அண்மையில் துறைவன் நாவல் எழுதிய எழுத்தாளர் க்றிஸ் அந்தோணியின் நேர்காணல் வாசிக்க நேர்ந்தது. நெய்தல் பரப்பை பற்றியும் பரதவர் வாழ்வை பற்றியும் நமக்கிருக்கும் பிழையான புரிதல் பற்றி குறைபட்டிருந்தார். என்ன செய்ய, நாம் நமக்குத் தேவையானதற்கு அப்பால் எல்லாவற்றையும் ‘ஸ்டீரியோடைப்’களாக பதிந்து வைத்திருக்கிறோம்.
ஆனால் ஆழி சூழ் உலகு பரதவர்கள் பற்றிய நம் முன்முடிவுகளை உடைக்கிறது. நம் மண்ணின் அனைத்து சமுதாயங்களைப் போலவே வரலாற்று நீரோட்டத்தில் பல விசைகள் பிணங்கியும் இணங்கியும் உருவாக்கிய திரளே இன்றுள்ள பரதவர்கள். அவர்களது வரலாற்றில் மறைந்திருக்கும் பல்வேறு முரண்களையும் வளர்ச்சி மற்றும் சிதைவுகளையும் இந்நாளைய பழக்க வழக்கங்கள் மற்றும் சமுதாய அமைப்பையும் விவரிக்கும் சமூக ஆவணம் என்று இந்த நாவலைச் சொல்லலாம். அது மட்டுமல்ல, ஆழி சூழ் உலகு பரதவர் கிராமங்களில் வாழும் பல்வகைப்பட்ட மனிதர்களின் தனித்துவத்தை விவரிக்கும் இலக்கியப் படைப்பாகவும் விளங்குகிறது மனிதனை நுண்மையாகவும் அவன் வாழும் சமூகத்தின் உள் பொதிந்திருக்கும் வரலாற்று தடத்தை முழுமையாகவும் விவரிப்பதால்தான் இது தமிழில் எழுதப்பட்ட சிறந்த நாவல்களில் ஒன்றாகிறது..
முதலில் ஆழிசூழ் நாவலில் உள்ள பல்வகைப்பட்ட மனிதர்கள்-
1930 களில் விடுதலைக்கு முன்பான காலகட்டத்திலிருந்து நாவல் துவங்கி 1985 ல் நிறைவு கொள்கிறது. ஏறத்தாழ ஐம்பது வருடங்களில் மூன்று தலைமுறை பரதவர்களின் வாழ்வை கணக்கற்ற பாத்திரங்கள் வழியாக பதிவு செய்கிறார்.
முதன்மையாக, துறைவன் நாவலில் பேசப்படும் பரதவர் வாழ்வைச் சித்தரிக்கும் முன்னோடிப் படைப்பான ‘ஆழி சூழ் உலகு’ நானறியாத வாழ்வின் வர்ணக் கலவைகளை அள்ளி இறைக்கிறது. அண்ணனின் அகால மரணத்திற்குப் பின் தான் பெருமதிப்பு கொண்ட அண்ணியை மணந்து பிறந்த குழந்தை தனதா அண்ணனுடையதா என்ற கேள்விக்குக்கூட இடம் கொடுக்காமல் அன்பொழுக அரவணைக்கும் தொம்மந்திரையார் துவங்கி பள்ளிக்குச் செல்லும் சிறுவனிடம் அத்துமீறும் பள்ளி வாத்தியார் வரை எத்தனை வகை மனிதர்கள்.
தொம்மந்திரையார் போலவே காகு சாமியார், கோத்ரா போன்ற முற்றிலும் நேர்மறையான, வணங்கத்தக்க மனிதர்கள். தங்கை பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே கோத்ராவும் அவர் மனைவி தொக்களாத்தாவும் தங்களுக்கென குழந்தைகள் பெற்றுக்கொள்வதில்லை. அவர்களிடம் தனது ஆடுகளை ஒப்படைத்துவிட்டு வெளியேறும் அண்டைவீட்டு வசந்தா சில ஆண்டுகளுக்குப் பின்னர் திரும்பி வரும்போது அவை ஈன்ற குட்டிகள் அப்போதும் இருக்கின்றன. இந்த ஒரு நிகழ்வு அவர்களின் அப்பழுக்கற்ற தன்மைக்குச் சான்றாகிறது.
