விளையாட்டின் விதிகளை நாம் ஏற்றுக்கொண்டோம், விளையாட்டும் தன்னைப் போலவே நம்மை வடிவமைக்கிறது. நமக்கு உள்ளேயேதான் சஹாரா பாலைவனம் தன்னைக் காட்டிக்கொள்கிறது. அதனிடம் நெருங்கிச் செல்வது என்பது ஒரு பாலைவனச் சோலைக்கு விஜயம் செய்வதைப் போன்றதல்ல; நீரூற்று என்பதை நாம் நம்பிக்கை கொள்ளும் ஒரு மதமாக ஆக்குவதுதான்.
– அந்த்வான் து செந்த்-எக்சுபெரி (‘காற்று, மணல், நட்சத்திரங்கள்’ நாவலிலிருந்து…)
ஒரு புனைவாளனின் மனமும், காலம் முழுவதும் தன்னை மொழிபெயர்ப்பாளனாக மட்டுமே அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒரு மொழிபெயர்ப்பாளனின் மனமும் இயங்கும் விதம் முற்றிலும் வேறானது. ஒரு படைப்பை சமர்ப்பிக்கக்கூட உரிமையற்றவன் மொழிபெயர்ப்பாளன். இரு மொழிகளின் அமைப்பில் இருக்கும் வேறுபாடு காரணமாக மிகச் சொற்பமான இடங்கள் தவிர்த்து சுதந்திரம் எதையும் எடுத்துக்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டவன். எல்லாப் புகழையும் படைப்பாளிக்குத் தந்துவிட்டு ‘நல்ல மொழிபெயர்ப்பு’ என ஒரு வரிப் பாராட்டை அல்லது ‘மோசமான மொழிபெயர்ப்பு’ என ஒரு வரி விமர்சனத்தை மட்டும் தனக்காக எடுத்துக்கொள்பவன்.
‘ஒரு மொழிபெயர்ப்புப் பிரதியை வாசிக்கையில் அது மொழிபெயர்ப்பு என்பதை உணர்த்த வேண்டும். தமிழிலேயே வாசித்ததுபோல இருந்தது என்றால் அது மோசமான மொழிபெயர்ப்பு’ என்பார் க்ரியா ராமகிருஷ்ணன். அயல் தேச நாவலில் இடம்பெறும் கதாப்பாத்திரங்களின் பெயர்கள், அதன் கலாச்சாரம், நிலம் என ஒவ்வொரு அம்சமும் அந்நியத்தன்மையை உணர்த்திக்கொண்டே இருக்கும். அதைப் போலவே, மொழியும் தனக்கான இயல்பை, குணாதிசியத்தை, தனித்தன்மையைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மொழியும் தனக்கான பிரத்தியேக இசை லயத்தைக் கொண்டிருக்கிறது. வெ.ஶ்ரீராமின் முதல் மொழிபெயர்ப்பான அந்நியனில் தொடங்கி இப்போது வெளியாகியிருக்கும் ‘மெர்சோ: மறுவிசாரணை’ வரை ஒருவித மொழியின் அந்நியத் தன்மையைக் காணலாம். வாக்கியங்களை உடைக்காமல் நிறுத்தற்குறிகளின் உதவியோடு பிரெஞ்சு மொழியின் அமைப்பைத் தமிழில் சாத்தியப்படுத்த முயன்றிருக்கிறார் என்ற முடிவுக்கு நாம் வரலாம் (தமிழின் வழமையான வாக்கிய அமைப்பில் இருந்து விலகி நிற்பதை வைத்தே இதைச் சொல்கிறேன்). ஒரு மொழிபெயர்ப்பாளன், நவீன உலகில் பிரயோகிக்கும் புதிதான வார்த்தைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்துவத்தைப் போல வாக்கிய அமைப்பைக் கொண்டு வருவதும் வளம் சேர்க்கும் அம்சம்தான். வெ.ஸ்ரீராம் மொழிபெயர்த்திருக்கும் அநேக படைப்புகள் இறுக்கமான தன்மையோடு இருக்கின்றன. துல்லியமான விவரணைகள், கச்சிதமான வார்த்தைப் பிரயோகம், கதைக்களம் இதோடு சேர்ந்து மொழியும் இத்தகைய இறுக்கமான தன்மைக்குப் பிரதானமான பங்களிக்கிறது.
