இந்நூல் ஆசிரியர் ஐயா. என்.மாதவன் அவர்களால் வெவ்வேறு காலகட்டத்தில், துளிர், வண்ணக்கதிர் போன்ற வெவ்வேறு இதழ்களில் எழுதப்பட்ட ஏழு சிறுகதைகளின் தொகுப்பு ஆகும்.
இக்கதைகள் வகுப்பறை சார் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது. ஆசிரியர் மாணவர்களைப் பார்க்கும் முறை, மாணவர்கள் ஆசிரியர்களைப் பார்க்கும் முறை, தேர்வு எவ்வாறு ஒரு மனிதனின் உள்ளார்ந்த திறனை சோதிப்பதாக அமைய வேண்டும், சக ஆசிரியர்கள் உறவு, ஏச்சுப் பேச்சுக்களுக்கு அஞ்சாமல் துணிந்து மாணவர்களுக்கு நல்லது செய்யும் ஆசிரியர்களைப் பற்றி என வகுப்பறையில் நிகழும் சம்பவங்களை உற்று நோக்கி ஒரு ஆசிரியரால் எழுதப்பட்ட அருமையான புத்தகம் இதுவாகும்.
முதல் கதை “திருப்தியான தேர்வு” என்பதாகும். தேர்வு என்பது மாணவர்களின் உள்ளார்ந்த திறனை சோதிப்பது. ஆனால் நாம் தேர்வென்றாலே ஒரு வித பயத்தை ஏற்படுத்தி வைத்துள்ளோம். இந்த பயமானது குழந்தையின் முழுத் திறனை வெளிக்கொண்டு வர இயலாமல் தடுக்கிறது. இந்தக் கதையில் வரும் ஆசிரியர் தனது மாணவர்களுக்கான தேர்வுக்கு வினாத்தாள் தயாரிக்கும் பொறுப்பை மாணவர்களிடமே ஒப்படைக்கிறார். மேலும் தேர்வை திறந்த புத்தகத் தேர்வாகவும் நடத்துகிறார். இரண்டு முறை புத்தகத்தைத் திறந்து பார்த்துக் கொள்ளலாம். தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியையும் மாணவர்களிடமே ஒப்படைக்கிறார். இவையெல்லாம் தேர்வு பற்றிய பயத்தை மாணவர்கள் மனதில் இருந்து நீக்குகிறது. மாணவர்கள் தங்களது புரிதலில் மேம்பட்டு கல்வியின் முழுப் பயனையும் அடைகிறார்கள்.
இரண்டாவது கதை “கடைசி பாடம்”. உண்மையில் இக்கதையைப் படித்து கலங்காதவர் இருக்க முடியாது. 1870 ஆம் ஆண்டு பிரான்சுப் போரில் பிரான்சு தோற்கிறது. தோற்ற பிரான்ஸ் தனது இரண்டு மாவட்டங்களை ஜெர்மனியிடம் ஒப்படைத்துவிட நிர்பந்திக்கப்படுகிறது. இனி அங்கு பிரெஞ்சு மொழி சொல்லித் தரப்பட மாட்டாது. அச்சூழலில் அந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள ஒரு பள்ளியில் பிரெஞ்சு மொழி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் இனி இங்கு பிரெஞ்சு மொழி வகுப்பு நடத்தப்படாது என்ற நிலையில் தனது கடைசி வகுப்பை எவ்வாறு கனத்த இதயத்துடன் நடத்தினார் என்பதை இந்த கதை விளக்குகிறது. இத்தொகுப்பில் மிகச்சிறந்த வாசிப்பனுபவமாக இக்கதை விளங்குகிறது. இந்தக் கதையை மட்டுமே விவரித்து எழுதினால் பேரா.ச.மாடசாமியின் ஆசிரியர் முகமூடி அகற்றி, போயிட்டு வாங்க சார் போன்ற நூல்களைப் போல தமிழ்கூறும் நல்லுலகத்தில் சிறந்த நூலாக விளங்கும்.