பயணச் சீட்டுக்கு காசில்லாமல் மனபாட்டிலிருந்து சேகர் நடந்துவரும்போது உதவும் பனையேறி, வருவேல், சிலுவை உலாத்திக் கொண்டிருக்கும்போது பரிவுடன் இளநொங்கு பறித்துப் போடும் பனையேறி என அடையாளங்களுக்கு அப்பால் மனிதனைக் காட்டியபடி இருக்கிறார் ஜோ. வெள்ள அபாயத்தின் போது இடையன்குடியில் உதவும் வாத்தியார் இளமையில் சாதிச் சண்டைகள் மிகுந்த கொந்தளிப்பான காலகட்டத்தில்கூட ஆமந்துரையில் பாதுகாப்பாக இருந்ததை நினைவு கூர்கிறார். பஞ்சம் பிழைக்க ஊருக்கு வந்த ரத்னசாமி மிகப்பெரும் தொழிலதிபர் ஆனபின்னும் நன்றி மறவாமல் இருக்கிறார். இந்த தருணங்கள் வழியாகவும் பாத்திரங்கள் வழியாகவும் நாவல் ஒற்றைப்படை அணுகுமுறையை தவிர்த்து வெறுப்புக்கு அப்பால் சென்று சேர்கிறது.
நாவலில் வரும் சிறிய பாத்திரங்கள்கூட மனதில் நின்றுவிடுகின்றன. வயசாளி போஸ்கோ வம்பிழுக்கும் வித்தைக்கார பயில்வானோடு போட்டியிட்டு ஸ்ப்ரிங்கைப் பெயர்த்து எறிகிறார். பின்னர் கால்நடையாக மணபாட்டிலிருந்து நடந்து வந்த சேகரை வாஞ்சையுடன் தோளில் அமர்த்தி ஊருக்கு அழைத்துச் செல்கிறார்.
நாவலில் வரும் பெண் பாத்திரங்களில் எஸ்கலின், வசந்தா ஆகிய இரு பாத்திரங்களும் தனித்து மிளிர்கின்றன. கணவனின் பொறுப்பை தானும் சுமந்து தனக்கென பிள்ளை பெற்றுக் கொள்ளாத தொக்களாத்தா, மகனை பறிகொடுத்த துயரத்தில் மறைந்து போகும் தொம்மந்திரையாரின் மனைவி அமலோற்பவம், ஒரேயொரு கடிதம் வழியாக தன் பெருங்காதலை கடத்தி சென்றுவிட்டு கன்னியாஸ்திரி ஆகும் அமல்டா, கொழும்புக்கு சென்று அங்கே ஒரு திருமணம் செய்துகொண்டு வாழ்வின் இறுதி காலத்தில் மகளை தேடி ஆமந்துரைக்கு வரும் வசந்தாவின் அம்மா, கணவர் சூசையாருக்கும் சுந்தரி டீச்சருக்கும் உறவிருக்கிறது என்றறிந்தும் அதைப் பெரிதுபடுத்தாமல் நடந்துகொள்ளும் மேரி என நாவலின் ஒவ்வொரு பெண் பாத்திரமும் தனித்த பண்புகளால் ஆழமாக நிற்கின்றன.
ஒரேயொரு அத்தியாயத்தில் வந்துபோகும் வங்கி மேலாளர் பற்றிய சித்திரம் கூட முக்கியமானது. குறுகிய காலத்தில் இயன்ற நன்மைகளை செய்வார். மாற்றலாகிச் சென்றுவிடுவார்.