குட்டி இளவரசனிலிருந்து இரண்டு வாக்கியங்களை உதாரணமாகக் காண்போம்:
ஏனென்றால் இந்த கிரகம் ஒரே ஒரு முறை மட்டுமே தொலைநோக்கிமூலம் பார்க்கப்பட்டிருக்கிறது, 1909இல், ஒரு துருக்கிய வானவியலாளனால். [பக்: 21]
இது ஒரே வாக்கியம். இந்த வாக்கியத்துக்கு இஸ்திரி போட்டிருந்தால், ‘ஏனென்றால் இந்த கிரகம் ஒரே ஒரு முறை மட்டுமே 1909இல் ஒரு துருக்கிய வானவியலாளனால் தொலைநோக்கிமூலம் பார்க்கப்பட்டிருக்கிறது’ என்று எழுதியிருக்க முடியும்.
இதே வாக்கியம் ஆங்கிலத்தில் இப்படி மொழிபெயர்ப்பாகியிருக்கிறது: This asteroid has only once been seen through the telescope. That was by a Turkish astronomer, in 1909.
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது இந்த வாக்கியத்தை இரண்டாக உடைத்திருக்கிறார்கள். ‘ஏனென்றால்’ எனும் வார்த்தையைக் காணவில்லை. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பாகியிருந்தால் வாக்கிய அமைப்பு வேறொன்றாக இருந்திருக்கும். இப்படி ஒவ்வொரு வாக்கியத்தையும் நாம் ஒப்பிட்டுப் பார்த்தோமானால் ‘குட்டி இளவரசன்’ வேறு ஒரு தோற்றத்திலேயே நமக்குக் கிடைத்திருக்கும். ஆங்கில மூலம் என்பதும் நம்பத்தகுந்தது அல்ல. இல்லாத பத்திகளை இணைப்பதும், சில பத்திகளை வெட்டி எறிவதும், வாக்கியங்களை உடைப்பதும், மூலத்திற்கு உரை எழுதுவதும் என இங்கே நமது சூழலில் இருக்கும் எல்லாப் பிரச்சனைகளும் ஆங்கிலத்திலும் இருக்கின்றன. மூல மொழியிருந்து நேரடியாக மொழிபெயர்ப்பாகி (நல்ல மொழிபெயர்ப்பு) நமக்கு கிடைப்பது அதிர்ஷ்டம்தான்.
குட்டி இளவரசனில் இருந்து இன்னொரு எளிமையான வரி:
அப்படியானால், முட்கள், அவற்றால் என்ன பயன்? [பக்: 32]
இதை ‘அப்படியானால் முட்களால் என்ன பயன்’ என்று எழுதவில்லை. மூலத்திலிருந்து சரியான அர்த்தத்தை மொழிபெயர்ப்பது என்பது அடிப்படையான அம்சம் எனினும் மொழியின் தொனி, அமைப்பு, இசைத்தன்மை, நிறுத்தங்கள் போன்றவற்றையும் கவனத்தில்கொள்வது மிகச் சிறந்த மொழிபெயர்ப்புக்கான அடையாளம்தான்.
‘சொற்கள்’ தொகுப்புக்காகக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்ததைக் குறித்து அத்தொகுப்பின் பின்னுரையில் ஒரு குறிப்பு உள்ளது. வெ.ஸ்ரீராமின் மொழி மீதான அக்கறையைப் புரிந்துகொள்ள உதவும் குறிப்பு: …அரசியல் தலைவர்கள், ராணுவத்தினர், அக்காலகட்டத்தில் பிரான்சில் நிகழ்ந்த சம்பவங்கள் சார்ந்த குறிப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருப்பதால் அது இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பில் மொழிபெயர்க்கப்படவில்லை. இது தவிரவும், பிரெஞ்சு சொற்களின் சிலேடைப் பிரயோகங்களும், பிரெஞ்சுக் கலாசாரத்தின் பிரத்தியேக அம்சங்களும் நிறைந்த கவிதைகள் மொழிபெயர்ப்பில் அர்த்தமற்றுப்போய்விடுகின்றன. ஏகப்பட்ட அடிக்குறிப்புகளும் கவிதையின் ஓட்டத்தைத் தடைசெய்துவிடும். ஆகவே, இது போன்ற கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெறவில்லை.
