாரிக் அலி. அல்லது இப்படியும் சொல்லலாம். இஸ்லாமியப் பின்னணியில் வளர்ந்தபோதும் ஒரு நாத்திகவாதியாக உருவானவர். உண்மையைத் தேடும் ஒரு வரலாற்றாசிரியராகவும் இருப்பதால் இஸ்லாத்தின் பலம், பலவீனம், போதாமைகள், சவால்கள் அனைத்தையும் அச்சமின்றி வெளிப்படையாக அவரால் தனது புத்தகத்தில் அலசி ஆராய முடிந்திருக்கிறது. ஓர் இடதுசாரியாகவும் அவர் இருப்பதால் மக்கள் பக்கம் நின்று மேலாதிக்கத்தையும் ஏகாதிபத்தியத்தையும் அவரால் எதிர்க்கவும் முடிந்திருக்கிறது. இந்தப் புத்தகம் இந்த இரண்டையும் பற்றியது. அதனாலேயே ஏராளமான எதிர்ப்புகளையும் விமரிசனங்களையும் பாராட்டுகளையும் ஒருசேர தாரிக் அலி எதிர்கொண்டார்.
சவுதி அரேபியா, சிரியா, எகிப்து, வடக்கு ஆப்பிரிக்கா, ஸ்பெயின், இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான் என்று இஸ்லாம் விரிந்து பரவிய வரலாறு இந்தப் புத்தகத்தில் பதிவாகியுள்ளது. அமெரிக்கா மட்டுமல்ல பின்லேடன் போன்றோரும்கூட இஸ்லாத்தைத் தங்களுக்குச் சாதகமாக வளைத்துக் கொண்டதை தாரிக்அலி சுட்டிக்காட்டுகிறார். இஸ்லாத்தை எதிர்த்து நிற்கும் ஏகாதிபத்தியத்தின் வேர்களை மட்டுமின்றி தீவிரவாத அம்சங்களை இணைத்துக்கொண்டு உருப்பெற்ற வஹாபிசத்தின் வேர்களையும் தாரிக்அலி தேடிச் செல்கிறார். இந்தத் தேடல் சமகால உலகின் சமூக, அரசியல் மற்றும் சித்தாந்த வரலாறாகவும் விரிவடைகிறது.
கி. ரமேஷ் சிறந்த முறையில் மொழிபெயர்த்திருக்கும் இந்தப் புத்தகம் தமிழ்ச்சூழலில் ஆழமான விவாதங்களை ஏற்படுத்தப்போவது உறுதி.
(நன்றி: புத்தகம் பேசுது)