நாவலில் உலாவரும் கணக்கற்ற பாத்திரங்களில் ஜஸ்டின், சூசையார், வருவேல், என மூன்று பாத்திரங்களை தனியாக கவனம் கொள்ள வேண்டும். இப்பாத்திரங்கள் காலப்போக்கில் கொள்ளும் மாற்றங்கள் நாவலை ஒருபடி உயர்த்துகிறது. நன்மையும் தீமையும் முயங்கிய நம்மைப் போன்ற மனிதர்கள் அவர்கள். அதைவிட தங்கள் தவறுகளால் குன்னியவர்கள் அல்ல, அதை மீறி வளர்ந்து எழுபவர்கள். ஜஸ்டின் தன்னை காதலித்த வசந்தாவின் தந்தை வியாகுலபிள்ளையை, ‘வசந்தமாளிகை’ மீதான உரிமை போட்டியின் காரணமாக, ஒரு உள்ளூர் கலவரத்தைச் சாக்காக கொண்டு குத்தி கொல்கிறான். சிறை சென்று மீண்ட பின்னர் அவர் முற்றிலும் பக்குவமடைந்து தனது தவறுகளை உணர்ந்த வேறொருவராக இருக்கிறார். ஆமந்துரையில் மிகப்பெரிய பணக்காரராக இருந்த ஃபர்நாந்துவின் மகன் ஊமையனும் அவனது மனைவியும் இலங்கை கலவரத்தின் காலகட்டத்தில் கொழும்பிலிருந்து ஊர் வருகிறார்கள். சூசை ஊமையன் தனக்கு செய்ததையும் தான் அவன் மனைவிக்கு செய்ததையும் எண்ணி குற்ற உணர்வு கொள்கிறான். ஊமையனும் அவன் மனைவியும் மறைந்த பின்னர் சிலுவை சூசையாரிடமே வளர்கிறான். அவனைப் படிக்க வைக்க வேண்டும் என முயல்கிறார். ஆனால் காலமும் சூழலும் அவனை கடலுக்கு கொண்டு வருகிறது. சூசை தன் குற்ற உணர்வைத் தன் உயிரால் ஈடு செய்கிறார். வருவேல் சூழ்நிலைவசப்பட்டு சித்தியுடனும் பின்னர் தங்கை முறையுள்ள சித்தியின் மகளிடமும் உறவு கொள்கிறான். ஊர் தூற்றுவதைப் பற்றி அஞ்சாமல் தவறுக்கு பிராயச்சித்தமாக தங்கை முறை உள்ளவளை துணிந்து மணக்கிறான்.
கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மூவரை பற்றிய சித்திரத்தில் துவங்கும் கதை கடைசியில் ஒருவர் எஞ்சுவதோடு நிறைவு பெறுகிறது. முப்பதுகளில் துவங்கி கதை படிப்படியாக வளர்கிறது. நாவலை வாசித்து முடித்தவுடன் மனிதன் தன் எல்லைகளை தியாகத்தாலும் மீற முடியும், ஒருவேளை அதுவே சிறந்த வழியாகவும் இருக்கக்கூடும் என தோன்றியது.
சாமியார்களின் ஊழல்கள், நடத்தை மீறல்கள், சாமியார் கட்சி ஊர் கட்சி என பிரித்தாளுதல் என கிறித்தவ கத்தோலிக்க அமைப்பு சார்ந்து நாவல் பல்வேறு தளங்களில் விமர்சனங்களை துணிவுடன் வைக்கிறது. இந்த பின்புலத்தில் காகு சாமியாரின் பாத்திரம் நேர்நிலை உச்சம். ஊர் திரண்டு அவரது இறுதி ஊர்வலத்தில் பங்குகொள்வது நாவலின் நெகிழ்வான தருணங்களில் ஒன்று.
நாவலில் சுதந்திர போராட்ட காலகட்டத்தின் காந்தி வருகிறார். காகு சாமியார் அவர் மீது பெரும் மதிப்பு கொண்டுள்ளார் என்பது பதிவாகிறது. தன் தியாகத்தால் பரதவர்களை ஒன்றிணைத்த புனித ஃபிரான்சிஸ் சவேரியாரின் கதை சொல்லப்படுகிறது. பரதவர் – நாடார் உரசல்கள் நாவலில் ஆங்காங்கு கோடிட்டு காட்டப்படுகிறது. நாடார் எழுச்சியும் உரையாடல்கள் வழியாக பதிவாகிறது.