சார்த்ரின் ‘மீள முடியுமா?’ நாடகத்தில் இடம்பெறும் அறையில் ஒரு வெண்கலச் சிலை உள்ளது. அது ஒரு பார்பெடியன் வெண்கலச் சிலை என்பதாக நாடகத்தில் குறிப்பும் வருகிறது. பார்பெடியன் என்பவர் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிற்பி என்றும், இங்கு குறிப்பிடப்படும் வெண்கலச் சிலையில் இரண்டு நிர்வாணமான பெண்கள் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டிருப்பதாக அமைந்திருக்கிறது என்றும் ஒரு அடிக்குறிப்பு தமிழில் உள்ளது. பார்பெடியன் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பி என்பது தகவல்தான். ஆனால், நாடகத்தில் இடம்பெறும் சிலைக்கு உருவம் கொடுத்திருப்பது மிக முக்கியமான அம்சம். இந்தக் குறிப்பு, சிற்பம் குறித்த பிம்பத்தை நமக்குத் தருகிறது. தவிரவும், அது அந்த நாடகத்துக்கு வலு சேர்க்கும் அம்சமாக இருக்கிறது. இந்த அடிக்குறிப்பு ஆங்கிலப் பதிப்பில் இல்லை.
O
அந்த்வான் து செந்த்-எக்சுபெரியின் மொழியில் கவித்துவமும் தத்துவமும் இழையோடுகின்றன. மானுடம் குறித்த செந்த்-எக்சுபெரியின் குரல் வெவ்வேறு விதங்களில் ‘காற்று, மணல், நட்சத்திரங்கள்’ நாவலில் ஒலிக்கின்றன. பழுதான விமானம் ஆள் இல்லாப் பாலைவனத்தில் தரையிறங்குவதைக் கொண்டு, ‘குட்டி இளவரசனு’க்கான விதை ‘காற்று, மணல், நட்சத்திரங்கள்’ நாவலில் விழுந்திருக்கிறது என்று சொன்னபோதும், இது வெறும் புறமான அம்சம்தான், அந்த மானுடம் குறித்த பார்வையில்தான் அவ்விதையின் ஆன்மா இருக்கிறது. குழந்தைகளுக்கான புத்தகம் போன்ற பாசாங்கைக்கொண்ட ‘குட்டி இளவரசன்’ நாவல் மானுடத்தின் இயல்பும், அபத்தமும், அதற்கான தீர்வும் என தீவிரமான விஷயங்களைக் கையாள்கிறது. குழந்தையின் மொழியில், ஒட்டுமொத்த உலக நடப்பையும் விமர்சிக்கிறார். எளிமையான மொழியில் ஆழமான விஷயங்களைக் கையாண்டிருப்பது நம்மை நெருக்கமாக உணரவைக்கிறது. பெரும்பாலும், தத்துவம் மாதிரியான விஷயங்களைக் கையாளும் மேட்டிமைத்தனம் அல்லது மேலோட்டமான பார்வை பெரும் அயற்சியையே தருகின்றன. இத்தகைய பாசாங்கான தத்துவங்கள் யதார்த்தத்தில் சாத்தியமற்றவையாக இருப்பதால் அவை போலியாகவும் வெற்று உபதேசங்களாவும் சுருங்கிவிடுவதே அயற்சிக்குக் காரணம். ஆனால், எக்சுபெரியின் சிந்தனைகளில் ஒரு தனித்துவம் இருக்கிறது. அது ரசிக்கும்படியான வாசிப்பனுபவமாக மாறுகிறது.