மூன்றாவதான “ ஸ்பெஷல் கிளாஸ்” என்னும் கதை. பள்ளியில் மாலைநேர சிறப்பு வகுப்புகளை நடத்தச் சொல்லி அரசின் சுற்றறிக்கை வர பரபரக்கும் பள்ளியின் ஆசிரியர்கள் ஏன், எதற்காக சிறப்பு வகுப்புகள் என தங்களுக்குள் பேசிக்கொள்வதும், மாலை நேரத்தில் நேரத்திற்கு தாங்களும், வெகு தொலைவிலிருந்து வரும் மாணவர்களும் எப்படி வீட்டுக்குச் செல்வது என்பதைப்பற்றிய அவர்களின் உரையாடல்களும் இக்கதையாக விரிகிறது. கடைசியில் சாதா சாம்பார் தூளுக்கும், ஸ்பெஷல் சாம்பார் தூளுக்கும் இடையேயான வேறுபாடுகள் வழி சிறப்பு வகுப்புகள் பற்றி விளக்குவதுமாக கதை நிறைவடைகிறது.
நான்காவதான “புது டீச்சர்” என்னும் கதை, பள்ளிக்கு புதிதாக வரும் டீச்சர் எடுக்கும் புது முயற்சிகள் எவ்வாறு வழக்கமான முறைகளில் பாடமெடுத்து கெட்டிதட்டிப் போன ஆசிரியர்களால் கேலிக்குள்ளாக்கப்படுகிறது என்பதை விளக்குகிறது. தவளை பற்றிய பாடமெடுக்கும்போது மாணவர்கள் தவளையைப் போல தாவிக்குதிப்பதால் வகுப்பறையில் ஏற்படும் சத்தம் மற்ற வகுப்பறைகளுக்குப் பரவும் போது, அந்த வகுப்பாசிரியரின் கோபத்துக்கு புது டீச்சர் ஆளாகிறார். இவ்வாறு அவர் சந்திக்கும் பிரச்சினைகளே இந்தக் கதையாகிறது.
ஐந்தாவது கதை, ” வெளிச்சத்துக்கு வராத வேர்கள்”. இதில் ஒரு வகுப்பு மாணவர்களுக்கு “உங்களைக் கவர்ந்த ஆசிரியர்” என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டி அறிவிக்கப்படுகிறது. இதில் பாலு என்னும் ஒரு மாணவன் யாரைப் பற்றி எழுதலாம் என தனது ஒவ்வொரு பாட ஆசிரியரைப் பற்றியும் யோசித்துக் கொண்டே செல்கிறான். ஒவ்வொரு ஆசிரியரிடம் ஏதோவொரு நல்ல குணம் இருக்கிறது. இருந்தாலும் தன் பள்ளியில் அவ்வளவு பிரபலமில்லாத ஆனால் மாணவர் நலனில் மிகுந்த அக்கறையுடைய ஆசிரியர் குப்புசாமி பற்றிய நினைவுகள் அவனுக்குத் தோன்றுகிறது. “ தனக்காக வீடு கட்டும் நாட்களில் கூட பள்ளிக்கு வந்தவர், சக ஆசிரியர்கள் கிண்டல் செய்தபோது கூட அதைப் பொருட்படுத்தாதவர். தனக்காக வீடு கட்டும் தொழிலாளியையும் நம்பியவர்.எந்த ஒரு மாற்றமும் மனதளவில் உருவாகும் போது பலம் பொருந்தியதாக இருக்கும் என்பவர்” . எனவே பூக்களாக வெளியே தெரியும் ஆசிரியர்களைவிட வேராக மண்ணுக்குள்ளிருந்து வெளிச்சத்துக்கு வராமல் இருக்கும் இவரைப் பற்றி எழுத முடிவு செய்கிறான் பாலு.