பரதவர்களை அக்கறையுடன் வழிநடத்தும் தலைமையும் அமைப்பும் இல்லை என்பதை நாவல் கவலையுடன் உணர்த்துகிறது. கமிட்டிகளும் பங்குகளும் சிதறிக் கிடக்கின்றன. விடுதலைக்கு முன்பான நாட்களில் செல்வாக்குடன் இருந்த ‘பாண்டியபதி’ எல்லாம் காணாமலாகிறார்கள். ஆமந்துறைக்கும் கூடுதுறைக்கும் இடையில் சச்சரவுகள், ஒரு ஊருக்குள்ளேயே மானாபிள்ள மந்தாபிள்ள சச்சரவுகள், மீன்பிடி மரங்களுக்கும் இயந்திர படகுகளுக்கும் இடையிலான உரசல்கள் என பரதவர்கள் பிரிந்து கிடப்பதை உணர முடிகிறது.
கன்னியாகுமரியிலிருந்து மீன்பிடி இயந்திரப் படகை கடத்திக்கொண்டு வருகிறான் சிலுவை. கொஞ்ச தயக்கத்திற்கு பின்னர் கடலில் தொலைந்த சிலுவையையும் பிற இருவரையும் தேடுவதற்கு படகுகள் உதவிக்கு வருகின்றன. மானாபிள்ள பேத்தியின் திருமணத்தில் எதிர் எதிர் கலகக்காரர்கள் ஒன்று சேர்கிறார்கள். அவசரத்திற்கு ஆமந்துறையினருக்கு கூடுதுறை ஆட்கள் உதவிக்கு வருகிறார்கள். ஆபத்து காலங்களில் எப்போதும் மனிதர்கள் ஒரு திரளாக ஆகிறார்கள். கடல் பிரச்சனையை நிலத்துக்கு கொண்டுவருவதில்லை,
எழுத்தாளன் தன் நிலத்தையே எப்போதும் எழுதுகிறான் என்கிறார் ஜெயமோகன். தன் நினைவுகளோடு அவன் நிலத்தையும் சுமந்து அலைகிறான். ஜோ சொற்களில் கடல் உயிர்கொள்கிறது. வரிபுலியன் வேட்டை, மணல் குன்றுகளும் வளைந்த கரைகளும் கொண்ட மணப்பாட்டிலிருந்து கால்நடையாக ஆமந்துறை வரும் அனுபவம், சிலுவை படகை கடத்தி வரும்போது துரத்தி வரும் படகுகளும் மரிக்கும் மரங்களும், ரயிலை அடித்து செல்லும் தனுஷ்கோடி புயல், விடுதலைக்கு முன்பான தூத்துக்குடி துறைமுகம், இவையாவும் நல்ல காட்சி அனுபவத்தை அளிக்கிறது.
நாவல் முழுவதும் பாலியல் மீறல்களும் அது சார்ந்த அலைகழிப்புகளும், விதவிதமான மரணங்களும் விரவிக்கிடக்கின்றன. பாலியல் சித்தரிப்புகள் நாவலின் மிக பலவீனமான பகுதி என எனக்கு தோன்றியது. பரதவர்களின் வாழ்வோடு இணைத்து புரிந்துகொள்ள முடியும் என்றாலும், அது எழுதப்பட்ட முறையில் நுண்மை கூடிவரவில்லை என்பதே என் எண்ணம். ஆனால், பணயம் பிடித்தவர்களை விருந்தாளிகளாக நடத்தும் முறை போன்ற பரதவர்கள் பின்பற்றும் தனித்துவமான வாழ்க்கை முறைகள் சுவாரசியமாக விவரிக்கப்பட்டுள்ளன.