‘குட்டி இளவரசன்’ நாவலில், தனது பால்யத்தைத் தொலைத்துவிட்ட விமானி முதலில் கதைசொல்லியாக இருக்கிறார். பின்பு, கதையின் போக்கில் குட்டி இளவரசனுக்குக் கைமாறி பிறகு மீண்டும் விமானியிடம் ஒப்படைக்கப்படுகிறது. அரசன், தற்பெருமைக்காரன், குடிகாரன், பிஸினஸ்மேன், ஆய்வாளன் எனத் தனித்தனிக் கிரகத்தில் தனியாக வாழ்வதாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவர்களது இயல்பை – தனியாக இருந்தபோதும் அதிலிருந்து கொஞ்சமும் மாறாமலிருக்கும் அபத்தமான இயல்பை – பகடியுடன் சித்தரிக்கிறார் எக்சுபெரி. குழந்தைமை இழக்காத குட்டி இளவரசன், இவர்கள் ஒவ்வொருவரின் இயல்பையும் கண்டு வியக்கிறான். பெரியவர்கள் நிச்சயமாக விசித்திரமானவர்கள்தான் எனத் திரும்பத்திரும்பச் சொல்கிறான். சீரற்றுத் தொடர்பின்றி நிகழும் புதிரான சம்பவங்களும் சாகசங்களும் வினோதமான களமும் குழந்தைகளுக்கானதாகத் தோன்றினாலும் அதன் உட்பொருள் முதிய வாசகர்களுக்கானது. வயது வரம்பின்றி எல்லோருக்குமான புத்தகமாக இருப்பது இதன் விஷேச அம்சம்தான்.
குழந்தைமையில் இருக்கும் சிந்தனைத் திறன் ஒரு குறிப்பிட்ட பருவத்துக்குப் பின்பாக மட்டுப்படுகிறது அல்லது வெகுளித்தனம் மறைந்து வேறொன்றாக அறிவார்த்தமாக முதிர்ச்சியுடன் வெளிப்படுகிறது. இதற்கும் குழந்தைமைக்கும் உள்ள வேறுபாடு குறிப்பிடத்தக்கது. குட்டி இளவரசனின் இந்த இரண்டும் கலந்த போக்குதான் இதைத் தனித்துவமான நாவலாக மாற்றுகிறது.
O
வெ.ஸ்ரீராமின் மொழிபெயர்ப்புகள்:
1980 அந்நியன் – ஆல்பெர் காம்யு
1981 குட்டி இளவரசன் – அந்த்வான் து செந்த்-எக்சுபெரி (மதனகல்யாணியுடன் இணைந்து)
1986 மீள முடியுமா? – ழான்-போல் சார்த்ர்
2000 சொற்கள் – ழாக் ப்ரெவெர்
2000 க்னோக் அல்லது மருத்துவத்தின் வெற்றி – ழூல் ரோமேன்
2004 தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம் – பியர் பூர்தியு
2006 கீழை நாட்டுக் கதைகள் – மார்க்கெரித் யூர்ஸ்னார் (மூன்று பிற மொழிபெயர்ப்பாளர்களுடன் இணைந்து)
2010 சின்னச் சின்ன வாக்கியங்கள் – பியரெத் ஃப்லுசியோ
2013 முதல் மனிதன் – ஆல்பெர் காம்யு
2014 ஃபாரென்ஹீட் 451 – ரே பிராட்பெரி (ஆங்கிலத்திலிருந்து)
2017 காற்று, மணல், நட்சத்திரங்கள் – அந்த்வான் து செந்த்-எக்சுபெரி
2018 மெர்சோ: மறுவிசாரணை – காமெல் தாவுத்
O
வெ.ஸ்ரீராம் மொழிபெயர்த்திருக்கும் படைப்புகள் பலவற்றிலும் ‘அபத்தம்’ என்பது பொதுவான அம்சமாக இருக்கிறது. ‘அபத்தம்’ எனும் சொல், உலகளாவிய பொது குணமாக இருக்கிறது; தனிமனிதனாக இருக்கட்டும் அல்லது ஒட்டுமொத்த சமூகமாக இருக்கட்டும் அல்லது ஒரு தேசம் என்பதாக இருக்கட்டும். இவ்வுலகம் அபத்தங்களால் நிறைந்தது. அபத்தச் சூழலில் இருந்து மீண்டிருக்கும் தேசம் என நாம் எதையும் சுட்டிவிட முடியாது. இத்தகைய அபத்தங்களில் இருந்து மீள்வது என்பதும் சாத்தியமில்லாதது. அது ஒரு நாட்டுக்கு, சமூகத்துக்கு, தனி மனிதனுக்கு நிகழ்ந்த சாபக்கேடுதான். கொஞ்சம் மிகையாகச் சொன்னால், அபத்தத்தால்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இது ஒரு அபத்தமான முரண்!