ஆறாவது கதை, “ ஆயுதம் செய்வோம்”. இத்தலைப்பே புத்தகத்தின் தலைப்பாகவும் உள்ளது. ஆசிரியர் பரந்தாமன் பள்ளி செல்லும் வழியில், பேருந்தில் நடைபெறும் சம்பவங்களே இக்கதையாக விரிகிறது. “ஆசிரியர் ஒருவர் பள்ளியின் செயல்வழி கற்றலுக்கான உபகரணங்களை எடுத்துச்செல்லும் போது சலித்துக் கொள்கிறார். ஆனால் அதே பேருந்தில் கிராமத்திலிருந்து நகரத்துக்குப் பயணம் செய்யும் ஒரு ஆசாரியோ தன்னுடன் தான் தொழில் செய்யும் கருவிகளையும் சரிப்படுத்த நகரத்துப் பட்டறைக்கு மகிழ்வுடன் எடுத்துச் செல்கிறார். பேருந்தில் பயணச்சீட்டுக்கு பணமின்றி பரிதவித்து பேச்சின்றி நிற்கும் தனியார் பள்ளிமாணவி , வெடித்த வெண்கலமாய், மடை திறந்த வெள்ளமாய்ப் பேசும் தமது அரசுப் பள்ளி குழந்தைகள் என இரு வேறு உலகங்களைப் பார்த்துக் குழம்பி, நாளிதழைத் திறக்க, “எனக்கு ஒரு மரத்தினை வெட்டுவதற்கு எட்டு மணி நேரம் கொடுக்கப்படுமானால் எனது கருவிகளைக் கூராக்கவே முதல் ஆறு மணி நேரத்தினைப் பயன்படுத்துவேன்” என்ற வாசகங்களை நமது சிந்தனைப் பகுதியில் பார்த்து தெளிந்து தனது அடுத்த கட்டப் பயணத்தைத் திட்டமிடுகிறார் ஆசிரியர் பரந்தாமன்.
ஏழாவதாக, “தப்புக் கணக்கு” என்னும் கதை. இது பள்ளிக்கு காலதாமதமாக வரும் மாணவர்களைப் பற்றியது. அன்று மாணவர்களில் சிலர் பள்ளிக்குக் காலதாமதமாய் வரும்போது பள்ளியில் ஆசிரியர்களிடம் தாங்கள் வாங்கப் போகும் அடிகளை நினைத்து பயந்து கொண்டு பள்ளிக்கு வருகின்றனர். ஆனால் பள்ளியில் அவ்வாறு அன்று நடக்கவில்லை. ஆசிரியர் ராகவன் புதிய நடைமுறையை அறிவிக்கிறார். அதாவது இனி காலதாமதமாய் வருபவர்கள் பள்ளியில் உள்ள காலதாமதப் பதிவேட்டில் தமது பெயருடன் தான் காலதாமதமாய் வந்ததற்கான காரணத்தையும் எழுத வேண்டும் என்கிறார். இந்த அறிவிப்பைக் கேட்டு சில மாணவர்கள் தங்களுக்குள் அப்பாடா இனி அடி கிடையாது என பெருமூச்சுவிட, ஆசிரியர் ராகவனோ,”குழந்தைகளில் பலரும் காலதாமதமாக வருவதை பதிவு செய்வது ஒருவிதத்தில் சங்கடமாக இருந்தாலும் அவர்களில் வாய்ப்புள்ளவர்கள் நேரத்திற்கு வர முயல்வர். வாய்ப்பில்லாதவர்களுக்கு தேவையெனில் சிறப்புச் சலுகை கூட அளிக்கலாம். பொத்தாம் பொதுவாக அடிப்பது இனி நடக்காது. குறைந்தபட்சம் மருநதையாவது மாற்றியுள்ளோமே” என்று நிம்மதி அடைகிறார். இது ஐயா.மாதவன் முன்மொழிநதுள்ள புது உத்தியாக உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் கடைபிடிக்கக்கூடியதாக இருப்பது சிறப்பு.
இவ்வாறாக கல்வி சார் ஏழுகதைகளைக் கொண்ட இந்நூலினை வாசிப்பதன் மூலம் மாணவர்களை இன்னும் புரிந்து கொண்டு நமது வகுப்பறையை உயிரோட்டமுள்ள வகுப்பறையாக மாற்றலாம்.