பரதவர்களின் கலாசார வேர்கள் குறித்தான விவாதம் ஜோ ஒரு இந்துத்துவர் என அடையாளப்படுத்தப்பட முக்கிய காரணம். திருசெந்தூர் முருகன், கன்னியாகுமரி அன்னை, முத்தாரம்மன் என பரதவர்களின் தொல் தெய்வங்கள் பற்றி பேசப்பட்டுள்ளது. .குறிப்பாக குமரி அன்னை கடலைக் காக்கும் தெய்வமாக திகழ்கிறாள். பனிமய மாதா சுரூபம் இங்கு வந்தது கூட பரதவர்களின் தாய்தெய்வ பாசத்தை மனதில் கொண்டுதான் என்றொரு பார்வை வருகிறது. கடற்கரையோரம் தாய்தெய்வ வழிபாடு என்பது இந்திய பண்பாட்டின் பகுதியாக இருக்கிறது, கருணையும் உக்கிரமும் கொண்ட பெண் வடிவம் காலங்காலமாக வணங்கப்படுகிறது.
பெரிய மீன்கள் குமரியன்னையின் சத்தியத்திற்கு கட்டுப்பட்டவை ஆகவே அவை மனிதர்களை ஏதும் செய்வதில்லை என்பதும் பரதவர்களின் நம்பிக்கை. ‘சாத்தானே அப்பாலே போ’ என இந்து மத தெய்வங்களை புறக்கணிக்கும் அதே வேளையில் ஒரு பிரச்சனை என்றால் முத்தாரம்மனுக்கு ரகசியமாக நேர்ந்துகொள்ளும் முரணை பேச்சுவாக்கில் சொல்லி செல்கிறார் தொம்மந்திரை.
மரணத்தின் முன்பு வாழ்வின் பெறுமதி என்ன என்பதே இந்நாவல் எழுப்பும் கேள்வி என துவக்கத்திலேயே குறிப்பிடுகிறார் ஜோ. மரணத்தை பற்றி எந்த அளவுக்கு பேசுகிறதோ, அதேயளவுக்கு அல்லது அதைக்காட்டிலும் அதிகமாக எஞ்சியிருப்பதை பற்றி, வாழ்வை பற்றி ஆழி சூழ் உலகு பேசுகிறது.
ஒரு முறை ஜோ நேர்ப்பேச்சில் “எங்களுக்கு கரை என்பதே களிப்புதான்” என கூறினார். எப்போதும் நிச்சயமற்று மிதந்திருப்பவனுக்கு பற்றிக்கொள்ள கரை கிடைத்தால் களியாட்டம் தான். கரையில் இருப்பவனை வேறுவிதமான ஆழி சூழ்ந்து இருக்கிறது. அறியாத ஆழம் கொண்ட ஆழியின் மீதே நாம் ஒவ்வொருவரும் மிதந்து கொண்டிருக்கிறோம் என்றுணரும்போது நாவல் வேறு தளங்களில் திறக்கிறது. சிலர் கரை ஏறுவார், சிலர் கரை ஒதுங்குவார், சிலர் கரைந்தழிவார். காலமெனும் ஆழி, காமமெனும் ஆழி. ஆழியை பழக்கிக்கொள்ளவும் வெல்லவும் மனிதன் முயன்றபடி தான் இருக்கிறான். ஆனால் இன்றும் அவன் ஆழியின் கருணையால் (அல்லது குரூரத்தால்) மட்டுமே எஞ்சியிருக்கிறான்.
சிறந்த நாவல்கள் முன்வைக்கும் தரிசனங்கள் ஏறத்தாழ ஒன்றுதான், அவை மீண்டும் மீண்டும் மனிதர்களை, உலகத்தை அல்லது வாழ்வை, கண்சிமிட்டிப் பார்க்கும் காலத்தின் நகைப்பையே பதிவு செய்கின்றன. அவ்வகையில்தான் ஆழி சூழ் உலகும் மிக முக்கியமான நாவலாக தன்னை நிறுவிகொள்கிறது.
(நன்றி: ஆம்னி பஸ்)