காம்யுவின் ‘அந்நிய’னையும் காஃப்காவின் ‘விசாரணை’யையும் நாம் தனியாகக் கோடிட்டுக் காட்ட வேண்டிய தேவையில்லை. இரண்டும் அபத்தத்தைச் சுட்டவே திட்டமிட்டு எழுதப்பட்ட நாவல்கள். தாயின் மரணத்துக்குப் பின்பாக நாம் அழவில்லை என்றால், தாயின் மரணத்துக்குப் பின்பாக நாம் சாவதானமாகத் தேநீர் அருந்தினால், தாயின் மரணத்துக்குப் பின்பாக நம் காதலியுடன் நகைச்சுவைத் திரைப்படத்துக்குச் சென்றால் நமக்கு மரணதண்டனை விதிக்கப்படலாம். மரணதண்டனை விதித்ததுக்குப் பின்பாக நாம் அதை நினைத்து வருந்தவில்லை என்றால் இந்த உலகம் ஸ்தம்பித்துவிடும். இயல்பாக எதையும் எதிர்கொள்வதை இவ்வுலகம் விரும்புவதில்லை. அபத்த அவலம் கலையாக அந்நியனில் பரிணமித்திருக்கிறது.
‘குட்டி இளவரசன்’ குறுநாவலில் ஒவ்வொரு அபத்தத்தையும் வரிசையாகப் பட்டியலிட்டிருக்கிறார் செந்த்-எக்சுபெரி. காம்யு, காஃப்கா அபத்தங்களைத் தீவிரமாக, அடர்த்தியாகக் கையாண்டிருக்கும்போது, எக்சுபெரியோ விளையாட்டாக போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறார்.
‘ஆலோசனை மட்டுமே என்றால் எனக்கு அதிலுள்ள ஆர்வம் கொஞ்சம்தான். அது ஒரு மிகச் சாதாரணமான கலைதான், வலை போட்டு மீன் பிடிப்பதைப் போல. ஆனால், சிகிச்சை என்பதோ மீன் வளர்ப்புக் கலை’ என வியாபாரமாக மருத்துவம் உருக்கொண்ட அபத்தத்தைச் சித்தரிக்கும் நாடகம்தான் ழூல் ரோமேனின் ‘க்னோக் அல்லது மருத்துவத்தின் வெற்றி’.
‘மெர்சோ: மறுவிசாரணை’ நாவலில் நான்கைந்து இடங்களில் இந்த அபத்தம் எனும் வார்த்தை நேரிடையாகவே பயன்படுத்தப்படுகிறது. இந்த அபத்தப் பகுதி குறித்து வெ.ஸ்ரீராம்: ‘மெர்சோ: மறுவிசாரணை’ நாவல் மெர்சோவின் மேல் (காலனியப் பிரெஞ்சுக்காரர்கள் மேல்) ஹரூனுக்கு இருக்கும் கோபத்தில் தொடங்குகிறது. ஆனால், சுவாரஸ்யமான விதத்தில், காம்யு விவரித்த அபத்தம் என்ற கோட்பாட்டில் போய் இணைகிறது என்பதுதான் இந்தப் புத்தகத்தின் தனித் தன்மை. …மெர்சோவும் சரி, ஹரூனும் சரி, தங்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுப்பதில்லை; ஆனால், ஒருவன் அதற்காகத் தண்டிக்கப்படுகிறான், மற்றவன் தண்டனை இல்லாமல் விடுதலை ஆகிறான். ஒரு மத நம்பிக்கையின் பெயரிலோ அல்லது ஒரு அரசியல் புரட்சியின் பெயரிலோ அவர்களுடைய அடிப்படைக் குற்றம் திசை திருப்பப்படும் அபத்தம்!
சார்த்ரின் ‘மீள முடியுமா?’விலும் ழாக் ப்ரெவெரின் ‘சொற்களி’லும் இந்தத் தன்மை வெளிப்படையாக இல்லை. ஆனால், சூசமாக இதுவும் ஒரு அங்கமாகவே இருக்கிறது. முதலாளிக்காக ஒரு நாள் பொழுது முழுவதையும் வீணடிக்கும் மடத்தனத்தையும், குழந்தைகளுக்கான கல்வி அமைப்பையும், போர்க்காலத்தையும், ராணுவ மற்றும் அரசியல் போக்கையும் சாடும் ழாக் ப்ரெவெரின் சொற்களில் இந்த அபத்தத் தன்மை மூட்டமாகத் திரள்வதைக் காணலாம். சமூகத்தின் அபத்தத்துக்குத் தனி மனிதனே பொறுப்பாகிறான் என்பதால் சார்த்ரின் ‘மீள முடியுமா?’வையும் இந்த எல்லைக்குள் நிறுத்திவைக்கலாம்.
O
அந்நியன், குட்டி இளவரசன், காற்று மணல் நட்சத்திரங்கள், முதல் மனிதன் என வெ.ஸ்ரீராம் நமக்குத் தந்திருக்கும் புத்தகங்கள், மொழிபெயர்க்கப்பட்ட மொழிகள் பலவற்றிலும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்க, இங்கே நம்மிடையே சில ஆயிரம் வாசகர்களை மட்டுமே சென்று சேர்ந்திருக்கிறது. மிகச் சொற்பமான வாசகர்களுக்காக மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர்களின் மனம் புதிரான ஒன்றுதான். அதிலும், வெ.ஸ்ரீராமின் புதிர் மனம் பிரசித்தி பெற்றது. பல பெருமைக்குரிய விருதுகள் வாங்கியிருந்தபோதும் மொழிபெயர்ப்பது, அதற்குச் சிறப்பான பின்னுரை எழுதுவது, அரிதாகக் கட்டுரைகள் எழுதுவது என்பதைத் தவிர வேறு எப்படியும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாத அபூர்வ மனம்.
வெ.ஸ்ரீராமின் இந்த நாற்பது வருடப் பயணத்தில் அவர் மொழிபெயர்த்திருக்கும் நூல்களின் எண்ணிக்கை சொற்பமே. சராசரியாக, மூன்று வருடத்துக்கு ஒரு புத்தகம் என மொழிபெயர்த்திருக்கிறார். ஆனால், வெ.ஸ்ரீராம் மொழிபெயர்த்திருக்கும் ஒவ்வொரு புத்தகமும் ஏதோ ஒரு வகையில் முக்கியமானவை. அடர்த்தியானது. கனம் நிரம்பியது. இது, ஒரு புனைவாளனைக் காட்டிலும் மொழிபெயர்ப்பாளனுக்கு வாய்க்கும் அனுகூலம். அதாவது, தனது எல்லாப் படைப்புகளையும் நிறைவாகத் தரும் சாத்தியம் மொழிபெயர்ப்பாளனுக்கு உண்டு. இருந்தும், அப்படியான மொழிபெயர்ப்பாளர்களும் நம்மிடையே சொற்பம்தான். அப்படியான அரிதானவர்களின் பட்டியலில் தனித்துவமான இடம் வகிக்கும் வெ.ஸ்ரீராமின் ஆகச் சிறந்த பணிக்கு தமிழ் இலக்கிய உலகம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. வெ.ஸ்ரீராமுக்கு இரண்டு ஷெவாலியே விருது வழங்கி பிரெஞ்சு அரசு சிறப்பித்திருக்கிறது. ‘குட்டி இளவரசன்’ மொழிபெயர்த்ததற்குப் பின்பாக வெ.ஸ்ரீராம் பிரான்ஸ் செல்கையில், முன்பொரு காலத்தில் எக்சுபெரி தங்கியிருந்த அறையை இவருக்கும் கொடுத்திருக்கிறது. ஆனால், தமிழ் இலக்கிய உலகமோ, தமிழக அரசோ பெரிதாக வெ.ஶ்ரீராமைக் கண்டுகொள்ளவில்லை என்பது அபத்தம்தான்! இது வழமையானதுதான்; பல முக்கிய ஆளுமைகள் கவனம் பெறாததும் மறக்கப்படுவதும். இருந்தும் இதைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. அந்த வகையில், ஆம்பல் இலக்கியக் கூடலின் இந்த நிகழ்வு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விமர்சனக்கூட்டம் என்பதைத் தாண்டி வெ.ஸ்ரீராமைக் கௌரவிக்கும் நிகழ்வாகவே பார்க்கத் தோன்றுகிறது. அதில் நானும் சிறு பங்காற்றியிருப்பது உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி.
O
(மார்ச் 11, 2018 அன்று கடலூர் ஆம்பல் இலக்கியக் கூடல் நடத்திய வெ.ஸ்ரீராம் படைப்புகளுக்கான விமர்சனக்கூட்டத்தில் வாசித்த கட்டுரை)
(நன்றி: சாபக்காடு)